Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / தமிழீழக் காற்றில் ஓயாத புயலாக வீசிக்கொண்டிருப்பார் கப்டன் விக்னம்

தமிழீழக் காற்றில் ஓயாத புயலாக வீசிக்கொண்டிருப்பார் கப்டன் விக்னம்

1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது.

தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத்தில் ஒருநாள் இரவு கடற்கரையில்வாடியில் (மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் கூடாரம்) படுக்கப்போறன் என்று வீட்டில் கூறிவிட்டுச்சென்றவர் காணாமல்ப்போனார். ஆனால் அவர் வேறெங்கும் செல்லவில்லை. விடுதலை வேட்கையை இதயத்தில்ச்சுமந்தபடி வெற்றிலைக்கேணிக்குச்சென்று அங்கு இன்னும்பல இளைஞர்களுடன் படகேறி இந்தியாவிற்குச்சென்றார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் 06-வது பயிற்சிப்பகாசறையில் தனது அடிப்படைப்பயிற்சியை நிறைவுசெய்திருந்த இவரை மீண்டுமொரு பயிற்சிக்களம் அழைத்தது. அதாவது விடுதலைப்புலிகளின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பயிற்சிப்பாசறைகளில் பயிற்சிபெற்ற கடல்சார்ந்த அனுபவங்களைக்கொண்ட 45 போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு கேணல் சங்கர்அவர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் கடல்க்கொமாண்டஸ்ப்பயிற்சியான நீரடிநீச்சல்ப்பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டது. குறித்த இந்த 45 போராளிகளுள் இவரும் உள்வாங்கப்பட்டிருந்தார். இந்த அணிதான் கடற்புறாவாகவும் பின்னையநாட்களில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளாகவும் பரிணமித்திருந்தது.

கடற்கொமாண்டஸ்ப்பயிற்சிகளையும் செவ்வனேநிறைவுசெய்த இவர் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே தங்கிநின்று தேசவிடுதலைப்பணிகளை முன்னெடுத்தார். அன்றையநாட்களில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களுமே தமிழ்நாட்டை தளமாகக்கொண்டுதான் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான போக்குவரத்தை படகுகளில் கடல்மார்க்கமாகவே மேற்கொண்டிருந்தார்கள். அன்றையநாட்களில் இந்தப்படகுகளை வண்டி என்றுதான் போராளிகளும் பொதுமக்களும் குறிப்பிடுவார்கள். இவ்வாறுவரும்வண்டிகளில் இவர் அவ்வவ்ப்போது கடிதங்கள் வீட்டிற்கு கொடுத்துவிடுவார். சிலகடிதங்களுக்குள் போட்டோக்களும் வைத்து அனுப்பிவிடுவார். போராளிகளுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி எடுத்திருந்த அந்தப்படங்களை போராயுதங்களை நேரில்ப்பார்த்திராத அந்தக்காலங்களில் நாம் ஆர்வமாகவும் அதிசயமாகவும் அந்தப்படங்களைப்பார்த்ததுண்டு. சிலசந்தர்ப்பங்களில் தபால்மூலமும் கடிதங்கள் வந்தது நினைவிருக்கின்றது.

அவர் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மூன்று வருடங்கள் கடந்தநிலையில் 1987-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதமென நினைக்கின்றேன். தியாகதீபம் திலீபன்அண்ணா உண்ணாநோன்பிருந்த நாட்களென நினைவிருக்கிறது. அன்றையநாட்களில் ஒருநாளில் தமிழ்நாட்டிலிருந்து தாயகம்வந்தவண்டியில்; தாயகத்திற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து சிலநாட்கள் விடுமுறையில் தங்கிநின்றார். பின்னர் மீண்டும் தேசக்கடமைக்காகச்சென்றுவிட்டார். இதன்பின்னரான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப்படையினருக்குமான யுத்தம் தொடங்கி தீவிரம்பெற்றிருந்தது. இந்தக்காலப்பகுதிகளில் இவரது கடிதங்கள் மிகமிகஅரிதாகவே வீட்டிற்கு கிடைத்தன. கடிதங்களில் தான் இந்தியாவில் நிற்பதாக குறிப்பிட்டிருந்தார். அரிதாகவந்தகடிதங்களும் பின்னர் வராதுவிட்டன.

காலங்கள் உருண்டோடின. 1989-ம்ஆண்டின்நடுப்பகுதி என நினைவிருக்கிறது. இந்தக்காலப்பகுதியில் எமது பகுதிக்கு அண்மையாக தாளையடியிலும் கட்டைக்காட்டிலும் இந்தியப்படையினர் முகாம் அமைத்திருந்தனர். இந்த இரண்டு முகாம்களிலுமுள்ள படையினர் ரோந்துசெல்கின்ற சுற்றிவளைக்கின்ற தேடுதல் நடாத்துகின்ற இடங்களாக மருதங்கேணிமுதல் வெற்றிலைக்கேணிவரையான பகுதிகள் அமைந்திருந்தன. எப்போது வருவார்கள் தேடுதல் நடாத்துவார்கள் என்று எவருக்குமே தெரியாது. இவ்வாறு நெருக்கடியானசூழ்நிலை நிலவிய நாட்களில் எவருமே எதிர்பார்க்காத ஒருஇரவுப்பொழுதில் கடல்ப்பயணம் சென்றுகொண்டிருந்த வண்டி இவரை கரையில் இறக்கிவிட்டுச்சென்றது. நீண்டநாட்களுக்குப்பிறகு அவரை பார்த்ததில் அனைவரும் சந்தோசமடைந்தாலும் மனதளவில் பயந்துதான்போனார்கள். இந்தமுறை அவர் துப்பாக்கியுடன் வந்திருந்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் இந்தியப்படையினர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டால் விளைவுகள் விபரீதமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நிற்கும் சமயத்தில் இந்தியப்படையினரது தேடுதல்கள் இடம்பெறக்கூடாது என அனைவரும் உள்ளுரஇறைவனை வேண்டினார்கள். மறுநாள் பகல்ப்பொழுதுகழிய அடுத்துவந்த இரவுப்பொழுதில் அதேவண்டிவந்து அவரை ஏற்றிச்சென்றது. அதன்பிறகுதான் அனைவரும் நின்மதிப்பெருமூச்சுவிட்டார்கள். அதன்பிறகு குறிப்பிட்டகாலம் அவரது தொடர்புகள் எதுவும் இல்லாமலிருந்தது.

1990ம் ஆண்டின் முற்பகுதி. இந்தியப்படையினர் தாயக மண்ணைவிட்டு வெளியேறத் தொடங்கிய நாட்கள். விடுதலைப்புலிகள் வரிச்சீருடையுடன் மக்கள்மத்தியில் வலம்வரத்தொடங்கியகாலமது. அந்தநாட்களில் ஒருநாளில் அவரும் வரிச்சீருடையுடன் துப்பாக்கி தொலைத்தொடர்பு சாதனத்துடன் வந்தார். இந்தமுறை தனியாக வரவில்லை. இன்னும் பல போராளிகளுடன் வந்தார். அனைவரும் ஆயுதம் தரித்திருந்தனர். அவர் வந்துமறுநாள் மீண்டும் சென்றுவிட்டார். இந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல்ப்பிரிவான விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி தமது செயற்பாடுகளை மக்கள்மத்தியில் விரிவாக்கம் செய்திருந்தனர். இவர் போராளிகளுடன் வீட்டிற்கு வந்துசென்று ஓரிருவாரங்கள்தான் கடந்திருக்குமென நினைக்கின்றேன். அவர் விடுதலைப் புலிகளின் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மக்கள் முன்னணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தாளையடி அரசியல்ச் செயலகத்திற்கு அவர் வந்திருப்பதாக தகவல் கேள்வியுற்றோம்.

வடமராட்சிக்கிழக்குப் பிரதேசப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை ஒன்றுகூட்டி கருத்தரங்குகளை நிகழ்த்தினார். அவரது கருத்தரங்குகள் மக்கள்மத்தியில் பெரிதும் எழுச்சியை ஏற்படுத்தியது. அன்றையநாட்களில் தமிழீழ காவல்த்துறைக் கட்டமைப்பு இருக்கவில்லை. (தமிழீழ காவல்த்துறை உருவாக்கப்பட்டது 1991 நவம்பர்) ஆதலால் பொதுமக்களிடமிருந்து வருகின்ற குடும்பப்பிரச்சினை காணிப்பிரச்சினை பணக் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட இதரபிரச்சினைகள் அனைத்தையும் பிரதேச அரசியல்ப்பிரிவே கையாளவேண்டியிருந்தது. நாளாந்தம் அவரது செயலகத்தில் மக்கள் குவிந்தார்கள். ஒவ்வொருவரது பிரச்சினைகளையும் நிதானமாகக்கையாண்டு தீர்வுகளை வழங்கினார். மக்கள்மத்தியில் அவருக்கான நன்மதிப்பு உயர்ந்தது. தவறுசெய்பவர்களை திருத்துவதற்காக அவர் வழங்கும் தண்டனையென்றால் அவரது செயலகத்தில் ஒரு இருட்டறை இருந்தது. அந்த இருட்டறையில் தண்டனைக்குரியவரை தங்கவைத்து மூன்றுநேரஉணவு மற்றும் தேனீர் என்பன நேரம் தவறாமல் வழங்கப்படும். இதுவே அவர் வழங்குகின்ற அதிஉச்சதண்டனையாகும். அவரிடம் தண்டனைபெற்றவர்கள்கூட அவரை உயர்வாகவே மதித்தார்கள். இவ்வாறு அரசியல்ப்பணி செய்த அவரை மீண்டும் இராணுவக் கடமை அழைத்தது. அவர் அரசியல்ப் பணியிலிருந்து மாற்றலாகிச் செல்லப் போகிறார் என்றதைக் கேள்வியுற்றதும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசமக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடமிருந்து நிறையக்கடிதங்கள் இவரை மாற்றவேண்டாமெனக்கோரி அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளர் சூசை அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மக்களது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்த சூசை அவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் தாமதித்து அவரது தேவையின் முக்கியத்துவம்பற்றி மக்களுக்கு விளக்கி மாவீரர் ராஜீவை வடமராட்சிக் கிழக்குப் பிரதேசப் பொறுப்பாளராக நியமித்து இவர் வடமராட்சிக்கு அழைக்கப்பட்டார்.

இதன்பின்னர் சிறிலங்காப் படைகளுடன் இரண்டாவதுகட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது. இந்தநாட்களில் இவரது பணிகள் புதிய போராளிகளுக்கான பயிற்சித்திட்டங்களை நெறிப்படுத்துதல் மற்றும் அணிகளை வழிநடத்துதல் முதலான இராணுவரீதியான கடமைகளையே முன்னெடுத்திருந்தார். 10.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையினரின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் விநோத் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டபோது அந்தத் தாக்குதலில் இவரது வகிபாகமும் முதன்மையாகவிருந்தது.

இதன்பிற்பாடு அடிப்படைப்பயிற்சி முடித்த போராளிகளைக் கொண்ட அணிகளுக்கு முதன்மைப்பொறுப்பேற்று ஆழியவளையில் அவர்களுக்கான தளம் அமைத்து அணிகளை நிலைப்படுத்திவிட்டுச் சென்றவரை மீண்டும் போர்க்களம் அழைத்தது. 05.08.1990 ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை யாழ். கோட்டை இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கும் ஒரு அணிக்குப் பொறுப்பாகச் சென்ற இவர் கோட்டை முன்வாயிற் பகுதியில் நடைபெற்ற சண்டையில் இவர் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார். இவரது வித்துடலை மீட்பதற்காக பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இவர் வீரச்சாவடைந்து இரண்டாம்நாள் அதாவது 06.ம்திகதி இரவுதான் வித்துடல் மீட்கப்பட்டு இராணுவ மரியாதைகளுடன் அன்றைய விதிமுறைகளுக்கேற்றவாறு மானிப்பாய் பிப்பிலிமயானத்தில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்த்தி அவரது சொந்த இடமான உடுத்துறைக் கடலில் கரைக்கப்பட்டது.


நினைவுப்பகிர்வு: கொற்றவன்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply