Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / முள்ளிவாய்கால் மண்ணில் விதையான லெப்.கேணல் அன்பழகன்

முள்ளிவாய்கால் மண்ணில் விதையான லெப்.கேணல் அன்பழகன்

05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு

ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும்.

இவ்வூரிலே பல நிலபுலங்களுக்கு உரித்துடையவர்களாகவும் நற்பண்புகள் நிறைந்த “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பதற்கொப்ப வாழ்ந்தவர்களான திரு.திருமதி கைலாயபிள்ளை, காமாட்சி இணையருக்கு இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்களுடன் நான்காவது மகனாக 18.08.1972 அன்று ஜெயகாந்தன் எனும் இயற்பெயருடன் அன்பழகன் பிறந்தார். அவரை வீட்டில் ஜெயம் என்று செல்லமாக அழைத்தார்கள். அவர் சிறு வயது முதற்கொண்டே படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். ‘ஜெயம்” என்ற அவரது இயற்பெயருக்கேற்ப அவரது வாழ்விலும் எந்த காரியம் என்றாலும் அதில் எப்படியாவது வெற்றி பெற்று வரும் தனித் திறமை அவரிடம் காணப்பட்டிருந்தது. “விடாமுயற்சி பெரு வெற்றி” என்ற சொற்றொடருக்கேற்ப எந்த கடினமான பணி என்றாலும் அதனை முழுமையாக முடித்து விட வேண்டும் என்ற தன்மையை அவரது சிறு அகவை முதல் அவரிடம் இனங்காணக்கூடியதாக இருந்தது.

ஜெயம் தனது தொடக்கக் கல்வியை ஆண்டு ஐந்து வரை பலாலி சித்தி விநாயகர்

வித்தியாலயத்திலும் பின்பு ஆண்டு ஆறிலிருந்து க.பொ.த சாதாரணதரம் வரை வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1988இல் அவர் க.பொ.த சாதாரணம் கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஈழத்தில் இந்திய இராணுவத்தினரின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடியது. அத்துடன் ஒட்டுக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஒட்டுக்குழு நடவடிக்கைகளிற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, பிள்ளைபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தகைய காரணங்களினால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயத்தினால் தனது க.பொ.த சாதாரணதரத்தை ஒழுங்கான முறையில் கற்க முடியாதிருந்த போதிலும் அவருக்கு கல்வி கற்றலின் மீதிருந்த அவாவினால் விடாது முயன்று கல்வி கற்று க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சித்தியடைந்தார். பின்பு ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகள், இழப்புகளினால் அவரால் க.பொ.த உயர்தரத்தை தொடர முடியாத நிலை காணப்பட்ட போதிலும் கற்றலின் மேலுள்ள பேரவாவினால் 1993 வரை யாழ்.உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தனது மின்னியல் தொடர்பான கற்கைநெறியினைத் தொடர்ந்தார்.

 

 

லெப்.கேணல் அன்பழகன்

கைலாயபிள்ளை ஜெயகாந்தன்

பலாலி

வீரப்பிறப்பு:18.08.1972

வீரச்சாவு:05.05.2009

எமது விடுதலைப்புலிகள் இயக்கமானது மக்களுக்காக போராடுபவர்கள். மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டவர்கள். மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மாலியன்ற வழிகளில் பங்கெடுக்காவிட்டால் ஈழவிடுதலையைப் பெற முடியாது என்று கருதுபவர்கள். எமது விடுதலைப் போராட்டத்தை அளப்பெரிய ஈகங்களாலும் மக்கள்மயப்பட்ட போராட்டத்தினாலும் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்ற ஆழமான அரசியல் தெளிவின் வெளிப்பாடுகள் இவை. எமது கழுத்தை நெரிக்க வரும் இனவெறிக் கரங்களை தறித்துப் போட எமது கைகளில் ஆயுதங்களைத் தூக்கி எமக்கான உரிமைக்காக போராட வேண்டியது இன்றியமையாதது.

இந்த போராட்டத்தில் இணைந்த பலரும் தமது இருப்பிற்காக, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லது வாழ வழியில்லாமல், வாழத் தெரியாமல் வந்தவர்கள் அல்ல. அனைவரும் வாழ தெரிந்தவர்கள், வாழ விருப்பமுள்ளவர்கள். ஆனால் மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, வருந்தலைமுறை விடுதலைபெற்று வாழ வேண்டும் என்பதற்காகப் போராட வந்தவர்கள். எமது இனத்திலுள்ளோர் எங்கோ, யாரோ பாதிக்கப்படுகின்றபோது, இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, எமது தேசம் ஒடுக்கப்படுகின்றது என்பதற்காகப் போராடப் புறப்பட்டவர்கள். தாம் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்றால் கழுத்தில் நஞ்சைக் கட்டிக் கொண்டு, கையில் ஆயுதத்துடன் சாவதற்கு துணிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் இவ்விடுதலைப் பயணத்தில் இணைந்தவர்கள் மிகவும் இளகிய உள்ளம் கொண்டவர்கள். அதாவது யாரோ பாதிக்கப்படுகின்றபோது அதனைப் பார்த்து உள்ளம் பொறுக்க முடியாமல் ஏற்பட்ட தவிப்பினால் போராட வந்தவர்கள். இவ்வாறுதான் ஜெயமும் தனது குடும்பத்தில் வசதிகள், மலர்ப்படுக்கை வாழ்க்கை வாழும் வாய்ப்புக்கள் இருந்தபோதும், தனது இனத்தின் விடுதலைக்காக புலிகளின் பாசறையை நோக்கி 1993 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் புறப்பட்டான்.

இம்ரான் பாண்டியன் படையணியின் சரத்பாபு ஏழாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவுசெய்த ஜெயம் அன்பழகன்ஃவிமலன் என்ற இயக்கப் பெயருடன் தன்னை ஒரு முழுமையான போராளியாக ஆக்கிக்கொண்டான்.

அடிப்படைப் பயிற்சி காலப்பகுதியில் 1993 நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் முதலாவது ஈரூடகத்தாக்குதலான “தவளை” நடவடிக்கைக்கு சென்ற உதவி அணியில் அன்பழகனும் சென்றிருந்தார். அன்றைய காலகட்டங்களில் விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல் அல்லது சிங்கள படைகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான தாக்குதல்கள் என ஏதாவது படை நடவடிக்கைகள் எப்பொழுதும் நடைபெற்ற வண்ணமே இருக்கும். அந்த நடவடிக்கைகளுக்கான களமுனை உதவிப் பணிகளில் புதிய போராளிகளை ஈடுபடுத்தி உதவிப் பணிகளை செய்துகொள்வதுடன்,

புதியவர்களுக்கு கள அனுபவம் ஊட்டப்படுகிறது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. அடிப்படை பயிற்சிகள் நிறைவுற்று போராளிகள் பல்வேறு பணிகளுக்காக அனுப்பப்படுவார்கள். சில சிறப்பு கடமைகளுக்கு எடுக்கப்படும் போராளிகளுக்கு சண்டை அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பென்பது பின்னாளில் எட்டாக் கனியாக கூட போகலாம் என்பதால், பயிற்சிக் காலத்திலேயே சண்டை அணிகளில் ஈடுபடுத்துவதால் மீண்டும் அவர்களுக்கான சண்டைக்கான வாய்ப்பை தாமதப்படுத்தி சிறப்பு பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

சில சிறப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை அடிக்கடி களமுனைக்கு அனுப்ப முடியாது. இரகசியம் மற்றும் புதியவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவதிலுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு; புதிதாக பணிக்கு எடுக்கும் போது, அவர்கள் தாமாக கேட்டு களமுனைக்கு செல்ல முனைய மாட்டோம் என எழுத்து வடிவ உறுதிப்பாட்டை அளிக்க வேண்டியும் ஏற்படுவதுண்டு. இவ்வாறான உறுதிப்படுத்தல் அன்பழகனின் பணியிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பயிற்சி நிறைவில் போராளிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பணிகளுக்காக அனுப்பப்பட்டனர்.

இதன்போது அன்பழகனும் இன்னும் இருபது போராளிகளும் சிறப்பு கடமைக்காக தெரிவு செய்யப்பட்டு அதற்கான கல்வியையும், பயிற்சிகளையும்

1994.04.01 தொடக்கம் 1994.07.31 வரை யாழ் மாவட்டம், வலிகாமம் பகுதியிலிருந்த சிறப்பு முகாமொன்றில் பயிற்சிபெற்றுக் கொண்டனர். இப்பயிற்சிக் காலத்திலேயே அவர்கள் தொடர்பான துல்லியமான மதிப்பீடுகளும் இடம்பெறும்.

கடமைக்கான பயிற்சியும், கற்கைநெறிகளும் நிறைவடைந்த நிலையில் கடமையுணர்வு, செய்நேர்த்தி மற்றும் அர்ப்பணிப்புமிக்க போராளியாக இனங்காணப்பட்ட அன்பழகன் அலுவலக கடமைக்காக தெரிவாகி தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து வந்தார். 1995 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியும், 1996 முற்பகுதியும் தமிழினத்தைப் பொறுத்தவரை மிகவும் நெருக்கடியானதும், சோதனைகள் நிறைந்ததாகவும் இருந்தது.

யாழ். வலிகாமம் பகுதியை எமது முதன்மை நிருவாக நடுவமாகப் பேணிவந்த எமக்கு, சிங்களப் படைகளின் யாழ் நகர் நோக்கிய வன்கவர்வு நோக்கிலான முன்னேற்றமும், அதன் பின்னர் தென்மராட்சி பகுதியை விட்டு வெளியேறியமையும் மிகுந்த நெருக்கடியாக அமைந்தது. இக்காலத்தில் அன்பழகனும் தனது அலுவலக ஆவணங்களை பாதுகாத்து, நகர்த்தும் பணியில் சிறப்பாக செயற்பட்டார். இடப்பெயர்வு காரணமாக போராளிகளின் பரம்பல் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்ந்ததனால் அவர்களுக்கான நிருவாகப்பணிகளும் விரிவாக்கப்பட வேண்டியதாயிற்று. இச்சூழ்நிலையின் போது அணியின் நிருவாகப் பொறுப்பாளராக இருந்த மாவீரர் வேல்ராஜ் அவர்கள் வேறு கடமைக்கு சென்றதனால், அன்பழகன் அணியின் நிருவாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தொடர் இடப்பெயர்வுகளால் இயக்கமே நெருக்கடி நிலையில் இருக்கின்றபோது நிருவாகப் பொறுப்பை செய்வதென்பது “கல்லில் நார் உரிப்பது” போன்றதாகும். எனினும் தனது திறமையாலும் கடின உழைப்பாலும் போராளிகளின் தேவைகளை நிறைவுசெய்து தனது நிருவாகக் கடமையை எந்தவித குறையுமின்றி சிறப்பாக செய்ததன் மூலமாக தனது அணி போராளிகளின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற பொறுப்பாளனாக உருவானார் அன்பழகன்.

பின்னர் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணியின் செயற்பாடுகள் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் வியாபித்திருந்தது. இதன் காரணமாக, படையணி போராளிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடுமுறை – சந்திப்பு ஏற்பாடுகள் ஒழுங்கமைத்தல் என்பனவும் மிக முதன்மையானதாகவும், எச்சரிக்கை நிறைந்ததாகவும் அமைய வேண்டியதாயிற்று. வன்னிப் பெருநிலப்பரப்பில், இடங்களை கண்டுபிடிப்பதென்பது ஆரம்பத்தில் எம்மவர்களுக்கு மிகுந்த சோதனையாகவே இருந்தது. அத்துடன் இப்பணிக்கான பயணங்கள் பகல் – இரவு என்ற வேறுபாடின்றி தொடரும். எனவே இப்பணிகளை நேரடியாகச் சென்று ஒழுங்கமைக்கும் பொறுப்பு நிலைக்கு ஏற்றவராக அன்பழகன் தெரிவு செய்யப்பட்டார். இவரின் அறிவுக்கூர்மையும், கடமையுணர்வும், மிடுக்கான தோற்றமும் இப்பணிக்குப் பெரிதும் உதவியது.

இக்காலப் பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணியானது இயக்கத்தின் பல முதன்மையான மற்றும் இரகசிய பிரிவுகளை தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. படையணியின் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்கள் இருந்ததுடன், அன்றைய காலப்பகுதியில் தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், இயக்கத்தின் பல கட்டமைப்புகளை வழிநடாத்திய, வேலைப்பளுமிக்க தளபதியாகவும் ஆதவன் அவர்களே இருந்தார் என்றால் மிகையில்லை. படையணியின் இரகசியங்கள் மற்றும் முதன்மைப் பணிகள் என்பன எள்ளளவும் வெளியில் தெரியாதவாறு அல்லது சென்றுவிடாதவாறு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்துப் போராளிகளிடமும் இருந்தபோதிலும், தெரிந்தோ தெரியாமலோ சில போராளிகளின் செயற்பாடுகளால் இரகசியங்கள் கசியும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், படையணியின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு (அதிரடியான) செயற்பாடுகளூடாக இரகசிய கசிவுகள் தடுக்கப்பட்டன. சிங்களப் படைகளுடன் ஆயுதரீதியாக மோதி, அவர்களை எமது மண்ணை விட்டு துரத்தியடிப்பதே பணியென வந்த அன்பழகன் போன்ற பல போராளிகளுக்கு இக்கடமையானது ஆரம்பத்தில் மிகவும் சங்கடமானதாக இருந்தாலும், அதன் முதன்மை மற்றும் தேவை உணரப்பட்டதும் அதில் முழுத்தெளிவு ஏற்பட்டு விடுகிறது.

ஆனாலும் இப்பணிக்கு வெளியில் இருக்கும் போராளிகளில் சிலருக்கு இப்பணி தொடர்பான குழப்பங்கள் இருப்பதுடன், இப்பணியை ஆற்றும் போராளிகளையும், இவர்களின் பணிகளையும் அறிந்திருக்க வாய்ப்புகளிருக்கவில்லை.

எது எப்படியிருந்தபோதிலும்; அனைத்து தரப்பு போராளிகளிடமும் அன்பழகனுக்கு ஒரு தனியான மதிப்பும், மரியாதையும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு கீழ் கடமையாற்றுபவர்களாயினும் சரி, கடமை அடிப்படையில் தொடர்புடைய இயக்கத்தின் துறை மற்றும் படையணி சார்ந்த பொறுப்பாளர்கள், போராளிகள் என அனைவருக்கும் இவரை பிடித்துவிடும். அதாவது அனைவருடனும் ஒத்துப்போகின்ற மிகச்சிறந்த பண்பு இவரிடம் குடிகொண்டிருந்தது. எவருடனும் முரண்படாத, கோபித்துக் கொள்ளாத, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சிறந்த போராளி அன்பழகன். இவருக்குரிய நண்பர்கள் வட்டம் என்பது மிகப் பெரியதாகவும், பரந்துபட்டதாகவும் அமைந்திருந்தமை அன்பழகனின் சிறந்த குணவியல்பிற்கான சான்றாகும்.

1997 தொடக்கம் 1999 வரையும் இப்பணியை சிறப்பாக ஆற்றிவந்த நிலையில், 2000 ஆண்டு காலப்பகுதியில் அணிப் பொறுப்பாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டார்.

உண்மையில் இப்பணியென்பது மிகவும் இரகசியத் தன்மை கொண்டதாகும்.

இப்பணிகளுக்கான தகைமைகள் என்கின்றபோது இலட்சியப் பற்று, தலைமை மீதான விசுவாசம், இரகசியம் காத்தல், சுய கட்டுப்பாடு என்பன மிக முதன்மையானவையாகும். இரகசியம் காத்தல் என்ற விடயத்தில் மூன்று விதமான இரகசியங்கள் உள்ளது. நிகழ்வுகள் நிகழும் வரை பாதுகாக்கப்பட வேண்டியவை, நிகழ்வுகள் நடைபெற்று குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்கப்பட வேண்டியவை அல்லது நாமாக வெளிப்படுத்த முடியாதவை, அடுத்தது எக்காலத்திலும் வெளிப்படுத்த கூடாதவை அல்லது முடியாதவை.

அன்பழகனின் பணியின் பெரும்பாலானவை எக்காலத்திலும் வெளிப்படுத்த கூடாதவை என்பதே உண்மை. இதற்கேற்பவே அவர் தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்தார். இந்த அணியில் கடமையாற்றியவர்களும் இதையே தமது தாரக மந்திரமாக கொண்டு செயற்பட்டார்கள். எனவே அந்த இரகசியங்களை பொதுவெளியில் உரைக்காது இருப்பதே இந்த மானமாவீரர்களையும், அவர்கள் செய்த பணிக்கான தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் பொருளுள்ளதாக்கும். இப்பணியை செய்யும் ஒவ்வொரு போராளிகளும் இரகசியம் காத்தலுடன் சுயகட்டுப்பாட்டை பேணக்கூடியவர்களாக இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. சுய கட்டுப்பாடு இல்லாதவர்களால் இந்த அணியில் தொடர்ந்து பயணிக்க முடிவதில்லை என்பதுடன் அனுமதிக்கப்படுவதுமில்லை. மேற்படி தகைமையுடன் கட்டுப்பாடான சூழலுக்குள் செயற்பட முடியாதவர்கள் சிலர் விலகிச்சென்றமையும் உண்டு. விலகிச் செல்வதற்காக அவர்கள் ஏதேதோ காரணங்களை தெரிவித்திருந்தாலும் அடிப்படைக் காரணம் இதுவே. உண்மையில் அன்பழகன் அவர்கள் அத்தனை தடைகளையும் தாண்டி 17 ஆண்டுகளாக இந்த விடுதலைப் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு காலப்பகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் காலமாக இருந்தது. அணியின் பொறுப்பை ஆற்றிவந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 27 ஆம் நாள் இல்லறவாழ்வில் இணைந்து கொண்டார்.

ஒரு போராளி என்பவன் எல்லா விடயங்களிலும் தன்னை தியாகம் செய்கிறான் என்பதே உண்மை. அந்த வகையில் தனக்கான வாழ்க்கைத் துணையாக ஒரு போராளியை தேர்ந்தெடுப்பதென்பதும் அப்படியான பண்பின் வழிப்பட்டதே. எமது சமூகத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் முழுநேர உழைப்பாளிகளாக இருப்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமானது. அதிலும் ஒரு பெண் தனது வீட்டுக்கான பணிகளையும் ஆற்றிக்கொண்டு இயக்கப்பணியையும் செய்வதென்பது சுமைநிறைந்தது என்றே கூற வேண்டும். பின்பு 2003 இல் ஒரு பெண் குழந்தைக்கும் பின் 2009 இல் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார்.

2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்பிற்கமைய, புலனாய்வு அணியிலிருந்து நிதித்துறை புலனாய்வு பணிக்கென ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது. அந்த குழுவின் உதவிப் பொறுப்பாளனாக அன்பழகன் நியமிக்கப்பட்டார்.

நிதிப்புலனாய்வுப் பகுதியின் பணிக்கு வந்த காலத்தில் இருந்து நிதித்துறைப் போராளிகளுடன் அன்புடனும் சிரித்த முகத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார்.

துணைப்பொறுப்பாளராக இருந்து புலனாய்வுபணியின் விரிவாக்கத்திற்கும் ஆழமான செயற்பாட்டிற்கும் தன்னை முழுமையாக அரப்பணித்து உழைத்தார். அக்காலப்பகுதியில் இக்குழுவினரின் செயற்பாடுகளினூடாக தவறுகள் கண்டறியப்பட்டதுடன், தவறுகள் நடைபெறாதபடியான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்காலப்பகுதில் 2006 ஆம் ஆண்டு அமைதிப்பேச்சுகளுக்கான கதவுகள் பூட்டப்பட்டு சிங்கள படைகளுடன் இறுதிப்போர் ஆரம்பமாகியிருந்தது. வட போர்முனையில் கடும் போர் நடந்துகொண்டிருந்த சமநேரத்தில் மன்னார், வ்வுனியா, மணலாறு என களமுனைகள் திறக்கப்பட்டு வன்னி முழுமையும் போரரங்காக மாறியிருந்தது.

இந்நிலையில் முகமாலைப் பகுதியில் சண்டையில் நின்ற நிதித்துறைப் படையணி பின் நகர்த்தப்பட்டு படையணி ஒழுங்குபடுத்தலுடன் மன்னார் தம்பனை, பண்டிவிரிச்சான் பகுதிகளைப் பொறுப்பேற்று சிங்களப் படைகளின் முன்நகர்வுகளை தடுத்து சண்டையிட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்தும் மன்னாரில் இருத்து முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை நிதித்துறைப்படையணி போரிட்டிருந்தது.

2009 இன் தொடக்கமே கிளிநொச்சி இடம்பெயர்வும் நெருக்கமான சண்டைகளும் பின்நகர்வுகளுமாக இருந்த காலம். அக்களச்சூழலில் நிதித்துறையின் ஆளுகைக் கட்டமைப்புகளில் உள்ள போராளிகள் படையணிக்கு மாற்றப்பட்டு களமுனைகளில் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது அன்பழகனும் போராளிகளை வழிநடத்தும் பொறுப்பாளனாய் களமுனையில் நின்றிருந்தார். அந்நேரத்தில் எதிரியுடனான சண்டையில் நெற்றிப் பகுதியில் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் சேர்ககப்பட்டு சிகிச்சைபெற்ற பின் மருத்துவ ஓய்வில் நின்றார். அவருடைய காயம் முழுமையாக குணமடையாத நிலையில் சண்டைக் களங்களில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் திரும்பவும் இரட்டை வாய்க்கால் போர் முன்னரங்கப் பகுதியில் ஒர் அணிக்குப் பொறுப்பாளராக களப்பணியாற்றினார். அப்போதும் எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் உடல் முழுவதும் சிறு சிறு விழுப் புண்களுக்குள்ளாகி மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்த போது காயங்கள் முழுமையாக குணமடையாத போதும் களப்பணிக்கு விரைந்து படையணிகள் மீள் ஒழுங்குபடுத்த வேண்டிய நெருக்கடியான அக்கணத்தில் மீண்டும் படையணியுடன் இணைக்கப்பட்டு ஒரு தாக்குதல் அணியின் பொறுப்பாளராக களமுனை சென்றார். அவ் அணி குறுகிய காலப் பயிற்சியுடன் முள்ளிவாய்கால் காப்பணையை பலப்படும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்நாட்களில் சிங்களப்படை காப்பணையை அண்மித்திருந்த நிலையில் கண்ணிவெடிப் பிரிவின் அணி ஒன்றுடன் முன்னகர்ந்து அணையை கடந்து சென்ற போது சிங்களப்படையின் குறி சூட்டணியின் தாக்குதலில் நெற்றியில் குண்டேந்தி முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் மாவீரர் லெப் கேணல் அன்பழகனாக தமிழீழத்திற்கான கனவை நெஞ்சினில் சுமந்து கொண்டு தன்னுயிர் ஈந்து விதையானார்.

-நிலாதமிழ்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply