மேஜர் சோதியா

இயற் பெயர் – மைக்கோல் வசந்தி

இயக்கப் பெயர் – சோதியா

தாய் மடியில் – 26.09.1963

தாயக மடியில் – 11.01.990

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.

நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை… நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

Major Sothiya
michael Vasanthi
Karaveddi
Jaffna

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா… அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி…

காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.

– விசாலி –

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply