கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது?
பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது). எனவே நம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றால்தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பதற்கு தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதல்லாமல் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆகவே எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தளம் தமிழகமாகவும், போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இருநாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பல்களை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.
கேள்வி : தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்தியிருக்கிறீர்கள். கடற்போர் அனுபவங்களைப் பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள். உலக வரலாற்றில் தமிழீழக் கடற்புலிகளின் கடற்சண்டை பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன. அந்த சண்டைகளைப் பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
பதில்: கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லுதலும், பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களைக் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லுதலுமாக இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நாம் ஓட்டிகளை இணைத்துக் கொண்டோம். பின் எமது போராளிகளை ஓட்டிகளாக வளர்த்தெடுத்தோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். அவ்வாறு எதிரியின் கலங்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்எல்ஆர் உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில், வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்எல்ஆர் ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர். குறிதவறவில்லை. ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.
இக்காலப்பகுதியில் சிறீலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன், கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் எனவும் அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஜர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற கடற் கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 05.04.1991அபீதா மீதான தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்று முழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையினால் தீவக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.
இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகி பின் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991-இல் தீவக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன்முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன் முதல் ஏகே-எல்எம்ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவுப் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அரசு திட்டமிட்டபடி ஒன்றும் நடக்கவில்லை. இடர்மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தைத் தொடர்ந்ததைப் பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்குப் பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப். கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப்.மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப்.மணியரசன். லெப்.சேகர், மேஜர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய – எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத் தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.
அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் / பற்றிக், மேஜர் நிலவன்/வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்து விசைப்படகுகளை அழித்துக் காவியமாகின்றனர். மேலும் கப்டன் சிவா, லெப்.பூபாலன், 2ம் லெப்.சுரேந்திரன் இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித்தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.
வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கவெண்ணி 29.08.1993 கப்டன் மணியரசன், மேஜர் புகழரசன், சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத்தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி இரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினர் உதவியுடன் கட்டளை கண்காணிப்புக் கப்பல், எடித்தாரா இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.
இதில் முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக்கடல், மாதகற் கடல், வடமராட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம், மேற்குப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வர்ணிக்கப்படும் சாகரவர்த்தனா என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ் கடல் ரோந்துக் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா (மற்றையது ஜெயசாகர. இந்தக் கப்பல்தான் 26.03.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து ரோந்தில் ஈடுபட்ட கலம்)
தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பதை எமக்கு எடித்தாரா, அபிதா என முன்னைய (1990, 1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவங்கள். எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணை கொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1996 காலப்பகுதி – 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்துவிட்டுத் திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த கலத்தைத் தம்மைத் தாக்கவந்தததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற, எம்மவர் அதன்படி ஒழுகினர். எவ்வளவோ முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செய்ய வேண்டாமெனக் கூறப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நடந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்த நிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பத்துப்போராளிகள் கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள்) பொருட்கள் ஆகியவற்றுடன் லெப். கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக்கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. முந்திய வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன், படகையும், போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகள் அழித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே, அவர்களுக்குப் பணிந்ததுபோல் போக்குக் காட்டிவிட்டு, படகையும் போராளிகளையும் பக்குவமாகக் கரைசேர்க்கிறான் அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிகாவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தபின், திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.soosai-3
மேலும் எம் போராட்டத்துக்கான வளம் சேர்த்தல் பணியின் போது சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப்படகுகளைப் பாதுகாத்த சமர்கள்!
எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுகத் தாக்குதல் – எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் – யாழ்ப்பாணத்தை விட்டுவந்து புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்.
எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வதற்கு – குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை – 1 எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறீலங்கா வான்படை, மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.
ஓயாத அலைகள் ஒன்று, பின் இரண்டு, மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓட ஒட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம்! 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ளமுடியாமைக்கான காரணம், வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமை எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது. 13 கி.மீ. கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோதஇ தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000 இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆனையிறவுப் படைத் தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.
இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளி இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப் போர்க்காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித்தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களிலும் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரைக் குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.
மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புலிகளின் விசேட துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.
கேள்வி : கடல்பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்து போய்க் காணப்படுகிறது. சிறீலங்கா கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்தியக் கடற்படைக்கு நிகரான சிறீலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
பதில்: எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலை குலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தார்ப்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப்படாவிட்டால் அவனது ரவை எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவறாத சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையில் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தும் திறன் எனப்பல இதில் அடங்குகின்றன.
இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள், அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது மட்டும் செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது. அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித்தாக்குதலின் மூலம் வோட்ட ஜெற் இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார்: வோட்ட ஜெற் அடித்தால் காணாது. டோறா மூழ்கடிக்க வேண்டும். 29.08.1993இல் சுப்ப டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி. வீரையாவை அடியுங்கள் பார்ப்பம் என மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன் மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.
கேள்வி : உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல யுத்த களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகளைப் பற்றிப் பேசமுடியுமா?
பதில்: வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது. எமது தமிழீழம் ஒரு புறம் சிறீலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்கவேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத்தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பற்றிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூர நோக்குடைய சிந்தனையை, செயற்பாட்டை மிகத்தெளிவாக உணரலாம். அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுது கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப் பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்குப் பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன், படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்குப் பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து, 1985ல் கப்பல் வாங்கி சர்வதேச தொடர்பை உருவாக்கினார். கெரில்லாப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இருந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத் திறனை – செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும்போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள் கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991இல் உருவாக்கி நின்றார்.
26-08-1992 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைத் தீவுக் கடலில் கட்டி நிற்கும் ஒரு வோட்ட ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது ‘ஏன்ராப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட, இழுத்து வரலாமே’ என்று அண்ணா கேட்டார். அதன்பின்தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள், மக்களுடன் நன்கு பழகி இருக்க வேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்கு உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.
1992 காலப்பகுதி, கடற்புலிகள் மகளிரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி லெப். கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தைத் தருகிறேன் என்று கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு, எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.
எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழி வகுத்தது.
1996ஆம் ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார்: படகிலே எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடு எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார், அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர். எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்குவழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப்பற்றிப் பார்ப்போம்.
1991 ஆம் ஆண்டு, ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப் பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டி வீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டு போய் இறக்க மட்டும்தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.
தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது, இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போதுத, அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, நான் எமது படகுகளை எரிக்க மாட்டேன், மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவு என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி கண்டிவீதியால் தான் வருவம் என உறுதியளித்து அதை நிறைவேற்றினர். தலைவர், போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.
இழப்புகளையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை. மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்ட மனமே அவருடையது.
ஒரு முறை, மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்வு டன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார்: ‘இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில் இருக்கிற கடற் படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள். நான் உடனே தாறன்’ என்று இழப்புக்குள் இருந்து எங்களைத் தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள் ஆட்கொண்டு விடாத மன உறுதியுடன் விளங்கியதைக் காண முடிந்தது.
ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந் தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு முறை தலைவர் ஆர்பிஜி அனுப்பியிருந்தார். அதனைப் புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில் வைத்து ராங் ஒன்றை அடிக்க, அதில் ராங் வெடிக்கவில்லை. அது பிழைத்துவிட்டது. எங்கோ போய்விட்டது. அப்போது எல்லோரும் முடிவெடுத்தனர். அந்த ஆயுதம் பயனளிக்காது என்று அப்படியே வைத்துவிட்டனர். தலைவர் சொல்லி அனுப்புகிறார்: ‘மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்’ என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட, அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அப்போது அண்ணை சொல்கிறார் ‘ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில் வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை’.
நான் வடமராட்சியில இருக்கும்போது எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்லுகிறார், ‘ஆமி சுடச்சுட வாறான்’ என்று. அப்போது தலைவர் ‘சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்’ என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மையிலேயே அதற்குச் சரியான காரணம், சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவர்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்கள் விடவில்லை என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்த பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தலைவர் இதைத் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தன.
தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையைச் செய்ய விட வைக்காது.வடமராச்சியில் ஓப்பிறேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய்த் தலைவரைச் சந்திக்கிறேன் அப்பொழுது தலைவர் சொல்கிறார் : ‘வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டா அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்’ என்ற தலைவரின் அந்தக் கட்டளை, பின்னாளில் பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்தது. 1998 காலப்பகுதி – எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது. நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளை மையத்திற்கு தளபதியை அனுப்பி, நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில், தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு, நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை, ஆண்களுக்கு நிகராகக் களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காட்டியமைக்கு இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.
வளர்ந்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வட மராட்சிக்குப் பொறுப்பாக இருந்தபோது தலைவர் என்னை அழைத்து, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமை இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக, போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.
நேர்கண்டவர்கள்: எரிமலை (16.01.2006)