வீரசிங்கம் இரத்தினகுமார் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட எழில்கண்ணன் மாஸ்டர் என்றால், போராளிகள் மட்டுமல்ல சாளை தொடக்கம் செம்மலை வரையான சிறுவர்கள் பெரியவர்கள் என மக்கள் எல்லோருக்கும் நன்கு அறியப்பட்ட ஒருவர். அது மட்டுமல்ல வடமராட்சி கிழக்கு, மன்னார் மாவட்டத்தின் சில கரையோரக் கிராமங்களில் இன்றும் இவர் நாமத்தை மனதினில் சுமக்கின்றனர் எமது மக்கள். எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதே, தான் நேசித்த மக்களுக்காக வாழ்ந்து மாவீரர் ஆனார். ஆனால் அவரின் புகழ் இன்றுவரை வாழ்ந்துகொண்டு தானே இருக்கின்றது.
எனது அப்பாவை பற்றி வந்த ஒரு பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
***
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவருடையதுதான்.
மிராஜ் வகைப் படகுகள், கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரே தடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப் பார்க்கும்படி கூறியிருந்தார். முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து, பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப் பார்த்து ஓடிய எழில்கண்ணன் ஒரே தடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தார்.
அதுபோன்று முதன் முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப் படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து, அவர் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதுதான் எழில்கண்ணன்.
பின்னாளில் அவர் ஒரு படகுக் கட்டளை அதிகாரியாகவும், பொறியியலாளனாகவும், அதன்பின் படகு கட்டுமானத்துறை பொறுப்பாளனாகவும் கடற்தாக்குதல் அணியின் பொறுப்பாளராகவும் கடற்தாக்குதல் தளபதியாகவும் சிறிலங்கா கடற்படைக்கு தலையிடி கொடுக்கும் ஒருவரகவும் பல கடல்புலி போராளிளை உருவாக்கும் ஆசனாகவும், அலைமீது தன் பயணத்தை தொடந்தார்.
ஆனையிறவு வெற்றி உரை ஒன்றில் பால்ராஜ் மாமா கூறியிருந்தார். “இந்த வெற்றிக்குக் காரணம் குடாரப்பு தரையிறக்கம் தான். ஆனால் இதைத் துல்லியமாக எதிரியின் எதிர்தாக்குதலை முறியடித்து குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்த கடற் தாக்குதல் தளபதி எழில்கண்ணனின் சாதனை சிறப்பு மிக்கது” என்றார். பின் நாளில் எங்கு தரைஇறக்கம் திட்டமிட்டாலும், அதற்கு எழிலின் ஒழுங்கு என பெயர் உண்டானது. அது மட்டுமல்ல விநியோக செயற்பாட்டில் இயற்கையின் சீற்றத்தால் இயந்திரம் இயங்க மறுத்த போது, 100 கடல்மைல்களுக்கு அப்பால் 200 குதிரைவலு இயந்திரத்தை தனது கையால் செலுத்தி கரை கொண்டுவந்துள்ளார். சக தோழர்களின் படகுகளில் கோளாறுகள் ஏற்பட்ட போதும் மாஸ்டர் வருவார், கட்டியிழுத்து சரக்குகளை கரை கொண்டு போவார் என போராளிகள் மனதில் நம்பிக்கை மிக்க தளபதியாக வலம் வந்தார்.
பின்னர் மன்னார் மாவட்ட கடற்புலிகள் தளபதியுமாகவும் உயர்ந்து விளங்கினார். மக்கள் மீதும் மண் மீதும் அளவு கடந்த பற்றுள்ள ஒரு வீரன் தன்னை எவ்வளவு உச்சத்தில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இவன் உதாரணம். ஏன் என்றால் கடலின் நாயகன் அலையினாசன் என வர்ணிக்கப்பட்டவன். யாழ் மாவட்டத்தின் நாரந்தனை கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தனது 13 வயது வரை கடல் பற்றி எதுவும் அறியாதவன். ஆனால் தன்னை மாற்றிக்கொண்டான். தாயக கனவுக்காக இது இவர்களால் மட்டுமே முடியும். மன்னார் மாவட்டதின் சிறிய தீவுகள், குடாக்கள் பல சந்தர்பங்களில் பாரிய பங்கினை போராட்டத்திற்கு வகித்துள்ளது. இந்தத் தீவுகள் பற்றிய தெளிவும் அதில் எதிரியின் திட்டமிடலும் நன்கு விளங்கிக் கொண்டவர்கள் சிலர். அதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் எழில்கண்ணன். இதில் பல தாக்குதலைத் திட்டமிட்டு வெற்றியையும் ஈட்டி உள்ளார். மன்னார் மக்களின் அன்றாட நாளில் மிகவும் கெடுபிடியாக விளங்கியது எரிக்ககலம்பிட்டி சிறிலங்கா கடற்படை தளம். இது இவரின் அடுத்த இலக்கு. சரியான திட்டம், நிதானமான ஒத்திகை, பலமான நகர்வு, எதிர்பாராத கடற்படை திணறியது. ஆயுதங்கள் மீட்பு, எதிரிப்படகு தாண்டது. கடற்படையினர் சிலர் கொல்லப்பட்டனர். வெற்றிக்களிப்புடன் எழில்கண்ணன் அடுத்த திட்டத்திற்கு அண்ணனிடம் ஆசி வேண்டி வரும் வழியில்…
போர்க்களத்தில் கொல்ல முடியாத சாவு, கடல் அன்னை சீற்றதில் காவு கொள்ள முடியாத மரணம், அவன் வணங்கும் அம்மன் குடிகொள்ளும் வேப்பம் பட்சத்தில் வாகன விபத்தில் கொன்றுபோட்டது. தான் செல்லும் வழியில் எதுவும் வரலாம் என வாழ்ந்தவர்கள். தன் குடும்பம் தன் குழந்தை என இவர்கள் எண்ணியது இல்லை. தான் நேசிந்த மக்களுக்கும் மண்ணுக்கும் தன் உயிரும் உடலும் என இறுதிவரை வாழ்ந்தவர்கள். எழில்கண்ணன் இறுதியாக வழிநடத்திய அந்த அணி எழில்கண்ணன் கடல்தாக்குதல் அணியென ஈழத்தின் கடரல்பரப்பில் வலம் வந்தது.
***
இந்தப் பதிவை வாசிக்கின்ற போது, மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்ட எனது அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அத்துடன் என்போன்ற ஈழத்துத் தளிர்களைத் தலைவணங்குகின்றேன். பதினாறு ஆண்டுகள் கடந்தாலும் அவரின் நினைவுடன் இன்றுவரை வாழ்கின்றேன்.
– கதிரினி –
