Home / மாவீரர்கள் / பதிவுகள் / கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985

கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் .

சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில விடயங்கள் வெட்டவெளிச்சமாகப் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் பாதையில் சிலாவத்தை, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்குளாய், புல்மோட்டை ஊடாக திருகோணமலை என்ற வகையில் தமிழரின் பாரம்பரிய வளங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை நோக்கலாம். இப் பிரதேசங்களின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியாகவும் மற்றய பக்கம் மணலாற்றின் பெரிய காடுகளைக் கொண்டதாகவும் நடுவிலே மக்கள் வாழ்விடங்களான மேலே குறிப்பிட்ட பிரதேசங்கள் அமைந்திரப்பதாகவும் இருக்கிறது.

இது தவிர நாயாறு மற்றும் கொக்குளாய் நீரேரிகள் அப் பிரதேசங்களின் அழகான அம்சங்களாகவும் விளங்குகின்றன. கடல்வளம், நெற்பயிர்ச் செய்கைக்கான நிலவளம், தென்னை பனை வளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் முல்லை மாணாலாறு மாவட்டமென தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் கொக்குளாய் பற்றி பார்க்குமிடத்து, அது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே காணப்படுகிறது. காரணம் வடக்கையும் கிழக்கையும் நேரடியாக இணைக்கும் ஒரு இணைப்பு நிலமாக கொக்குளாய் இருப்பதுதான்.

1984ம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்குளாய்ப் பாடசாலையில் இலங்கை இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாது, கொக்குளாய் தொடக்கம் அளம்பில் வரையிலும் ஒரு படைநடவடிக்கையை மேற்கொண்டு பலவந்தமாக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல் வீச்சைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது இலங்கை அரசு. இது இவ்வாறிருக்க இடம்பெயர்ந்த மக்கள் அளம்பில் ஐந்தாம் கட்டை, சிலாவத்தை, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்பாணம் வரைக்கும் அகதிகளாகச் சென்று தங்குவதற்கு இடமின்றி அல்லல்ப்பட்டனர். இருந்தபோதும் முல்லை மணலாறு மாவாட்ட மக்கள் திடமான தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் விட்டுவிடவில்லை. மாறாக விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நின்ற அவர்களது அசாத்தியத் துணிச்சல் என்றென்றும் போற்றத்தக்கது.

கொக்குளாயிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வடக்குக்கிழக்கைத் துண்டாடுவதே கொக்குளாய் முகாம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக இருந்தது. மேலும் விடுதலைப் புலிகளின் கடல்வழி மற்றும் காட்டுவழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் முகாம்மிட்டிருந்த இராணுவத்தினருக்கு பலம் சேர்ப்பதும்கூட காரணங்களாயிருந்தன.

இவ்வேளையில் இறுமாப்போடு முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு தக்கப்பாடத்தைப் புகட்ட வேண்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியாவில் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்த போராளிகளின் அணியொன்றைத் தயார்ப்படுத்தி கொக்குளாய் முகாம் தக்ர்ப்பிற்காக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தினார் தலைவர் அவர்கள். அதுநாள் வரையிலும் கெரில்லாப் போர்முறையினைக் கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதன்முதலாக மரபுவழியிலே கொக்குளாய் முகாமைத் தாக்கியழிக்க முடிவெடுத்த்தார்கள். சரியான முறையில் வேவு பார்க்கப்பட்டு காட்டுவழியாக தாக்குதலுக்கான அணி நகர்த்தப்பட்டது. இன்று மாவீரர்களாகிவிட்ட தளபதிகள், போராளிகள் பலர் அன்றைய அத் தாக்குதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெப். கேணல் புலேந்திரன், பிரிகேடியர் சொர்ணம், கப்டன் ஆனந்தன், கப்டன் லோரன்ஸ், லெப். சபா, லெப். ஜீவன் போன்றோர் இவர்களில் சிலராவர்.

கொக்குளாய் முகாம் தாக்குதலுக்கான வழிகாட்டிகளாகவும், உணவு ஒழுங்கமைப்பாளர்களாகவும், முதலுதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களே செயற்பட்டனர். 13.02.1985 அன்று கொக்குளாய் இராணுவத்தினர் எதிர்பாராத ஒரு நிகழ்வாக புலிகளின் தாக்குதல் அமைந்தது. துணிச்சல் மிகுந்த போரளிகள் முகாமிற்குள் நகர்ந்து சண்டையிட்டனர். அங்கே நிலைகொண்டிருந்த 200 வரையிலான படையினரில் பலர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்தனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் 16 புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.கொக்குளாய்க் கடல் வழியாக இராணுவத்தினருக்கான உதவிகள் வரத் தொடங்கவே, காயமடைந்த போராளிகளை தோளிலும் கையிலுமாய்த் தாங்கியபடி விடுதலைப் புலிகளின் அணி பின்வாங்கியது. இத் தாக்குதலானது போராளிகளுக்கு மிகப்பெரியதோர் அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. அதேவேளை இராணுவம் திகிலடைந்து நிலைகுலைய காரணமாகவும் இத்தாக்குதல் அமைந்தது. பிந்நாளில் நடந்த பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு கொக்குளாய் முகாம் தாக்குதலே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

kokilai-camp-attack-maaveerar-3

kokilai-camp-attack-maaveerar-2

kokilai-camp-attack-maaveerar-1

kokilai-camp-attack-maaveerar-4

அன்று தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம்.

லெப்டினன்ட் சைமன்

லெப்டினன்ட் பழசு

வீரவேங்கை கெனடி

வீரவேங்கை காந்தரூபன்

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)

வீரவேங்கை காந்தி

வீரவேங்கை ரவி

வீரவேங்கை வேதா

வீரவேங்கை ரஞ்சன் மாமா

வீரவேங்கை காத்தான்

வீரவேங்கை மயூரன்

வீரவேங்கை சொனி

வீரவேங்கை தனபாலன்

வீரவேங்கை சங்கரி

வீரவேங்கை மகான்

வீரவேங்கை நிமால்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

13.02.2019
கலைமகள்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

கடற்புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை 1 & 2

‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் ...

Leave a Reply