Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்

கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்

1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான்.

அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான். தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி, விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான்.

தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான். தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப் படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான்.

“ஒயாத அலைகள் 03” நடவடிக்கையில் யாழ். கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம் சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலிந்த தாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும்.

கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான்.

ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான். அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத் தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் .
பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக் கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி.

மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பன்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம்.இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப். கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான்.

கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். நீள்வானம் போன்று இவர்களது தியாகம் என்றும் எங்கள் மண்ணில் நிலைத்திருக்கும்.

– அலையரசி.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply