‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்த சோழப் பேரரசன் வைத்திருந்த கடற்படைக்கு ஒப்பான கடற்படையொன்றைக் கட்டி வளர்த்திருந்ததார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.
விடுதலைப்புலிகளின் கடற்படையாகிய கடற்புலிகள் படையணி வெளியே தெரிந்துவாய் உள்ளே அறிந்ததுவாய் எத்தனையோ அரியபெரிய சாதனைகளை நிலைநிறுத்தி விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்திருந்தது. விடுதலைப்போராட்டத்திற்குத் தேவையான மூலாதாரங்களையும் வளங்களையும் கடல்கடந்த தேசங்களிலிருந்து சர்வதேசக் கடல்வழியாக தாயக்திற்கு கொண்டு வருவதில் கடற்புலிகள் படையணி பிரதான கதாபாத்திரத்தை வகித்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செய்த உயரிய தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகளாகும்.
2006ம் ஆண்டில் நடுப்பகுதியில் நோர்வே அரசின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை செயலிழக்கத் தொடங்கியிருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே கடற்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கி அதற்கு ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்து விடுவதில் கங்கணம் கட்டி நின்றது இலங்கை அரசு.
இதன் முதற்கட்டமாக இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு செய்த இலங்கை கடற்படையினர் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை வடபகுதிக் கடற்பரப்பில் முழுநேரக் கடற்கண்காணிப்பில் ஈடுபடுத்தியது. இந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும் அரச படைகளிடம் விழத் தொடங்கியிருந்தன. வுழமையாக கடற்புலிகள் முல்லைத் தீவுக்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட கடல் விநியோக நடவடிக்கை இலங்கை கடற்படையினரின் தீவிர கடற்கண்காணிப்பினால் தடைப்பட்டுப்போனது. இதன் அடுத்த கட்டமாகவே கடற்புலிகள் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான மூலாதாரங்களைத் தாயகத்திற்கு கொண்டுவரும் நோக்கோடு மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு-சிலாவத்துறைப் பகுதிகளைத் தளமாக வைத்துக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான கடல்வழி விநியோகத்தினை மேற்கொண்டனர். இந்தக் கடல் நடவடிக்கையின் போதும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல்வேறுபட்ட இடையூறுகளை விளைவித்தன. இத்தகைய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான மூலவளங்களை தாயகக்கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள் கடற்புலிகள். இந்த உயரிய நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினருடன் சமரிட்டு கடற்புலிப்போராளிகள் பலர் கடலன்னையோடு கலந்து விட்டதுவும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கட்டமாகவே சர்வதேசக் கடற்பரப்பில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற கடற்புலிகளின் கப்பல்களை தாக்கி அழிக்கின்ற நடவடிக்கைகளில் இறங்கியது இலங்கை அரசு. கடற்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவை பயணிக்கின்ற கடற்பாதைகள் தொடர்பாகவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் புலனாய்வு ரீதியாக சகல தரவுகளையும் திரட்டி இலங்கை அரசிற்கு கொடுத்திருந்தது.
இந்தத் தரவுகளையெல்லாம் அடிப்படையாக வைத்து இலங்கை கடற்பரப்பினர் 16.09.2006 அன்று அம்பாந்தோட்டைக்கு நேராகவுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் முதலாவது நாடகத்தை அரங்கேற்றினர். கடல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் லெப் கேணல் ஸ்ரீபன், லெப் கேணல் அந்தணன், லெப் கேணல் விதுசன் உட்பட இன்னும் சில கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.
இரண்டாவது நாடகத்தை தேவேந்திரமுனைக்கு அப்பாலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் அரங்கேற்றியிருந்தனர் இலங்கை கடற்படையினர். அதாவது 28.02.2007 அன்று தேவேந்திரமுனைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பலை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதைத் தாக்கி மூழ்கடித்தனர். இந்தச் சம்பவத்தின் போது லெப். கேணல் இளமுருகன் உட்பட பதினைந்து கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.
இரண்டாவது சம்பவம் நடந்து சரியாக பதினாறு நாட்கள் கழிந்து 16.03.2007 சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் மற்றுமொரு கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.
மூன்றாவது சம்பவம் இடம்பெற்று ஆறு மாதகால இடைவெளியின் பின்னர் 10.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இரண்டு கப்பல்கள் ஒரே சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு மறுநாளான 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இன்னுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த மூன்று கப்பல் சம்பவங்களிலுமாக லெப். கேணல் சோபிதன் லெப். கேணல் செண்பகச்செல்வன், லெப். கேணல் வீமன் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட கடற்புலிகள் கடலோடு கலந்து போனார்கள்.
இந்தத் துயரச் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாதகாலம் நிறைவடைவதற்கு முன்னர் சரியாக இருபத்தாறு நாட்கள் கடந்த நிலையில் 07.10.2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டின் கடல் எல்லைக்கு அண்டியதாக சர்வதேச கடற்பரப்பில் கடற்புலிகளின் மற்றுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லெப் கேணல் கபிலன் உட்பட ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியை முத்தமிட்டார்கள்.
இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக கடற்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவும் இந்த சம்பவங்களின் கப்பல்கள் மூழ்கடிக்கப்படதுவும் இந்த சம்பவங்களின் போது நீண்டகால கடல் அனுபவம் வாய்ந்த அறுபத்தெட்டு கடலோடிகளின் வீரச்சாவு நிகழ்வும் கடற்புலிகளுக்கும் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களுக்கும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. 2007ம் ஆண்டில் மட்டும் கடற்புலிகளின் ஆறு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு ஈடாக ஆறு பழிவாங்கல் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆக்ரோசமான உணர்வு கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் மேலோங்கியிருந்ததை அந்தக் காலகட்டங்களில் அவதானிக்க முடிந்தது.
2006ம் ஆண்டைப் பொறுத்தவரையில் கடற்புலிகள் பல கடற்சமர்களை மேற்கொண்டு குறிப்பிடக் கூடிய வெற்றிகளைக் குவித்திருந்தார்கள். அவற்றில் 2006 ஜனவரி மாத்தின் முற்பகுதியில் திருமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டோறா கடற்கலம் வஞ்சியின்பன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் பத்து இலங்கை கடற்படையினருடன் டோறா மூழ்கடிப்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்கரும்புலிகளான லெப். கேணல் கவியழகி, லெப் கேணல் சஞ்சனா, லெப் கேணல் அன்பு, மேஜர் மலர்நிலவன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு, 16.10.2006 அன்று தென்னிலங்கையிலுள்ள காலித்துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் ஊடுருவிச் சென்று மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கரும்புலித்தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் வீரயா கட்டளைக்கப்பல் உட்பட இன்னும் பல கடற்கலங்களும் அழிக்கப்பட்டன. இந்த இழப்புகளையெல்லாம் அன்றைய நாட்களில் இலங்கை அரசு மூடி மறைத்திருந்தது. அத்துடன் 09.11.2006 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு என 2006 ம் ஆண்டில் கடற்புலிகள் ஈட்டிய வெற்றிகளை பட்டியலிட்டுக் குறிப்பிட முடியும்.
2007ம் ஆண்டில் கடற்புலிகள் மேற்கொண்ட கடற்சமர்கள் எவையும் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலம் ஒன்றின் மீது கடற்கரும்புலி லெப் கேணல் சங்கரி தலைமையிலான நால்வர்’ அடங்கிய கடற்கரும்புலிகள் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் அந்த டோறா கடற்கலம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கடற் சண்டையைப் பொறுத்தமட்டில் பகல் சண்டைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விமானத்தாக்குதல் ஆகும். நீண்ட நாட்களாக இலக்குக்காகக் காத்திருந்து அன்றைய தினம் காலை வேளையிலே அந்த இலக்கு கிடைத்ததால் விமான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கினர் கடற்புலிகள். கட்டளை மையத்தில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைக்கு அடுத்த நிலையிலான தளபதிப் பொறுப்பை நிர்வகித்துக்கொண்டிருந்த நரேன் அவர்கள் தாக்குதலை நெறிப்படுத்த வெற்றிகரமாக கடற்கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு டோறாக் கடற்கலத்தை மூழ்கடித்துவிட்டு வெற்றிவாகையுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்தன. கடற்புலிகளின் சண்டைப் படகுகள். படகுக்கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவனின் படகு கிராஞ்சிக் கடலில் கரை தட்டிய வேளை திடீரென வான்பரப்பிற்குள் நுழைந்த கிபிர் விமானங்கள் இந்தப் படகின் மீது தாக்குதலை மேற்கொண்டதில் படகுக் கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவன் உட்பட பதினேழு கடற்புலிகள் ஒரே சந்தர்ப்பத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். ஆகவேதான் ஒரே சம்பவத்தில் இவ்வாறான பேரிழப்பு ஏற்பட்டதால் இந்த டோறா மூழ்கடிப்புச் சமர் வரலாற்றில் வெற்றிச் சமராகப் பதியப்படவில்லை.
22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் வைத்து கடற்கரும்புலிகளான லெப். கேணல் அன்புமாறன்இ மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனிநிலா ஆகிய மூவர் அடங்கிய கரும்புலிப்படகு இலங்கை கடற்படையினரின் டோறாக்கலம் மீது மோதி அந்த டோறாக்கலம் நாயாற்றுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் அன்றைய தினம் பகல்வேளையிலேயே இடம்பெற்றது. இத்தாக்குதல் ஒரு வித்தியாசமான கோணத்தில் நடைபெற்றது. அது என்னவென்றால் சண்டைப் படகு மட்டும் களத்தில் இறங்கி டோறாக்கலத்துடன் மோதியது. டோறாக்கலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கரும்புலிகள் நாயாற்றுக்கடலில் வரலாற்றைப் படைத்தார்கள். இதுதான் அன்றைய தினத்தில் நடந்த சம்பவம். இந்த டோறா மூழ்கடிப்பு சம்பவமானது அன்றைய நாட்களில் இலங்கை கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக கடலில் சண்டை எதுவும் இடம்பெறவில்லை. இந்த நடவடிக்கைக்கு ‘பழிவாங்கல்- 01′ என கடற்புலிகளால் பெயரிடப்பட்டது.
அடுத்ததாக ‘பழிவாங்கல் – 02′ நடவடிக்கை திருகோணமலை துறைமுகத்திலேயே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த கடற்படையினருக்கு வழங்கல் பணி மேற்கொண்டதுதான் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான யு-520 துப்புக்காவிக் கப்பல். இந்த துருப்புக்காவிக்கப்பலை தகர்ததெறிவதே ‘பழிவாங்கல் – 02′ திட்டம். இந்த நடவடிக்கைக்கான வேவுத்தரவுகளை எடுத்து நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகிய இருவரும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார்கள். கப்பலைத் தகர்ப்பதற்கான கரும்புலித்தாக்குதலை மேற்கொள்வதற்கென கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவிலிருந்து லெப். கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் அனைத்தும் நீரடி நீச்சல்ப் பிரிவுப் பொறுப்பாளர் சின்னவன் அவர்களால் முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு கரும்புலி மறவர்களும் கடுமையான பயிற்சிகளால் புடம்போடப்பட்டு ஒத்திகைப் பயிற்சிகளும் திருப்தியாக அமையவே இருவரும் தாக்குதலுக்காக திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திட்டமிட்டபடி தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகியோர் எடுத்த தரவுகளின் படி யு-520 துருப்புக்காவிக்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுவும் உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்ட செம்பியவளவனும் அற்புதனும் சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன் வெடி குண்டுகளையும் உடம்பில் கட்டி கடலின் அடியால் நீந்திச் சென்று யு-520 துருப்புக்காவிக் கப்பலின் கீழ் அடிப்பகுதியில் வெடிகுண்டுகள் இரண்டையும் பொருத்தி வெடிக்க வைத்து கப்பலைத் தகர்த்தெறிவதுவே தாக்குதலினுடைய திட்டம்.
குறிப்பிட்ட தாக்குதலுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. 09.05.2008 அன்று இரவு தாக்குதலுக்கான ஏற்பாடுகள் திருகோணமலையில் யாரும் அறியாத இடமொன்றில் மிகவும் இரகசியமான முறையில் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த நேரத்தில் செம்பியவளவனின் பெற்றோர் தென்னிலங்கையில் தங்கியிருந்தார்கள். தாக்குதலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையுடன் செய்மதித் தொலைபேசியில் இரண்டு கரும்புலி வீரர்களும் கதைத்தார்கள். அப்போது செம்பியவளவன் ‘அம்மாவுடன் தொலைபேசியில் ஒருமுறை கதைக்கட்டா அண்ணை’ என்றார் அதற்கு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தாக்குதலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கதைக்கும்படி அனுமதி வழங்கினார். தாய்மண் விடிவிற்காக சாவிற்கு நேரம் குறித்த பின்னர் அந்த வீரனுக்கு தாயின் நினைவு வந்ததது தவறு இல்லைதானே. அனுமதியைப் பெற்றுக்கொண்டு அம்மா, அப்பா, அக்கா என எல்லோருடனும் அரைமணி நேரமாக தொலைபேசியில் கதைத்தான். இன்னும் சிறிது நேரத்தின் பின்னர் கடிலின் அடியில் வெடிக்கப்போகின்றேன் என்று தெரிந்தும் எந்தவித பதற்றமும் இல்லாமல் உறவுகளோடு கதைத்து முடித்தான்.
10.05.2008 அதிகாலை 3.00 மணி. வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன்ட அந்த இரண்டு கரும்புலி வீரர்களும் காரிருள் வேளையில் கடலில் அடியால் நீந்திச்சென்றனர். நீந்திச் சென்று குறித்த இலக்கான யு-520 துருப்புக்காவிக்கப்பலை இருள் வேளையிலும் இனங்கண்டு உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை கப்பலின் கீழான அடிப்பகுதியில் பெருத்தியதும் குண்டுகளை வெடிக்க வைத்தனர். யு-520 துருப்புக்காவிக்கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தகர்ந்தது. கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் திருமலைக்கடலில் வரலாறானார்கள். வெற்றிச் செய்தி காற்றலையில் கலந்தது. பழிவாங்கல் – 02 வெற்றிகரமாக நிறைவேறியது.
2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு 2007ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவே ஒட்டுமொத்த புலிகளின் தோல்விக்கு காரணமாக அமைச்ததெனவும் கூறலாம்
- செங்கோ (2012)