கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.
அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இருந்தாள்.
உடலமைப்பிலும் மற்ற மருத்துவர்களின் வயதோடு ஒப்பீட்டளவில் சிறியவளாக இருந்தாலும் மருத்துவ அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்திருந்தாள். தமிழீழ தாதியர் கற்கைகள் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை முடித்த அல்லி மயக்க மருந்து ( General Anesthesia /அனஸ்தீசியா) வழங்கும் மருத்துவராக சிறப்பு பயிற்சி பெற்றாள். இதற்கான பயிற்சிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அதனால் அவளது மருத்துவப் பணியின் பெரும் பங்கு சத்திரசிகிச்சை அறைகளிலையே அமைந்திருந்தது. சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நம்பிக்கையும் விருப்பமுமான போராளியாக அல்லி இருந்தாள்.
மருத்துவத் துறையில், அதுவும் சத்திரசிகிச்சைப் பிரிவில் அதி முக்கியம் வாய்ந்த பணி என்றால் மயக்க மருந்து கொடுப்பது. அது அனைவரும் அறிந்த ஒன்று. கொடுக்கப்படும் அளவில் சிறு தவறு நடந்தாலும் அல்லது நேர விகிதங்களில் தவறு ஏற்பட்டாலும் உயிர் பிரியும் அபாயத்தைத் தர வல்லது General Anesthesia /அனஸ்தீசியா என்ற மருந்து. தற்காலிகமாக உடலியக்கத்தை நிறுத்தி வைக்கும் இம் மருந்து சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. தவறின் உயிர் காப்பது கடினமாகும்.
இதற்காக அரச மருத்துவமனைகளிலும் சரி வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் சரி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களே பயன்படுத்தப்படுவார்கள். அதுவும் சத்திரசிகிச்சை முடிவடையும் வரை ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தில் பணியாற்றுவர். சில வேளைகளில் சத்திரசிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஆளணி எண்ணிக்கை மாறுபடும். ஆனால் எமது தமிழீழ தாதிய பயிற்சிக் கல்லூரி ஒன்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற அல்லி அவர்கள் அனைவரையும் தாண்டி மருத்துவப் பணியாற்றியிருந்தாள்.
ஒரு சத்திரசிகிச்சை அறையில் சம நேரத்தில் நடந்த இரண்டுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு தனி ஒரு மயக்க மருந்து சிறப்பு மருத்துவராக ( General Anesthesia Specialist ) தனது உதவியாளர்களை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனி ஒருவர் விகிதம் நேரடியாக மயக்கமருத்து உதவியாளராகப் பயன்படுத்தி பணியாற்றி இருந்தாள். ஒரு வினாடி அளவில் கூட ஏற்படும் தவறு குறித்த நோயாளிகளை சாவடைய வைக்கும் வல்லமை பொருந்தியது. ஆனாலும் அந்த வல்லமையை உடைத்தெறிந்து தமிழீழ மருத்துவத் துறையில் தன் உதவியாளர்களினூடாக புதிய ஒரு தடத்தை பதித்திருந்தாள் அல்லி.
உண்மையில் அனைவரையும் வியக்க வைக்கும் இந்த பணியானது அல்லி என்ற பெண் போராளியால் செய்ய முடிந்தது என்பது தமிழீழ வரலாற்றில் பகிரப்படாத ஒற்றைப் பக்கம்.
பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடும் கல்வியில் அக்கறையும் கொண்ட அல்லி க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக் கொண்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் அமைப்பு அல்லி உட்பட்ட சில போராளிகளை பள்ளிக்கல்வி கற்பதற்காக அனுமதித்திருந்தது. அதனால் அவர்கள் போராளிகளாக இருந்து கொண்டு பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்கள் உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றினை பெற்றிருந்தாலும் அரச பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை அதனால் அல்லி விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு மருத்துவக் கற்கையை கற்பதற்காக பணிக்கப்படுகிறார். அதன் பின்பான காலங்கள் பெரும்பாலும் மருத்துவமும் மருந்துகளுமே அவரது வாழ்க்கையாகிப் போனது.
கள மருத்துவத்துக்காக முன்னணி மருத்துவ நிலைகளிலும் களமுனைகளிலும் பயணித்துக் கொண்டிருந்த அல்லி மயக்க மருந்து தொடர்பான சிறப்புப்பயிற்சி பெற்றதன் பின் பெரும்பாலான நாட்களை சத்திரசிகிச்சை அறைகளிலையே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறைகளில் தான் அதிகமாக கடமை செய்தார். அவரது நீண்ட நாள் அனுபவம் சத்திரசிகிச்சை அறைகளில் சக மருத்துவர்களின் பணியை இலகு படுத்துவது வழமை.
25.01.2009 அன்று அல்லி மூத்த மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுடன் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரச மருத்துவமனையில் பணியில் இருந்தாள். அப்போது சிங்கள அரச பயங்கரவாதம் மக்களுக்கான மருத்துவமனை என்பதை அறிந்தும் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது. ஆட்லறி எறிகணைகள் மருத்துவமனை வளாகத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன.
இலகுவில் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை கூரையில் சிவப்பு நிறத்திலான சக (+) அடையாளம் மருத்துவமனைக் குறியீடாக வரையப்பட்டிருந்தும் சிங்கள இனவழிப்பு வெறியர் மருத்துவமனை மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இங்கே மிக முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம் ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையின் ஆள்கூறு மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்கள் அனைத்தும் சர்வதேச உதவி நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்திடம் மருத்துவமனை பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் மருத்துவமனை பாதுகாப்பு வலய ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கள அரசிற்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கி இருந்தது. இவ்வாறு மருத்துவமனை பற்றிய விபரங்களை அவர்களிடம் இருந்து பெற்ற பின்பே சிங்களம் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி இருந்தது. இது முதல் தடவை நடந்ததல்ல இதற்கு முன்பும் அதன் பின்பும் பல இடங்களில் நடந்திருந்தன.
அத்தாக்குதலில் அவசர சத்திரசிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருந்த மருத்துவர் அல்லி படுகாயம் அடைகின்றார். சிகிச்சை பெற வந்திருந்த நோயாளரின் நிலையோ மேலும் மோசமாகியது. சத்திரசிகிச்சை அறை சிதைந்து போய் இருந்தது. அதனால் அங்கே வைத்து சிகிச்சையை தொடர முடியாத நிலையில் உடனடியாக காயப்பட்டிருந்தவர்கள் உடையார்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால் அங்கும் உடனடியாக சிகிச்சை வழங்க முடியவில்லை அங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு நிறைந்து கிடக்கிறது.
ஏனெனில் அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமன்றி மக்களுக்கான மருத்துவத்தையும் போராளி மருத்துவர்களே செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் அங்கே அரச மருத்துவ வளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவிலே இருந்தது. அதனால் தமிழீழ மருத்துவப்பிரிவு மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்தே பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அங்கு இருந்த சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அதிகளவான காயப்பட்டவர்களுக்கான சகிச்சை வழங்க வேண்டிய நிலை இருந்தது.
இது ஒரு புறம் இருக்க பாதுகாப்ப வலயம் என்ற பெயரில் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருந்த கொலை வலயத்தில் குவிந்து கொண்டிருந்த மக்கள் தொகையை மறுபுறம் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அதை விட முதலாவது பாதுகாப்பு வலயத்தில் கொலை வெறித் தாண்டவமாடி தலை உயர்த்த முடியாத அளவுக்கு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாதம்.
பனங்குற்றிகளால் சுற்றி பாதுகாக்கப்பட்டிருந்த சில அறைகளை சத்திரசிகிச்சை அறைகளாக மாற்றி இருந்த மருத்துவர்கள். காயப்பட்ட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்புக்கள் எதுவுமற்று சத்திரசிகிச்சைகளை செய்ய முயன்றார்கள். ஒவ்வொரு தாக்குதல்கள் நடக்கும் போதும் நிலத்தில் குந்தி இருப்பதும் மீண்டும் எழுந்து நோயாளிக்கான சிகிச்சையைத் தொடர்வதுமாக அவர்கள் சாவோடு போராடும் காயப்பட்டவர்களை காக்க வேண்டும் என்ற துடிப்போடு போராடினார்கள். அவ்வாறான நிலையில் தான் அல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
சத்திரசிகிச்சை பிரிவில் காயப்பட்ட மக்கள் அதிகமாக காணப்பட்டதாலும் அல்லியின் காயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற எண்ணமும் அவரை சிகிச்சைக்காக உள் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி சிகிச்சையை மட்டும் வழங்கப்படுகிறது.
அல்லி காயப்பட்டதை அறிந்த அல்லியின் எதிர்கால வாழ்க்கைத் துணைவனாக வர இருந்த போராளியும் அங்கு வருகிறார். ( அல்லிக்கும் அந்தப் போராளிக்கும் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை திருமண ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது ஆனால் சூழல் அவர்களை திருமணப்பந்தத்தில் இணைய விடவில்லை) தன் கண்முன்னே தனது வருங்கால துணைவி காயப்பட்டிருந்த நிலையை பார்க்க முடியாது நின்றார் அந்தப் போராளி. அல்லியின் உயிர் அந்த போராளியின் கண்முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக பிரியத் தொடங்கி இருந்ததை அவரும் அறியவில்லை.
ஒருபுறம் சிங்களத்தின் தாக்குதல்கள் மறுபுறம் காயமடைந்து வந்த மக்கள் என தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் விரைவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தும் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் தமது சக மருத்துவரை தாமதமாகவே சத்திரசிகிச்சை அறைக்கு உள்ளே எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே முழங்காலின் பின் பகுதிக்குள்ளால் உள் நுழைந்திருந்த எறிகணைத் துண்டு தொடை வழியாகப் பயணித்து வயிற்றுக்குள் சென்ற நிலையில் வயிற்றுப் பகுதியில் உள்ளக குருதிப்பெருக்கத்தை (Internal Bleeding ) ஏற்படுத்தி இருந்தது. (Septicemia) அதைக் கண்டு பிடித்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் உண்மையில் தோற்றுப் போனார்கள்.
காயப்பட்ட உடனே அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அல்லி உயிர் தப்பி இருப்பாளோ என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது. ஆனால் மருத்துவமனையில் நிறைந்திருந்த காயப்பட்ட மக்களும் சிங்களத்தின் தொடர் தாக்குதல்களும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தர மறுத்திருந்தது.
சத்திரசிகிச்சை அறைக்கு எடுக்கப்பட்டு அல்லிக்கு தீவிர சிகிச்சையை மேற் கொள்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை பலனற்றுப் போகிறது. அல்லி யாருக்காக வாழ்ந்தாளோ அந்த மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்தாள். ஒரே நேரத்தில் தனது உதவியாளர்களினூடாக இரண்டுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான மயக்க மருந்தை கொடுத்து அவர்களின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் துணையாக நின்ற மருத்துவ வேங்கை தனது வருங்கால துணைவனாக தான் ஏற்க இருந்த போராளிக்கு முன்னால் மண்ணுக்குள் மேஜர் அல்லியாக உறங்குகிறாள்.
இ.இ. கவிமகன்
10.10.2018