Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / ஆனந்தபுர முற்றுகைச் சமர் – போராளியின் பதிவு

ஆனந்தபுர முற்றுகைச் சமர் – போராளியின் பதிவு

[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு-01]

மார்ச்சு மாதம் [2009] 20ம் திகதிவரை ஆனந்தபுரம் சந்தைற்கு அருகாமையில் இருந்த எம்மை பச்சைபுல்மொட்டைற்கு நகரும்மாறு கட்டளை வந்து நாம் அங்கு சென்றோம் அந்த காலப்பகுதியில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி வரை இராணுவம் வந்து ஆனந்தபுரத்தை கைப்பற்றுவதற்கான கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. பச்சைபுல்மொட்டையில் எமது பின்தள வேலையை நாம் செய்துகொண்டியிருந்த ஐந்தாம்நாள் எமது அணியிலிருந்து தாக்குதல் நடவடிக்கைற்காக 40 போராளிகள் உள்வாங்கப்பட்டு பயிற்சிற்காக அனுப்பபட்டோம்.

முள்ளிவாய்க்காலில் வைத்து தாக்குதல் அணிகள் தளபதிகளால் பிரிக்கப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்ட பெண் போராளிகளுக்கு எமது அணி போராளிகளை பொறுப்பாக விடப்பட்டு ஒரு தாக்குதல் அணி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு அணியிற்கு என்னை பொறுப்பாக நியமித்தார்கள். அன்று உடனடியாகவே திட்டமிட்ட தாக்குதல் ஒன்றுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்டு கொண்டுயிருந்த எங்களை 31ஆம் திகதி உடனடியாக தாக்குதல் ஒன்றுக்கு தயாராகும் படி கட்டளை வந்தது.
ஆனந்தபுரத்திற்குள் தேசியத்தலைவர் உட்பட அங்கு நின்ற போராளிகள் அனைவரும் இராணுவத்தின் முற்றுகைற்குள் இருப்பதனால் உடனடியாக முற்றுகை உடைப்பு தாக்குதலுக்காக எமது அணிகள் நகர்த்தப்பட்டது எம்மை போன்று பல தாக்குதல் அணிகளும் இணைக்கப்பட்டு ஆனந்தபுர சந்தை பாதையும் கிருஷ்ணன் கோவில் பாதையும் சந்திக்கும் இடத்தில் பச்சைபுல்மோட்டையால் நகர்ந்து ஒரு மாபெரும் முற்றுகை உடைப்புசமர் செய்யப்பட்டது. போராளிகளால் குறிப்பிட்ட நேரமே அந்த உடைப்பை தக்கவைக்க முடிந்தது அந்நேரத்திற்குள் தேசியத்தலைவர் உட்பட காயப்பட்ட பல போராளிகள் பாதுகாப்பாக பி்ன் நகர்த்தப்பட்டனர்.

மீண்டும் இராணுவம் ஆனந்தபுரத்தை முழுமையாக முற்றுகையிட்டது. முற்றுகையை உடைத்து உள்உழைந்த எமது அணியும் முற்றுகைற்குள் ஏப்பிரல் மாதம் 1ஆம் திகதி உள்ளானது அங்கு கட்டளைதளபதியாக இருந்த பிரிகேடியர் பானு அண்ணாவை தொடர்பு கொண்டு எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம் அவர் எம்மை கிருஷ்ணன் கோவிலுக்கு அருகாமையில் பாதுகாப்பாக இருக்கும்படியும் தாம்பின்னர் கட்டளை வழங்குவதாக கூறினார். முற்றுகைற்குள் ஆரம்பத்திலிருந்த போராளிகளை சந்தித்த போது கட்டளை தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா காயப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்தனர்.

168045230_3849037065189702_7121421063203219756_n

[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு-02]

ஏப்பிரல் முதலாம்நாள் மாலை எமக்கான கட்டளை பானு அண்ணாவிடமிருந்து வந்தது. நாம் பானு அண்ணா இருந்த இடமான ஆனந்தபுரத்தில் முன்னர் நிதித்துறை வழங்கல் பகுதியின் தையலகம் இருந்த பகுதிற்கு சென்றோம் அங்கு நாம் நிலைஎடுக்க வேண்டிய இடத்தை பானு அண்ணா விளங்கப்படுத்தி அனுப்பிவைத்தார் எங்கள் அணி ஆனந்தபுர இரணைப்பாலை ரோட்டை கவர்செய்து நிலைஎடுத்தோம். எமது கட்டளைநிலையத்திலுருந்து மிக குறுகிய தூரமாகவே எமக்கான நிலையிருந்தது. இராணுவம் எம்மை மிகவும் குறுகிய இடத்திற்குள் முற்றுகை நெருக்கியிருந்து இருந்தபோதிலும் இந்த இடத்தை நாம்விட்டு நகரக்கூடாது என்கிற முடிவில் நாங்கள் எல்லோரும் இருந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன் நாம் பச்சைபுல்வெளிற்கு நகரமுன் நாம் முகாம் அமைத்து இருந்த வீடுகள் இராணுவத்தின் எல்லையாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த எல்லா போராளிகளுக்கும் களமுனையில் களமாட சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை அப்படியான ஒரு பின்தள வேலையிலிருந்த எமக்கு இப்படி ஒரு களமுனை எமக்கு கிடைத்ததை எனது நண்பர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் நிலைகளை அமைத்து இராணுவத்தை முன்னேற விடாமல் தாக்குதலில் ஈடுபட்டோம். இரண்டாம் நாள் பகல் இராணுவம் நான்கு பக்கத்தாலும் முன்னேற முயற்சி செய்தது ஆனந்தபுரத்தில் போராளிகள் இருந்த குறுகிய இடத்திற்குள் இராணுவம் செல்கள் மற்றும் டாங்கிகளால் நேரடியாகவும் தாக்குதலை நடத்தி முன்னேற முயற்சித்தது. எமது நண்பர்கள் பலர் தொடர்ச்சியாக வீரச்சாவடைந்தனர் இருந்தபோதிலும் எம்நிலைகளை நாம்விட்டு நகரக்கூடாது என்கிறநிலையில் இருந்தோம்.
மாலை எமது அணியில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது அந்த தகவலை கட்டளை மையத்திற்கு அனுப்பினேன் கட்டளை மையத்திலுருந்து பெண்போராளிகள் அணி ஒன்று வந்து எம்முடன் இணைந்தது செல் அடிகள் குறைந்த இடைவெளியில் அவர்களை நிலைகளில் விட்டுக்கொண்டுயிருக்கும் போது சினைப்பர் தாக்குதலால் நான் காயப்பட்டு கீழே விழுந்தேன் என்னை தூக்கவென்று நிலையைவிட்டு வெளியில் வந்த எனது நண்பனும் தலையில் சினைப்பரால் தாக்கப்பட்டு உடனடியாக வீரச்சாவடைந்தார் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெண்போராளிகளால் பின்நகர்த்தப்பட்டு பானு அண்ணையின் கட்டளைபீடத்தில் விடப்பட்டேன் அங்கு களமருத்துவ போராளியால் முதல் உதவி செய்யப்பட்டு ஓய்வில் விடப்பட்டேன்.

[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு-03]

ஆனந்தபுர யுத்தகளத்தில் கடும் இறுக்கமான சூழல்காணப்பட்டாலும் போராளிகள் தமது கடமைகளை சரியாக செய்யதவறுவதில்லை அதன்படி காயப்பட்ட என்னிடமிருந்து ஆயுதங்கள் வேண்டப்பட்டியிருந்தது அதைப்போன்று குப்பியும் கழட்டப்பட்டது ஏனெனில் காயத்தின் வேதனையில் போராளிகள் குப்பி கடிப்பதை தவிர்ப்பதற்காக இந்நடைமுறை எப்போதும் கையாளப்படும் அன்று இரவு முழுவதும் பானு அண்ணையின் கட்டளைப்பீடத்தினுள் இன்னும் சில காயப்பட்ட போராளிகளுடன் நானும் இருந்தேன். கட்டளை மையத்தினுள் பானு அண்ணா உட்பட இருந்த சில போராளிகள் இரவுஇரவாக எமது நிலைகளை தக்க வைக்க கட்டளைகளை வழங்கிகொண்டுயிருந்தனர்.

ஏப்பிரல் மூன்றாம்நாள் காலையில் கட்டளை மையத்திலிருந்த காயப்பட்ட நான் உட்பட அனைத்து காயப்பட்டவர்களையும் காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர் அதுவும் தையலகம் அமைந்திருந்த இடத்தில் இருந்த இன்னுமோர் இடம்தான் அந்த இடத்திற்கு அருகாமையில் பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்கள் நெஞ்சுபகுதியில் காயத்துடன் தொலைத்தொடர்பில் கட்டளையை வழங்கிகொண்டுயிருந்தார். காயப்பட்டவர்கள் இருந்த நிலபங்கர் முழுமையாக காயப்பட்டவர்களால் நிரம்பி இருந்தது எங்களை உள்ளே எடுக்கமுடியவில்லை.

சண்டை உச்ச நிலையை அடைந்திருந்தது அன்றைய பகல்முழுதும் பங்கர் வாசலிலே கழிந்தது. இதற்கிடையில் காயப்பட்டு வந்திருந்த எனது அணி நண்பர்கள் ஐந்துபேர் ஒன்றாக இணைந்து கொண்டோம். கடுமையான செல் தாக்குதலும் ரவைகள் கூவிக்கொண்டு ஊடறுத்து கொண்டு சென்றன இதில் சில காயப்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்து கொண்டுயிருந்தனர்.

இரவு திடீரென நாங்கள் இருந்த பங்கர் மீது செல்கள் விழுந்து வெடித்தன என்னுடன் கதைத்துக்கொண்டுயிருந்த சகநண்பர்கள் இருவர் உட்பட பல போராளிகள் வீரச்சாவடைந்தனர் மற்றவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு சொல்லப்பட்டது. எனக்கு சினைப்பர் தாக்குதலில் கழுத்தினுள் ரவை பாய்ந்ததால் தலையை மட்டும் அசைக்க முடியாது மற்றும்படி என்னால் நடக்கமுடியும் என்பதால் அங்குயிருந்த எனது நண்பர்கள் உட்பட பத்துற்கு மேல்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சண்டைற்குமுன் நாம் இருந்த இன்னுமொரு காணிற்கு ஒன்றாக சென்றோம் அங்கு மிகவும் தரமான பங்கர் வீட்டினுள் இருந்தது அதற்குள் தங்கினோம். எங்களுடன் வந்த பல பெண்போராளிகளும் வீரச்சாவடைந்திருந்தனர் பலர் காயப்பட்டுயிருந்தனர் அவர்களில் ஒருசிலர் எம்முடன் இருந்தனர்.

ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சகல படையணிகளும் பங்குபற்றியிருந்தன. அதைப்போன்று லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியில் பின்கள பணியிலிருந்த எமது அணி போராளிகள் 40 பேர் ஆனந்தபுர முற்றுகை முறியடிப்புக்காக கணினிபிரிவின் 100ற்கு மேற்பட்ட பெண்போராளிகளை உள்ளடங்கிய தாக்குதல் அணியாக சென்றோம். எமது அணியை தாக்குதல் திட்டத்தின்படி மூன்று அணியாக பிரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஒரு அணி தடையை உடைக்க மற்ற இரு அணிகளும் உள்நுழைவதே திட்டமாக இருந்தது. மார்ச்சு மாதம் 31 ம்திகதி எங்களது இரு அணிகள் ஆனந்தபுரத்தினுள் சென்றது ஒரு அணி ஆனந்தபுரத்திற்கு வெளியே பச்சைபுல்வெளியில் நிலை எடுத்தது. ஆனந்தபுர முற்றுகையிற்குள் எமது அணியினை சேர்ந்த 25ற்கு மேற்பட்ட நண்பர்களும் அதைபோன்று முற்றுகையை உடைப்பதற்கான முயற்சியில் 5ற்கு மேற்பட்ட நண்பர்களும் வீரச்சாவடைந்திருந்தனர்.

அதைப்போன்று எமது அணியுடன் வந்த பெண்போராளிகளில் பெரும்பாலானோர் வீரச்சாவடைந்தும் விழுப்புண் அடைந்திருந்தனர்.

இந்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த எமது அணியினர் விபரங்கள்,
1.லெப்.கேணல் அனுஷன்
2.லெப்.கேணல் கபிலன்
3.லெப்.கேணல் அந்தியாஸ்
4.லெப்.கேணல் இளவரசன்
5. லெப்.கேணல் ஆற்றலோன்
6. லெப்.கேணல் பெருங்கீரன்
7. லெப்.கேணல் ஏழிசை
8. லெப்.கேணல் மதிவர்மன்
9. லெப்.கேணல் வல்லவன்
10. லெப்.கேணல் குலம்
11. லெப்.கேணல் கண்ணன்
12. லெப்.கேணல் நிறஞ்சன்
13. லெப்.கேணல் தயாபரன்
14. லெப்.கேணல் மைந்தன்
15. லெப்.கேணல் வண்ணம்
16. மேஜர் வாணவன்
17. மேஜர் சோலையப்பன்
18. கப்டன் சுடரவன்
கால நீட்சியில் எமது நினைவுகளில் 18 நண்பர்களின் பெயர்களே நினைவில் உள்ளது. அதைபோன்று சில நண்பர்களின் புகைப்படங்களே எம்மால் சேகரிக்க முடிந்தது ஆனந்தபுர முற்றுகைச் சமரின் பதிவுகளை பதிய முற்பட்ட போதே காலம் பல நினைவுகளை அழித்துள்ளதை உணரமுடிகிறது.

எம்மை போன்று வாழும் சகமுன்னால் போராளிகள் உங்களுடன் உடன் களமாடிய நண்பர்களின் நினைவுகளையும் தியாகங்களையும் பதிவிடுங்கள் ஒரு போராளியின் சாவு சாதாரண சாவல்ல அது தமிழீழ விடுதலைக்கான வரலாறு.

[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு-04]

ஆனந்தபுர முற்றுகையை மிகவும் குறுகிய இடத்தினுள் இராணுவம் கொண்டுவந்திருந்தது ஏப்பிரல் 3ஆம்நாள் இரவு தலைமையிடமிருந்து ஆனந்தபுரத்தை விட்டு விற்றோ பண்ணும்படி கட்டளை தளபதிமார்களுக்கு உத்தரவு வந்து அதன்படி ஆனந்தபுரபகுதிற்குள் இருந்த காயப்பட்ட போராளிகள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி இரவிரவாக நடைபெற்றது.

எமக்கு களநிலவரம் தெரிந்தபடியால் ஆயுதம் தூக்க வலுவுள்ள காயப்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தவர்களின் றைபிள்கள் கோல்சரை கட்டி சண்டைற்கு தயாராகவே நகரத் தொடங்கினோம் ஏனெனில் சிறிலங்கா இராணுவத்தின் முழுப்பலத்தையும் ஆனந்தபுரத்தை சுற்றியே அமைத்திருந்தார்கள். ஆனந்தபுரத்தினுள் இருந்த அனைவருக்குமே வாழ்வா சாவா என்கிற முடிவை தீர்மானிக்கும் நகர்வாக இருந்தது. இராணுவம் பரா வெளிச்சம் போட்டு ஆனந்தபுரத்தை பகல்போல வைத்திருந்தனர் எமது சிறு நகர்வு தெரிந்தாலும் எம்மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் ஆனந்தபுரத்தில் முன்னர் கணினிபிரிவின் முகாம் ஒன்றுயிருந்தது அந்த முகாமில் மிகப்பலமான கட்டிடம் இருந்தது அந்த இடத்தை மையமாக வைத்தே எமது நகர்வுற்கான ஒன்றிணைவு நடந்தது. அங்கு வைத்தே வெளியேறுவதற்கான திட்டம் சொல்லப்பட்டது ஆதாவது பச்சைபுல்வெளி பக்கத்திலுருந்து வெளிபக்கமாக ஆனந்தபுர முற்றுகை போராளிகள் உடைப்பார்கள் அதேநேரம் நாங்களும் உள்பக்கத்தால் பலபக்கத்தில் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்தி உடைத்துக்கொண்டு வெளியேற வேண்டும். நாங்கள் பிரிகேடியர் பானு அண்ணாவின் தலைமையில் நகர்ந்த அணியில் சென்றோம்.

ஏப்பிரல் 4ஆம் நாள் அதிகாலை இரண்டுமணியளவில் தாக்குதல் ஆரம்பமானது. ஆனந்தபுரத்தில் மாத்தளன் பக்கம் மற்றும் பச்சைபுல்வெளி பக்கமென பலபக்கமாக ஊடறுப்பு தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர் ஆனால் இராணுவம் எங்களின் நோக்கத்தை யூகித்துகொண்டு மிகவும் பலமான ஏறிகணை தாக்குதலை அந்த குறுகிய பிரதேசத்தில் மேற்கொண்டு மூர்க்கத்தனமான எதிர்தாக்குதலை செய்தான் அதிகாலை வரை நடைபெற்ற தாக்குதல்வரை எம்மால் இராணுவத்தின் தடைகளை உடைக்கமுடியாமல் அணிகள் எல்லாம் சீர்குலைந்தது. இப்போது நாங்கள் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் கடாபி மற்றும் பிரிகேடியர் மணிவண்ணன் ஆகிய மூவரும் இருந்த இடத்தில் நின்றோம். தீபன் அண்ணா அங்கியிருந்த சிறு தொகையான போராளிகளை ஒருங்கிணைத்தார் விடியப்போகுது நாம் உடனடியாக வெளியேற வேண்டும் என சொன்னார்.

பல ஆயிரம் போராளிகளை யுத்தகளத்தில் வழிநடத்திய மூன்று தளபதிகள் ஐம்பதுற்கும் குறைவான போராளிகளுடன் செய் அல்லது செத்துமடி என்கிற முடிவில் நகர்வை ஆரம்பித்தனர் இராணுவம் எங்களை பின்வாங்க வைத்ததாக அமைதியாக இருந்தது கடாபியண்ணை மற்றும் மணிவண்ணன் அண்ணை இருவரும் முதலாவது ஆட்களாக நின்று வழிநடத்தி சென்றனர் நாம் குறுகிய தூரம்தான் நகர்ந்திருப்போம் இராணுவம் இரகசியமான முறையில் நகர்ந்துவந்திருந்து மூன்று பக்கத்தாலும் தாக்குதலை மேற்கொண்டது. புலிகளும் மிக கடுமையான பதில் தாக்குதலை கொடுத்தோம்.

இந்த சண்டையில் பிரிகேடியர் மணிவண்ணன் வீரச்சாவை தழுவுகிறார் பிரிகேடியர் கடாபி அண்ணா கால்கள் இரண்டிலும் படுகாயமடைய தீபன் அண்ணா எங்களை மீண்டும் பின்னுக்கு வரும்படி கட்டளை இடுகிறார் இப்போது நிலைமை மிகவும் பாதகமாகவே எமக்கிருந்தது இருந்தபோதிலும் திரும்ப அணிகளை இணைக்கும் முயற்சியில் தொலைத்தொடர்பில் தீபன் அண்ணா கட்டளைகளை வழங்கினார். கடாபியண்ணாவை கொண்டுவந்து தீபன் அண்ணாவுற்கு பின்பக்கமாக அருகில் வைத்தனர் கடாபியண்ணா மல்லாக்காக படுத்திருந்தபடியே தீபன் அண்ணாவுடன் தன்னை கொண்டுபோகும்படி என்னிடம் கேட்டார். [ஆம் நான் கடாபியண்ணாவால் வளர்க்கப்பட்ட போராளி நான் பலதடவை இயக்கம் தரும்பின்தள பணி செய்யமாட்டேன் சண்டை ரீமுக்கு போறேன் என குழம்பும்போது அறிவுரை சொல்லி மற்றும் தண்டனையும் தந்தும் நாட்டிற்காக எந்த பணி செய்தாலும் அந்த பணியும் சிறந்த பணியே என என்னை இயக்கிய தளபதி படுகாயமடைந்து இருப்பதை பார்க்க இயலாது இருந்தேன்] நான் கடாபிஅண்ணாவுற்கு கூறினேன் தீபன் அண்ணா பக்கத்தில் தான் உள்ளார் என்று ஆனால் கடாபியண்ணா விடாமல் தீபன் அண்ணையை கூப்பிட்டு கொண்டுயிருந்தார். இறுதியாக தீபன் அண்ணாவும் கடாபி என்னவென்று சொல் என கேட்டார்.

அதற்கு கடாபியண்ணா தீபன்அண்ணா நீங்களே என்னை சுட்டுவிடுங்கள் என கடாபியண்ணா திரும்ப திரும்ப கேட்டார் அதற்கு தீபன் அண்ணா கடாபி நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை உயிருடன் கொண்டுபோவேன் என கூறினார்.

-முற்றுகை தொடரும்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply