Home / மாவீரர்கள் / பதிவுகள் / உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்

உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்

26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது.

சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது.

இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.

 

விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன்:-

மீன் பாடும் தேன் நாடாம் இதுதான் இவன் பிறந்த மண். மட்டக்களப்பு 12ம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன் கனரக ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டான்.

இதன்பின்னர் யாழ்.மாவட்டம் வந்து வேவுப்பயிர்சிகளை நிறைவு செய்தவன், பல தாக்குதல்களுக்கான வேவு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுகிறான்.

கொக்குத்தொடுவாய்ச் சமர், ஓயாத அலைகள் 01, ஓயாத அலைகள் 02, ஜெயசிக்குறு என தனது வேவுத்திறனை வெளிப்படுத்திய ஞானேஸ்வரன் சென்றகளமேல்லாம் வீரவடு ஏந்தி வென்று வந்திருந்தான்.

கடற்கரும்புலிகள் அணியில் தன்னை சேர்த்துக்கொண்டிருந்த இவன், உகணக் கப்பலை தகர்த்து வீரவரலாறாகிப் போனான்.

கடற்கரும்புலி மேஜர் சூரன்:-

மன்னார் மாவட்ட தாக்குதல் அணியில் இருந்துதான் இவனது செயற்பாடு தொடங்கியது. பல தாக்குதல்களில் சண்டைசெய்த சூரன், தவளைத் தாக்குதலில் தனது இடதுகாலை தொடையுடன் இழந்தான்.

இதன் பின்னர் புலனாய்வுத்துறையில் சிலகாலம் தனது செயற்பாட்டை விரித்திருந்தான். இந்தக் காலப்பகுதியில்த் தான் தனது சுயவிருப்பில் கடற்கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்றான்.

இவனிற்கான கரும்புலிப் படகு வழங்கப்பட்ட போது, தனது படகு இயந்திரங்களைப் படியவிடுதல், ஆயுதங்களை சுத்தம் செய்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை சீர்செய்தல் என படகின் முழுப் பராமரிப்பு வேலைகளையும் ஒருகையில் ஊன்றுகோலுடன் கடற்கரை மணலில் ஓடிஓடிச் செய்வான்.

இவ்வாறாக இவன் பெருவிருப்புடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. தேசவிடியலை நெஞ்சினில் சுமந்த கனவுகள் மெய்ப்பட உகண கப்பலை தகர்த்து வீரவரலாற்றை எழுதினான்.

 

கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்:-

எந்த இறுக்கமான கடற்சண்டையாக இருந்தாலும் சரி, நடவடிக்கைப் படியாக இருந்தாலும் சரி, பழுதடையும் இயந்திரங்களை இலகுவாக சீர் செய்து கொண்டு அந்த இடத்துக்கு விரையும் நல்லப்பன் மற்றவர்களால் மதிக்கப்படும் சிறந்த இயந்திரப் பொறியியலாளன்.

இயந்திரம் சீர்செய்யும் களத்தில் இவனது பணி ஆழமானது. திருத்த முடியாது என கைவிடப்படும் இயந்திரங்களை எல்லாம் தன் பெரு முயற்சிகளினால் சீர் செய்துவிடும் நல்ல தற்துணிவு இவனிடத்தில் இருந்தது.

அமைதியான அவனது சுபாவம். தானும் தனது வேலையென ஒதுங்கிப்போகும் பக்குவம் எல்லோரையும் இவனிடத்தில் ஈர்க்கவைத்தது.

படகோட்டியாக, தொலைத்தொடர்பாளனாக, சகல ஆயுதங்களையும் இயக்கி சண்டை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்த நல்லப்பன் பல கடற்சமர்களில் பங்கெடுத்தான்.

கடற்கரும்புலிகள் அணியில் இணைந்திருந்த நல்லப்பன், ஆழகடலேங்கும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் பணியிலும் தனது கடமையைச் செய்திருந்தான்.

இவ்வாறாக விடுதலைக்காக உழைத்த நல்லப்பன். எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வீரவரலாறு படைத்தான்.

 

கடற்கரும்புலி மேஜர் சந்தனா:-

சுறுசுறுப்பு, சுட்டித்தனம், மிடுக்கான கதை, மற்றவர் மனத்தைக் கவரும் நகைச்சுவையான பேச்சு இவை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரிதான் கடற்கரும்புலி மேஜர் சந்தனா.

1990ம் ஆண்டு தன்னைப் போராளியாக மாற்றிக்கொண்டவள். மகளிர் படையணியின் தாக்குதலணியில் செயற்ப்பட்ட சந்தனா களங்கள் பலதை எதிர்கொண்டாள். இருமுறை பலமான விழுப்புண்களையும் தாங்கிக்கொண்டாள்.

இதன்பின்னர் தமிழீழ சட்டக்கல்லூரியில் கற்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் சந்தனாவும் ஒருவர். தமிழீழத் தேசியத் தலைவர் முன்னிலையில் சட்டவாளராக உறுதிப் பிரமாணம் செய்து வெளியேறிய சந்தனா நீதியான, நேர்மையான செயற்பாட்டின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டாள். எனினும் மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த சந்தனா, கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து இலக்கிற்காக நீண்டகாலம் காத்திருக்க நேருகிறது.

நீண்டகாலமாய் காத்திருந்த இவள் பொறுமைக்கு வாய்பாய் உயரக்கடலில் எதிரியின் எண்ணைக் கப்பலான உகணக் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொள்ளுவதே இவளது இலக்கானது.

உகண கப்பலில் மோதியபோது உப்புநீரில் தீ மூண்டு வீரவரலாறாகிப் போனாள். இவர் மேஜர் அசோக்கின் சகோதரி ஆவார்.

கடற்கரும்புலி கப்டன் பாமினி:-

தொடக்கத்தில் மக்களுக்கான அரசியல்ப் பணியை செய்துவன்தவள் பின்னாளில் கடற்புலிகளின் சுகன்யா தரைத்தாக்குதல் அணியோடு இணைந்து ஓயாத அலைகள் 01, சத்ஜெய எதிர்ச்சமர், ஜெயசிக்குறு எதிச்சமர் என எ.கே எல்,எம்.ஜி (AK – LMG) உடன் அணித்தலைவியாக நின்று களங்களை எதிர்கொண்டாள். இந்த அமைதியானவளுக்கு கிடைத்த இலக்கு ஆழமானது.

சிறிலங்கா படைகளுக்கு விநியோகப் பணியில் ஈடுபட்ட உகண கப்பல் மீது துணிகரத் தாக்குதலில் வெற்றிச்செய்தியை பரிசாக்கி வீரகாவியமானாள் எங்கள் பாமினி.

கடற்கரும்புலி கப்டன் இளமதி:-

தீவகம் வேலணை இதுதான் இவளது சொந்தமான். இந்தமண் 1990ம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது நமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தன்னையும் போராளியாக மாற்றிக்கொண்டவள் தான் இளமதி.

பிறப்பிலே இவளது கால் ஒன்று இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் பயிற்சிகளை எடுத்து ஒரு போராளியாக முடியும் என்ற இவளது நம்பிக்கை வெற்றியைத் தந்தது.

பயிற்சியின் பின்பு தொலைத்தொடர்புக் கல்வியைப் பெற்றிருந்த இளமதி கடற்புலிகளின் தரையோர பாதுகாப்பு நிலையத்தில் தனது கடமையைச் செய்தாள்.

இந்த நேரத்தில் கொக்குத்தொடுவாய்ச் சமரில் இவளது சகோதரி வீரச்சாவடைந்த போது இவளுக்குள் இருந்த விடுதலை உணர்வு இன்னும் இன்னும் பெருவீச்சாகியது. இதுவே கடற்கரும்புலியாக இவளை மாற்றியது.

செவ்வானம் படையணியில் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவளுக்கு, இலக்கு இலகுவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனது மனதை தளரவிடாது கடற்தாக்குதல் அணியில் தொலைத்தொடர்பாளராக, படகுச் சாரதியாக, இயந்திரத் திருத்துனராக தனது பணியைச் செய்திருந்த இளமதி எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது.

கூட நின்ற தோழியருக்கு இனி நான் வரமாட்டேன் வெற்றிச் செய்திதான் வரும் என்று கூறிச்சென்றவள் எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வெற்றிச் செய்தியைத் தந்து வீரகாவியமாகிப் போனாள்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்

10.09.2007 – 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் ‘எம்.ரி. ...

Leave a Reply