Home / மாவீரர்கள் / பதிவுகள் / ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்

ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்

ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன்தான் நிலவன்.

இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிவவனது கையில் இருந்தது சுஊடு ஆயுதம். இந்த ஆயுதத்துடன் தான் படகுகளில் ஏறிச் சண்டை செய்தான்.

படகில் ஆயத இயக்குனராகச் சண்டைகளுக்குச் சென்று வந்த நிலவன், பல்வகைப் படைப்பலங்களைக் கையாள்வதில் தேர்ச்சி மிக்கவனாகத் தன்னை வளர்த்தான்.

படைக்கருவிகளைக் கையாண்டு கடற் போர்களைச் செய்த நிலவன். மெல்ல மெல்லப் படகின் ஓட்டியாகப் பொறி சீர்செய்பவனாக, தொலைத் தொடர்பாளனாக எனப் படிப்படியாக வளர்ந்து, படகை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாக தன்னை வளர்த்திருந்தான். மிகக் குறுகிய காலத்துக்குள் இவனது வளர்ச்சியைப் பார்த்து நானே பல வேளைகளில் பெருமைப்பட்டிருக்கின்றேன்.

இவனது செயல்திறனைக் கருத்தில் கொண்டு கடற்புலிகளின் நடவடிக்கை அணிக்குள் உள்வாங்கி இருந்தேன். நேரம் காலமின்றி ஓய்வொழிச்சல் ஏதுமின்றி அயராது உழைக்கும் நடவடிக்கை அணியில் நிலவன் மிகத்திறமையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டான். இங்கு நீண்ட கடல் அனுபவத்தைப் பெற்றுச் சிறந்த கடலோடியாகத் தன்னை இனங்காட்டியிருந்தான். நல் ஆற்றலும், ஆளுமையும் கொண்;டு வளர்ந்துவரும் போராளிகளுக்குக் கண்டிப்பாக நிர்வாகத் திறனும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. இதனால் நிலவனுக்குச் சற்றுக்கூட பொருத்தம் இல்லாத கடற்புலிகளின் வழங்கல் பகுதிப் பொறுப்பைக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அந்தப் பணியையும் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வண்ணம் மிக நேர்த்தியாக நிலவன் செய்து காட்டினான்.

இந்த நேரத்தில்தான் மன்னாரில் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்கள் ‘போதைப்பொருள்’ பாவனைக்கு அடிமையாகி வரும் மக்களைக் காப்பதோடு, அதன் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தி, மக்களை இந்தக் கேடான பழக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டிய பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். மன்னாருக்குச் சென்ற நிலவன் நான் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகப் பணியில் இறங்கி, மதகுருமார்கள், கல்விமான்கள், சமூகப்பெரியவர்கள் என எல்லோரையும் அணுகி சமூகத்தைக் காக்க வேண்டிய கடமையை எடுத்துச் சொன்னான். ஒவ்வொரு வீடுவீடாகப் போய் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டினான். இவனது பெரும் முயற்சி பேராபத்திலிருந்து மக்களைக் காத்துத என்றால் மிகையாகாது.

இவ்வாறாக சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நிலவன் மன்னார் நடவடிக்கை அணியிலும் சில காலம் செயற்பட்டிருந்தான். இந்தச் சூழ்நிலையில்தான் ‘ஆழிப்பேரலை அனர்த்தம்;’ ஏற்பட்டது. இந்த இழப்புக்குள்ளும் அழிவுக்குள்ளும் இருந்து மக்களை நிமிர்த்தி, மீளக் குடியமர்த்த வேண்டிய தேவை இருந்தது.

Lieutenant-Colonel-Nilavan-1

இதனால், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு அபிவிருத்திச் செயல் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்தது. இங்குதான் வடமராட்சி கிழக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்றப் பணிக்காய் நான் நிலவனை நியமித்திருந்தேன். ஆனால் அந்தப்பகுதி அவனது சொந்த இடமாக இருந்ததனால், அங்கு சென்று வேலை செய்வதற்கு அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இதனால் சிறு தயக்கம் அவனுக்கிருந்தது. ஆனால் நிலவனைக் கூப்பிட்டு நிலமையை எடுத்துச் சொல்லி இது மக்களுக்குச் செய்யும் பெரும்பணி என்பதை உணர்த்திய போதுதான் அந்த வேலையைப் பொறுப்பெடுத்தான்.

Maaveerar Portrait designed by Veeravengaikal.com.  * * Please do not modify this picture * *
Maaveerar Portrait designed by Veeravengaikal.com.
* * Please do not modify this picture * *

மிக வேகமாக இரவு பகல் பாராது அந்தப் பணிக்குள் மூழ்கிய நிலவன் குறிப்பிட்ட சில காலத்துக்குள் மீண்டும் என்னிடம் வந்த நின்றான். ‘நான் அங்க வேலை செய்யேல்ல…’ என்ற எனக்குத் தெரியும். சில புரிந்துணர்வுச் சிக்கல்கள் அவன் மனதைப் பாதித்திருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் அவனது இடத்துக்கு வேறு ஒருவரை அனுப்பிவிட்டு நிலவனைத் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தேன். அவனும் மிக விருப்புடன் அந்த பணியை ஏற்றுச் சென்றிருந்தான். அங்கு மிக இறுக்கமான காலகட்டத்தில் எல்லாம் உறுதியோடும் மன வைராக்கியத்தோடும் நின்று செயற்பட்டிருந்தான்.

பின்னர் திருகோணமலையிலிந்து திரும்பிய நிலவனுக்கு லெப். கேணல் பாக்கியன் படையணிப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். அந்தப் படையணியை வளர்க்க அவன் உழைத்தான். அவனது உழைப்பு அந்தப் படையணியில் பாரிய மாற்றங்களைத் தந்தது.

இந்தவேளையில் தான் 26.12.2007 அன்று மன்னார் நெடுந்தீவுச் சண்டை தொடங்கிய போது ஒரு படகின் கட்டளை அதிகாரிக்குச் சுகயீனம் காரணமாக மாறிச் சென்றவன் திரும்பி வரவில்லை.

எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொடுத்தாலும் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளியை நான் இழந்துநிற்கும் அதேவேளை அவனது இழப்பால் துயருறும் குடும்பத்தின் துன்பச்சுமையிலும் பங்கெடுத்து நிற்கின்றேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நினைவுப்பகிர்வு:
கேணல் சங்கர் சூசை
சிறப்புத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்.

நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு.

About ehouse

Check Also

கேணல் கிட்டு

தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு ...

Leave a Reply