Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கப்டன் முத்துசாமி – லெப். சுதர்சன்

கப்டன் முத்துசாமி – லெப். சுதர்சன்

உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.

தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.

தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மண்ணுக்காக மரணித்தவர்கள் தம் வாழ்வை அர்ப்பணித்து தமிழ்த் தேசியம் வாழ வழிசமைத்தார்கள். தமது குடும்பத்தின் வாழ்வு மேம்பாட்டை விட ஒட்டுமொத்த தமிழ் குடும்பங்களின் வாழ்வு மேம்பாட்டை கொள்கையாகக் கொண்டவர்கள். இவ்வாறனவர்களின் குறுகிய கால வாழ்வு எமது எதிர்காலச் சந்ததிக்கு படிக்கின்ற பாடமாக இருக்கவேண்டும் என்பது என்போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதைலைப் புரட்சி வாதிகளின் எழுச்சியினால் உந்தப்பட்ட இளையோர்கள் பலராக இருந்த போதும் உச்சமான தற்கொடையில் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு முகம்கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதில் தமிழ்த் தேசியம் நினைவில் கொள்வதை அண்மைக்கால சம்பவங்களும் அதன் மூலம் வெளியிடப்படும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

1983 ம் ஆண்டு யூலை சிங்களப் பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப் புரட்சி வாதிகளாக மாற்றியதை கடந்த முப்பது வருட காலம் எமக்கு காட்டி நிற்கின்ற வேளையில், மட்டக்களப்பில் இக்காலத்தில் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியவர்களும், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை மேற்கொண்டவர்களுமான பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் கப்டன். முத்துச்சாமி (முரளிதரன் ) களுவாஞ்சிக்குடி, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,லெப். சுதர்சன் (சிவகுருநாதன்) ஆரையம்பதி, ஆகியோரின் தற்கொடையை கொண்டு முன்னிறுத்தி இக் கட்டுரையை வரையமுற்படுகின்றோம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு தரப்பட்டவர்கள் இருந்தபோதும் இவர்கள் இருவரும் உயர்கல்வியில் இருந்துகொண்டு இனப்பற்றோடு, இன அழிப்பை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போர்க்கருவி ஏந்திய போராட்டமே என்பதில் நம்பிக்கை கொண்டதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

மூதூர், கூனித்தீவு என்னும் ஊரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் 28 .06 .1987 நாள் அன்று அதிகாலை வேளையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலுக்கு உட்பட்டது. இச் சம்பவத்தில் மூதூர் கோட்டத்தளபதி மேஜர்.கயேந்திரன் கப்டன்.முத்துசாமி, லெப். சுதர்சன் உட்பட ஒன்பது பேர் வீரச்சாவடைந்தனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகமும், விடுதலைப் போராளிகளும் ,தமிழ்மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் .தம்முடன் பயின்ற மாணவர்களான இவர்கள் சாதிக்க வேண்டியதும், மக்களை வாழவைக்க கல்வியைப் பயன்படுத்த வேண்டியதும் எதிர்காலத்தில் அதிகம் இருந்தும், இவர்களின் இழப்பு மாணவர் சமூகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மிகுந்த மனவேதனையையும் உண்டுபண்ணியிருந்தன.

தாங்கள் கல்வியில் மேம்பாடடைந்து, காலம் கை கூடினால் தமிழ்மக்களின் விடுதலைக்காக ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் பலர் இருக்கின்றபோது உயர் கல்வியிலிருந்த இவர்கள் உடன் களத்தில் இறங்கியதற்கு சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கே காரணமாக விருந்தன. இவ்வாறு உணர்வான,கல்வியில் சிறந்தவர்கள் தம்மை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

கப்டன் முத்துசாமி

அறிவில் கூர்மையான கப்டன்.முத்துசாமி மிகவும் எளிமையான வாழ்வு முறையை போராளி நிலையில் மேற்கொண்டவர். ஊர்களால் சூழப்பட்ட மட்டக்களப்பில் ஊர்மக்களின் வாழ்வோடு ஒன்றித்து ஒரு போராளியாகத் தென்பட்ட முத்துசாமி தான் தங்கியிருக்கின்ற ஊர்களில் அம்மக்களின் அன்புக்குரியவராகக் காணப்பட்டார்.இவரைப்பற்றி ஒரு மூத்த போராளி குறிப்பிடுகையில், முரளிதரன் என்னும் பெயரைக் கொண்ட இவர் முத்துசாமி என்ற பெயரை தான் விரும்பியே பெற்றுக்கொண்டார். என்றும் ஊர் ஒன்றித்த மக்களோடு வாழ்வில் அளப்பெரிய மகிழ்ச்சி கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மூன்றாவது பாசறையில் போர்க்கல்வி உட்பட்ட அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்ட கப்டன் முத்துசாமி அவர்கள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முதல் பாசறை ஏற்படுத்தப்பட்ட போது, அறிவியல் போராளியான கப்டன் முத்துசாமி அவர்களுக்கு போர்க்கல்வியை ஊட்டும் பயிற்சி ஆசிரியர் என்ற பணியை தளபதி அருணா கொடுத்திருந்தார்.

இப்பாசறையின் முடிவுக்குப் பின்னர்தான் இம்மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் அதிகப்பட்டிருந்தன.. இப்பாசறையை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா ,தளபதி குமரப்பா ,தளபதி சொர்ணம் ,மூத்த போராளி நியுட்டன், மற்றும் கப்டன் முத்துச்சாமி, கப்டன் ஜிம்கலி, கப்டன்.கரன் ,லெப்.ஜோன்சன் (ஜுனைதீன்) லெப்.ஜோசெப், லெப்.கஜன், லெப்.உமாராம், லெப். ரவிக்குமார், லெப் கலா, லெப் அரசன், லெப். ஈசன், லெப்.சகாதேவன்,லெப்.பயஸ், லெப்..புவிராஜ் ஆகியோர் தலைவரின் பணிப்பின்படி மட்டக்களப்புக்கு வந்திருந்தனர். இவர்களின் வருகையோடு மட்டக்களப்பில் சிங்களப்படைகளுக்கெதிரான தாக்குதல்களும் தீவிரப்பட்டன.

இம்மாவட்டத்தின் முதல் மாவீரர், மூத்த போராளி லெப்.பரமதேவா அவர்களின் வீரச்சாவைத்தொடர்ந்து தளபதி அருணாவின் வருகை அமைந்திருந்தது. இவர்கள் வரும்போது மட்டக்களப்பில் குறிப்பிட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். இவர்களில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ், அம்பாறை மாவட்டத் தளபதி டேவிட் போன்றவர்கள் பொறுப்பிலும், செயல்பாட்டிலும் இருந்தனர்.

1983 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பினைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியிருந்த போது, பொறியியல் பீட மாணவனான களுவாஞ்சிக்குடி ஊரைச் சேர்ந்த முரளிதரன் அவர்களும், தமிழ்மக்களின் விடுதலைக்கும்,பாதுகாப்புக்கும் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாக சிலர் இணைந்து உருவாகிய “கிழக்குக் குழுவில்” முக்கிய பங்காளராக செயல்பட்டதன் மூலமாக தனது விடுதலைப் பயணத்தைத் தொடங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

29 .06 .1960 அன்று தாய் மண்ணில் பிறந்த முரளிதரன் ஆரம்ப கல்வியை தான் பிறந்த களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்தியாலயத்திலும், பின்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டார். மிகவும் புத்திசாலி மாணவனான இவர் க. பொ .த .உயர் வகுப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதபிரிவில் பயின்று பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி கல்வியைக் மேற் கொண்டிருந்த வேளையில் 1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு தாய் மண் திரும்பிய வேளையில் தமிழ் மக்களின் அழிவையும் பாதுகாப்பையும் எண்ணி மிகவும் மனவேதனை கொண்டிருந்தார். இதனால் தன் இன மக்களுக்கான விடுதலையும், பாதுகாப்பும் முக்கியமெனக்கருதி, கல்வி மேம்பட்டைத் துறந்து தம்மக்களின் எதிர்காலத் தலைமுறையின் மேம்பாட்டு வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்காக புறப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் பயிற்சிப் பாசறையில் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்ட முத்துசாமி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் போர்க்கல்வியை பயிற்றுவிக்கும் ஆசானாகவும், இராணுவ தொழில் நுட்பங்களைக் இலகுவாகக் கையாளும் திறன் மிக்கவராகவும் இருந்ததனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இனங்காணப்பட இராணுவத் தொழில் நுட்பப் போராளிகளில் ஒருவராக இவருடைய திறமை, உறுதிமிக்க போராளிகளையும்,வல்லமையுள்ள விடுதலை வீரர்களையும் இயக்கத்திற்குப் பெற்றுக் கொடுத்திருந்தது.தொலைதூர வெடிக்க வைக்கும் சாதனத்தை இயக்குவதில் பல்வேறு வகைகளைத் கையாண்டு சாதனைகளை மேற் கொண்டிருந்தார்.

1985 .09 .02 ம் .நாள் அன்று தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலைய அழிப்பிலும்,அக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படைகளுக்கெதிரான தாக்குதலிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இவர் போராளியாக வாழ்ந்த காலத்தில் நீண்ட காலம் வாழ்ந்தது மயிலவெட்டுவான் என்ற வயல் கிராமத்தை அண்டிய பகுதியாகும்.இவ்வூர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவராக காணப்பட்ட கப்டன் .முத்துசாமி அவர்கள் வீரச்சாவடைந்த நாள்முதல் ஒவ்வொரு ஆண்டும் அம்மக்களால் நினைவு வணக்கம் செலுத்தப்படடவராக இருந்தார். .ஒரு போராளியின் புனிதப்பயணம் மிகவும் நிதானமானது, நேர்மையானது, உண்மையானது, உறுதியானது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்களில் கப்டன் முத்துச்சாமியும் ஒருவராகவிருந்தார்.

படித்தவர்கள் , பட்டதாரிகள், பணக்காரர்கள், பாமரர்கள் எல்லாம் ஒன்று கூடும் இடமாக தேசிய விடுதலை இயக்கம் இருப்பது அவர்கள் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு பலமாக அமையும் என்பதற்கமைய கப்டன் முத்துச்சாமி போன்றவர்களும் களத்தில் பயணித்தார்கள். இவ்வாறு விலைமதிக்க முடியாத போராளிகளை இழந்திருக்கின்றோம்.

கப்டன்.முத்துசாமி அவர்களின் விடுதலைப் போராளி வாழ்க்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தாக்குதல்கள் இராணுவ தொழில் நுட்ப வல்லமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இவருடைய அறிவுத்திறமையினால் தாக்குதல்கள் இலகுவாக்கப்பட்டு, இலத்திரனியல் தொழில் நுட்பத்தில் மிகவும் திறமையாக செயல்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

குச்சவெளி சிங்கள காவல்நிலைய அழிப்பில் தன்னை ஈடுபடுத்திய பின்பு மட்டக்களப்பில் முதல் பாசறையில் பணிமுடித்ததை தொடர்ந்து ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதலிலும் முன்னணி வீரராக பங்குகொண்டார். பின்வரும் 1985 ம் ஆண்டு ஆரம்பம் முதல் 1987 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களுக்கு முக்கிய பங்களிப்பையும் வழங்கியிருந்தார். இத் தாக்குதல்களில் எல்லாம் கப்டன்.முத்துசாமி அவர்களின் இராணுவத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு நகரில் ராஜேஸ்வரா படமாளிகைக்கு முன்பாக கண்ணி வெடித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தொலை தூர வெடிக்க வைக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக தாக்கப்பட்டதில் சுமார் பத்து அதிரடிப் படையினர் அழிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் வந்தாறுமூலையைச் லெப். ஈசன் அவர்களும் இணைந்திருந்தார்

மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் கொடுவமடு பாலத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலினால் அதிரடிப் படையினரின் கவசவாகனம் வானுயர எழுந்து வெடித்து சுக்கு நூறாகிய சம்பவம் சிங்களப் படைத்துறையை அதிரவைத்த நிகழ்வாக அமைந்திருந்தன. இத் தாக்குதலில் தளபதி பொட்டு அம்மான் கண்ணி வெடிக்கவைத்திருந்தார்.

போரதீவு கட்டெறும்பூச்சிச் மரசந்திக்கருகாமையில் கண்ணி வெடித்தாக்குதல், மயிலவெட்டுவானில் போராளிகளின் முகாம் நோக்கிய தாக்குதலில் ஈடுபட்ட படையினர் மீதான பொறிவெடித்தாக்குதல், செங்கலடி பதுளை நெடுஞ்சாலையில் கறுத்தப்பாலத்தை அண்மித்த ஆலையத்திற்கருகாமையில் கிளைமோர் தாக்குதல், கொம்மாதுறை செங்கலடி தொடரூந்து பாதையில் நடை ரோந்துப்படையினர் மீதான பொறி வெடித்தாக்குதல் என்பவற்றில் கப்டன்.முத்துசாமி அவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அச்சமின்றி பயணத்தை தொடரமுடியாதவாறு படையினர் பதுங்கிருந்த காலமாகவும், போராளிகள் மீதான பயமும் மிகுந்திருந்தது. இக் காலத்தில் நடத்தப்பட்ட வெடிமருந்து தொடர்பான அனைத்துத் தாக்குதல்களிலும் இவருடைய பொறியியல் மூளை பயன்படுத்தப் பட்டதைக் குறிப்பிட முடியும்.

வந்தாறுமூலை – மயில வெட்டுவான் பாதையில் சிவத்தப் பாலம் என்ற இடத்தில் ஒரு கண்ணி வெடித்தாக்குதல் நடத்தப்பட்டது. கப்டன்.முத்துச்சாமி அவர்களின் தயாரிப்பில் லெப்.வைரவன் (வந்தாறுமூலை) கண்ணிவெடியை வெடிக்க வைத்திருந்தார். இத் தாக்குதலில் பல படையினர் அழிக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா தயாரிப்பான சுரி குழல் துப்பாக்கி (Colt Commando Ar15) ஒன்று முதன் முதலாக விடுதலைப் புலிகளால் கைப்பெற்றபட்டிருந்தன என்பதும் குறிப்பிடக்தக்கது.

1986 ஜூன் மாதம் விடுதலைப் புலிகளால் தளபதி குமரப்பா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாங்கேணி சிங்களப் படை முகாம் மீதான தாக்குதலில் கப்டன்.முத்துச்சாமி தலைமையிலான போராளிகள் காயாங்கேணி என்னுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கும்புறுமூலையில் இருந்தும் வாகனேரியில் இருந்தும் வரும் படையினர் காயாங்கேணி பாலத்தின் ஊடகத்தான் வரமுடியும் இந்த பாலத்தில் வைத்து தடுத்து தாக்கும்பணி இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கப்டன்.முத்துசாமி அவர்களின் பொறியியல் மூளையினால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள், பொறிவெடிகள் வெடித்தபோது படையினர் நிலைகுலைந்தனர். இவ்வாறு முத்துசாமி என்ற போராளியின் வருகை மட்டக்களப்பில் படையினருக்கு ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதவாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் படையினருக்குக்கெதிரான தாக்குதல்களை தீவிரப் படுத்தும் நோக்கோடு சுமார் பத்துபேர் அடங்கிய குழுவொன்று 1985 ம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தது.

இக்குழுவில் இணைந்திருந்த நாகர்கோயில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த போராளி பேனாட் (குருசுமுத்து துரைசிங்கம்) என்பவர் 09.09.1985 நாள் அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் என்ற ஊரில் படையினரின் பதுங்கிக் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போராளிகளில் முதல் மாவீரராக மட்டக்களப்பு மண்ணில் வீழ்ந்த வீரவேங்கை பேனாட் என்பவரை இச்சந்தர்ப்பத்தில் போர்க்காவிய வரலாற்றில் பதிவுசெய்கின்றோம்.

களுவாஞ்சிக்குடி ஊரில் முதல் மாவீரராக பதிவாகியவர் 2 ம் சுந்தரம் (தம்பிப்பிள்ளை அருள்ராஜா) ஆவார். மாவட்டத்தின் ஆரம்பகால போராளிகளின் ஒருவரான இவர் அரசியல் போராளியாகவும் செயல்பட்டிருந்தார். மக்கள் மத்தியில் மிகவும் பணிவாக செயல்பட்டு மக்களுக்கான சேவையையும் வழங்கியிருந்தார்

லெப். சுதர்சன்

இந்த வரிசையில் அடுத்து பார்க்கப் போகின்றது ஆரையம்பதி என்னும் ஊரைச் சேர்ந்த லெப். சுதர்சன் (சிவகுருநாதன் ) என்பவராகும்.

ஆரையம்பதி ஊரில் சிறந்த பண்பாளராக மக்களால் மதிக்கப்பட்ட ஆசிரியப் பெருமகன் பூபாலபிள்ளை அதிபர், பாக்கியம் ஆசிரியை ஆகியோரின் மூத்தபிள்ளையும் ஏகப்புதல்வனுமான சிவகுருநாதன் 13 .05 1964 நாள் அன்று பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியிலும் மேற்கொண்டிருந்தார். உயர் கல்வியில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் 1984 கல்வியாண்டில் பயின்று கொண்டிருந்த வேளையில் வீரச்சாவடைந்தார்.. இவருடைய ஒரேயொரு தங்கை ஒரு மிருக மருத்துவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கின்றார். இரண்டு பிள்ளைகளை அன்பாக வளர்த்து வந்த பெற்றோருக்கு மகனின் விடுதலை உணர்வை குறைத்து மதிப்பிட முடியாத போதும், தாய் மண்ணுக்காக களத்தில் வீழ்ந்தபோது கண்கலங்கி எதிர்கால மருத்துவரை இழந்த தவிர்ப்பில் ஆழ்ந்துபோயிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் சாவகச்சேரி பாசறையில் பயிற்சி பெற்று உறுப்பினராக மருத்துவக் கல்வியை மேற்கொண்டநிலையில் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவிலும் தனது பணியை மேற்கொண்டார். மூதூர் கோட்டத்தில் தளபதி அருணாவின் திட்டமிடலில் சிங்கள படை முகாம் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராகவிருந்த வேளையில் மருத்துவ பணி மேற் கொள்வதற்காக மூதூர் சென்றிருந்த குழுவில் லெப்.சுதர்சன் அவர்களும் இடம் பெற்றிருந்தார்.

ஆரையம்பதி என்னும் ஊர் மட்டக்களப்புக்குத்தென்புறமாக அமைந்திருக்கின்ற தமிழரின் முக்கிய ஊராகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியாளர்களை அதிகமாகக் கொண்ட ஊர்களில் ஆரையம்பதியும் ஒன்றாகும். இவ்வூர் மக்களின் உணர்வுகள் தமிழ்த் தேசியத்தின் பால் ஒன்றித்து இருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரியாலை என்னும் ஊர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதுபோல் மட்டக்களப்பில் ஆரையம்பதி ஊர் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இதே தாக்குதலில் வீரச்சாவடைந்த 2லெப்.கோபி (நாகமணி – ஆனந்தராஜா), மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் பெண் மாவீரர் லெப் .அனித்தா அவர்களின் சொந்த ஊரான ஆரையம்பதியில் பல மூத்த போராளிகள் வாழ்ந்து தமிழீழ விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். இந்தியப் படையினர் எம் மண்ணில் நிலை கொண்டிருந்தபோது TELO தேசவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கலா அவர்களும், நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய துரோகத்தனத்தில் ஈடுபட்ட கருணாவின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியத்தைக்காத்து நின்று கருணாவினால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கேணல் நீலன் அவர்களையும் ஆரையம்பதி மண்தான் பெற்றிருக்கின்றது என்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்ட இடமாகவும் ஆரையம்பதி ஊர் பதிவு செய்யப்படுகின்றது.

தமிழ் உணர்வு பொங்கி வழிந்த காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கியபோதும் எழுச்சி கொண்ட இளைஞனாக எழுந்து தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்த பூபாலபிள்ளை.சிவகுருநாதன் அவர்களின் தற்கொடையை எழுதுகின்ற போது கல்வியில் சிறந்து விளங்கிய பல தமிழ் இளையோர்களைப்பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு அவர்கள் இணைந்தது பற்றியும் குறிப்பிடுகையில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர்..பிரான்சிஸ், லெப் .உமாராம் போன்றோர் பற்றியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அம்பாறை ஹாடி தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவனான மேஜர்.பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான் கோட்டைக்கல்லாறு), தொழில் நுட்பவியலாளர் லெப் .உமாராம் (முத்துக்குமார் .சந்திரகுமார்) கல்லடி, ஆகியோரின் அர்ப்பணிப்புகளும், தமிழ் மக்களால் நினைத்துப் பார்க்கவேண்டியதொன்றாகும். பிறிதொரு கட்டுரையில் இவர்கள் பற்றி எழுதுவோம்.

கல்வியில் மேம்பாடடைந்து, தமது குடும்பங்களை மேம்படுத்துவோம் என்ற நிலையில் எமது இனம் சுயநலம் கலந்ததாக அரசியலிலும் அரங்கேறிய வேளையில் மேற் கூறியவர்கள் தங்களை இழந்து தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு வலுச்சேர்த்திருக்கின்றார்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு வீண்போகக்கூடாது. இவர்களின் இழப்புக்களை எமது மக்களின் உணர்வுகளுக்கு கொடுக்கும் உந்து விசையாகப் பயன்படுத்துவோம். தங்களை இழந்து தமிழினம் வாழ வழிகோலியவர்களை வரலாற்றில் மறக்காமல் விடுதலைப் பாதையில் ஒன்றுபட்ட மக்கள் சக்தியுடன் பயணித்து உரிமையை நிலைநாட்டுவோம்.

கப்டன்.முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகியோர் பிறந்தது வாழ்ந்தது மட்டக்களப்பு மண்ணில், வீழ்ந்து விதையாகிப் போனது மூதூர் மண்ணில் என்பது பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஏனெனில் மூதூர் மண்ணின் வரலாற்றுப் பெருமை தமிழரின் பூர்வீகதாயகத்தை எமக்கு எப்போதும் நினைவுபடுத்துகின்றது. தமிழர் தாயகத்தின் திருகோணமலையை அண்டியதான நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய வாழ்விடம் என்பதிலும் நிலை நிறுத்தப்படுகின்றது. இந்த மண், எங்களின் சொந்த மண் என்பதில் இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய கடமையும், அர்ப்பணிப்பையும் எமது போராளிகள் உணர்ந்ததனால், விதையாக வீழ்ந்த பல மூத்த போராளிகளை வரலாற்றில் பெற்றிருக்கின்றோம்.

இந்த மண்ணில் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் நடந்த சிங்கள இராணுவச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்த மூதூர் கோட்டத்தளபதி மேஜர். கஜேந்திரன் உட்பட்ட மாவீரர்கள் அனைவரும் வரலாற்றில் சாதனையாளர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாசத்துக்குரியவராகவும், அவரால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவும் இருந்த மூதூர் கோட்டத் தளபதி மேஜர்.கணேஷ் அவர்களின் வீரச்சாவை அடுத்து ஒரு தன்னலமற்ற, தமிழ்நலத்துடன் செயல்பட்ட மாபெரும் விடுதலை வீரனான மேஜர். கஜேந்திரன் அவர்களுடன், வரலாற்றில் புதிய அறிவியல் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்தப் பயணித்த கப்டன்.முத்துசாமி, மருத்துவ மாணவன் லெப்.சுதர்சன், கப்டன்.குளியா (சிறி) அரசடி திருகோணமலை, லெப் .சுரேஷ் ஆலங்கேணி, 2ம் லெப்.கோபி ஆரையம்பதி, வீரவேங்கை தாவுத் வல்வெட்டித்துறை,வீரவேங்கை நிமால் கட்டைபறிச்சான், மூதூர் ,வீரவேங்கை லோயிட் மூதூர் ஆகியோரையும் தமிழீழ மண் இழந்தது.

மூதூர் மண்ணை ஆக்கிரமித்து சிங்களப் பேரினவாதத்தின் கீழ் முழுமையாகக் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணம் 1948 ம் ஆண்டிலிருந்து அல்லை – கந்தளாய் குடியேற்றத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. சிங்களப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் அரசியல் வாதிகள் எதிர்த்த போதும், 1971 ம் ஆண்டு சேருவில என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டது. அறவழியில், அரசியல் வழியில் காட்டப்படும் எதிர்ப்புகளை சிங்கள அரசு மதிப்பதற்கு மாறாக அடக்கு முறையை மேற்கொண்டு தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதனை ஆட்சி மாறிய சிங்கள அரசியல் கட்சிகள் கொள்கையாகக் கொண்டிருந்தன. இதன் பயனாக தமிழர் நிலம் பறிக்கப்படும் அபாயம் தொடர்ந்து கொண்டிருந்ததால் போராடப் புறப்பட்ட இளைஞர்பட்டாளத்தின் கரங்களில் ஏந்தப்பட்ட போர்க்கருவிகள் ஆக்கிரமிப்பு வாதிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்தன. மூதூர், தமிழ், முஸ்லிம் மக்களின் தாயக பூமி என்பதனை நீண்ட வரலாறு எமக்கு உணர்த்துகின்றபோதும், சிங்கள ஆக்கிரமிப்பின் தாக்கம் தமிழ் மக்களை மாத்திரமல்ல முஸ்லிம் மக்களையும் சொந்த நிலத்தை இழக்கும் தன்மையை உருவாக்கியுள்ளது. அண்மைக்கால பௌத்த பிக்குகளின், புத்த கோயில் உருவாக்கங்கள் இதனை தெளிவாக காட்டிநிற்கின்றன. எனவே இந்த நிலை தொடரவேண்டுமா? என்பதுதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ள பாரிய பிரச்சனையாகும்.

இவ்வாறான நிலையிலுள்ள மண்ணில் எமது போராளிகளின் அர்ப்பணிப்புகள், எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் தொடரும் நிலப்பறிப்பையும் தடுத்து நிறுத்தியிருந்தது, இந்த மண்ணில் வீழ்ந்த இன்னுமொரு போராளியான 2 வது லெப். கோபி ஆரையம்பதி ஊரைச் சேர்ந்தவர்.இந்த இராணுவச் சுற்றி வளைப்பில் இரண்டு போராளிகளை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த ஆரையூர் மக்கள் விலை மதிக்க முடியாத எதிர்கால மருத்துவரையும் , புகைப்படக்கலையில் திறமை மிக்கவர் ஒருவரையும் விடுதலைக்காக அர்ப்பணித்ததில் பெருமையடைந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப் போராட்டக்களத்தில் உயர்கல்வி மாணவர்களை உள்வாங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிகவும் பேரிழப்பான சம்பவமாக இது அமைந்திருந்தது.

வாழ்வதும், வீழ்வதும், தன் இனத்தின் வாழ்வுக்காக என்ற தத்துவத்தின் அடிப்படையில் போராளியாக எமது மண்ணில் எமது மக்களோடு வாழ்ந்த இவர்களின் தற்கொடை பதவிக்காக துரோகத்தின் உச்சக் கட்டத்தில் செயலாற்றி சிங்களத்தின் காலடியில் மண்டியிட்ட மானம்கெட்டவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் மட்டக்களப்பு மக்களின் வீரத்தையும், தன்மானத்தையும் காத்து நின்ற செயலாகும்.

கப்டன் முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகிய இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்துகொண்ட வேளையில், அக்காலத்தில் இயங்கிய எந்தவொரு விடுதலை இயக்கத்திலும் இவ்வாறானவர்கள் மட்டக்களப்பில் இணைந்திருந்ததில்லை மட்டக்களப்பின் விடுதலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளுக்கு அம் மக்கள் கொடுத்த அங்கீகாரம் வேறு எந்த போராட்ட இயக்கத்திற்கும் கிடைத்ததில்லை. வரலாற்றில் எமது மக்களோடு வாழ்கின்ற போராளிகளான இவர்களை பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறியவர்களும்,படித்துக்கொண்டிருப்பவர்களும், பட்டம்பெற்று வெளிநாடுகளில் வாழ்வோரும் முன்மாதிரியான விடுதலைப் போராளிகளாக நினைத்துப் பார்க்கவேண்டும். இவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேற்கூறிய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும், எரிந்துகொண்டிருக்கின்ற விடுதலைச்சுடராக ஒளிரவேண்டும் என்பதே எமது மக்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையோடு இணைந்ததான நன்றி உணர்வாகும். இவர்களின் பெயரோடு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். தமிழ் இளையோரின் கல்வி மேம்பாட்டுக்கும் கரம் கொடுப்போம்.

தேசியத் தலைவர் கூறியதுபோல் போராளியாக உருவாக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைந்தவர்கள் என்ற வரிசையில் நிமிர்ந்து நிற்கின்கின்ற இம் மாவீரர் போன்றவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பாதையில் பயணித்திருந்தால் மட்டக்களப்பில் ஏற்பட்ட துரோகத்தனமும் துடைத் தெறியப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மக்களை வழிநடத்திய பொறுப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு நடந்ததைக் கொண்டு நோக்குகின்றபோது எமது விடுதலையை பெறுவதற்கு நாம் இழக்க வேண்டியது அதிகம் உண்டு என்று எண்ணத் தோன்றுகின்றது.எமது மாபெரும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் அரசியல் வழியில் விடுதலையைப்பெற அரசியலில் நிற்பவர்கள் இதய சுத்தியோடு செயல்படும் காலத்தில் இணைந்திருப்பதை எண்ணிக்கொள்ளவேண்டும்.

எமக்காக வீழ்ந்தவர்களை எமது இனத்தின் இறுதி இருப்பு வரை எமது நெஞ்சினில் நினைவாக வைத்திருப்போம். இவர்களின் உடல் எம் மண்ணில் வீழ்ந்தாலும் விடுதலைக்கான குரல் எமது செவிகளில் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது, தமிழ் உணர்வோடு வாழ்வோம். உரிமைக்காக ஒன்றுபட்டு பயணிப்போம். உலக ஓட்டத்தில் ஒன்றித்து தன்னாட்சியுரிமையை நிலைநிறுத்துவோம்.

– எழுகதிர்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply