முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான்
கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். 15 வயதினில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தென்பகுதியிலிருந்து இந்திய வாழ் மலையகத் தமிழ்மக்களை சிங்களவர்கள் அடித்து துரத்திய போது , அத் தமிழர்கள் வன்னிப்பகுதிகளில் வந்து தஞ்சமடைந்தார்கள். அவ்வேளை அந்த மக்கள் பட்ட துயரங்கள் , வறுமைகள் இவன் மனதை வெகுவாக பாதித்தது. கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதித்தது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை ( O/L) எழுதுவதற்கு சிரமப்பட்டு எழுதியுள்ளான். கல்வி பொது உயர் தர வகுப்பு ( A/L) வகுப்பு படிக்கும் போது பல இடையூறுகள் ஏற்பட்டன.
இவனது கிராம மக்களும் ,நண்பர்களும் இவனை “ அப்பன்” என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பார்கள் . இவனும் அனைவரிடத்திலும் அன்பு காட்டுவான். பணிவுடனும் தன்னடக்கத்துடனும் பேசுவான் . யார் எவர் என்று பார்க்காமல் உதவி புரிவான்.
1988,1989 காலப்பகுதியில் இந்திய இராணுவம் அமைதிப்படை எனும் பெயரில் எம் தாய் நிலத்தில் போராளிகள் மீது போரை திணித்து , சிங்கள இராணுவம் எதையெல்லாம் செய்ததோ அதனை இந்திய இராணுவ அமைதிபடையும் செய்தது. இக் காலத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன், தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உண்ணா நோன்பு இருந்து தன்னை உயிரை மெழுகாய் உருக்கினார். மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மக்கள் மத்தியில் பெருங் கொந்தளிப்பு காட்டுத்தீ போல் பரவியது.
இந்திய இராணுவம் வெளியேறிய பின் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மரபு வழிப்போருக்கு தயாரான போது இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப்புலிகள் பாசறை நோக்கி புறப்பட்டார்கள். போராடினால் தான் எம்மக்களுக்கான வாழ்வு என தீர்மானித்தார்கள்.
1991ஆம் ஆண்டு கிருசாகரன்/ அப்பன் தனது கிராமத்திலிருந்து உறவினர், நண்பர்கள் ஐந்து பேர் முல்லைத்தீவு, கற்சிலைமடு விடுதலைப்புலிகள் செயலகத்தில் போராளிகளாக இணைந்தார்கள்.நட்டான் கண்டல் சந்திரன் முதலாவது அணியில் பயிற்சி பெற்று போராளி ஆனந்தன் எனும் நாமத்துடன் முல்லை மாவட்ட போராளியாக களத்தில் இருந்தான்.
1991ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் முதன்முதல் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உருவாக்கப்பட்டது. சாள்ஸ் அன்ரனி தாக்குதல் அணிக்கு மாற்றப்பட்ட ஆனந்தன் 50 கலிபர் (விமான எதிர்ப்பு) துப்பாக்கி பயிற்சி பெற்று 50 கலிபர் அணியின் தலைவராக செயற்பட்டு, வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் களத்தில் தடம் பதித்தார்.
1993ஆம் ஆண்டு நிதித்துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டார்கள். வன்னி சாள்ஸ்அன்ரனி சிறப்புபடையணியிலிருந்து அனுப்பிய போராளிகளில் ஆனந்தனும் ஒருவர். நிதித்துறைக்கு போனவுடன் நிதித்துறைப் பொறுப்பாளர், பிரிகேடியர் தமிழேந்தி அவர்களால் ஆனந்தனுக்கு சுடரன்பன் என பெயர் மாற்றப்பட்டது. கணக்கியல் கல்வி கற்று கணக்காய்வுப் பணியினை சிறப்பாக பணியாற்றினார் . 1995 ஆண்டு புலிப்பாச்சல் தாக்குதல் நடவடிக்கையின் போது நிதித்துறை படையணி களம் கண்டது. அச்சமரில் சுடரன்பன் வலது கையில் விழுப்புண் அடைந்தார். அதன் பின்னர் இடப் பெயர்வுகளின் விளைவாக 1996 காலப்பகுதியில் கிளிநொச்சிப் பகுதியில் களக்காப்புப் பணி மேற்கொண்டு அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கி அழிப்பு நடவடிக்கையின் போது பின் தளப் பணியினை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ,கிளிநொச்சி இராணுவ முகாம் தாக்கி அழிப்பு சமர், ஓயாத அலைகள் தாக்குதல் 1,2 தாக்குதல்களில் பின் தளப்பணிகளையும் மேற்கொண்டார் . ஆனையிறவு படைத்தள தாக்கியழிப்புச் சமரிலும் பின்தள வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
2006 மீண்டும் போர் ஆரம்பமாகிய பின்னர் நிதித்துறைப் படையணிபோராளிகளும் கள முனையில் களம் கண்டனர். நிர்வாகத்தில் உள்ள போராளிகளும் சுழற்சி முறையில் களமுனையில் பணியாற்றினர். சுடரன்பனும் அப்பணியில் ஈடுபட்டாலும் கணக்காய்வுப் பணியினையும் எந்த இடையூறும் இன்றி மேற்கொண்டார் .
2008,2009 காலப்பகுதிகளில் போர்ச்சூழலில் நிர்வாக்கட்டமைப்புக்களை நகர்த்துவதில் பல இடையூறுகள் , நெருக்கடிகள் இருந்தும் திறம்பட திட்டமிட்டு செயலாற்றினார்.
தேவிபுரம் , சோழன் அரிசி ஆலைக்கு அம்பகாமம் பகுதியிலிருந்து இலங்கை இராணுவம் ஏவிய எறிகணைத் தாக்குதலின் போது பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். சுடரன்பன் நூலிலையில் உயிர் தப்பினார். அத்துடன் ஆச்சி கோட்டப்பகுதியில் பின்னகர்வு பணியின் போது சுதந்திரப்பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் நூலிலையில் உயிர் தப்பினார். குயிலன் என்ற போராளி சிறு விழுப்புண் அடைந்தார்.
தேவிபுரம் ஊடாக இரணைப்பாலைக்கு இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த போது நிதித்துறைப் படையணி ஆண்,மகளிர் அணி சமர் புரிந்த வண்ணம் இருந்தது. அப்போது படையணிக்கு பொறுப்பாக இருந்த அகச்சுடர் என்ற போராளி விழுப்புண் அடைய சுடரன்பனை பொறுப்பாக நியமித்தார் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்குமரன் அவர்கள். அணியினை வழிநடாத்திய சுடரன்பன் அவர்கள் 13.03.2009 இலங்கை இராணுவத்தின் எதிர் சமரின் போது விழுப்புண் அடைந்து 14.03.2009 அன்று லெப்.கேணல் சுடரன்பன் ஆக வீரச்சாவு அடைந்தார்.
லெப்.கேணல் சுடரன்பன் / ஆனந்தன் அவர்கள் 2000ஆம் ஆண்டு சோதியாபடையணியைச் சேர்ந்த போராளி வைஸ்ணவி (இராசையா மல்லிகாதேவி) என்பவரை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளுக்கு (துளசிகா,சங்கவி) தந்தையுமாவார்.