கடற்சண்டைகளில் நளாயினி படையணி இணைத்துக்கொள்ளப்பட்டபோது கடற்சிறுத்தைப் படையணியிலிருந்து நீச்சல் திறமையும்,பயிற்சிகளில் ஈடுபாட்டுத்தன்மையும் கொண்ட உறுதிமிக்க 30 பெண்போராளிகள் நளாயினி படையணிக்கு மாற்றப்பட்டனர்.
அதில் ஒருவராக வந்து சேர்ந்தவளே புனிதா.
தொடக்க காலங்களில் PK LMG உடன் படகேறியவள் பின்னர் தொலைத்தொடர்பாளராக பல சண்டைகளில் எமது கடற்தாக்குதல் படகான #பரந்தாமன்_படகில் நீண்டகாலம் பணியாற்றினாள்.
14 போராளிகளைக் கொண்ட எமது போர்ப்படகு பரந்தாமன் இல் புனிதா ஒரு பாசமுள்ள சகோதரியாகவே போராளிகளால் மதிக்கப்பட்டவள்.
ஆண்போராளிகளுக்கு நிகராக பலதுறைகளிலும் பெண்போராளிகள் வளர்ச்சி பெறவேண்டும் என்கிற குறிக்கோள் அவளது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் எதிரொலிக்கும்.
சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில்கூட எதுவித பதட்டமும் அடையாமல்
ஒவ்வொரு விடயம் பற்றியும் நுணுக்கமாக கேட்டறிந்துகொள்வாள்.
அவளின் அந்த ஆர்வமே பின்னாளில் படகுக்கட்டளை அதிகாரிகாரியாக அவளை வளர்த்துவிட்டிருந்தது.
சண்டை முடிந்து கரைதிரும்பியதும் படகு வேலைகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாள்.
அது ஆயுத துப்பரவாக இருந்தாலும்சரி,இயந்திர பராமரிப்பாக இருந்தாலும் சரி அல்லது படகுக்கு எரிபொருள் நிரப்புவதாக இருந்தாலும்சரி அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அடுத்த சண்டைக்கான தயார்நிலையில் படகை பராமரிப்பாள்.
கடற்தாக்குதல் நடவடிக்கைக்காக எமது படகு கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இரவு வேளைகளில் கரைக்குச்சென்று உணவை எடுத்துவருவதென்றால் தானே நீந்திச் சென்று உணவைக் காவி வருவாள்.அந்தளவுக்கு போராளிகளின் மேல் அளவற்ற பாசத்தை அவள் வைத்திருந்ததை என்னால் உணரமுடிந்தது.
ஒவ்வொரு போராளிகளின் இழப்புகளின் போது அவள் தனக்குள் உடைந்துபோவாள்.ஆனாலும் ஒருநாள், தானும் அவர்களுடன் விரைவில் சேர்ந்துவிடுவேன் எனக்கூறி தன்னை சமாதானப்படுத்திக்கொள்வாள்.
எமது சண்டைப்படகில் ஒரு அன்பான தங்கையாக,பாசமான சகோதரியாக வலம்வந்தவள் 2006/10/06 இதே நாளொன்றில் மட்டக்களப்பு வாகரைக்கடலில் நடந்த கடற்சமரில் தீரமுடன் களமாடி தான் எதிர்பார்த்தபடியே
தனது கடற்புலி மாவீர நண்பர்களுடன் இணைந்துகொண்டாள் லெப் கேணல் புனிதாவாக…..!
கடற்சண்டைகளின்போது அலையோசையை மேவிய அவளது கணீரென்ற அந்தக்குரல் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது…..
நினைவுகளுடன்…
புலவர்.
கடற்புலிகள்.