Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / கணக்கிலும் களத்திலும் க(ச)ளைக்காத பூம்பாவை!

கணக்கிலும் களத்திலும் க(ச)ளைக்காத பூம்பாவை!

வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் பின்போ அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊமைகளாக உள்ளோம். அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன்.

1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம். நாங்கள் அங்கு சென்றடைந்த போது இரவு 8 மணி இருக்கும். அங்கே நிறைய அக்காக்கள் பெரிய மண்டபத்தில் (hall) எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய கணக்கேடுகளில் பச்சைநிற எழுதுகோலை வைத்துக்கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள். (அப்ப எங்களுக்கு பெரிய பெரிய புத்தகங்கள் காசேடு, பேரேடு என்றும் பச்சைப் பேனையால கணக்காய்வு செய்யினம் என்றும் தெரியாது). அப்போது ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் இரவு ஆயிட்டுது அந்த அறையில் கொண்டு போய் உங்கட பைகளை (bags) வைச்சிட்டு வந்து முகம், கைகால கழுவிப்போட்டு வந்து சாப்பிட்டிட்டு படுங்கோ”என்றார். எங்களுக்கும் வந்த புதுசு தானே நல்ல பிள்ளைகளாக போய் சாப்பிட்டு விட்டு வந்து பயணம் செய்து வந்த களைப்பில் தூங்கி விட்டோம்.

அடுத்த நாள் காலை 4.30 மணியளவில் ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் எழும்பி போய் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணத்துக்கு வாங்கோ” என்றார். நாங்களும் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டு வந்தோம். நாங்கள் வந்த புதிது என்றபடியால் எங்கள் ஐவரையும் அன்று மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதி எல்லோரும் ஓட்டப் பயிற்சிக்கு சென்று விட்டு வந்தார்கள். மக்கள் குடியிருப்புக்குள் எங்கள் முகாம் இருந்தபடியால் விடிவதற்கு முன் ஓட்டப் பயிற்சியை முடித்து விட்டு வர வேண்டும்.

நாங்கள் ஐவரும் குளித்து சீருடை அணிந்து வரவேற்பறையில் வந்து இருந்தோம். ஒவ்வொரு அக்காமாரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனார்கள். அப்போது உயர்ந்த மெல்லிய வெள்ளை நிற கம்பீரமான தலையை இரண்டாக பின்னி வளைத்து கட்டிய, வெள்ளை நிற மேற்சட்டையும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் இடுப்பில் கறுப்பு நிற பட்டியும் அணிந்த படி ஒரு உருவம் எங்களிடம் வந்து தனது பெயர் பூம்பாவை என்று அறிமுகம் செய்தது. பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகான கம்பீரமான எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற தோற்றம் பூம்பாவை அக்கா. அறிமுகப்படலத்தின் போது சொந்த ஊரை விசாரித்த போது நானும் அவாவும் ஒரே ஊர். என்னை தனது ஊர்க்காரி என்று தான் அழைப்பார். இப்படித் தான் எனக்கும் பூம்பாவை அக்காவுக்குமான உறவு ஆரம்பித்தது.தெல்லிப்பளை,யாழ்ப்பாணம்

பூம்பாவை அக்கா யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பகுதியிலுள்ள தெல்லிப்பளை எனும் ஊரில் திரு.திருமதி சண்முகலிங்கம் இணையருக்கு மகளாக ஜெயசக்தி எனும் இயற்பெயருடன் 01.11.1971 அன்று பிறந்தார். அவர் சிறு அகவை முதல் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் முதன்மை நிலை வகித்தார். மேலும் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் போன்றவற்றிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். 1990 – 1991 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைத்தும் தாய் நாட்டின் மீதும் மக்களின் மீதும் தலைவர் மீதும் இருந்த பற்றின் காரணமாக பல்கலைக்கழகக் கல்வி பயிலும் வாய்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு எமது போராட்டத்தில் 1992 இல் இணைந்தார். முதலில் அரசியற்துறையில் இருந்து பின்பு 1993 ஆம் ஆண்டில் நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு வந்தார். அங்கு தான் அவரின் ஆற்றலும் ஆளுமையும் திறமையும் வெளிப்பட்டது. எமது நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் மிகப் பெரிய ஆளுமையாக அவர் இருந்தார்.

ஆரம்ப காலத்தில் அவர் சேரன் வாணிபத்தின் எழிலகம், புடவை வாணிபங்களில் கணக்காய்வை மேற்கொண்டார். பின்பு அவரின் திறமை கண்டறியப்பட்டு நீண்டகாலம் கடைசி வரை நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராகத் திறம்படச் செயற்பட்டார். வன்னியில் குப்பி விளக்கின் உதவியுடன் தரையில் பாய் விரித்து அதில் வாணிபங்களின் ஆவணங்களை எல்லாம் விரித்து வைத்தபடி இரவிரவாக உறக்கமில்லாமல் கணக்காய்வு செய்வார். வேலை என்று வந்துவிட்டால் அவருக்கு உணவு, தண்ணீர், உறக்கம் எல்லாம் மறந்தேபோகும். வேலையை முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவிற் கொண்டு செயற்படுவார். (அப்போது வன்னியில் மிகவும் கடினமான போராட்ட சூழல் நிலவிய காரணத்தினால் முகாம்களில் வசதியான முறையில் பணிபுரிய முடிவதில்லை. ஏதோ கிடைத்த வளங்களைக் கொண்டு தான் நிறைவான முறையில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்).

அந்தக் காலப்பகுதியில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு போராளி பத்து பணியாளர்கள் புரியும் வேலையை தனி ஒருவராக நின்று பணிபுரியும் அளவிற்கு எமது அமைப்பினால் கற்கைநெறிக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு, புடம் போடப்பட்டனர். அந்த வகையில் பூம்பாவை அக்காவும் தனது கணக்காய்வுப் பணியினை கூடுதல் பணிச்சுமைக்கு நடுவிலும் தனது பணியினை திறம்பட அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார். நிறுவனங்களில் கணக்காய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதே வேளை தேவையான போது கண்டிப்பாகவும் மிகவும் ஆளுமையுடனும் செயற்படுவார்.

பூம்பாவை அக்கா இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்புக்கு குறைவிருக்காது. எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். முன்னர் அவர் அரசியற்துறையில் இருந்தபோது யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து மரக்கறிகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று திண்ணைவேலிச் சந்தையில விற்ற கதையை மிகவும் நகைச்சுவையாக அடிக்கடி சொல்லுவார். பின்னரும் அந்த நினைப்பில எங்கட முகாமில் இருந்த மொழி அக்காவின் தலைப் பின்னலை பிடித்து மாட்டுவண்டி ஓட்டி அவாவிடம் முறைப்பையும் திட்டையும் பரிசாக வாங்குவார். ஏதாவது வேலை செய்து களைப்படைந்து விட்டார் என்றால் அவரின் வாயில் இருந்து “அப்பனே முருகா! பழம் பிள்ளையாரே! வைரவக் கிழவா!” என்ற சொல் தான் அடிக்கடி வரும்.

தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் அவருக்கு எவ்வளவு பற்று, நம்பிக்கை இருந்ததோ அதற்கு அடுத்த படியாக கடவுள் மீதும் பற்று அதிகம். கந்தசஷ்டி விரதத்தை தன்னால் இயன்றளவு தொடர்ந்து பிடித்து வந்தார். அதே போல மாவீரர் நாள், திலீபன் அண்ணா நினைவு நாள் போன்றவற்றிற்கும் அன்று பகல் முழுவதும் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து இரவு மட்டும் உணவு உண்ணுவார். நாங்கள் சில பேர் மட்டும் பசி தாங்க முடியாமல் “திலீபன் அண்ணைக்கு எங்களுக்குப் பசிக்கும் என்று தெரியும் தானே கோவிக்க மாட்டார். வாங்கோ அக்கா வெளியில போய் களவாக சாப்பிட்டு வருவோம்” என்று கூப்பிட்டால், எல்லாக் குழப்படிகளுக்கும் களவுகளுக்கும் எங்களோட சேர்ந்து வருபவர் இதற்கு மட்டும் வரமாட்டார். பொதுவாக திலீபன் அண்ணா நினைவு இறுதி நாளில் எங்கள் முகாமில் உணவு சமையல் பகுதியிலிருந்து எடுப்பதில்லை. எல்லோரும் விரதமாக இருந்து இரவு உணவை சைவ உணவாக சமைத்து உண்ணுவோம். பூம்பாவை அக்கா விதவிதமாக சுவையாக சமைப்பதிலும் படு விண்ணி.

நாங்கள் கொஞ்ச பேர் 1995ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்க ஆரம்பித்த புதிதில் போராட்டத்தில் இணைந்த காரணத்தினால், எங்களின் பணித்தேவை காரணமாக (கணக்காய்வுப் பகுதியில் போராளிகளாக இருந்த அனைவரும் பல்கலைக் கழகத்திலோ அல்லது உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலோ கல்வி கற்றவர்களாக இருந்தார்கள்) க.பொ.த உயர்தரம் படித்து சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு எமது அமைப்பினால் பணிக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு பாடங்களில் ஏற்படும் தெளிவின்மைகளைத் தீர்ப்பதற்கு பூம்பாவை அக்கா பெரிதும் உதவி செய்வார். கணக்கியலில் அவர் ஒரு புலி. எந்தக் கடினமான கணக்கு என்றாலும் மிகவும் இலகுவான முறையில் எங்களின் மரமண்டைகளுக்குப் புரியவைத்து விடுவார். மற்ற நேரங்களில் மிகவும் இயல்பாக எங்களில் ஒருவராக அகவை வேறுபாடு பாராது பழகும் அவர் படிப்பு, வேலை என்று வந்து விட்டால் மிகவும் கண்டிப்பு நிறைந்த பெண்ணாக மாறி விடுவார். அவரிடம் பல மொக்கை கேள்விகள் கேட்டும் குரங்கு சேட்டைகள் புரிந்தும் மண்டையில் குட்டு வாங்கிய பெருமை என்னையே சாரும்.

கல்வி மற்றும் பணி தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக இருக்கும் அவர், மற்றைய நேரங்களில், நாங்கள் வேலிப் பொட்டுக்குள்ளால புகுந்து போய் கச்சான் விற்கும் ஆச்சியிடம் கச்சானும், குளிர்களி விற்கும் அண்ணையிடம் குளிர்களியும் ஒருவாறு தண்டல் தண்டி வாங்கி வந்து சாப்பிடும் போது “கழுகுக்கு மூக்கில வேர்த்தது போல” சரியான நேரத்துக்கு என்னை விட்டிட்டுச் சாப்பிடுறீங்களோடி …என்றபடி பங்கு கேட்க வந்துவிடுவார்.

ஒரு போராளி எந்நேரமும் களத்திற்கு செல்வதற்கு அணித்தமாக இருக்கும் வகையில், வெளிநிருவாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எம் தேசியத் தலைவனின் அவா. அவ்வாறே வெளிநிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் போராளிகள் தேவைப்படும் போது கடும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு. அந்த வகையில் பூம்பாவை அக்காவும் 1997 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது பிரிவிலிருந்து படையறிவியற் கல்லூரியில் அதிகாரிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார். அங்கு திறம்பட செயற்பட்டு ஒரு போர் அதிகாரிக்குரிய தகுதியோடு முகாம் திரும்பினார்.

வெளிப்பணிகளில் மட்டுமல்ல சண்டைக்களங்களிலும் பூம்பாவை அக்கா திறம்பட செயற்பட்டார். அவரின் பணித் தேவையின் முதன்மை கருதி இயக்கம் சண்டைக்கு விடாத போதும் வலுக்கட்டாயமாக பொறுப்பாளருடன் சண்டை பிடித்து இரண்டு தடவைகள் சண்டைக்களத்திற்குச் சென்றார். 1999ஆம் ஆண்டு நெடுங்கேணிப் பகுதியில் உள்ள போர் முன்னரங்கப் பகுதிக்கு சோதியா படையணியுடன் இணைந்து ஒரு படைப் பிரிவுக்கு (platoon) அணிக்குத் தலைவியாக சென்று ஆறு மாதங்கள் திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். பின்பு 2000 ஓயாத அலைகள்-4 இற்கும் ஒரு அணிக்கு தலைவியாகச் சென்று திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார்.

அவர் திருமண அகவையை அடைந்ததும், 2001 ஆம் ஆண்டு தலைவரின் கட்டளைக்கு ஏற்ப ஒரு போராளியை இணையேற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பின்பும் குழந்தைகளை தளிரில் விட்டு விட்டு (திருமணமான பெண்போராளிகள் தடையின்றி பணிகளைச் செய்வதற்கு இலகுவாக அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு தலைவரால் உருவாக்கப்பட்ட காப்பகம் தான் தளிர்) நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராக கடைசி வரை திறம்படச் செயற்பட்டார்.

பின்பு 2009 இல் எமது போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணப் பொறுக்காமல் சிறிலங்கா அரசும் ஏனைய உலக வல்லாதிக்கங்களும் ஒன்று சேர்ந்து எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு திட்டம் போட்டு காய் நகர்த்தி எம்மையும் எமது மக்களையும் முள்ளிவாய்க்காலிலே ஒரு சிறிய வட்டத்திலே அடைத்தன. அப்போது பூம்பாவை அக்காவின் கணவர் 2009 பங்குனி மாதம் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பின்பு பூம்பாவை அக்கா இரண்டு சிறு குழந்தைகளோடும் வயோதிபத்தாயோடும் மிகவும் சிரமங்களுக்கு நடுவில் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்தார். இறுதியில் வைகாசி மாதத்தில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் இரண்டு பெண்குழந்தைகளும் தாயும் இன்றி தந்தையும் இன்றி வயதான அம்மம்மாவின் அரவணைப்பிலும் பூம்பாவை அக்காவின் சகோதரனின் அரவணைப்பிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இப்படி நாட்டுக்காக தங்களையே அர்பணித்த பல மாவீரர்களின் அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவைப் பற்றி கூற இன்னும் மலையளவு விடயங்கள் உள்ளன.

பூம்பாவை அக்காவே உங்கள் கனவு ஈடேறும் என்றும், எல்லா மானமாவீரர்களின் கனவும் ஈடேறும் என்றும் நினைவிலிருத்திக் கொண்டு உங்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம்.

என்றும் உங்கள் மீளா நினைவுகளுடன்….

நிலாதமிழ்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான புதியவன்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட ...

Leave a Reply