Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / எருக்கலம்பிட்டியில் வீரவரலாறாகிய கடற்புலி மேஜர் சீர்மாறன்.

எருக்கலம்பிட்டியில் வீரவரலாறாகிய கடற்புலி மேஜர் சீர்மாறன்.

11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” என்றுடி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார் அந்தப்போராளி.

இந்தத்தகவல் கிடைத்ததும் நான் உடனேயே குளித்து வெளிக்கிட்டு கிளிநொச்சி புறப்படுவதற்காக ஆயத்தமானேன். காலை 6.30 மணிக்கு புதுக்குடியிருப்பு- பரந்தன் வழித்தடத்தில் முதலாவது சேவையில் ஈடுபடும் தமிழீழ போக்குவரவுக்கழகத்திற்குச்சொந்தமான பேரூந்தில் ஏறி சீர்மாறனின் நினைவுகள் இதயத்தை நெருட பரந்தனை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

2001-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துனக்கொண்ட சீர்மாறன் அதேயாண்டு பிற்பகுதிகளில் செம்மலையில் நிறுவப்பட்டிருந்த இரும்பொறை- 01 அடிப்படைப்பயிற்சிப்பாசறையில் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டார்.

2002-ம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த அணியில் குறிப்பிட்ட போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு இவர்களுக்கு அணிநடைப்பயிற்சியும் சிறப்பாக வழங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு யூலைமாதம் 16-ம்நாள் நடைபெற்ற கடற்புலிகளின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழாவில் பிரதமவிருந்தினராக வருகைதந்திருந்த தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களை வரவேற்கும்முகமாக நிகழ்த்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையின்போதும் சீர்மாறன் அந்த அணியில் பங்கெடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து அதேயாண்டு மாவீரர் எழுச்சிநாட்களான நவம்பர் 26-ம்திகதி வடமராட்சிக்கிழக்கிலும் 27-ம்திகதி முல்லைத்தீவிலும் கடற்புலிகளின் பிரமாண்டமான அணிவகுப்பு மரியாதைகளுடன் மாவீரர்நாள் நடைபெற்றபோது இந்த அணியில் சீர்மாறன் முதன்மையான வகிபாகம் வகித்திருந்தார்.

2003-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகளின் முதன்மைப்படையணியான சாள்ஸ் படையணியில் (சாலைத்தளத்தில); தனது படையச்செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த சீர்மாறன் கடல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

2004-ம்ஆண்டுகாலப்பகுதியில் எமது இயக்கச்செயற்பாடுகளுக்காக கடற்புலிகளில் குறிப்பிட்டதொகைப்போராளிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு சென்றபொழுது சீர்மாறனும் அங்கு சென்று கட்டளைத்தளபதி லெப் கேணல் சிறீராம் அவர்களது ஆளுகையின்கீழ் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் செயலாற்றினார்.

 

நிலையுடன் பெயர்: மேஜர் சீர்மாறன்.
சொந்தப்பெயர்: வேலுச்சாமி சுரேஸ்.
சொந்த முவகரி: பாரதிபுரம்- விசுவமடு. (முல்லைத்தீவு)
வீரச்சாவுச்சம்பவம்: 11-06-2008 அன்று மன்னார் எருக்கலம்பிட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா கடற்படைமுகாம் தாக்குதலின்போது வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

2005 -ம் ஆண்டுகாலப்பகுதியில் இயக்கத்தின் அனைத்துப்படையணிகள் மற்றும் துறைகளிலிருந்து போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைச்செயலகத்தின் நெறிப்படுத்தலில் உயர் அலைவரிசை (எச் எவ் செற்) கற்கைநெறி தொடங்கப்பட்டபோது கிழக்குமாகாணத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த சீர்மாறன் மீண்டும் வன்னிக்கு அழைக்கப்பட்டு இன்னும் மூன்று போராளிகள் இணைக்கப்பட்டு நான்கு போராளிகள் கடற்புலிகள் சார்பாக குறித்த உயர் அலைவரிசைக்கல்வி கற்பதற்காக சென்றிருந்தனர். சுமார் ஐந்து மாதங்களாக நடந்த இந்த கற்கைநெறி 2006-ம்ஆண்டு பெப்ரவரி முற்பகுதியில் நிறைவடைந்தது. இந்த கற்கைநெறி நிறைவுநாளில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு உயர் அலைவரிசை கல்விகற்றுத்தேர்நச்சிபெற்ற அனைத்துப்போராளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக்கௌரவித்தார். இந்நிகழ்வில் சீர்மாறனும் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் பாராட்டுப்பெற்று அவரது கையால் சான்றிதழும் பெற்றுக்கொண்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உயர் அலைவரிசை கற்கைநெறியை நிறைவுசெய்துவந்த சீர்மாறன் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா அவர்களது உயர் அலைவரிசைப்பகுதி (எச் எவ் செற்) தொடர்பாளராக அமர்த்தப்பட்டார். 2006-ம்ஆண்டு நவம்பர்மாதம் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கான உயர் அலைவரிசைப்பகுதி எனது பொறுப்பில் சூசையண்ணாவால் தரப்பட்டபோது சீர்மாறன் எனது பொறுப்பில் எச் எவ் செற் தொடர்பாளராக கடமையாற்றினார். எச் எவ் செற் தொடர்பாளராக செயற்பட்டது மட்டுமல்லாது நான் சிறப்புத்தளபதி சூசையண்ணாவின் பிரத்தியேக நிர்வாகப்பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தவேளையில் எனக்கு பலவழிகளிலும் உதவியாகவிருந்தார். குறிப்பாக நான் கடமைநிமிர்த்தமாக தூர இடங்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயணம்செய்யவேண்டியநிலையேற்பட்டால் எனக்கு உதவியாளராகவும் எனது உந்துருளி ஓட்டுநராகவும் சீர்மாறன்தான் செயற்பட்டிருந்தார். அத்துடன் நான் ஏதாவது Nலைகள் கொடுத்தாலும் அதனை நிறைவாகச்செய்துமுடிக்கின்ற பக்குவமும் அவருக்கு உண்டு.

2007-ம்ஆண்டு ஒக்ரோபர்மாதம் கடற்புலிகளுக்கான ஈரூடகத்தாக்குதலணி ஒன்றை உருவாக்குவதற்காக கடற்புலிகளின் பல்வேறு அணிகளிலிருந்து போராளிகள் தேர்வுசெய்யப்பட்டபோது சீர்மாறனும் அதில் உள்வாங்கப்பட்டு ஒரு அணியாக உருவாக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் விசேட பயிற்சிக்கல்லூரியான பசுமை எனப்படும் முகாமிற்கு சீர்மாறன் உள்ளிட்ட குறித்த போராளிகளைக்கொண்ட அணி விசேட பயற்சிகள் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்களாக பசுமைமுகாமில் விசேடபயிற்சிகளால் புடம்போடப்பட்ட அவ்வணி பசுமையில் முதற்கட்டப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டு 2008-ம்ஆண்டு பெப்ரவரிமாதத்தில் இரணைப்பாலையிலுள்ள உதயம் முகாமிற்கு வந்திருந்தார்கள். அவ்வேளையில் உதயம்முகாமில் நான் சீர்மாறனை சந்தித்ததோடு மறுநாள் சீர்மாறன் எனது முகாமிற்கும் வருகைதந்து நீண்டநேரமாக நட்புரீதியாக அளவளாவியிருந்தோம். ஓரிருநாட்கள் ஓய்வின்பின்னர் அந்த அணி கடற்பயிற்சிக்காக வெற்றிலைக்கேணிப்பகுதிக்கு சென்றிருந்தது. கடற்பயிற்சிகளைத்தொடர்ந்து அவ்வணி முழங்காவிலுக்குச்சென்று தொடரான விசேட பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. வெற்றிலைக்கேணியில் கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் ஒருதடவை புதுக்குடியிருப்புக்கு வந்தபொழுதும் எனது முகாமிற்கு வந்து என்னை சந்தித்துக்கொண்டார்.

2008-ம்ஆண்டு மேமாதத்தின்நடுப்பகுதி.
குறித்த இந்த ஈரூடகத்தாக்குதலணியின் முதலாவது கன்னித்தாக்குதலான சிறுத்தீவு கடற்படைமுகாம் தாக்குதலுக்கான ஒத்திகைப்பயிற்சிகள் சாலைப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதேகாலப்பகுதியில் அதாவது 15-05-2008 அன்று புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் அண்மைக்காலத்தில் வீரவரலாறுகளைப்படைத்த கடற்கரும்புலிகள் நினைவாக வீரவணக்கநிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதாவது 22-03-2008 அன்று நாயாற்றுக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறாப்படகை மூழ்கடித்து வீரகாவியமாகிய கடற்கரும்புலிகளான லெப் கேணல் அன்புமாறன் மேஜர் நிறஞ்சினி மேஜர் கனிநிலா மற்றும் 10-052008 அன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படைக்குச்சொந்தமான ஏ-520 என்ற துருப்புக்காவிக்கப்பலை தாக்கியழித்து வீரவரலாற்றை எழுதிய கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன் மேஜர் அற்புதன் ஆகியோர்கள் நினைவாக கடற்புலிகளால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட வீரவணக்கநிகழ்வாகவே அது அமைந்திருந்தது. இந்நிகழ்விற்கு கடற்புலிகளின் சகல அணிகள் மற்றும் துறைகளிலிருந்தும் போராளிகள் வருகைதந்திருந்தனர். சாலைப்பகுதியில் ஒத்திகைப்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த ஈரூடகத்தாக்குதலணிப்போராளிகளும் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்தனர். இந்நிகழ்விலும் சீர்மாறனை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இதன்பிற்பாடு குறித்த அணி பூநகரிப்பகுதிக்கு நகர்த்தப்பட்டு சிறுத்தீவுக்கடற்படைமுகாம் தாக்கியழிப்பதற்கான இறுதித்தயார்ப்படுத்தல்களில் ஈடுபடலானார்கள். இத்தாக்குதற்திட்டத்தின்படி 29-05-2008 அன்று இரவுப்பொழுதில் தாதக்குதலணிகள் புளுஸ்ரார் படகுகள்மூலமாக பூநகரி கடல்வழியாகச்சென்று சிறுத்தீவில் தரையிறங்கி கடற்படைமுகாம்மீது அதிரடியான தாக்குதலைத்தொடுத்தனர். இத்தாக்குதலில் பதின்மூன்று சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டதோடு அந்த முகாமிலிருந்து அனைத்து ஆயுதங்கள் மற்றும் படையப்பொருட்களும் கடற்புலிகளால் பைகயகப்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் மேஜர் சீனு (போர்மறவன்) எனும் போராளி வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். குறிப்பிட்டநேரம் கடற்படைமுகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடற்புலிகளின் தாக்குதலணிகள் முகாமை முற்றாக அழித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். வெற்றியின் அடையாளங்களான கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் கொல்லப்பட்ட பதின்மூன்று கடற்படையினரது சடலங்களும் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை இல்லாததால் நல்ல நிலையிலிருந்த மூன்று கடற்படையினரது சடலங்களையும் வெற்றிவாகைசூடிய மேஜர் சீனுவின் வித்துடலோடு தாக்குதளணிப்போராளிகளையும் சுமந்துகொண்டு புளுஸ்ரார் படகுகள் பாதுகாப்பாக தளம் திரும்பின.
கைப்பற்றப்பட்ட மூன்று கடற்படையினரின் சடலங்களும் மறுநாள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் ஊடாக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தீவுத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகள் தாக்குதலை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்கள் மற்றும் தாக்குதல்ப்பயிற்சி ஆசிரியர்கள் என அனைவரையும் பாராட்டி பரிசில்கள் வழங்கும்முகமாக சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்களால் ஒரு கௌரவிப்பு நிகழ்வு 03-06-2008 அன்று பூநகரி- பள்ளிக்குடா பாடசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அன்றையதினம் மாலைப்பொழுதில் குறித்த பாடசாலையில் ஈரூடகத்தாக்குதலணிப்போராளிகள் மற்றும் குறித்த தாக்குதல்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். குறித்த கௌரவிப்புநிகழவிற்கு கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணா வருகைதந்ததைத்தொடர்ந்து போராளிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் பாடசாலைக்கட்டடம் ஒன்றில் ஒன்றுகூட்டப்பட்டார்கள். சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் நடந்துமுடிந்த சிறுத்தீவு வெற்றிகரத்தாக்குதல் தொடர்பாகவும் கடற்புலிகளின் ஈரூடகத்தாக்குதலணியின் உருவாக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் தொடர்ந்துவரும்நாட்களில் ஈரூடகத்தாக்குதலணியின் காத்திரமான வகிபாகம் தொடர்பாகவும் விரிவான விளக்கவுரைளை போராளிகளுக்கு வழங்கினார். இந்த கௌரவிப்பு நிகழ்வில்வைத்துத்தான் சூசையண்ணாவால் குறித்த ஈரூடகத்தாக்குதலணிக்கு “லெப் கேணல் சேரன் ஈரூடகத்தாக்குதலணி” என்று பெயர் சூட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போராளிகள் பொறுப்பாளர்கள் பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்புத்தளபதி சூசையண்ணா பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். இதன்போது சீர்மாறனும் சூசையண்ணாவிடமிருந்து பரிசில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்புநிகழ்வு நிறைவடைய எல்லோரும் ஒனடறாகச்சேர்ந்திருந்து கடற்புலிகளின் வழங்கற்பகுதிப்பொறுப்பாளர் கொண்டுவந்திருந்த கோழிப்புக்கையை ருசித்துவிட்டு சீர்மாறனுடனும் மற்றய போராளிகளுடனும் நீண்டநேரம் உரையாடியிருந்தேன். அப்போதுதான் சீர்மாறன் என்னிடம் “இன்னுமொரு நடவடிக்கை கெதியில நடக்கப்போகுதுபோலயிருக்குது. அந்த நடவடிக்கை முடிய நாங்கள் தேவிபுரத்துக்குத்தான் வரப்போறம். அவ்வாறு வந்தபிறகு நான் உங்களது முகாமிற்கு வந்து உங்களை சந்திக்கின்றேன்.” என்று கூறியிருந்தார். அதுதான் சீர்மாறனை நான் சந்திக்கும் கடைசிச்சந்திப்பாகவிருக்கும் என்பதை அப்போதைக்கு நான் எள்ளளவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை.

இப்போது நினைவுகள் திரும்ப “அடுத்த நடவடிக்கை முடிய ரீம் தேவிபுரத்துக்கு நகர்த்தப்படும். அதன்பிறகு உங்களது முகாமிற்கு வந்து உங்களை சந்திக்கின்றேன்.” என்றுகூறிய சீர்மாறனின் வித்துடலை பொறுப்பெடுப்பதற்காகவே பேரூந்தில் தியாகசீலம் நோக்கிப்போய்க்கொண்டிருக்கின்றேன். சீர்மாறன் கூறியபடி சிறுத்தீவுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களுக்குள்ளாகவே எருக்கலம்பிட்டி கடற்படைமுகாம்மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத்தாக்குதல் நடவடிக்கையைத்தொடர்ந்து சேரன் ஈரூடகத்தாக்குதலணி தேவிபுரத்திற்கு நகர்த்தப்பட்டது. ஆனால் சீர்மாறன் வரவில்லை. மேஜர் சீர்மாறனாக அவருடன் மேஜர் தணிகைமணி. கப்டன் சுடர்க்குன்றன். லெப்ரினன்ட் செந்தமிழ்வீரன். லெப்ரினன்ட் தமிழ்நிலவன் ஆகிய போராளிகளும் தளம் திரும்பவில்லை. அவர்கள் வெற்றிக்கு வித்திட்டு வித்துடல்களாக தியாகசீலம் வந்திருந்தார்கள். இந்த எருக்கலம்பிட்டி கடற்படைமுகாம்மீதான தாக்குதலின்போது பலவகையான கனரக ஆயுதங்கள் மற்றும் நவீனரக கடற்கண்காணிப்பு சாதனம் (ராடர்கருவி) உட்பட பலவகையான படையப்பொருட்கள் கடற்புலிகளால் கையகப்படுத்தப்பட்டதோடு இலங்கை கடற்படையினர் பத்துப்பேர் கொல்லப்பட்டனர்.

நான் பரந்தனுக்குச்சென்று கடற்புலிகளின் மாவீரர்பணிமனைப்பொறுப்பாளரையும் அழைத்துக்கொண்டு அவரது உந்துருளியில் கிளிநொச்சியில் அமைந்திருந்த தியாகசீலத்திற்கு (போராளிகளது வித்துடல்கள் சுத்தம் செய்யப்படும் இடம்) சென்றோம். அங்கு சென்றதும் அவர்கள் “விபரங்கள் தங்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஆனாலும் இந்தச்சம்பவம மன்னாரில் இடம்பெற்றதால் ஜெயபுரத்தில் அமைந்துள்ள தியாகசீலத்திற்கு வித்துடல்கள் கொண்டுசெல்லப்பட்டு அங்கு சுத்தம்செய்யப்பட்டபின்னர்தான் இங்கு கொண்டுவரப்படும். வித்துடல்கள் வந்ததும் உங்களுக்கு அறிவிக்கின்றோம்.” என்று கூறினார்கள். நாங்களிருவரும்மீண்டும் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் வந்து சில வேலைகளை முடித்துவிட்டு இடையில் இரண்டு தடவைகள் தியாகசீலத்திற்கும் சென்று பார்;த்துவிட்டு திரும்பிவந்து மூன்றாவது தடவையாக மதியம் 1.00 மணியளவில் தியாகசீலம் சென்றபோது மேஜர் சீர்மாறன் உள்ளிட்ட நான்கு போராளிகளது வித்துடல்கள் வந்திருந்தது. மேஜர் தணிகைமணி மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்தவராதலால் அவரது வித்துடல் ஜெயபுரத்து தியாகசீலத்திலிருந்து மன்னார் கோட்ட அரசியல்த்துறைச்செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

நால்வரது வித்துடல்களையும் வாகனத்தில் ஏற்றிவிட்டு நானும் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப்பொறுப்பாளருமாக உந்துருளியில் விசுவமடுக்கோட்ட அரசியல்த்துறைச்செயலகத்தை சென்றடைந்தோம். நாங்கள் அங்கு சென்றடைவதற்கு சற்றுமுன்பாக வித்துடல்கள் ஏற்றிச்சென்ற வாகனம் அங்கு சென்றடைந்துவிட்டது. சீர்மாறனது வீரச்சாவுச்செய்தி அவரது பெற்றோருக்கு ஏற்கனவே உரியமுறையில் அரசியல்த்துறையின் வட்டப்பொறுப்பாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் சீர்மாறனது வித்துடல் விசுவமடுக்கோட்ட அரவசியல்த்துறையினரால் அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது பொழுது சாய்ந்து இருள்சூழ்ந்துகொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நானும் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப்பொறுப்பாளரும் சீர்மாறனின் வீட்டிற்குச்சென்று வட்டப்பொறுப்பாளருடன் இணைந்து ஏனையவிடயங்களை கவனித்துவிட்டு எனது முகாமைச்சென்றடைந்தேன்.

மறுநாள் 12-06-2008 அன்று காலைவேளையிலேய நான் சீர்மாறனது வீட்டிற்குச்சென்றிருந்தேன். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் போராளிகளும் சீர்மாறனது வித்துடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 3.00 மணியளவில் சீர்மாறனது வித்துடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக விசுவமடு மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டு வீரவணக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடற்புலிகள் சார்பாக வீரவணக்க உரையை நான் நிகழ்த்தினேன். அதனைத்தொடர்ந்து சீர்மாறனது வித்துடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு முழுப்படைய மதிப்புக்களுடன் தூயவிதைகுழியில் விதைக்கப்பட்டது. அந்த நிகழ்வுகள் நிறைவடைந்ததும் நானும் எனது போராளிநண்பர்களும் மீண்டும் சீர்மாறனின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோர் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சீர்மாறனின் இழப்பு இதயத்தை அழுத்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு எனது முகாம்நோக்கி பயணமானேன்.

“தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்.”

நினைவுப்பகிர்வு:
கொற்றவன்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply