புலிமகள்…

146937674_1646242615564178_6170630008999370606_nஅங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் விலங்குகள் தண்ணீருக்காக அந்தக் காட்டோரத்தில் உள்ள குளக்கரை நோக்கி படையெடுத்து வருவது எல்லாம் இப்போது இல்லை. சிங்களத்துடனான எம்மவர்களின் மோதல்களும், ஆக்கிரமிக்க வந்து கொண்டிருந்த சிங்கள வல்லாதிக்கத்தின் வெடிபொருட்களின் வெடிப்பின் தாக்கமும் அவற்றையும் இடம் பெயர்ந்து வேறு காடுகளை நோக்கி செல்ல வைத்து விட்டது. ஆனாலும் இல்லை என்று சொல்ல முடியாது குறைவாக இருந்தது என்பதே சரியான பதம்.

இல்லை எனில் சிங்களத்துடன் மட்டுமன்றி கரடி, யானை, சிறுத்தை என காட்டு மிருகங்களோடும் தினந்தினம் சண்டை போடுவார்கள் எம்மவர்கள். ஆனாலும் விசத்தை தம் பற்களுக்கிடையே காவிக் கொண்டு திரியும் விசப் பாம்புகள், பூரான்கள் என அனைத்தும் அங்கு தாராளமாகவே இருந்தது. பகல் இரவு தெரியாத காட்டுச் சூழல். எங்கும் எப்போதும் இருட்டையே தன் மீது போர்த்துக் கிடந்த ஒரு போர்முனை. ஒரு புறம் பெரியமடுக் குளத்தாலும், மற்ற மூன்று புறங்களும் நீண்டு உயர்ந்த காட்டு மரங்களாலும் சூழப்பட்ட அந்த பூமியையும் ஆண்டு விட துடித்துக் கொண்டிருந்தது பேரினவாதம். அவனை எதிர்த்துக் களமாட விடுதலைப்புலிகளின் படையணிகளைச் சேர்ந்த போராளிகள் இருட்டோடு இருட்டாக கலந்து கிடந்தார்கள்.

அக் களத்தை நோக்கி மகளிர் படையணிகளும் நகர்த்தப்பட்டிருந்தன. அதில் மாலதி படையணியின் ஓரு அணியும் முக்கியம் பெறும் அணியாக அங்கே நிலை எடுக்கின்றது. அங்கே “ ஓயாத அலைகள் 3 இன் 2 ஆவது கட்ட வலிந்து தாக்குதல்” திட்டத்தை நிறைவேற்றும் பணி அவர்களுக்காக தயாராக இருந்தது. அவர்களோடு, மருத்துவப் பிரிவு, மோட்டார் அணி, கனரக ஆயுத அணி, பதுங்கிச்சுடும் அணி என துறை சார்ந்த போராளிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருத்தி தான் புலிமகள் என்ற மாலதி படையணியின் போராளி.

“புலிமகள் “ கொஞ்சம் அல்ல நிறையவே துணிவானவள். எதையும் சாதித்துவிட துடிக்கும் இளையவள். தன் அணியோடு பல களங்களை தம் கைகளுக்குள் கொண்டு வந்து வெற்றி எனும் கனி பறித்தவள். இன்றும் அந்தக் காட்டுப் பகுதியில் இருந்து முன்நகர்ந்து வரும் எதிரிகளை திணறடித்து “ தமிழீழம் “ என்ற இனிய அடைவைப் பெறுவதற்கு முயன்று கொண்டிருந்தாள்.

வலிந்து தாக்குதல் ஒன்றுக்கான திட்டம் முழுமையாக்கப்பட்டு, படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சண்டைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தன. ஒட்டுசுட்டானில் ஆரம்பித்த ஓயாதலைகள் 3 ஆர்பரித்து எழுந்து வெற்றியின் முடியை சூடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் மன்னாரின் பெரியமடு களமுனையும் அதிரத் தொடங்கியது. சிங்களதேசத்தின் இராணுவப் படையணிகளை எதிர்த்து தமிழீழ இராணுவப் படையணியின் சண்டை தீவிரமாகவே இருந்தது.

தளராத வீரத்தை எம் புலிகள் காட்டி எதிரிகளின் நிலைகளை நோக்கி முன்னேறத் தொடங்கினர். சண்டை எதிரிகளின் நிலைகள் பலவற்றை தாண்டி இருந்தது. அவற்றைக் கைப்பற்றி மன்னார் மாவட்ட போரரங்கின் எல்லை வேலியை நீண்ட தூரத்துக்கு முன்நகர்த்தி தமிழீழத்தின் ஆளுகைக்குள் புலிகள் கொண்டு வந்திருந்தது. பிரதேசங்கள் விரிவடைந்து சென்ற போதும், ஆளணி எண்ணிக்கையில் பலர் குறைந்திருந்தார்கள்.

காயப்பட்ட போராளிகள் மருத்துவப் பிரிவிடமும், வீரச்சாவடைந்திருந்தவர்கள் பின்களமுனைக்கு ஊடாக தியாகசீலத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தார்கள். ஆனால் புலிமகள் என்ற இளைய போராளியை எங்கும் காணவில்லை. தேடுதல் செய்தும் பலனில்லை. தொடர்புகள் அற்றுப் போயிருந்தாள் புலிமகள்.

“ என்ன நடந்தது…?

ஆள் வீரச்சாவோ? “ கிட்டத்தட்ட பத்து நாட்களாக தொடர்புகள் அற்ற நிலையில் கூடி வாழ்ந்த போராளிகள் மனதில் எழுந்த வினா இது. எதுவாக இருந்தாலும் புலிமகளின் தொடர்பை எடுக்குமாறு பொறுப்பாளர் பணிக்கிறார். “புலிமகளின் வித்துடல் அல்லது தொடர்பு “ என்ற இரு நிலைகளை நோக்கி போராளிகள் பயணித்தனர். சிலவேளை எதிரி பின்வாங்கி ஓடும் போது அவனை துரத்திக் கொண்டு எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து பாதை மாறிப் போயிருக்கலாம் என்று எண்ணினார்கள். அதனால் அவள் வருவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால் 9 நாட்கள் கடந்தும் எந்த தகவலும் இல்லை. போராளிகள் தேடிய இடமெங்கும் புலிமகள் இல்லை. களமுனையின் எல்லை வேலி தாண்டி வேவுப் போராளிகள் அவளைத் தேடிக் கொண்டிருந்தனர். எங்கும் கிடைக்கவில்லை. அந்த களமுனையை அண்டிய பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தார்கள். அங்கும் அவள் இல்லை. வழமையாக இருந்த எமது எல்லை வேலி நீண்ட இடைவெளியில் முன் நகர்ந்திருந்ததால் அவர்களின் தேடல் களம் அதை அண்டியதாகவே இருந்தது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த அப்பகுதியில் எதிரியால் கைவிடப்பட்டு சென்ற ஆயுத தளபாடங்கள் மற்றும் வளங்கல் பொருட்கள் என அத்தனையையும் ஒன்றிணைப்பதற்காக பின்களப் பணியாளர்கள் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு வந்திருந்தார்கள். அதில் எதிரியால் வெட்டிச் சரிக்கப்பட்டு சிதறிக் கிடந்த மரங்களை பொறுப்பெடுக்கவும், அப் பிரதேசக் காட்டை தம் ஆளுகைக்குள் கொண்டு வரவும் என்று “வனவளப் பாதுகாப்புப் பிரிவும்” அங்கே வந்திருந்தது.

அப் பிரிவுக்கு பொறுப்பாக வந்திருந்தவர் “மீசை ஐயா “ என்று அழைக்கப்படுகின்ற வனவளப் பாதுகாப்பு பிரிவின் மன்னார் பெரியமடு பிரதேசப் பொறுப்பாளர். அவருடன் சில பணியாளர்களும் வந்திருந்தார்கள். போராளிகள் தம் பணி செய்து கொண்டிருந்த அதே நேரம், இவர்களும் தமக்கான பணியை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவருடன் வந்திருந்த ஒரு இளம் பணியாளன் கடமைக்காக பற்றைகளைக் கடந்து சென்ற போது அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து சற்று தூரவாக இருக்கும் பற்றை ஒன்றுக்குள் ஏதோ ஒரு அசைவைக் காண்கிறான்.

சருகுகளால் மூடப்பட்டு ஒரு உருவம் தலையை மட்டும் தூக்கி பார்த்தது. அந்த முகம் யாருடையது அல்லது என்ன உருவம் என்பதை கூட அவனால் இனங்காண முடியாத அளவுக்கு மாறி இருந்தது. அதோடு அவனின் பயந்த சுபாவம், அவனின் மனதில் அந்த பற்றைக்குள் இருப்பது “ பேய் “ என்று மட்டுமே தோன்றியது. அவனுக்கு பேய் பிசாசு என்றால் பயம். அதனால் உடனே தன் பொறுப்பாளருக்கு அதைப் பற்றி தெரிவிக்க ஓடுகிறான். மூச்சு விட முடியாத அளவுக்கு திணறியபடி ஓடி வந்த அவனை விசாரித்த மீசை ஐயா மனதில் ஏதோ ஒன்று ஆணித்தரமாக விளங்கியது.

“ இது ஆமி அல்லது எங்கட பெடியள்…”
அவர் முடிவெடுத்துவிட்டார். இனி காத்திருப்பது நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டவராக அவ்விடத்தை நோக்கி செல்கின்றார். அதே நேரம் அருகில் முகாமைத்திருந்த மருத்துவர் தணிகையுடனான மருத்துவப் போராளிகளுக்கும் முன்னணியில் நின்ற சண்டையணிகளின் அணித் தலைவருக்கும் அந்த விடயத்தை நடைபேசியில் ( வோக்கி) தெரிவித்துவிட்டு, மீசை ஐயா உடனடியாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறார்.

கையில் இருந்த தனது துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தபடி அருகில் போன மீசை ஐயா காட்டுச் சருகுகளால் மூடப்பட்டு கிடந்த அந்த பெண் போராளியை கண்டு பிடிக்கிறார். அவளோ தான் காப்பாற்றப்படுவேன் என்ற நம்பிக்கையோடு பத்து நாட்களாய் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

உணவற்றிருந்ததால் பசி ஒருபுறம் வேதனையை தர, காயத்தின் வலி அதை விட பயங்கர வேதனையை தந்தது. இருப்பினும், மனம் தளராது அவள் காத்திருந்தாள். அக் காலம் மழை காலம் என்பதால் பெய்யும் மழை நீரை பிடித்து குடிப்பதற்காக, தன் இடுப்பு கோள்சரோடு எப்போதும் இருக்கும் தண்ணீர் போத்தலையும், எதிரி விட்டுச் சென்றிருந்த ஒரு சாப்பாட்டுப் பெட்டியையும் தனக்கருகில் வைத்து அதனுள் விழும் மழை நீரை குடித்தபடி 10 நாட்களாக வாழ்ந்திருக்கின்றாள். அவளுக்கு உடலில் இருந்து நீரிழப்பு ஏற்பட்டிருந்தெனினும் மழைக்காலம் ஆகையால் குறைந்த அளவு இழப்பே ஏற்பட்டிருந்தது.

காயப்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பார்கள். ஆனால் இங்கே பெரிய காயம் ஒன்றை தன் உடலில் முதுகுப் பகுதியில் கொண்டிருந்த அந்த பெண் போராளி தண்ணீரை மட்டுமே குடித்துக் குடித்து 10 நாட்களாக வாழ்ந்தாள்.
அவளைக் கண்ட மீசை ஐயா உடனடியாக தூக்கிப் பற்றைக்கு வெளியே கொண்டு வருகிறார். மூடி இருந்த சருகுகளை விலக்குகிறார். அப்போது முதுகுப் புறத்தில் காயமடைந்திருந்த அப் போராளியை நிமிர்த்தி கிடத்த முடியவில்லை. மீண்டும் அவள் படுத்திருந்த நிலையிலையே படுக்க வைத்து, கொஞ்சம் தூரவாக நிலையெடுத்திருந்த போராளிகள் வரும்வரை காத்திருந்தார். ஓரளவுக்கு அவள் புலிமகள் தான் என்பதை ஊகித்திருந்த மருத்துப் போராளிகள் அவளிடம் இருந்து குப்பியை வாங்குமாறு பணித்தார்கள். அப்போது,
“10 நாட்களாக யாருடனும் தொடர்புகள் அற்று, சாப்பாடு இல்லாது, காயத்தின் வேதனை பயங்கரமாக இருந்தும் அதை கூட பொருட்படுத்தாது, தன்னை காப்பாற்ற நாங்கள் வருவோம் என்ற எதிர்பார்ப்போடு குப்பி கடிக்காமல் இருக்கும் பிள்ளை நாங்கள் வந்துவிட்ட பிறகு குப்பி கடிப்பாள் என்று நினைக்கிறீர்களா? “ என்று வினவுகிறார்.

போராளிகளுக்கு அவர் கூறிய போது அதன் உண்மை புரிந்தது. ஆனாலும் மீசை ஐயா அவளிடம் இருந்து ஏற்கனவே தான் குப்பியை வாங்கி விட்டதை தெரிவிக்கின்றார். அப்போது எந்த நிலை வரினும், அவசரப்பட்டு குப்பி கடித்தலோ அல்லது உயிரைத் துறத்தலோ கூடாது, முடிந்த அளவு காத்திருக்கவும் உயிர் வாழ்ந்து தப்பிக்கவும் வேண்டும். ஏனெனில் ஒரு போராளியின் உயிர் என்பது தமிழீழ இலட்சியத்தை அடைவதற்கான ஆணி வேராக இருக்கின்றது என்ற உண்மையை ஏனையவர்கள் உணர்கிறார்கள்.

குறித்த இடத்துக்கு விரைந்தார்கள் போராளிகள். அங்கே 10 நாட்களாக யாரைத் தேடிக் கொண்டிருந்தார்களோ அவளை குற்றுயிராக கண்டார்கள். உடம்பில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு முதலுதவிச் சிகிச்சையை படையணி மருத்துவப் போராளிகள் செய்திருந்தார்கள். காயத்துக்கு இரத்தக்கட்டுப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைத் தாண்டி மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை. காயப்பட்ட இடம் ரோஸ் நிறத்தில் இருந்தது. ஆனாலும் சீள் இல்லை அந்த இடம் பார்க்க தூய்மையாக இருந்தது ஆனால் அங்கே சிறிய புழுக்கள் உருவாகி இருந்தன. அப் புழுக்கள் அக் காயத்தை தின்று கொண்டிருந்தன. அவை அவளுக்கு பெரும் வேதனையை கொடுத்தன.

முதலுதவி செய்யப்பட்டும் பின்கள மருத்துவத்துக்காக கொண்டு செல்லப்படாததும், 10 நாட்களாக முன்களநிலைகளில் அவளைத் தேடி அலைந்ததும் அப்போராளிகளுக்கு பெரிதும் மனநிலை உடைவை ஏற்படுத்தி இருந்தது. தங்களின் சகோதரி தம் நிலைக்கு பின்னால் வேதனையில் துடித்துக் கொண்டிருக்க தாம் அவளை முன்நிலையில் தேடிய வேதனையை தம்முடைய தவறு என்ற நிலையில் பார்க்கத் தொடங்கினார்கள். இது இவ்வாறு இருக்க, முதலுதவி செய்யப்பட்ட இப் போராளியை பின் நகர்த்த வேண்டிய தேவை இருந்தும் மருத்துவ அணி ஏன் தவற விட்டது என்ற பல பக்க கேள்விகள் எழுந்தன. கள மருத்துவ உதவியாளர்களோ அல்லது வளங்கல் பணியை செய்து வந்தவர்களோ, வாகனப்பிரிவுப் போராளிகளோ புலிமகளை தவற விட்டது எப்படி என்ற முக்கிய கேள்வி எழுந்த போது அதற்கான விசாரணைகளை அப்பகுதியில் பொறுப்பதிகாரிகள் எதிர் கொள்ள நேர்ந்தது.

முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு காயப்பட்ட போராளிகள் பின்நகர்த்தப்பட்ட போது, புலிமகளோடு காயப்பட்ட ஒரு போராளியை தூக்கிச் சென்று மருத்துவநிலையில் ஒப்படைத்த பின் புலிமகளை தூக்குவதற்காக வந்த அப் போராளி இடையிலையே வீரச்சாவடைந்து விட்டதால், புலிமகள் காயப்பட்டிருந்ததும் அவள் அந்த பற்றைக்குள் பதுங்கி இருந்ததும், யாருக்கும் தெரியாத தகவல்களாக போயிருந்தன. எதிரியை கலைத்து அவனின் நிலைகளை கைப்பற்றுவதில் குறியாக இருந்த படையணிப் போராளிகள், தம்மோடு அவளும் எதிரியுடன் பொருதுகிறாள் என்ற எண்ணத்தில் பின்னணியை கவனிக்காது விட்டிருந்தனர். அதே நேரம், காயப்பட்ட புலிமகள் முடிந்தவரை பின் நகர்ந்து களமுனையை விட்டு விலகி மருத்துவ நிலைக்கு செல்வதற்காக முயன்ற போதும், தான் படுத்திருக்கும் பகுதி இராணுவ கட்டுப்பாடா அல்லது எங்களுடைய கட்டுப்பாடா என்பது தெரியாமலே பற்றையை விட்டு வெளியேறாது காத்திருந்தாள். அதனால் அவள் தான் இருக்கும் நிலையையும் அறியாது மயக்கத்திலையே கிடப்பதும் விழிப்பதுமாக கிடந்தாள்.

இடைக்கிடை சுடப்பட்டுக் கொண்டிருந்த மூன்று ஒற்றை ரவை வெடிச்சத்தம் யாருக்கான பரிபாசை என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அந்த இடம் நோக்கி செல்ல முயல்வதும் பின் இராணுவமா புலிகளா என்று தெரியாது அமைதியாக தூங்குவதுமாக அவள் இருந்திருக்கிறாள். அதைப் பற்றி கூறிய போது
நான் தான் பிள்ள சுடுறனான்… இங்க கரடி யானை என்று காட்டு மிருகங்களின் தொல்லை அதிகமாக இருக்கும் அதனால் தான் அலேட்டுக்கு அடிக்கிறனான் என்று மீசை ஐயா கூறிய போது அவ்விடத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று எண்ணத் தொடங்கினாள் அவள்.

மருத்துவப் போராளிகள் வந்து பொறுப்பெடுக்கின்றார்கள். நீண்ட தூரம் பயணித்து வர வேண்டும் என்பதால் அப்பகுதி வாகனப் பொறுப்பாளராக இருந்த போராளி உழவியந்திரத்தில் அவர்களை ஏற்றி வந்தாலும், குறுகிய அப் பாதைகளின் வாகனக் கண்ணிவெடி இருக்கலாம் என்ற அச்சத்தில் இடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடியே வந்து சேர்ந்திருந்தார்கள் அவர்கள். அதனால் கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாக வந்து பொறுப்பெடுத்தார்கள் மருத்துவப் போராளிகளான தணிகை மற்றும் அவரது போராளிகள்.

உடனடியாக பின் நகர்த்த வேண்டிய தேவையை உணர்ந்தாலும் அவளது நிலையில், ஆளுயரப்பலகை இல்லாமல் அனுப்ப முடியாத நிலை எழுந்தது. அவளின் காயத்தின் தன்மை வெறுமையாக அனுப்பினால், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையையும் உருவாக்கும் சக்தியை கொண்டிருந்தது அதனால் நிச்சயமாக ஆளுயரப்பலகை இல்லாமல் அனுப்ப முடியாது. ஆனாலும் அதற்கு பதிலீட்டுப் பொருட்கள் அருகில் இருக்கின்றனவா என தேடினார்கள் போராளிகள்.

சாதாரணமான வீட்டுக் கதவுகள் அதற்கு மாற்றீட்டுப் பொருளாக பயன்படுத்தக் கூடியவை என்பதை கற்றுணர்ந்திருந்த போராளிகள் சிங்களத்தால் கைவிடப்பட்ட இராணுவ முகாம்களில் அவ்வாறு ஒரு கதவு இருக்கின்றதா என தேடினர். கிட்டத்தட்ட அவளின் உயரத்துக்கு ஏற்ற பலகை ஒன்றை கண்டு பிடித்து அவளின் முள்ளந்தண்டு வடம் ஆடாத மாதிரி பலகையில் குப்புறப் படுக்க வைத்து பலகையோடு கட்டுப் போட்டு உடனடியாக காட்டை விட்டு வெளியில் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் உழவியந்திரத்தில் கொண்டு போவது சாத்தியமற்றது. ஏனெனில் அங்கே இருந்த காட்டுப் பாதையில் உழவியந்திரம் தூக்கித் தூக்கிப் போடும் போது அவளின் முள்ளந்தண்டு அசையும் அபாயம் இருந்தது. அதனால் கையில் தூக்கியபடி காட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து சேர்ந்தார்கள் போராளிகள்.

அவள் நிச்சயம் உயிர் காப்பாற்றப்படுவாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் முள்ளந்தண்டு வடம்? இது ஒன்று மட்டுமே கேள்வியாக நிலைத்து நின்றது. வாகப்பிரிவுப் போராளிகள் மருத்துவப் பிரிவுப் போராளியோடு நீலன் இராணுவ மருத்துவமனை நோக்கி வேகமாக செல்கிறார்கள்.
ஒரு வாரம் தாண்டிய நிலையில் நீலன் மருத்துவமனையில் இருந்து அழைத்த வோக்கி

“புலிமகளுக்கு ஒன்றும் இல்லை …. ஆள் நலமாக உள்ளார் “

என்ற செய்தியை சுமந்து வந்து போராளிகளின் வினாக்களுக்கு விடையை சொல்லி சென்றது.

இப்போதும் அங்கே ரீங்காரமிடும் சில்வண்டுகளும் மினமினிப் பூச்சிகளும் அவளின் உடலில் இருந்து வழிந்த குருதியின் வாசத்தை சுவாசித்த வண்ணமே உயிர் பெறுகின்றன…

—————————————————————
குறிசொற்கள்: நீரிழப்பு – Dehydration

ஆளுயரப்பலகை – Spinal-board

—————————————————————
( இப் போராளியின் இருப்பு தெரியாததால் பெயரை மாற்றி உள்ளேன். இறுதி நேரச் சண்டையில் வீரச்சாவடைந்ததாக கூறப்பட்டாலும் உறுதியான தகவல் இல்லை என்பதால் பெயர் மாற்றம் அவசியப்பட்டது….)
கவி இரத்தினம் அவர்கள் பதிவு.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply