Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்!

கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்!

போர்க்களத்தில் ஒரு போர்வீரனின் உளவுரணைச் சிதைப்பது அவனருகில் காயத்திற்குள்ளான போர்வீரனுக்கு சிகிச்சையளிக்காமல் அப்போர்வீரன் துடித்துக்கொண்டிருப்பதுதான்.
ஏனெனில் தனக்கும் இதேகதிதான் என அப்போர்வீரனின் மனதில் எழும் உணர்வே அவனைத் தொடர்ந்து போராடுவதற்கான துணிவை இல்லாதொழிக்கும்.

121331158_4227851847244364_5498779846733590040_n
இது போர்க்களங்களில் இயக்கம் கண்டறிந்த போரியல் உண்மை.
ஒரு நாட்டின் இராணுவமே தனது படைநடவடிக்கைகளில் காயத்திற்குள்ளாகும் இராணுவத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில்,
ஒரு விடுதலை இயக்கமாக எந்தவொரு நாட்டின் உதவிகளுமின்றி போர்க்களத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு போராளிகளைக்கொண்டே சிகிச்சையளித்து பராமரிக்கும் திறனைக் கொண்டிருந்த உலகின் ஒரேயொரு விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.
ஒரு பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு எமது படையணிகள் தயாராகத் தொடங்கினால் சமநேரத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அணிகளும் கூடவே நகரத்தொடங்கும்.
பின்னணித்தளங்களில் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் அனைத்தும் களஞ்சியப்படுத்தப்படும்.
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கும் சிறிலங்கா அரசு பொருளாதாரத்தடை போட்டிருந்தது.
பொதுமக்களின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் பொது வைத்தியசாலைகள் திணறிக்கொண்டிருந்த காலம் அது.போதிய மருத்துவ சிகிச்சையின்றி மக்களின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இயக்கம் மருந்துப்பொருட்களை வழங்கிய சந்தர்ப்பங்களும் நிறையவே நடந்தேறிது.
இவ்வாறான இடர்சூழ்ந்த நிலையிலேயே இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலை நடத்துவதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தது.
உலக இராணுவ வல்லுனர்களால், ‘தாக்கியழிக்கப்பட முடியாத தளம்’ என எதிர்வுகூறப்பட்டிருந்த ஆனையிறவுத்தளத்தை அழிப்பதென்பது பெரும் சவாலானதாகவே நோக்கப்பட்டது.
ஆனாலும் புலிகளின் போரியலையும் தலைவரின் மதிநுட்பத்தையும் தளபதிகள்,போராளிகளின் வீரத்தையும்,போராட்டத்திற்கு உறுதுணையாக தொடர்ந்து நம்பிக்கையோடு பயணித்துவரும் மக்களின் விடுதலை அவாவையும் இந்த உலகத்திற்கு உணரவைப்பதற்கு ஆனையிறவுத்தள அழிப்பு காலத்தின் அவசியமென்பதை தலைவர் தனது தீர்க்கதரிசனப் பார்வையால் தெளிவுபடுத்தினார்.
திட்டங்கள் தீட்டப்பட்டது.
போருக்கான பயிற்சிகள் இரவுபகலாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கடற்புலிகளுக்கு கண்ணுறக்கம் மறந்தே போனது.
ஆனையிறவு தள அழிப்புக்கு தேவையான ஆயுதவெடிபொருட்களுக்கான
வினியோக நடவடிக்கைகளின் போது 01/10/1999 அன்று வங்கக்கடலில் ஏற்பட்ட கடற்சமரில்
லெப் கேணல் அண்ணாச்சி,மேஜர் ராகினி உட்பட மிகப்பெறுமதியான கடற்புலி மாவீரர்கள் படகோடு எரிந்து அலையோடே கரைந்துவிட்டிருந்தனர்.
ஆனாலும் எமது படகுகள் மீண்டும் கடலேறிப் பாய்ந்தது.
சீரற்ற காலநிலையெனினும்,
கடல்க்கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், இருளை ஊடறுத்து போராளிகள் கண்கள் இரத்தச் சிவப்பாக பயணம் தொடர்ந்தது.
