Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / உழைப்பின் சிகரம் லெப் கேணல் தமிழ்நேசன் (வின்சன்)

உழைப்பின் சிகரம் லெப் கேணல் தமிழ்நேசன் (வின்சன்)

உங்களுக்கு என்ர அப்பாவை தெரியுமாம், உண்மையா அன்ரி?, என்றாள் பவித்திரா
விழிகளை அகலத்திறந்தபடி, பதிலுக்கு காத்திராமல்.

நான் அடம்பன் பக்கம் போனால்” “வின்சன் டொக்டரின் மகள்” என்று எல்லாரும் என்னை சொல்லுவார்கள். அப்பா அடம்பன் வைத்தியசாலை (Mannar Adampan Government hospital ) இல் வேலை செய்யும் போது, ஒரு அம்மம்மாவிற்கு புடையன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவவாம் . மருத்துவ மனைக்கு கொண்டு வர வாகனம் இல்லை என்று சொல்ல நள்ளிரவிலே வாகனத்திற்காக காத்திருக்காது வீட்டிற்கே வந்து சிகிச்சை தொடங்கி தன் உயிரை காப்பாற்றியவராம் என்று அவ சொல்லுவா, என்றாள் அவள் மேலும் .

பவித்திரா, லெப் கேணல் தமிழ்நேனின்(வின்சன்) மூத்த மகள். அவளுக்கு அப்போது பத்தே வயது தான் ஆகியிருந்தது. மாவீரன் ஆகிய தன் தந்தை பற்றி அறியப்படாத செய்திகளை அறியத் துடித்துக் கொண்டிருந்தாள்.

“மகளே உன் தந்தை அந்த அம்மம்மாவின் உயிரை மட்டுமன்றி, ஈழத்தின் மன்னாரில் இருந்து அம்பாறைவரை பயணித்து, இது போன்ற பலபேரின் உயிர்காத்த, ஒரு தமிழீழமருத்துவராயிருந்தவர்.”
தெரியாத மனிதர்கள்,
புதிய இடம்,
சாப்பாடும் இல்லாமல் விட்டிற்று போனவர்,
மாலை ஆகியும் வரவேயில்லை. என்னைப்பற்றியோ, குழந்தைகள் நிலையோ நினைக்காமல்தானே நின்றுள்ளார் என நான் கோபப்பட்டு கதைக்க, “செல்லடியில் பெடியங்களிற்கு காயம். அதில ஒருவனுக்கு வயித்துகாயம். அது தானம்மா செய்து முடித்துவர நேரமாகிவிட்டது”, என்றார் அவர்.

கடமைகளுக்கு, அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அப்படித்தான் என, தன் கணவனின் சேவைகளை, கசியும் விழிகளோடும்,
கனத்த இதயத்தோடும், அவன் மனைவி தனா நினைவு கூர்ந்தார். எங்களைப்பற்றி யோசிக்காத மனிதனாக வாழ்ந்தார். அவரின் துரதிஷ்டம் வீட்டில் நின்றபோது அவர் உயிர் பிரிந்தது”என்று கூறும்போது,…
அவளின்தனிமரமான வலியின்வெளிபாட்டை புரிந்து கொள்ளமுடிந்தது.
இடம்பெயர்ந்து மக்கள் செறிந்து வாழ்ந்த தருமபுரம், விசுவமடு உடையார்கட்டிற்கும் எறிகணைகள் அடுக்கடுக்காய் விழுந்தன. சுதந்திரபுரத்தை பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இதனால் சுதந்திரபுரத்தில் பெருமளவான மக்கள் நிறைந்தனர். மக்கள் வாழ முடியாத, பாம்புகள் வாழும் பற்றைகள் எல்லாம் தறப்பாள் (tents) களைப்போட்டு மக்கள் குடிபுகுந்தனர். மாசிப்பனிக்குளிருக்குள்ளும், வெய்யிலிலும் மக்கள் வாடி வதங்கினார்கள்.
பாதுகாப்பு வலயம் என அறிவித்து விட்டு அந்த இடத்திலே மக்களை கொல்வது இலங்கை அரசின் யுத்தி என்பதை தமிழ் மக்கள் பல அனுபவப்பாடமாக அறிந்திருந்தாலும் வேறு வழியின்றி அந்த பகுதியை நோக்கி நகர்ந்தனர்.
அப்படித்தான் உடையார்கட்டிலிருந்து மக்களோடு சேர்ந்து,
நிறைமாதக் கர்ப்பிணியான தமிழ்நேசன் அண்ணாவின் மனைவி “தனா” வும், மூன்று குழந்தைகளுடன் சுதந்திரபுரம் வந்து சேர்ந்தாள். பற்றைகளாக கிடந்த இடங்களை ஓரளவு சுத்தம் செய்து எஞ்சியிருந்த தறப்பாளை போடும் முயற்சியும் அன்று தோற்றுப்போக, வந்த களைப்பில் நிலத்தில் தறப்பாளை விரித்து விட்டு இரவு தூங்கிவிட்டார்கள் .
மாலையில் தொடங்கிய எறிகணைகள் இடைவிடாது பொழிந்து
கொண்டேயிருந்தன. பாதுகாப்பிற்கு கூட ஒரு பதுங்குழியை வெட்டமுடியவில்லை.
தெரியாத இடம்,
முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள்,
உணவில்லை,
பசி, தாகம், சோர்வு,
நடைபெறும் நிகழ்வுகள் குறித்த ஏக்கம்,
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு,
எவருக்கும் நிச்சயமற்ற எதிர்காலம்,
இவைகள் குறித்த அங்கலாய்ப்பு என, எல்லா உணர்வுகளாலும் கிழித்தெறியப்பட்டு சின்னாபின்னமாகி தவித்தது அவள் மனது மட்டுமல்ல அங்குள்ள அனைத்து மக்களின் மனங்களும்தான்.
நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவிக்கு எந்தவொரு உதவியையும் செய்ய முடியவில்லை என்ற வலி தமிழ்நேசனின் மனதையும் வருத்தாமலில்லை.
இருந்தாலும், காயமடையும் உயிர்களை காப்பாற்றும் கடமை அவன் கண்முன்னே கிடந்ததால், தன் வலி மறந்து தாயகவலியினை தாங்கி, தன் குடும்பத்தை சென்று பார்க்க முடியாமல் மருத்துவ மனையில் நிறைந்திருந்த காயங்களை செய்து முடிப்பதில் குறியாக இருக்கின்றான்.
அடுத்த சில நாளில் ஒய்வுக்காக தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளையும் தன் வாழ்க்கை துணையையும் பார்த்து, பதுங்குகுழி வெட்டிக் கொடுத்து விட்டு வருவதாக சொல்லிச் சென்றவன், வராமலே போவான் என்று யாரும் நினைக்கவில்லை.
அன்று பாதையில் நகரமுடியாத வாகன நெரிசல். அருகில் உள்ள 5km அளவு தூரத்தை பலமணி நேரம் நகர்ந்து குடும்பம் இருந்த இடத்தை அடைகின்றான். எல்லாக் குழந்தைகளைப் போலவே அவர்களும் தந்தையின் வரவில் தமக்கு பாதுகாப்பு கிடைத்ததாய் நினைத்து, காதைப்பிளக்கும் எறிகணை சத்தங்களை மறந்து மகிழ்ந்தார்கள். மாறி மாறி அன்பு மழை பொழிந்தார்கள்.
மீண்டும் கடமைக்கு செல்ல வேண்டும். இப்போது சுதந்திரபுரமும் எறிகணைகளால் சிதறத்தொடங்கிவிட்டது. குடும்பத்தினரை தேவிபுரத்திற்கு இடமாற்ற சில முயற்சிகள் எடுத்தும் உடனடியாக அதுவும் சரிவரவில்லை .
தமிழ்நேசன் பக்கத்தில் இருந்தவர்களுடன் கதைத்து இரண்டு மூன்று குடும்பங்கள் ஓன்றாய் இருக்க கூடியவாறு பதுங்குகுழி ஒன்றை அமைத்துக் கொடுத்து விட்டுப் போவதற்காக அந்த காணியில் இடம்பெயர்ந்து வந்திருந்த மற்றவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, மூன்றாவது மகன் அருகில் சென்றான். அப்பா என்றவனை தூக்கிவைத்துக் கொண்டிருப்பதைப்பார்த்த மனைவி தனா விரைவாக சமைத்து, அவர் போக முதல் சாப்பாடு கொடுத்து விடவேண்டும் என்று சமையல் வேலையில் இருந்தாள்.
சில நிமிடத்தில் ஆளையாள் தெரியாமல் புகை மண்டலமாகியது அவ்விடம். எறிகணை வெடிப்பு காதை செவிடாக்கியதைப்போல் இருந்தது.
ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்ட திசை நோக்கி தனாவின் கால்கள் விரைந்தன.அப்போது பிள்ளைக்கு காயம் என்று தெரிந்தது
அயலில் உள்ள இன்னும் சில குழந்தைகளும் காயமடைந்திருந்தனர் .
தமிழ்நேசனின் பொய்க்கால் குழந்தையின் அருகில் கிடந்தது.
என்ன செய்தி என்று அறிய அவளது இதயத்தின் இறுதி நாளமே அமுக்கப்பட்டதாய் அந்தரித்து நின்றாள்.
03.02.2009 மாலை 3.30 மணியளவில் தமிழ்நேசனும் தான் நேசித்த மண்ணில் இறுதிமூச்சு அடங்கிப்போய் அமைதியானன்.
அந்த இடத்தில் விழ்ந்த ஏறிகணையில், தமிழீழ மருத்துவர் தமிழ்நேசனும், நீதி நிர்வாகப் போராளி லெப் கேணல் மயூரனும், ஐந்து பொது மக்களும் படுகொலைசெய்யபட்டார்கள்.
அடுத்த சில மணியில் லெப் கேணல் தமிழ்நேசனின் மனைவிக்கு பிரசவலி எடுக்க அவள் சுதந்திரபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
05.02.2009 அன்று பெண் குழந்தை பிறந்தது. தந்தை குழந்தையை பார்க்க வரவேண்டிய நேரத்தில் எல்லாமே கணப்பொழுதில் மாறிப்போனது. எந்த வாகனமும் நகர முடியாத நிலையில் மனத்தைரியத்தை வரவளைத்துக் கொண்டு குழந்தையுடன் தன் அன்பு கணவனின் வித்துடலை பார்பதற்காக சனநெரிசல்களுக்குள்ளால் முட்டி மோதி, தனது போராளி தம்பியின் உதவியுடன் கால் நடையாகவே தேவிபுரத்திற்கு சென்றாள் தனா.
லெப் கேணல் தமிழ்நேசனின் வித்துடல் இறுதி இராணுவமரியாதையுடன் விதைக்கப்பட அங்கு ஆயத்தமாகியது.
பிறந்து ஐந்து மணித்தியாலங்களாகியிருந்த பிஞ்சு குழந்தையுடன்,
குழந்தையை பிரசவித்து ஐந்து மணிநேரமே ஆகியிருந்த நிலையில் கால்நடையாகவே வந்து, மனைவி தனா தன் கணவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினாள்.
ஈழ மண்ணின் விடியலுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வரிசையில், லெப் கேணல் தமிழ்நேசனும் இணைந்து கொண்டான் . அங்கிருந்த இதயங்களை இந்த நிகழ்வு நொருக்கிப்போட்டது.
மாந்தை, மன்னாரில் சீமான்பிள்ளை புஸ்பலீலா தம்பதிகள், வரமிருந்து பெற்ற ஒரே மகனாய் 15.02 1975 அன்று கிறிஸ்துராஜன் இப் பூமியில் அவதரித்தான். மூன்று அக்காக்களின் ஒரே தம்பி என்பதாலும், மூன்றாவது அக்கா இவனை விட பத்து வயது மூத்தவள் என்பதாலும், வீட்டின் கஸ்ரம் தெரியாது இவனை குட்டி இளவரசனாக வளர்த்தனர்.
அக்காக்களின் பாசமழையில் பூத்துக் குலுங்கியது இப் பூ. ஆரம்பக்கல்வியை நாவற்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பயின்றான் .
இயல்பினிலே இரக்க குணமும், மற்றவர்களிற்கு உதவும் எண்ணமும், தன்னம்பிக்கையும், பொது சேவை செய்யும் பழக்கமும் தன்னகத்தே கொண்டிருந்தான். கத்தோலிக்க சமையத்தை சேர்ந்தவனாக இருந்ததால் அக் கோயில் தொண்டுகளிலும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தான்.
தான் ஒர் மதகுருவாக வரவேண்டும் என்று விரும்பினான். தாய் தந்தையரும் அதற்கு சம்மதிக்கவே அந்த நாளிற்காய் காத்திருந்து கல்வியைத்தொடர்ந்தான்.
அப்போது,
இந்திய வல்லாதிக்கம் எங்கள் தாய்நிலத்தை ஆக்கிரமித்து நின்றகாலம்.
“பூமாலை” என்று வந்து
எங்கள் வான்பரப்பில் உணவுப் பொட்டலத்தைப் போட்ட இந்தியா, தான் போட்ட உணவு எங்களுக்கு சமிபாடடைய முன்னரே,
தன் படை கொண்டு எங்களை ஆக்கிரமிக்க வந்தது.
அமைதிப்படை என்று இனிப்பான பெயர்சூடி வந்த இந்திய வல்லாதிக்கம்,
சின்னஞ்சிறிய எங்கள் தாய்நிலத்தை,
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட
தன் படையை இறக்கி,
எம்மை அடிமைப்படுத்த முயன்றது.
விடுதலைக்கு எனப்புறப்பட்டு,
அதை மறந்து,
திசை மாறிப்பயணித்த பல தமிழ்க்குழுக்கள், ஆக்கிரமிப்பாளனோடு சேர்ந்து கொள்ள,
எங்கள் தாய்நிலம் அவர்கள் அனைவராலும் குதறிக்கிளிக்கப்பட்டுக்
கொண்டிருந்தது.
எத்தகைய பலத்துக்கு முன்னாலும்,
தாய்மண்ணின் தன்மானத்தை
சிறிதேனும் விட்டுக்கொடுக்காத கொள்கைப்பற்றுறுதி கொண்ட,
புலிகளின் வீரம், தியாகம்,
அர்ப்பணிப்புடன்,
இராஜதந்திரமும் சேர்ந்து, இந்தியப்படையை வெளியேற நிர்ப்பந்தித்தது.
ஈற்றில்,
வியட்நாமிலிருந்து அவமானத்துடன் வெளியேறிய
அமெரிக்கப்படை போல,
இந்தியப்படை தமிழீழ மண்ணிலிருந்து தோல்வியோடு வெளியேறியது.
இந்தியப்படையினர் எம் மண்ணை ஆக்கிரமித்து நின்ற இக்காலப்பகுதியானது
ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும்,
துயர்மிகு அனுபவங்களைக் கடந்துவந்த நாட்களாக இருந்தன.
அதனால்தான்,
அந்தப் பெரும்படையின் எண்ணிக்கை குறித்தோ,
அவர்களின் பலம் குறித்தோ,
எந்த அச்சமுமின்றி,
தாயக இளம் சந்ததி,
நூற்றுக்கணக்கிலன்றி ஆயிரக்கணக்கில்,
தம்மை புலிகளோடு இணைத்தனர்.
தன்னைச்சுற்றியுள்ள நிலமைகளை,
தாய்நிலத்தின் தினசரி
நிகழ்வுகளை அவதானித்த கிறிஸ்துறாஜன்,
தானும் புலிகள் அமைப்பில் இணைந்து கொள்ள முடிவு செய்கிறான்.
மதகுருவாகி ,
இறை தொண்டு செய்வதிலும் பார்க்க,
தாய் நிலம் மீட்க புலியாவதே இன்றைய உடனடி தேவை என அவன் உணர்ந்திருக்கலாம்.
இதனால் ,இந்திய வல்லாதிக்கப்படைகள்
எம் மண்ணைவிட்டு படிப்படியாக வெளியேறிக்கொண்டிருந்த காலப்பகுதியில்,
1990 மாசி முதல் வாரத்தில்,
தாயகம் மீட்கும் விடுதலை உணர்வோடு
தன்னை புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்கிறான்.
மன்னார், பரப்புக்கடந்தானை அண்டிய அடர்ந்த காடுகளுக்குள்,
சேரா ப்ராவோ” (Seirra Bravo) என்ற குறியீட்டுப்பெயருடன்,
“கப்டன் சபேசன்” என்ற மாவீரரின் பெயர்தாங்கிய,
சபேசன் பயிற்சிப்பாசறையில்,
மன்னாரின் 13வது அணியில்,
அடிப்படைப்பயிற்சியை பெற்று
“வின்சன்” என்ற பெயருடன்
உறுதிமிக்க போராளியாக வெளிவந்தான்.
அவனோடு பயிற்சி பெற்றவர்கள்,
பல்வேறு பிரிவுகளுக்கு பிரிக்கப்பட்ட போது,
வின்சன்
மன்னார் மாவட்ட அரசியல் பணிக்காக தளபதியால் தெரிவு செய்யப்பட்டு, அன்றைய மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சுரேஷ் அண்ணா அவர்களிடம் அனுப்பப் படுகிறான்.
மன்னார் மாவட்ட அரசியல் வேலைகளில், அன்றைய நாளில் முப்பதுக்கு மேற்பட்ட போராளிகள்,
அரசியல் பொறுப்பாளர் சுரேஸ் அண்ணாவின் பொறுப்பில் செயற்பட்டார்கள்.
அரசியல்பணி செய்வது,
அன்றைய நாட்களில் மிகக் கடினமானதாகவும், சவாலானதாகவும் இருந்தன.
போராட்டத்தின் நியாயப்பாடுகளின்பால் மக்களை ஒன்றிணைத்து,
போராட்டத்தோடு மக்களை அணிதிரட்டுவதும்,
அந்த மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து,
அவர்களின் பிரச்சனைகளில் உதவுவது,
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது,
அவர்களின் கஸ்டங்களில் துணைநிற்பதுமான,
மக்கள் சேவையே அரசியல் பணியாக இருந்தது.
மக்களின் பொருளாதார முன்னேற்றம்,
கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், சுகாதாரம், சுய முன்னேற்றம் என்று மக்களுக்கான பணிகள் விரிந்து கிடந்தன.
இவற்றினிடையே
குடும்பத்தினுள்,
அயலவர்களுடன்,
சமூகத்தினுள் என்றவாறாக மக்கள் மத்தியில் தோன்றும் பல்வேறு முரண்பாடுகளை நேர்மையோடு தீர்த்துவைப்பதும் ஒரு பணியாக இருந்தது.
பிறேமதாசா அரசானது
யுத்தத்தை என்றுமில்லாதவாறு மிகக்கொடூரமான முறையில் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
மிகக் கடுமையான பொருளாதாரத்தடை,
போக்குவரத்து தடையை அமுல் படுத்தியவாறு, தமிழர்களின் நிலப்பகுதியையும் பல்வேறு முனைகளில் ஆக்கிரமித்தது அரசு.
எனவே மக்கள் பெரும்தொகையில் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மக்கள் தமது அன்றாட அத்தியாவசிய தேவைகளான
உணவு, மருந்து, இருப்பிடம் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மன்னாரின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில், நானாட்டன், முசலி, மாந்தைமேற்கு, ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள் ஏறக்குறைய முற்றாகவே இடம் பெயர்ந்தன. ஐந்தாவது பிரதேச செயலாளர் பிரிவான மன்னார்
நகர பிரதேச செயலாளர் பிரிவும் பகுதியளவில் இடம்பெயர்ந்தது.
இவர்களோடு, வவுனியா மாவட்டத்தின் கணிசமான மக்களும்,
தமிழர் தேசத்தின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த மக்களுமாக முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் “மடு” தேவாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
எந்த மாற்றுவழியும் அற்ற நிலையில் அந்த மக்கள் அனைவரும் மடு தேவாலய சுற்றாடலிலேயே தங்கவைக்கப்பட்டனர்.
இதனால், அரசியல் பணியாற்றிய போராளிகளின் பணிச்சுமை பன்மடங்கானது.
மக்களின் அன்றாடத் தேவைகளான
உணவு, நீர்,
குழந்தைகளின் பால்மா,
மருந்துகள்,
தங்குவதற்கான இடம் என்றவாறாக அவர்களின் உடனடி அடிப்படைத்தேவைகள் நீண்டுகிடந்தன.
ஆனால்,
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனும்,
மிகக்குறைவான போராளிகளுடனும்,
காலநேரம் பாராது பணி செய்து
மக்களின் இந்த துயரங்களில் துணைநிற்க,
அரசியல் பொறுப்பாளர் சுரேஷ் அண்ணா தலைமையிலான அரசியல் போராளிகள் தம்மை அர்ப்பணித்து நின்று பணி செய்யவேண்டியிருந்தது.
அவர்களில் ஒருவனாக இணைந்து இளம் போராளியான வின்சனும் தன் பொறுப்பாளரின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றலானான்.
பணிச்சுமை மிக்க இந்த நெருக்கடிக்குள்ளும்
அவர்களுள் சில போராளிகள் தெரிவு செய்யப்பட்டு
யாழ்ப்பாணத்தில் இயங்கிய தமிழீழ அரசியல் கல்லூரியில் அரசியல் கற்கை நெறி பயில அனுப்பப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவனாக வின்சனும் அப்பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படுகின்றான்.
மக்களிடம் அரசியற்பணிக்காக செல்லும் போராளிகளிற்கு அரசியல் தெளிவும், ஆழமான வரலாற்று பக்கங்களும் தெரிந்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் யாழ், சாவகச்சேரி, மட்டுவில் என்ற இடத்தில்,
நிர்வாகப் பொறுப்பாளராக மூர்த்தி அண்ணாவும், கற்கை நெறிகள் தொடர்பான பொறுப்பாளராக,
மூத்த உறுப்பினர் யோகி அண்ணா வும், இன்னும் பல நிர்வாக பட்டறிவு கொண்ட போராளிகளின் வழிப்படுத்தலில் ஆரம்பமாகிய “தமிழீழ அரசியற்கல்லூரி” யில்,
ஆண் பெண் போராளிகளென ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு உள்வாங்கப்பட்ட
1500 க்கு மேற்பட்ட போராளிகள், வெவ்வேறு பிரிவுகளாக பயிற்று விக்கப்பட்டனர்.
உலக அரசியல்,
சமூகவியல், பொருளியல், வரலாறு, உளவியல், என பல்வேறு பாடப்பரப்புகளை கொண்ட பாடத்திட்டத்திற்கு துறைசார் வல்லுனர்களை வெளியிலிருந்தும் ஒழுங்கு செய்து வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
அதில் ஒரு அணியில் பயிலும் வாய்ப்பு
வின்சனாகிய தமிழ்நேசனுக்கும் கிடைத்தது
அரசியல் படிப்பை முடித்த தமிழ்நேசன் மீண்டும் தன் சொந்த மாவட்ட அரசியல் பணிக்காக மன்னார் செல்கின்றான் .
புது வேகத்துடன், மனதில் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு வரிப்புலியாய் சொந்த மண்ணில் மீண்டும் கால்பதிக்கின்றான்.
மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு சுரேஸ் அண்ணாவின் தலைமையில் அவனது பணி மீண்டும் தொடங்கியது .
அப்போது மன்னார் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவிருந்த மேஜர் நிக்சனுடன் இணைந்து அவனது களப்பணி தொடங்கியது.
அரச நிர்வாகத்தில் எட்டு மாவட்டங்களாக காணப்படும் தமிழீழ நிலப்பரப்பானது,
இயக்க நிர்வாகத்தில்
ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிராந்தியமும் தனித்தனியாக, ஒவ்வொரு தளபதிகளின் கீழ் ஆழுகை செய்யப்பட்டன அப்போது.
இவ்வகையில், மன்னார் பிராந்தியம் என்பது, அரச நிர்வாகத்தின் படியான மன்னாரின் முழு நிலப்பரப்பையும்,
கிளிநொச்சி மாவட்டத்தின்,
பூனகரி பிரதேச செயலாளர் பிரிவை முழுமையாகவும், வவுனியா மாவட்டத்தின் தம்பனை உள்ளடங்கலான சிறு பகுதியையும் உள்ளடக்கியதாக மன்னார் பிராந்தியம் இருந்தது.
இவ்வாறு, நிலப்பரப்பில் மிகப்பெரியதாக நீண்டு கிடந்த
மன்னார் பிராந்தியமெங்கும் உள்ள மக்களில் ஏராளமானோர், பல்வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.
இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளெங்கும்,
சுற்றிச்சுழன்று சேவையாற்றும் அரசியல் பணியை ஆர்வத்தோடு தொடங்கினான் வின்சன்.
மாணவர் அமைப்புக்கான வேலைகளை,
நீண்ட நெடும் பரப்பளவைக் கொண்ட மன்னார் மாவட்டம் முழுவதும்,
துவிச்சக்கரவண்டியில் சுற்றி திரிந்து,
இல்லை பறந்து திரிந்து மாணவர் கல்வியை மேம்படுத்துவதற்கான வேலைகளை செய்யத் தொடங்கினான்.
பணியில் நேர்த்தியும் நேர்மையும் எப்போதும் அவனிடம் இருக்கும். சில இடங்களில் இலவசக்கல்வி நிலையங்களை நிறுவி மாணவர் அமைப்பின் உதவியுடன் வகுப்புக்கள் நடைபெற்றன.
குறிப்பாக,
மடு தேவாலயப் பகுதியில் அகதிகளாக தங்கியிருந்த மக்கள் தம் பிள்ளைகளின் கல்வி குறித்து ஏக்கங்களோடு இருந்த போது
மாவட்ட அரசியல் பிரிவானது, அவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டங்களை
உருவாக்கியது.
இவ்வாறாக,
பண்டிவிரிச்சானில் இயங்கிய “மன்னன்” கல்விவளர்ச்சி கழகத்தின் மூலம் அதிகளவான மாணவர்கள் பயன்பெற்றார்கள்.
மடுப்பகுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள்
இவ் இலவசக் கல்வி மூலம் நிறைவான பயனைப்பெற்றனர்.
கல்விவளர்ச்சிக் கழகங்கள் இல்லாத இடங்களில் அரசியல் பணிமனைகளில் ஆசிரியர்களை ஒழுங்கு செய்து மாணவர்களிற்கான இலவசக்கல்வி வழங்கப்பட்டது.

 


வறிய மாணவர்களிற்கும் சமமாக கல்வி வழங்கவேண்டும் என்பதில் ஆர்வமாக செய்யற்பட்பட்டனர் போராளிகள்.
ஆசிரியர் வர வில்லை என்றால் மாணவர்களை திருப்பி அனுப்பி விடாது தானே கற்பிப்பது மட்டு மன்றி நல் ஆறிவூட்டல் கருத்துகள் நற் சிந்தனைகளை வழங்குவான் தமிழ்நேசன. மாணவர்களுடன் நல்லுறவைப் பேனினான். துடிப்பும் கருணையும் உள்ள போராளியாக பொறுப்பாளர்களின் பார்வையில் குடிபுகுந்தான் தமிழ்நேசன்.
ஆண் பிள்ளைகள் குழப்படி செய்தால் அல்லது படிப்பில் கவனம் செலுத்ததவறினால் வின்சன் (தமிழ்நேசன் )வரும் நாளைப் பார்த்திருந்து. அவனிடம் முறையிடுவார்கள் ஊர் மக்கள். இப்படி மன்னார் மக்களின் மகனாக வின்சன் என்ற பெயரால் அன்று அறியப்பட்டான் தமிழ்நேசன்.
எப்போதும் சிரித்த முகமும் சிந்தனைக்கண்களும் , நிதானமாய் ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவமும், மெல்லிய புன்னகையும், கருணை வழியும் கதைக்குவியலும், சின்ன தலையசைப்பும் ,நியாயமான கோபமும் ,கொந்தளிப்பும் என்றும் இவனின் தனித்தன்மையாக பிரதிபலிக்கும்.
பூநகரியில் அரசியல் பணி செய்தபோது அங்குள்ள கிராம சேவகர், அவனது பழைய துவிச்சக்கரவண்டியை தான் வாங்கிவிட்டு தனது உந்துருளியை அவனின் வேலைகளுக்காக கொடுத்து அனுப்புவார் என்பதிலிருந்து போராளி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,
பாசமும் சொல்லமுன் செயலில் விரிந்து கிடக்கின்றன.
“மக்களிடம் செல்லுங்கள்,
மக்களிற்காக வாழுங்கள்,
மக்களிற்கு பணி செய்யுங்கள்,
மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்”
என்ற அரசியல் சித்தாந்தத்தை நடைமுறையில் வெளிப்படுத்தினார்கள் அரசியற் பணி செய்த போராளிகள்.
வயோதிபர்கள் முதல் சிறுவர்கள் வரை இவன் பெயர் சொல்லுமளவிற்கு அவர்களிடம் அன்பு செலுத்தினான் . ஊரில் உள்ள படித்தவர்களை தேடிச்சென்று பேசி பண்பாக கதைத்து சமூகத்திற்கு வேண்டிய சேவையை அவர்கள் மூலமாகவே நிறைவுசெய்யும் தனித்திறன் கொண்டவன்.
மாணவர்களிற்கு சமகால அரசியலை, வரலாற்றை, மறுக்கப்படும் உரிமைகள் பற்றி எல்லாம் விளங்க வைக்க வேண்டியது மாணவர் அமைப்பு போராளிகளினதும் கடமை. கற்பிப்பதில் கண்டிப்பாகவும் விளையாட்டு மைதானத்தில் அண்ணனாகவும் தம்பியாகவும் நின்று எல்லோர் மனங்களையும் வென்றுவருவான்.
அவனது பெற்றோரும் இடம்பெயயர்ந்து மடு அகதிகள் முகாமில் இருந்தபோது
1991 ம் ஆண்டு வின்சனின் தந்தை நோய்வந்து மறைந்து போனார். அதன் பின்னான நாட்களில், அவனது தாயே குடும்பத்தை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.
குடும்பத்தின் ஒரே ஆண்பிள்ளையான இவன் தன் தந்தையின் இழப்பின் பின்னான தன் தாயின் சுமைகுறித்து வருந்திய போதிலும்
சிறிதும் தளர்ச்சியின்றி தன் பணிகளை தொடர்ந்தான்.
1991 முற்பகுதியில் போராளிகளின் பெயரை,
தூய தமிழ்ப்பெயர்களாக மாற்றியமைத்தல் என்ற நடைமுறை ஆரம்பிக்கப்பட்ட போது, வின்சன் தமிழ்நேசனாக ஆகினான்.
இவன் தன் அரசியல் பணியோடு மட்டும் நின்று விடாமல், அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறும் போது மன்னார் அணியுடன் களத்தில் நிற்கும் சிறந்த வீரனாகவும் இருந்தான். போராளிகள் துப்பாக்கியை மட்டும் தூக்கியவர்களில்லை.
எப்போது, எது,
எமது மக்களின் தேவையோ அதை அப்போது செய்து முடிப்பவர்களே சிறந்த போராளிகள் ஆவர் என்பதை இவனது சேவைகளூடாக நிரூபித்தான்.
மாவட்டத்தில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போராளிகள், ஆங்காங்கே சண்டைக்களங்கள் திறக்கப்படும் போது களம்செல்ல
அழைக்கப்படுவார்கள்.
அவ்வாறுறே அரசியல் பணியில் இருந்தாலும் மன்னார் அணியுடன் இவன் சென்ற களங்களில் திறமையாக செயற்பட்டான். அதனால் களத்தாக்குதலுக்கும் இவன் பெயர் சொல்லி அழைக்கப்படுவான்.
1990 யூன் 10 இல் அன்றைய
சிறிலங்கா சனாதிபதி பிரேமதாச அவர்கள் தமிழர்தேசம் மீது போரைத்திணித்த போது,
தேசமெங்கும்
தாக்குதல் இலக்குகள்
பரந்து கிடந்தன.
எமது தாயகத்தை ஆக்கிரமிப்பதற்காக,
தமிழர் தேசமெங்கும்
எதிரி,
இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தான்.
எதிரியின் ஆக்கிரமிப்பு நகர்வுகளுக்கு எதிராகவும்,
ஏற்கனவே அவனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்கவும் என,
தாயகமெங்கும்
எப்போதும் ஓயாமல் தாக்குதல்கள் நடைபெற்றவாறாக இருந்தன.
இக்காலப்பகுதி மன்னார் மாவட்டப் போராளிகளுக்கு, பொற்காலம் என சொல்லத்தக்க,
ஒரு வரலாற்றுக் காலமாக இருந்தனஅன்றைய மன்னார் மாவட்டத்தளபதி “சுபன்” அண்ணா தலைமையில் (லெப் கேணல் சுபன் அவர்கள் 25..09.1992 அன்று பூனகரி பள்ளிக்குடாவில் அமைந்திருந்த சிங்களப்படை முகாம் கைப்பற்றப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.)
மன்னாரில் பல்வேறு வரலாற்றுத் தாக்குதல்கள் நடைபெற்றன.
அவ்வாறாக
1990 ம் ஆண்டு தொடக்கம்
1993 கார்த்திகை 10ல், தனது கால் ஒன்றை இழக்கும்வரை மன்னாரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில், தனது T- 81 வகை துப்பாக்கியுடன் தாக்குதல்களில் கலந்துகொண்ட வின்சன், தனது
அரசியல் வேலைகளுக்கு அப்பால்
இராணுவ பட்டறிவிலும் வளர்ந்து வந்தான்.
இவ்வாறு
இவன் பங்கு கொண்ட பல்வேறு தாக்குதல்களில்,
கீழே எழுதப்பட்டுள்ளவை முக்கியமானதும் அதிக உணர்திறன் கொண்டவைகளாகவும்,
பெரும் அனுபவங்களை தந்தவைகளாகவும் அவனுக்கு அமைந்தன.
1991 ம் ஆண்டு முற்பகுதியில், மன்னார், கொண்டச்சியில் நடந்த பதுங்கித்தாக்குதல் பிரசித்தி பெற்றது.
தமது சிலாவத்துறை முகாமிலிருந்து கொண்டச்சி பகுதியில் இருந்த தமது பிறிதொரு முகாமுக்கு அதிகாலை வேளையில் காவல் உலா சென்ற பாரிய இராணுவ அணி ஒன்றின் மீது, புலிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலானது, அன்றைய நாட்களில்
போராட்டத்தில் பெரும் வரலாற்று நிகழ்வாகியது.
நான்கு நாட்களுக்கு முன்னர் எமது சிறிய அணி ஒன்று கொண்டச்சி வீதியை கடக்க முற்பட்டபோது
மேற்குறித்த இராணுவ அணியினால் சுற்றிவளைக்கப் பட்டதும், அதன் போது எமது போராளிகள் இருவரை நாம் இழந்தமையும், தளபதி சுபன் அண்ணனுக்கு, ஆழமான வலியை தந்தது. எனவே அந்த இராணுவ அணிக்கு, அவனது பாணியிலேயே பதிலளிக்க முடிவெடுத்தார்.
வெறும் மூன்றே நாட்களுக்குள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி,
பொட்டல் வெளிகளுக்குள் முதல் நாள் நள்ளிரவில் போராளிகளை நிலைப்படுத்தி,
17.02.1991 காலை விடிந்த போது,
20 நிமிடங்களை விட குறைவான நேரத்தினுள், நடைபெற்ற புலிகளின் இத்தாக்குதலில் 50 கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு,
54 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சண்டை, தமிழ்நேசனுக்கு மிகச்சிறந்த கள அனுபவத்தை/
தேர்ச்சியை வளங்கியது.
அதன்பின்னர்,
அடுத்த இரண்டே மாதங்களில்,
மீண்டும் ஒரு சிறந்த கள அனுபவத்தை வஞ்சியன்குளத்தில் இவன் பெற்றான்.
வங்காலையில் இருந்து நானாட்டானில் அமைந்திருந்த தமது முகாம் நோக்கி,
காவல் உலா வந்த
60பேர் கொண்ட ஒரு இராணுவ அணியை,
வஞ்சியன்குளம் என்ற இடத்தில் வைத்து ஒரு பதுங்கித்தாக்குதலை
(Ambush) புலிகள் மேற்கொண்டனர்.
இதுவும் முற்றிலும் வெட்டை
வெளியான வயல்வெளிகளில்,
வரப்பையும், ஆங்காங்கே சிறு புதர்களையும் மட்டுமே காப்பாக்கி,
29.04.1991 இன் காலை வேளையில் தொடுத்த தாக்குதல், வெறும் 12 நிமிடங்களுக்குள்ளாகவே
முடிவுக்கு வந்தது.
ரோந்து வந்த அத்தனை படையினரும் கொல்லப்பட,
60 ஆயுதங்கள் எம்மால் கைப்பற்றப்பட்டது.
இத்தாக்குதலின் வெற்றியில் ஒரு பங்காளனாக தமிழ் நேசனும் இருந்தான்.
1991 பங்குனியில் சிலாவத்துறை முகாம்மீது நாம் மேற்கொண்ட முற்றுகைத்தாக்குதலின் பின்னர்,
தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து எமது பகுதிகளை நோக்கி, எதிரி பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டான்.
இராணுவத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக எம்மால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவனும் தன் துப்பாக்கியோடு களம் புகுவான்.
இராணுவ நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர்,
மீண்டும் இவன் தன் அரசியல் பணிகளில் மும்முரமாகிவிடுவான்.
10.07. 1991 அன்று புலிகளின் அணிகள் ஆனையிறவை முற்றுகையிட்டு உக்கிரமான தாக்குதலை நடத்தினர்பசீலன் 2000 என்ற எமது எறிகணைகள் விழுந்து வெடிக்க போர்தொடங்கியது. முதற்தடவையாக மரவுவழிப் போர்முறையில் புலிகள் போரிடுகின்றனர் என்றும்,
இலங்கையில் இரண்டு இராணுவங்கள்
உண்டெனவும் சர்வதேசமெங்கும் ஒங்கி ஒலிக்கத் தொடங்கிய தாக்குதல் அது.
இப்பாரிய சமரில் இயக்கத்தின் சகல மாவட்ட அணிகளும் பங்குகொண்டன.
இந்த வரலாற்று சமரில் மன்னார் அணியுடன் களம் புகுந்தான் தமிழ்நேசன். தளபதி சுபன் அண்ணா மன்னார் அணியை நெறிப்படுத்த, இறுதிப்போர் வரை களமாடிய தளபதி லக்ஸ்மன் அண்ணா களத்தினுள் மன்னார் போராளிகளை வழிநடாத்தினார்.
இந்த தாக்குதலில் தன்னுடன் ஒன்றாக அரசியல் பணிசெய்த இரு நண்பர்களை ஈழமண் அணைத்து கொண்டதில் இவன் மிகவும் வருத்தமடைந்தான்.
இழப்புகளைக் கண்டு இதயம் வருந்தினாலும், இலட்சிய உறுதியுடன் தோழர்களின் கனவுகளையும் இவன் சேர்த்தே சுமக்கலானான்.
அதன் பின்னரான காலங்களில் களமருத்துவக் கற்கைநெறியினை பயில் வதற்காக தெரிவாகின்றான் .
அப்போது,
மனோஜ் அண்ணாவின் பொறுப்பில் இயங்கிய
களமருத்துவப் பயிற்சியின் இரண்டாவது அணியில், அடிப்படை மருத்துவப் பயிற்சியை பெற்று மன்னார் திரும்பினான்.
ஆனாலும்,
அன்று மன்னாரில் இருந்த தேவைகளின் அடிப்படையில்,
மருத்துவப் பணிக்கு அனுப்பப் படாமல்
மாவட்டத்தின் அரசியல் அணிக்கு மீளவும் உள்வாங்கப்படுகிறான்.
அதனால் அப்போது அவனால் மருத்துவப்பணியாற்ற முடிந்திருக்கவில்லை.
தொடர்ந்தும் அரசியல் பணிகளில்
தொய்வின்றி, நேர்த்தியாகப்பணிசெய்து வந்தான்.
இப்போது மீண்டும் ஒரு தாக்குதலுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
பூநகரியில் இருந்த சிங்கள கூட்டுப்படை தளம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்களாக பூநகரியும் ஆனையிறவும் அமைந்தன. ஆனையிறவே ஒரே ஒரு தரை வழிப்பாதையாக இருந்தது.
அதை நீண்ட நெடுங்காலமாக எதிரி ஆக்கிரமித்து வைத்திருந்தான்.
கடல் வழியான மாற்றுப் பாதையில்
பூநகரி கூட்டுப் படைத்தளம் இருந்தது.
அப்போது வன்னிக்கும் யாழ் குடா நாட்டிற்குமான போக்கு வரத்திற்கு
கிளாலி -நல்லூர்
(பூநகரி ) இடையேயான ஆழமற்ற கடற்பகுதி இருந்தது.
இது எதிரி நிலைகொண்டிருந்த ஆனையிறகுக்கும், பூனகரி அருகே சிங்கள கடற்படை நிலைகொண்டிருந்த நாகதேவன்துறைக்கும் இடைய அமைந்திருந்த ஆழமற்ற கடற்பாதையாகும்.
இந்த பாதை சிங்கத்தின் வாயில் சென்று திரும்புவதைப் போல் மக்களிற்கு அச்சமூட்டும் பயணப்பாதையாக இருந்தது. மக்களோடு பயணிக்கும் பல படகுகள், கரைசேரமுதலே, நீருந்து விசைப்படகில் ரோந்து வரும் சிங்கள கடற்படையால்,
அக்கடலில் வைத்தே, படகோடு சேர்த்து மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
துப்பாக்கியால் சுட்டும்,
கத்தியால் வெட்டியும் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் சடலங்கள் ஆங்காங்கே கரையொதுங்கும்…
எம் மக்களின் துயர்துடைத்து,
அவர்களுக்கு
ஒரு பாதுகாப்பான தரைவழிப் பாதையை திறக்கும் நோக்கோடு
பூநகரி கூட்டுப்படைத் தளத்தை தாக்கியளிக்க திட்டமிட்டனர் புலிகள்.
மக்கள் துயர்துடைக்க வியர்வைசிந்தி, தூக்கம் தொலைத்து கடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள் போராளிகள்.
10.11.1993 அன்றைய கரிபூசிய இரவொன்றில் விடுதலைப்புலி அணிகள் பூநகரி கூட்டுத்தளம் மீது “ஒப்பிறேசன் தவளை” என்ற பெயருடன் இரூடக
(நிலம்,நீர் )தாக்குதலை தொடங்கினர்..
இந்த வெற்றித் தாக்குதலில் 450 வரையான போராளிகள் வீரச்சாவடைந்தனர். நூற்றூக்கணக்கான போராளிகள் விழுப்புண் அடைந்தனர்.
அன்றைய மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதி யாண் அண்ணா தலைமையிலான மன்னார் அணியில், தமிழ்நேசன் அவர்களும் இத்தாக்குதலில் கலந்து கொண்டான்.
பல்வேறு படைப்பிரிவுகள்,
நிர்வாகப்பிரிவுகள், உட்பட
சகல மாவட்ட அணிகளும் கலந்து கொண்ட இத்தாக்குதலில்,
கௌதாரிமுனைப்பக்கமாக,
கடலோரமாக இருந்த,
பூனகரிப்படைத்தளத்துக்கு
ஆழ்கடல் மூலமான விநியோகம் நடைபெற்ற முகாமை கைப்பற்றுவதே, மன்னார் மாவட்ட அணிக்காக வழங்கப்பட்ட இலக்காகும்.
தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு
குறுகிய நேரத்திலே அம்முகாம் கைப்பற்றப்பட்டது.
இத்தாக்குதலின் வெற்றிக்காக
பல போராளிகள் தமது இன்னுயிரை தியாகம் செய்தனர்,
தமிழ்நேசன் தனது வலது காலை
சண்டையில் இழந்தான்.
நடக்கும் போது கால்கள் புதையும், முற்றிலும் மணல்பிரதேசமாக அம்முகாம் அமைந்துள்ள இடம் இருந்தது.
முகாமின் முள்ளுக்கம்பி வேலியருகே,
எதிரியால் புதைக்கப் பட்டிருந்த மிதிவெடி அவனது வலது காலை பறித்துக்கொண்டது.
பரந்து விரிந்துகிடந்த மன்னார் நிலப்பரப்பெங்கும்,
ஓட்டைச்சயிக்கிலோடு
ஓயாது சுற்றிச்சுழன்று,
மக்கள் பணிசெய்த கால்கள்,
எம் நிலத்தில் வந்து குந்தி,
எம்மை அகதியாக்கிய பகையை
தாக்கி அழிப்பதற்காக
நடந்தே அலைந்த கால்கள் அவனது.
அதிலொன்றை அவன் இழந்தபோதிலும்,
அவன் சோர்ந்து போகவில்லை,
துவண்டு போகவில்லை,
மாறாக,
மேலும் நெஞ்சுறுதி கொண்டவனாகவே மாறினான்.
அவன் கால் இழந்து நின்ற போது அவனது சகோதரிகள் கதறி அழுதனர். அவனது காலில் சிறு கற்கள் குற்றிவிடும் என்பதாலும், அவன் அதிகம் நடந்தால் அவனது கால்கள் வலிக்கும் என்றும், சிறு வயதில் அவனை மாறி மாறி தூக்கித்திரிந்த,
அவனது சகோதரிகளை,
தன் கால் பறிபோன இவவேளையில் ஆற்றுப்படுத்த,
அவர்களை சிரிக்க வைக்க,
தலையே இல்லாமல் இங்க பொடியள் இருக்கிறாங்க,
இது கால் தானே.
இதோ புதுக்கால் வாங்கிட்டன் என பொய்க்காலை எடுத்து வந்து போட்டு நடந்து காட்டினான்.
இனி இதில் கல்லுக்குத்தாது அழாமல் போங்கோ என்றான் தன் சகோதரிகளிடம்.
காலை இழந்த போதும்,
கலங்காது தன் பணி தொடர்ந்தான். காயம் ஆறும் நாளிற்காய் காத்திராது தன் வலி மறைத்து, தான் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ மனையிலேயே தன் சக போராளிகளை கவனிக்கத் தொடங்கினான்.
ஏற்கனவே அவன் குறுகிய கால களமருத்துவப் பயிற்சியை பெற்றிருந்த போதிலும்,
அப்பணியை அவன் தொடர்ந்திருக்கவில்லை.
ஆனாலும் இப்போது
அவன் தங்கியிருந்த மருத்துவ முகாமில், சிகிச்சை பெற்றுவந்த ஏனையோருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யலானான்.
காயங்களின் வலியால் துடித்தவர்களிற்கு ஆறுதல் தந்தான்,
முகாம் மருத்துவ போராளிகளிற்கு உதவுதல்,
நோயாளிகளிற்கு தண்ணீர் அள்ளிக்கொடுத்தல்,
என்று ஒற்றை காலுடனும், ஊண்று தடியுடனும் ஓய்வின்றி உழைத்தான்.
தன்னைவிட இயலாதவர்களிற்கு
உதவிசெய்ததுடன்,
அங்கிருந்த மருத்துவப் போராளிக்கும் துணையாய்
நின்றான்.
இக்காலப்பகுதி தான் அவன் மருத்துவக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.
14.12.1992 அன்று,
தேசியத்தலைவரின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டு,
நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு
மன்னார் அணி சார்பாக இருந்த வெற்றிடத்திற்காக மேலதிக போராளிகள் தேவை என்ற கோரிக்கை 1994 ம் ஆண்டின் முற்பகுதியில் ஆசிம் அண்ணாவிடம்
விடுக்கப்படுகின்றது.
மன்னாரில் மருத்துவப்பிரிவை தூக்கி வளர்த்து நிலைப்படுத்திய இயக்கத்தின் மூத்த மருத்துவப் போராளியான ஆசிம் அண்ணா,
அப்போது
மன்னார் மாவட்ட துணைத்தளபதியாக இருந்தார்.
நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர்,
தமிழ்நேசனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்புவதென முடிவுசெய்தார் தளபதி ஆசிம் அண்ணா.
அதன் பின்னர்
தமிழ்நேசனை யாழ் நீர்வேலியில் அமைந்திருந்த தமிழீழ மருத்து வக்கல்லூரிக்கு மனோச் அண்ணா மூலம் அனுப்பி வைத்தார்.
அங்கே, இரண்டாவது அணியில் இணைந்து கொள்கிறான்.
அன்று ,70 பேருக்கு மேற்பட்ட ஆண் ,பெண் போராளிகள், இரண்டு அணிகளாக படித்துக்கொண்டிருந்தனர். அந்த அணியில், இடையில் சென்று இணைந்த சிலருள் ஒருவனாக இரண்டாவது அணியில்,
MBBS கற்கை நெறியை தொடர்ந்தான்.கற்கைநெறி பலருக்கு மிக கடினமானதாகவே இருந்தது
தமிழ்நேசனுக்கும் இது விதி விலக்கல்ல. ஆயினும் இவர்கள் தம்மை கடினமாக வருத்தி, அதீத முயற்சிகளை எடுத்து தமது கற்கையை தொடர்ந்தனர்.
இவர்களது விடாமுயற்சி தன்னம்பிக்கை சாதாரணமானதல்ல,. மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பும் அரிக்கன் இலாம்பிற்கு வெளிச்சமூட்டி படித்து விட்டு இறுதியாக தூங்குவதற்கு சென்று,
மற்றவர்கள் எழும்ப முதலே எழுந்து படித்துக்கொண்டிருப்பான் தமிழ்நேசன் என்று, அவனோடு ஒன்றாக படித்த நண்பர்கள்
அவன் குறித்து நெகிழ்ச்சியோடு அவனை நினைவு கூர்ந்தார்கள்.
03.10.1995 அன்று அச்சுவேலிப்பகுதியில் “இடிமுழக்கம்” இராணுவ நடவடிக்கையில் முன்னேறி நிலை கொண்டிருந்த சிறிலாங்காப்படையினர் மீதான ஊடறுப்பு தாக்குதலில் லெப் கேணல் ஆசிம் அண்ணா வீரச்சாவு என்ற செய்தி இவனுள்ளும் பேரிடியாக இறங்கியது .
ஆனாலும் தன்னை நம்பிக்கையுடன் கதைத்து மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்த அந்த தளபதியின் வார்த்தைகள் வின்சனுக்கு பலமடங்கு மனத் தையிரத்தை கொடுத்திருக்க வேண்டும். எத்தனையோ சவால்களுடன் எதிர் நீச்சல் போட்டு இறுதிவரை மருத்துவப் படிப்பை படித்து ( MBBS) முடித்து அந்த வீரத் தளபதிியின் நம்பிக்கையையும் காப்பாற்றி
அவர் இல்லாத காலமானாலும், அவர் கனவை நிறைவேற்றினான் தமிழ்நேசன்.
எடுத்த காரியத்தை வெற்றியடைய வைப்பதற்காக எந்த சுமையையும் அவன் சுமந்து கொள்வான்.
தமிழீழ மருத்துவக்கல்லூரியில் கற்றுத்தேர்ந்த இவன்,
எங்கள் மண்ணுக்கும், மக்களுக்கும்
நீண்ட பணியாற்றிய
தமிழீழ மருத்துவர்களுள் ஒருவனாக தமிழ்நேசன் விளங்கினான்.
தான் ஒர் மாற்றுதிறனாளி என்ற எண்ணம் அவன் சிந்தனையில் எப்போதும் வந்தில்லை. மற்றவர்களைப்போல என்ன வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்து காட்டுவான். பொறுமையின் களஞ்சியம் என்று அவனை சொல்லலாம்.
அவன் பார்வையும், பேச்சும் போதும் பாதி நோய் மாறிவிடும் என்பார்கள் அவனின் நோயாளிகள். அது மட்டுமல்ல தனக்கு தெரிந்தவற்றை நுட்பமாக தனக்கு கீழ் உள்ளவர்களிற்கும் சொல்லிக்கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவன்.
யாழ் குடா நாட்டை விட்டு புலிகள் வன்னிக்காட்டிற்குள் ஓடி விட்டார்கள் என்றும்,
தொண்ணூறு வீதம் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும், காடுகளில் மறைந்துள்ள எஞ்சியவர்களையும் அழித்துவிடுவோம், மருத்துவ வசதியும் இனி புலிகளிற்கில்லை என்று சிங்களம் கங்கணம்கட்டி சர்வதேசதிற்கு பரப்புரை செய்து கொண்டிருந்தபோது,
18.07.1996 அன்று முன்னிரவில்
ஓயாத அலையாக
புலியணிகள்,
முல்லைத்தீவு சிங்களப் படை முகாம் மீது ஓங்கி அடித்தனர். முல்லைத்தீவு புலிகளின் கட்டுப்பாட்டில் விழுந்தது.
இந்த சமரில் தான் யாழ் இடப் பெயர்வின் பின்,
அதிக அளவான போராளிகள் காயமடைந்தனர்.
அவர்களிற்கான சகல சத்திர சிகிச்சைகளும் விடுதலைப்புலிகளின் இராணுவமருத்துவமனையில் நடைபெற்றது.
பிரதான மருத்துவ மனையான ஒட்டிசுட்டானில் இயங்கிய அபயன் மருத்துவமனையில் நின்ற மருத்துவ அணியுடன் தமிழ்நேசனும் பயணித்தான்.
இது அவனது மருத்துவ பயணத்தில்,
ஆழமான அனுபவங்களைப் பெற்றுத்தந்த ஆரம்ப திறவுகோலாகியது .
பின்னர் பல பகுதிகளினூடகவும் போர் முனைகள் திறக்க,
காலத்தின் தேவை கருதி
மருத்துவ அணியும் இரண்டாகப்பிரிக்கப்பட்டது.
தமிழ்நேசன் வன்னிமேற்கு அணியுடன் இணைகின்றான். மல்லாவி வடகாடு என்னும் இடத்தில் வவுனியா வடக்கு, மன்னார், கிளிநொச்சி போன்ற களமுனைகளில் காயமடையும் போராளிகளிற்கான பின் தளமருத்துவமனையாக அது அமைந்தது.
அங்கு அவனுக்கு கொடுக்கப்பட்ட பெரும் பணி இரத்தவங்கி.
நூற்றுக்கணக்கான போராளிகள் காயமடைந்து வரும் போது நிதானமாக பணி செய்யும் தனித்துவம் பெற்றவன் அவன். இரத்தவங்கி மட்டுமின்றி ஆய்வுக்கூட வேலைகளிற்கும் பொறுப்பாக இருந்து செயற்பட்டான்.
மலேரியா நோய் கிருமியை(MP) இனம் காணும் பரிசோதனையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று விளங்கினான். தனக்கு கொடுக்கப்பட்ட பணி மட்டுமன்றி மற்றவர்களின் வேலைகளிற்கும் நிலமையறிந்து உதவுவான்.
இப்படித்தான்,
வெற்றி நிச்சயம் என்று வந்த சிங்களபடையை 04.12.1997 அன்று, மன்னகுளத்தில் வைத்து துவம்சம் செய்தனர் புலிகளின் படையணிகள்.
அந்த தாக்குதலில் எமது தரப்பிலும் பலர் காயமடைந்தனர். ஐம்பதிற்கு மேற்பட்ட வயித்துக்காயம், தலைக்காயம், பாரிய காயங்கள் என்று வந்து குவிய, மருத்துவ அணி பம்பரமாய் சுழலவேண்டி இருந்தது.
தொடர்சியாக ஒய்வின்றி சத்திரசிகிச்சைக்கூடங்கள் இயங்கின. விடுதலைப்புலிகளின் மருத்துவதாதிகள் சுழல்காற்றாய் சுழன்று சுழன்று பணிபுரிந்தார்கள். ஆனாலும் ஒவ்வொரு சத்திர சிகிச்சைகளுக்குமான வெவ்வேறு மருத்துவ உபகரணங்களை, உடனுக்குடன் தொற்று நீக்கம் செய்தும் தயார்ப்படுத்தியும் கொடுக்கவேண்டியிருந்தன. ஆட்கள் பற்றாக்குறையிருந்தது. உணவுக்கு கூட அவர்களை மாற்றிவிட யாரும் இருக்கவில்லை.
இதை அவதானித்த தமிழ்நேசன் தன் பணியுடன் அவர்களிற்கும் உதவினான். எப்போது எங்கே தமிழ்நேசன் இதனைக் கற்றுக்கொண்டான் என்று தெரியவில்லை.
ஆனால் நேர்த்தியாக செய்து முடித்தான். அவ்வப்போது தங்கள் பணிகளின் சுமைகளிலும் பங்கு கொள்வதாய் அங்கு நின்ற மருத்துவ தாதிகள் நெகிழ்வாய் பகிர்ந்து கொண்டவர்கள்.
தாண்டிக்குளம் மீதான தாக்குதல் நடைபெறவிருந்த முன்னையநாள், அடைமழைவிடாது கொட்டியது. எமக்கான தற்காலிக சத்திரசிகிச்சைக் கூடமொன்றை இரணை இலுப்பைக்குளம் என்ற இடத்தில் அமைத்துக் கொண்டிருந்திருந்தோம். தமிழ்நேசன் அண்ணாவின் பொய்க்கால் சேற்றில் புதைந்து நடக்க முடியாது தடுமாறினாலும் அவனது மனம் ஆயிரம் யானைகளின் பலத்தைப்பெற்று, ஓய்வின்றி உழைத்தான்.
அதே போல்,
27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்து, ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் வெற்றியை தவிடுபொடியாக்கி, புலிகளின் போர் வல்லமையை பறைசாற்றி, சிங்களத்தின் முகத்தில் மீண்டும் ஒங்கியறைந்த நாள் அது.
இந்த சண்டை தொடங்கமுன், இரவில் சண்டைக் களத்திற்கு அண்மையில் எமது நடமாடும் சத்திரசிகிச்சை கூடத்தை அமைக்க செல்கின்றோம். சண்டைக்களத்தின் அருகிலேயே சத்திரசகிச்சைக் கூடத்தை இயங்கப்பண்ணுவதன் மூலம், காயமடையும் போராளிகளின் உயிரிழப்பை கணிசமாக தவிர்க்கலாம்.
சந்திரசிகிச்சைக் கூடத்தை இரவிரவாக ஒழுங்கு செய்யவேண்டும்,. இரத்தவங்கியை நிறுவ வேண்டும். சிறு மெல்லிய விளக்கை மட்டும் பயன்படுத்த முடியும். அவரவர் தங்களது பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்நேசன் இரத்தவங்கியை ஒழுங்குபடுத்துவதற்கு, நுணுக்கு காட்டியை வைப்பதற்கு ஒரு மேசை வேண்டும். அந்த இரவில் மேசையை எங்கு தேடுவதென்று தெரியவில்லை. விடிந்ததும் காயங்கள் வரத்தொடங்கிடும். என்னசெய்யலாம் என்று யோசித்தவர் அயலில் உள்ள, மக்களால் கைவிட்டு போன வீடுகளில் சிறு வெளிச்சத்தின் உதவியுடன் தேடி, ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து, எதுவும் கிடைக்காமையால் பழைய தகரம் ஒன்றை எடுத்து வந்து, தடிகளை நட்டு சிறு மேசையாக்கி, ஒழுங்குபடுத்தி, அது என்ன என்று தெரியாமல் உருமறைத்து, அந்த பகுதியை ஒழுங்கு படுத்திவைத்தார்.
மூன்று நாளாக தொடர்ந்து காயங்கள் வந்து கொண்டேயிருந்ததால் தொடர்ச்சியான,
ஓய்வின்றி வேலை செய்து பொய்க்கால் போடும் முழங்காலில் புண் வந்துவிட்டது. ஆனாலும் அந்த பணி முடிந்து வரும்வரை இதை யாரிடமும் சொல்லவும் இல்லை, ஓய்வு கேட்கவுமில்லை.
இவ்வாறுதான் தன் மருத்துவ சேவைக்காலப்பகுதியிலும்,
தனது உயிர் பிரியும் நாள் வரை ஓயாமல் உழைத்த புயல் தான் இந்த தமிழ்நேசன் என்ற வின்சன்.
இயக்கத்தின் முக்கியமான, அல்லது இரகசியப்பயிற்சி நடைபெறும் சில இடங்களிற்கு மருத்துவனாக தெரிவு செய்யப்பட்டு, மாதக்கணக்கில் விடுமுறையில் செல்லாமல், பணியாற்றி வந்தான், நம்பிக்கைக்கு உரியவன் இவன்.
வீரப்பன் மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்ற விசேட பயிற்சிமுகாம் ஒன்றில், வைத்தியனாக நீண்ட நாள் கடைமையில் இருந்தான்.
2000 ஆண்டு காலப்பகுதியில், தமிழீழசுகாதார சேவையினரால் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன் பிட்டி, இலுப்பைக்கடவை , போன்ற பிரதேசங்களில் குறுகிய கால, சிறப்பு மருத்துவ முகாமொன்று நடாத்தப்பட்டது.
அங்குசென்ற மருத்துவ குழுவில் ஒருவனாக இணைந்து பணி செய்யும் அரிய வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்தினான்.
மேற்படிக் கிராமங்களிலேயே தங்கி நின்ற மேற்படி மருத்துவக்குழு,
பாடசாலை மாணவர்களிற்கான மருத்துவப் பரிசோதனைகள்,
அடிப்படைச் சிகிச்சைகள்,
மற்றும்,
நோய் வருமுன் காத்தல் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்குகள் போன்றவற்றை மேற்கொண்டிருந்தது.
அங்கு அனேகமான மாணவர்களிற்கு ஒரு வகை ஊட்டச்சத்துக்குறைபாடும், அது தொடர்பான பாதிப்புக்களும் அதிகமாக இருப்பது கண்டு கலங்கினான் தமிழ்நேசன்.
இது பற்றி பொறுப்பு வைத்தியரிடமும் சொல்லி
காரணங்கள் குறித்து விவாதித்து அறிந்தான். உண்மையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கடலுணவில் கிடைத்தும் கடலோடு இணைந்து வாழும் அம் மக்களிற்கு இந்நிலையா என விடை தேடினான்.
மிகச்சிறிய அளவில் கடற்தொழிலை மேற்கொண்ட அந்த மக்கள், தாம் பிடிக்கும் அந்த சிறியதொகை கடலுணவை விற்றுப்பணமாக்கினால் தான் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியும் என்பதனால், கடலுணவை அவர்கள் பிடிக்கின்ற போதிலும் அவர்கள் அதை தாம் உண்ணாமல் விற்று விடுவதுமே அதற்கான காரணமாக இருக்க கூடுமென அறியப்பட்டது.
தனக்கு சந்தேகமான சிறிய விடயமானாலும் அவற்றை ஆழமாக அவதானித்து, அதன் காரணங்களை தேடிக்கண்டு பிடிப்பதும் அவனது இயல்புகளில் ஒன்றாக இருந்தது.
அரசியல் போராளியாக பணிசெய்த சொந்த மண்ணுக்கு வைத்தியனாக சென்று சேவை செய்தான் .
பின்னர் சில காலம் அடம்பன் அரசினர் மருத்துவமனையில் கடமையேற்று பணிபுரிந்தான்.
இந்நிகழ்வு அந்த மக்களிற்கு அளவற்ற மகிழ்ச்சியைக்
கொடுத்தது.
தமிழீழத்தின் வடமாகாணம் மட்டுமின்றி அம்பாறை வரை இவன் பணி தொடர்ந்தது. தென்னாசியாவை அதிரவைத்த சுனாமி,
தமிழீழ மக்களையும் காவுகொண்டது. அந்த பேரனர்த்ததில், மக்களுக்காக பணிசெய்ய, தமிழீழ மருத்துவத்றை களத்தில் நின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணம் சென்ற அணியுடன் தமிழ்நேசனும் புறப்பட்டான். அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில், “காயத்திரி” முகாமில் மக்களிற்கு நோய்தீர்க்கும் வைத்தியனானான்.
சொந்த இடத்தில் மட்டுமின்றி அம்பாறைவரை இவன் ஆற்றிய பெரும் பணிகளை இந்த பதிவிற்குள் அடக்கிவிட முடியாது. இவனது சேவைகளையும்,
அர்ப்பணிப்பையும், தமிழர் தம் விடுதலையின் மீது, இவன் கொண்டிருந்த பற்றுறுதியையும் தமிழீழமக்களும் அந்த மண்ணும் ஒருபோதும் மறந்துவிடாது.
இவனைப் போலவே இவனது சகோதரியின் இரண்டு பிள்ளைகளும் மண் பற்றுக்கொண்டு பாசறை சென்றார்கள். ஆனால் இறுதிப்போரில் சிறிலங்க இராணுவத்தினரால் வலிந்து காணமல் ஆக்கப்பட்டு இன்று வரை எங்கே என்று தெரியாது தேடுகின்றனர்.
இந்த விடுதலைக்கான
இவனது நீண்ட பயணத்தில்,
எண்ணிலடங்காத போராளிகளை, தொட்டு அணைத்து மருத்துவம் செய்திருப்பான்.
மக்களிற்காய் தன்னை அர்பணித்த இந்த வீரனின் வரலாறு, வெற்று எழுத்துக்களால் எழுதப்படவில்லை.
மாறாக,
இந்த வரலாறு,
அவனது குருதியாலும்,
நிறைந்த சேவைகளாலும்
கட்டப்பட்டுள்ளது. அன்று வீடு சென்றவன்,
மீண்டும் மருத்துவ கடமையை தொடரவருவான் என்று காத்திருந்த எமக்கு,
03.02.2009 இல்,
நீ இல்லாத செய்தியை மட்டுமே
கந்தகக்காற்று காவிவந்தது .
எம் எல்லோருக்கும் கடமை கைகளில் நிறைந்து கிடக்க,
உன் வித்துடலைக்கூட பார்க்க முடியாது நாம் பரிதவித்த நினைவுகள், இன்றும் தீயாய் எரிகின்றது.
உங்கள் கல்லறைகளை
எங்கள்
நெஞ்சறையில் வைத்து பூசிக்கின்றோம் புனிதர்களே ..
மிதயா கானவி
நன்றி
தேசத்தின் குரல்,
மற்றும் இப்பதிவை நிறைவு செய்தவதற்கு உதவிய
திரு சுரேஸ் ,ராஜன், மனோச்,பசீலன் ஜோன்சன், தணிகை ,முரளி அவர்களிற்கும் ,இவர்களை விடவும் பெயர் குறிப்பிடாத இன்னும் பல உறவுகளிற்கு மனம் நிறைந்த நன்றி .

About ehouse

Check Also

மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு ...

Leave a Reply