ஒருமுனையில் வங்கக்கடல் ஊடான ஆயுதவெடிபொருட்களுக்கான வினியோகமும் மறுமுனையில் மன்னார் கடற்பரப்பு ஊடாக மருத்துவப் பொருட்களுக்கான வினியோகமும் மாறிமாறி நடைபெறத் தொடங்கியது.
வினியோகப் படகுகளுக்கான பாதுகாப்பை வழங்க சண்டைப்படகுகள் எந்நேரமும் தயாராக நிறுத்தப்பட்டு, மறிப்புச் சண்டைகளில் ஈடுப்பட்டிருந்தது.
சண்டைத்தொகுதிகளில் ஒரு தொகுதி சுண்டிக்குளம் பகுதியிலும்,மற்றொன்று வட்டுவாகல் பகுதியிலும்,இன்னொன்று அளம்பில் பகுதியிலும் நிலைகொண்டு,மறிப்புச் சண்டைகளில் ஈடுபட்டுவந்தது.
மன்னார் கடல் ஊடான நடவடிக்கைக்காக எமது சண்டைப்படகுகள் இரவோடிரவாக படகுகாவி மூலம் விசுவமடு,வட்டக்கச்சி ஊடாக மன்னாருக்கு இழுக்கப்பட்டது.
வேங்கை,போர்க்,எரிமலை போன்ற பெரிய படகுகளை நகர்த்துவது சிரம ம் என்பதால் அருணா,கேசவன்,சுகி போன்ற சண்டைப்படகுகளையே மன்னாருக்கு அதிகம் நகர்த்துவோம்.
அன்றும் வழமைபோல மன்னாருக்கு நகர்த்துவதற்காக அளம்பில் பகுதியிலிருந்து கேசவன் படகு தயாரானது.
இங்கே கேசவன் படகு பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பொன்றைப் பகிர்ந்துகொள்வது
முதன்மையாகின்றது.
ஓயாத அலைகள்-1 முல்லைத்தீவு படைத்தள அழிப்பின்போது சண்டைப்படகான நெடுமாறன் படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு அதே கடற்சண்டையில் காவியமான கடற்புலி மேஜர் கேசவன் நினைவாக அவனின் பெயர்தாங்கி வலம்வரத்தொடங்கியது கேசவன் போர்ப்படகு.
லெப் கேணல் நாவரசன்,லெப் கேணல் வள்ளுவன்,லெப் கேணல் பழனி,லெப் கேணல் சுயரூபன்,மேஜர் ஆழியன் உட்பட பல திறமையான கடற்புலி மாவீரர்கள் கடற்போரியல் கட்டளைத் தளபதிகளாக ஏறிநின்று போரிட்ட கடற்புலிகளின் போர்வாளாக சண்டைக்களங்களில் உறுமித்திரிந்தது மேஜர் கேசவன் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட கேசவன் போர்ப்படகு.
அதில் பொருத்தப்பட்டிருந்த முன்னணி ஆயுதமானது ஓயாத அலைகள்-1 முல்லைச்சமரின்போது,
முல்லைக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட றணவிறு எனும் பீரங்கிக்கலத்தில் இருந்து கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரால் கழட்டியெடுக்கப்பட்ட 14.5 mm இரட்டைக்குழல் கனரக ஆயுதமாகும்.
200 குதிரைவலுக்கொண்ட மூன்று ஜமகா இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 40 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடிய கேசவன் படகில்,
ஓட்டியாக மேஜர் காமினியும்,
14.5mm இரட்டைக்குழல் துப்பாக்கியின் பிரதான சூட்டாளனாக மேஜர் சோழனும்,உதவியாளர்களாக
2 ஆம் லெப் இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், ஆகியோரும்,
இயந்திரப் பொறியியலாளனாக மேஜர் நகுலனும்,உதவியாளனாக வீரவேங்கை இனியவனும்,
தொலைத்தொடர்பாளனாய் கப்டன் இளநிலவனும்,
50 கலிபர் துப்பாக்கிகளின் சூட்டாளர்களாய், மேஜர் குகன்,மற்றும்
லெப் பாவேந்தனும்,
PKLMG துப்பாக்கிகளின் சூட்டாளர்களாக லெப் நாகமணி,லெப் சொற்கோ,
லெப் தமிழ்நம்பியும்,
RPG உந்துகணை செலுத்தியுடன்
2 ஆம் லெப் மாறனும்,
படகேற…
அன்றைய மன்னார் கடல்வினியோக நடவடிக்கைக்கான பாதுகாப்புத் தொகுதிக்கான கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்.
வழமையாக நிரோஜன் தொகுதிக் கட்டளை அதிகாரியாக படகேறும் கடற்சண்டைகளில் வினியோகப் படகுகள் பத்திரமாக கரைசேரும் எனும் நம்பிக்கை போராளிகளிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
மருந்துப்பொருட்களுடன் வினியோகப் படகுகள் கரைநோக்கி வந்துகொண்டிருந்தன.
வாடைக்காற்று வீசியடிக்க
கரையினில் அலைகள் மௌனமாக கரைந்துகொண்டிருந்தது. ஆனால் உயரக்கடலில் அலைகள் தாண்டவமாடியது.
இப்படியானதொரு கடல்வினியோக நடவடிக்கையொன்றில்தான் லெப் கேணல் நாவரசன் உட்பட புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜாக்கர் மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த
மேஜர் சிந்தனைச்செல்வன் எனப்
பல போராளிகளை முன்னர் இதே கடற்பரப்பில் இழந்திருந்தோம்.
அன்றும் அதுபோலவே கார்முகில்கள் சூழ்ந்திருக்க இருளை ஊடறுத்து பயணித்துக்கொண்டிருந்த வினியோகப் படகுகளை திடீரென சிறிலங்கா கடற்படை தாக்கத்தொடங்கியது. காரிருள் சூழ்ந்ததனால் ரேடார் கருவிகளில் முற்கூட்டியே எதிரியின் இலக்குகளை கண்காணிப்பது சிரமமானதால் வினியோகப் படகுகள் தாக்குதலுக்குள்ளான பின்னரே சண்டைப்படகுகள் எதிரியின் இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கியிருந்தது.
தொகுதிக் கட்டளை அதிகாரியான நிரோஜனின் எண்ணமெல்லாம் வினியோகப்படகுகளை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டுமென்பதே.
அதற்கான முயற்சியில் கடைசிவரை தாக்குதலை வழிநடத்திக்கொண்டிருந்த நிரோஜனின் அந்தக் கம்பீரக்குரல் மன்னார் கடலில் ஓய்ந்துபோனது.
அவனுடன் கூடவே 14 கடற்புலி வீரர்களும் அந்தக்கடல் மடியில் கண்ணுறங்கிப்போயினர்.
கேசவன் படகு கரை திரும்பவில்லை.
கரையில் படகுகாவி வெறுமையாக காத்துக்கிடந்தது.அருகில் நிரோஜனின் மோட்டார் சைக்கிள்.
கடற்போரியலில் களநாயகனாக வலம்வந்த நிரோஜனின் இழப்பும் கேசவன் சண்டைப்படகின் வலிமையும் பின்னாளில் நாம் எதிர்கொண்ட கடற்சமர்களில் எல்லாம் எம்மால் உணரப்பட்டது.
கடற்சண்டைகளின் போது சண்டை இறுகும் நெருக்கடியான நேரங்களில் சிறப்புத்தளபதி சூசையண்ணை அடிக்கடி கூறுவார்
நிரோஜனைப் போல முடிவெடுக்கப்பழகுங்கள்…
நிரோஜனைப்போல யோசியுங்கள்…
வெல்லப்பட முடியாத தளம் என உலகம் கணித்த ஆனையிறவு படைத்தளம் எம் காலடியில் வீழ்ந்தபோது அதன் வெற்றிக்காக கடல்மடியில் கண்ணுறங்கிப்போன
லெப் கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகளின் உயிர்த் தியாகங்களே எம் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துப்போனது.
நினைவுகளுடன்…
புலவர்
கடற்புலிகள்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply