Home / மாவீரர்கள் / பதிவுகள் / லெப்ரினன்ட் கேணல் லக்ஸ்மன்

லெப்ரினன்ட் கேணல் லக்ஸ்மன்

‘தமிழீழம்’

இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல.

வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும் ‘நம்மடது’ தான் – தமிழீழம் ஒன்று தான்!

‘வாளேந்திய சிங்கம்’ தானேந்திடும் வாளால் துண்டாக்கிப்போட்ட பின்பு, கூட்டாகிச் ‘சங்கம்’ அமைக்க – இது சோவியத் சாம்ராஜ்ஜியமும் அல்ல; துகள்க்ளாக்கிப் பிளவுபடுத்தி சீரழித்துச் சிதைத்துவிட – இது ‘பொஸ்னியா’வும் அல்ல.

‘கரந்தனாற்றில்’ கால் நனைத்துக் கொண்டு தமிழீழம் என்றால், வரண்டுபோய்க் கிடக்கின்ற ‘வழுக்கியாறும்’ தமிழீழம்தான். மன்னாரை ஈரமாக்கும் ‘பறங்கியாறு’ம் அதுதான், ‘மணலாறு’ம் எங்களதேதான்!

இலங்கையில்…..

ஆசியாக் கண்டத்தின் தெற்கே, இந்துமா சமுத்திரத்தின் தாலாட்டில் மிதக்கும் அந்த மாங்காய் வடிவச் சிறு தீவில் –

அதன் – வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்குப் பிரதேசங்களில் – தமிழர்கள் காலாதி காலமாக வேரோடி வாழ்ந்த 20,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு; தமிழர் மூதாதையரின் வியர்வை கலந்த 23,000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பு; இவற்றின் மேலாக கூரையாய் வரியும் தமிழர் சரித்திரத்தின் மூச்சுக் கலந்திருக்கும் வான் பரப்பு – இந்த மூன்றுக்கும் ஒரே பெயர், அதுதான் தமிழீழம்.

வடக்கையும் கிழக்கையும் “இணையக்கூடாது! இணைக்கக் கூடாது!” என்று கொழும்பிலிருந்து கத்திக்கொண்டிருக்கிறார்கள். அது எமக்குப் புரியவுமில்லை; புரிந்துகொள்ள நாம் விரும்பவுமில்லை; விரும்பவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், ‘இணைப்பது’ அல்லவே எமது பிரச்சினை. தமிழீழத்தை (வடக்கையும் கிழக்கையும்) ‘பிரிக்கக்கூடாது’ என்பதுவே எமது பிரச்சினை. தேசம் பிரியக்கூடாது, யாரும் பிழைக்கவே கூடாது என்பதற்காகவே நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம்; விடவே மாட்டோம்!

ஓரங்களில் அரிக்கப்படாத – நடுவினில் பிரிக்கப்படாத – நிறைவு குறைக்கப்படாத, உருக்குலைவற்ற தமிழீழத்தை மீட்டெடுத்து, தமிழனின் சுதந்திர தனியரசைப் பிரகடனப்படுத்தும் வரை, விடவேமாட்டோம்!

கொக்குவில் புயலாகும்; கொக்குத்தொடுவாய் களமாடும்; கொம்மாந்துறை அனலாகும்; தனியரசு எமதாகும் வரை தமிழீழம் போராடும். பலாலி வீதியிலிருந்து புனானை வீதியீறாக விடுதலைப் போர் நீளும். புலி ஆடும் கொடி எங்கள் நிலம் ஆளும் நாள் வரை போர் நீளும்! போர் நீளும்! விடவே மாட்டோம்.

தேசத்தை மீட்கும் இன்றைய போரில் தென்னக வீரர்கள் வடக்கில் அணிவகுத்துள்ளார்கள்; எல்லைகள் கீறும் நாளைய போரில், வடபுலி வீரர்கள் தெற்கில் வேலிபோடுவார்கள்.

தமிழீழம் ஒன்றேதான் ஒரு நாடு, ஒரு கொடி ,ஒரு தலைவன்.

ஒரு ஆவணி மாதத்து அதிகாலை. கச்சான் காற்றின் மெல்லிய வருடல் வைகறைப் பொழுதில் சூரியக் குளியல். எழுவான்கறையின் உளமெல்லாம் உற்சாகம். சாளைவலைத் தோணிகளில் கரை திரும்பிக்கொண்டிருந்த தேசத்தின் மீனவ சமூகம். “கெதியாய் போயிடவேணும் குமார்…… கச்சான் வலுத்துதெண்டால் மறுகா தண்டு வலிக்கிறது கஸ்டமா போயிடும்………….” இவ்விரண்டு ஆட்கள், சிலதுண்டு வலைகளோடு பிடித்தெடுத்த மீன்கள்; கரை நோக்கிய வள்ளங்கள்.

பதினைந்து வயதேயான இளம்பராயம்; தேவைக்கும் அதிகமாகத் துளியும் பெருக்காத தேகம்; தோள்கள் திரண்டு, நெஞ்சு அகன்று, இடுப்பு ஒடுங்கி, கால்கள் வலுத்து – உடலை வருத்தி வருத்தி உழைத்ததால் இறுக்கமாகிய அழகு மேனி; சுருள் சுருளாகப் படரும் தலை முடிகள்; முழு நிலவாக ஒளிரும் முகம்; சதா புன்னகைக்கும் கண்களின் ஆழத்தில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தென்படும், அந்த சோகத்தின் மெல்லிய கீறல். நெற்றியில் சிந்தனையின்……………

குமார் நிமிர்ந்து நிலத்தைப் பார்த்தான். மேற்புறத் தொடுவானில் ‘குப்பிமலை’யும் ‘தொப்பிக்கல்’லும் பனுமூட்டங்களினூடு மெல்லிய நீல முகடுகளாய்…… கண் குளிர்ந்த காட்சி.

தோணி கரை ஒதுங்கியது. கடலுக்குள் இறங்கியவன் குனிந்து வள்ளத்திலும் தண்ணீரிலும் தொட்டு இரண்டு கைகளையும் நெஞ்சில் வைத்து கண்களை மூடினான். வலைகளை இழுத்து, பட்டிருந்த மீன்களை எடுத்து, கூடையில் நிறுத்து, விலைபேசி…………. கச்சான் பலமாக ஊதத் தொடங்கிற்று. இரவு தொழிலுக்குப் போய்வந்தவர்கள் கண்ணாப் பற்றையோரங்களில் ஓய்வாக அரட்டையடிக்க, விற்போரும் வாங்குவோரும் நிறைய, களைகட்டிக் கலகலத்தது கடற்கரை. குமாருக்கு அவசரம்; நேர நெருக்கடி; மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். “குமார் சாப்பிடாமல் போறான்……….. அவனைச் சாப்பிடச் சொல்லுங்கோ………..” மீன்வாடிக்குப் பக்கத்திலிருந்த குடிலுக்குள்ளிருந்து ஒரு உடன்பிறவாச் சகோதரியின் பாடக்குரல். “குமார் சாப்பிட்டுட்டுப் போவன் தம்பி………..”

“அக்கா, தங்கைச்சிக்குப் பள்ளி துவங்கிற நேரமாயிற்றுதண்ணை……….. ஏத்திப்போய் விடனும்…….. நான் பிறகு வாறனண்ணை…..” குடிலுக்குள் எட்டிப்பார்த்து – “அக்கா வாரனுங்க……….” சைக்கிளை உருட்டினான்.

“ம்…..” குடிலுக்குள்ளிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு கச்சானோடு கலந்தது.

கல்குடா ஒரு பூர்வீக தமிழர் நிலம். கல்மடு அங்கொரு சிற்றூர். அண்ணார்ந்து பார்த்தாலும் வறுமைக்கோடு தெரியாத ஆழத்தில் வாழ்ந்த மக்கள். வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் சுந்தரபுரியாக மாறிவிட்ட தங்களூரில், மண்ணின் பண்பாடுகளையும், இனத்தின் உன்னதங்களையும் கறைபடியாமல் காத்தார்கள் அவர்கள். அதிலொரு குடும்பம் அவனுடையது.

Lt.Col_.Laxman-723x1024

சிங்களத்தைச் சரளமாகப் பேசியவன். உல்லாசப் பிரயாணிகளை வழிகாட்டக்கூடியளவுக்கு ஆங்கிலமும் பேசினான். பகலில் அவனுக்கு அதுதான் வேலை. பக்குவமாய் பாதுகாக்கும் இரண்டொரு நல்ல உடைகள் அவனுக்குத் துணை. சின்னவன், நல்லவன், பண்பானவன், ஏழை. விடுதிச் சொந்தக்காரர் நாளாந்தம் அவனுக்கென ஊர்பார்க்கும் வெள்ளைக்காரர்களை வைத்திருப்பார். கூட்டிக்கொண்டு அவன் பகலெல்லாம் திரிவான். மானிடப் பண்புகளும், சீரிய ஒழுக்கங்களும் மலிவு விலைக்கு ஏலம்போன உல்லாச விடுதிகளில், உடலாலும் உள்ளத்தாலும் சேதப்படாமல் வாழ்ந்தவன்.

மாலையானதும் மீண்டும் ஓட்டம். மிதிவண்டியில் களைக்க களைக்க ஓடி பள்ளிக்கூட வாசலில் காவலிருப்பான். பள்ளிவிட்டதும் – அக்காவையும் தங்கையையும் திரும்ப வீட்டிற்கு ஏத்திப் போவான். வீட்டு வேலைகளில் சின்ன ஒத்தாசைகள் செய்துவிட்டு, இரவானதும் கடற்தொழிலுக்குப் போகப் புறப்பட்டு விடுவான்.

இருள் கவிந்த அந்தி நேரம். மிதிவண்டியை உருட்டிக்கொண்டு அவன் படலைக்கு வர, பின்னாலே ஓடிவந்த தங்கைச்சி கைகளில் பிடித்தாள், திரும்பினான். அக்கா அவனையே பார்த்தபடி வாசல் கதவோடு சாய்ந்திருந்தாள், தங்கை ஏக்கமாய் பார்த்தாள்.

“இண்டைக்கு மட்டும் தொழிலுக்குப் போகவேணாமண்ணா…….. எங்க கூடவே இருங்கண்ணா……” அவள் கேட்டது தங்களது மகிழ்வுக்காக அல்ல; அவனது ஓய்வுக்காக மட்டுமேதான். இரக்கமாய்க் கேட்டவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. தொண்டைக்குள் எதுவோ அடைக்க, குரலுக்குப் கண்ணீர்தான் வந்தது தங்கையை கட்டி அணைத்துக்கொண்டான். கட்டுப்படுத்தமுடியாத கண்ணீர் அவனுக்கும் வந்தது; அவளுக்கும் வந்தது. துன்பச் சிலுவைகள் சுமந்தனர் பிஞசுகள். துயரமே வாழ்வான வாழ்வு. தங்கையின் தலையில் தடவிக்கொண்டே அவன் சொன்னான். “இண்டைக்கு நான் போகலேண்ணா….. நாளைக்கு நாம் சாப்பிடமுடியாதம்மா!”

மிதிவண்டி அவனோடு உருளத் தொடங்கியது.

எதிர்பாராமல் ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு துடிக்கவிட்டுச் சென்றுவிட்டார் அன்பு அப்பா! அடுத்து வந்த நாளொன்றில், தனியாகத் தவிக்கவிட்டுக் காணாமல் போனாள் அம்மா! துயரக் கடலில் தூக்கிவீசப்பட்டனர் பச்சைக் குழந்தைகள். துடுப்பற்ற படகாய் மிதந்தவர்களுக்கு துணையாகி வாழ்ந்தான் குமார்; அவன்தான் எங்கள் லக்ஸ்மணன். தோழர்களின் அன்புக்குரிய பொம்மரண்ணன். சகோதரிகளை தன் நெஞ்சுக்கூட்டுக்குள் குடியிருத்தி வைத்திருந்த அன்புச் சகோதரன். சகோதரிகளின் ஒரு அசாதாரண பாசத்தைக் கொண்டிருந்தவன் அவன். தங்கச்சியில்தான் தனது உயிரையே வைத்திருந்தான். எல்லையற்ற அன்பால் பாதுகாத்து, எத்தனையோ கனவுகளோடு அவளை வளர்த்தான். அன்னையாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் – அவர்களுக்கு எல்லாமாகவும் அவனே வாழ்ந்தான். தனக்கு கிடைக்காத கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கத்தோடு அவன்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; அனுபவித்த கஷ்ரங்கள் சொற்பமல்ல. அவர்களுக்காக, சுமைகளில் அழுத்தியவனைப் பார்த்து, அவன் அறியாமல் அவர்கள் அழுவார்கள். கடுங்குளிருக்குள் அலைகளோடு மாரடித்துவிட்டு வருபவன், பகல் வெயிலுக்குள் வெளிநாட்டுக் காரர்களோடு அலைந்தான். பாவம். ஓய்வே இல்லை…… ஓயவே இல்லை……!

அனையிரவுச் சமரில் உலகம் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. எங்கும், எவரிலும் அதே பேச்சு; அதே சிந்தனை. புலிவீரர்களை ஈன்ற தாய்மார்கள் மட்டுமல்ல, திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் இருந்த தோழர்களும் தவித்துக்கொண்டிருந்தார்கள். பெரும் சமர்க்களம் ஒன்றில், இயக்கத்தின் பெரிய தொகுதி வீரர்கள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தக் களத்திற்கு அப்பால் நிற்கும் ஒரு போராளியாலும் கூட அமைதியாக இருக்கமுடியாது. அந்த மனப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்களும் விடுதலைப் புலிகளின் போராளியாக இருக்கவேண்டும். சந்திவெளித் திடலிலிருந்த ‘கிலோவண்’ முகாமின் போராளிகளும் இதே தவிப்போடுதான் தகவல் தொடர்புச் சாதனத்தைச் சூழ குழுமுவார்கள். ஒவ்வொரு காலையிலும் வரும் களநிலைச் செய்திகள், வீழ்ந்தவர்களின் நீண்ட பட்டியலைத் தருகின்றபோது – ஆன்மா துடிக்கும். அந்த ஒரு காலை; அவர்கள் காத்திருந்த வேளை – தரையிறங்கி நடந்த படையினரை எதிர்கொண்ட நேற்றைய சண்டையில் களப்பலியானோர் பெயர்கள்…………. வரிசையாய்……….. ஒன்றன்பின் ஒன்றாய்……….. அதிலொன்றாய்…….! “லெப்ரினன்ற் சுனேத்ரா! – வேலாயுதபிள்ளை ஜெயந்தி, கல்மடு, கற்……..! மட்டக்……..!……..” அவன் அதிர்ந்ததை………. முகம் இறுகியதை…….. நிலை குலைந்ததை…….அருகிலிருந்தவர்கள் கவனிக்கவேயில்லை. “அம்மான்! ……….. என்ர தங்கைச்சி………….” என்று விம்மியபோது, பக்கத்திலிருந்த தோழனின் கைகளில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதபோது, நண்பர்கள் விக்கித்துப் போனார்கள்.

கெட்டிக்காரி; கல்லூரியில் சிறந்து விளங்கியவள்; விவேகமானவள் – ‘ஸ்டெதஸ்கோப்’ வளைந்து தொங்கும் தோள்களோடு அவள் ஒய்யாரமாக நடந்து வருவதைக் கண்நிறையப் பார்க்க காத்திருந்தவன்; காலம் அவளது தோள்களில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுக் களத்திற்கு அனுப்பியபோதும் வருத்தப்படாதவன்.

“என்ற தங்கச்சி! என்ன விட்டுட்டுப்போட்.a…..” சொல்லிச் சொல்லி அழுதுகொண்டே இருந்தான்.

மற்றவர்களிடம் காணமுடியாத சில அபூர்வ தன்மைகளைக் கொண்டிருந்ததால் – மெதுவாக, ஆனால் உறுதியாக வளர்ந்து மேல்நிலைக்கு உயர்ந்த புரட்சிவீரன்.

தென் பிராந்திய யுத்த அரங்கில், தன்னிகரில்லாப் போர் நாயகர்களாக விளங்கிய குறிப்படத்தக்கவர்களுக்குள் – தானும் ஒருவனாக ஒளிர்ந்த சண்டைக்காரன்.

களமுனையில் மாறுபடும் தளநிலமைகளின் போக்குகளுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுபதிலிருந்து, பொறுப்பெடுத்த பணிகளை எவ்வளவு விரைவாகவும் எவ்வளவு சுலபமாகவும் ஆற்றிமுடிக்க இயலுமென்பதையே சிந்தித்து செயற்படுத்துவது வரை – எதிலெல்லாம் ஈடுபட்டானோ அதிலெல்லாம் – அவன், மதிநுட்பத்தோடு காட்டிய அசாத்திய துரிதத்திற்காகவே ‘பொம்மர்’ என்பது அவனது மறுபெயர் ஆனது. முற்றுமுழுதாகவே அது காரணப்பெயர்தான். ‘பொம்மரண்ணா! பொம்மரண்ணா……” என்று ஒரு கூட்டம், பொழுதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டே திரியும்.

அவன் –

அதிர்ந்து அனல் கக்கும் படைக்கலங்களின் முன்னால், துணிந்து களமாடும் ஒரு போர்வீரன்; நுட்பமாய் வென்றிடும் ஒரு தளபதி; நம்பி வேலைகளைக் கொடுத்துவிட்டுப் போனால், இம்மியும் பிழையாமல் முடித்திடும் செயல் வீரன். ஒருநாள் அவனுடன் பழகக் கிடைத்தாலும் ஒருநாளும் அழியாத நினைவாகும் நண்பன்; இடையறாத போராட்ட அனுபவத்தில் இனங்காணப்பட்ட நேர்த்தியான பொறுப்பாளன்; விரிவுரை நிகழ்த்துகையில் ஒரு படையியல் பேராசான்; தேடிக்கேட்டுப் படிக்கையில், ஒரு அடக்கமான மாணவன்; கட்டுப்பாடாய் – ஒழுக்கமாய் – தமிழினத்தின் பண்பாட்டு நெறிபிறழாத மனிதனாய் வாழ்ந்து, இயக்கத்தின் உயிரிய விழுமியங்களைக் காத்து நின்ற புலிகளின் போராளி; ஆலோசகனாகி, அறிவுரைகள் சொல்லி, தளபதி கருணாவின் தோளோடு தோள் நின்ற அந்தப் படைவீரன் – சாதனை செய்து, சரித்திரம் படைத்து, பிரபாகரன் என்ற தலைவனுக்கு பெருமையினைத் தந்த புலிவீரன்.

ஆயித்தமலை, வரம்புயரத்திற்கு நீருயர்ந்து நெல் உயர்ந்திருக்கும் வயற்சேனை. அது – நீண்டு விரிந்து கிடக்கும் பரந்த வெளி; நான்கைந்து கிலோ மீற்றருக்கு ஈ எறும்பே இல்லாத வெட்டைத் தரை. நெற்கதிரைத் தவிர மண் மட்டத்திற்கு மேல் மங்கலாயும் ஏதும் தெரியாத புவியமைப்பு. இந்தச் சேனை நிலத்தை சரி நடுவாகக் குறுக்கறுத்துப் போகிறது – கரடியனாற்றையும் உன்னிச்சையையும் தொடுக்கும் பெருந்தெரு. இந்த வீதியால் நாளாந்தம் நடை ரோந்து போனது. சிங்கள அதிரடிப் படையணி ஒன்று. இந்த வெட்டை நிலப்பாதையில் வைத்து இந்த அணி மீது தாக்குவது பற்றிக் கதைத்தால், தேர்ந்த ஒரு படைத்துறை நிபுணன் ‘முட்டாள்’ என்பான். ஏனென்றால் தாக்குதலுக்குச் சாதகமே இல்லாத தளநிலைச் சூழல் அது. ஆனாலும் தாக்குதலை நடாத்துவது என முடிவெடுத்தான் லக்ஸ்மணன். புலிகள் இயக்கத்துக்குரிய தனித்துவம் அதுதான்! ஏற்கனவே தலைவர் சொல்லியிருப்பது போல, “அதீதமான தன்னம்பிக்கைதான் எமது பலமும்; பலவீனமும்.” பாதகமானது எனக் கருதப்பட்ட அதே காரணத்தையே அவன் சாதகமாக்கினான். எதிர்ப்பை எதிர்பாராமல் எதிரி கவனயீனமாக நகரும் வேளை – அவதானமற்ற அலட்சியமாகவும், உசார் நிலையற்ற உல்லாசமாகவும் காலாற நடைபயிலும் அந்தப் பகைப் படையணி, ஒரு வாய்ப்பான இலக்குத்தான்!

தானே நின்று பொம்மர் வேவு பார்த்தான்; இடம் தேர்ந்து, நாள் குறித்தான்; வீரர்களை ஒழுங்குபடுத்தித் தயாரானான். தளபதி கருணா ஒப்புதல் தந்தார்; புறப்பட்டான்.

உருமறைப்பு – போரில் இது ஒரு முக்கிய அம்சம். தாக்குதல் நடவடிக்கைகளின் போது இன்றியமையாத ஒரு பாத்திரம் இதற்குண்டு. உருமறைப்பானது, எதிரிக்கு எம்மை மறைப்பதுடன் எமது தந்திரோபாயத்தையும் மறைக்கின்றது. அதனால், தாக்குதலின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் அதுவும் பெரும்பங்கு வகிக்கின்றது. களத்தைத் திறப்பது நாங்களாய் இருக்கவேண்டும்; அவனாய் அல்ல.

ஒவ்வொரு வீரனாக லக்ஸ்மணன் தானே உருமறைத்துவிட்டான். போரின் இந்தத் தனிக்கலை அவனுக்கு ஒரு கைவந்த கலை.

வரம்போடு வரம்பாக, நீரோடு நீராக, நெல்லொடு நெல்லாக, புல்லோடு புல்லாக…………. காத்திருந்தார்கள்; பாயத் தயாரான புலிகள் பதுங்கிக் காத்திருந்தார்கள். வந்து கொண்டிருந்தான் – சாகத் தயாரான வகையில் பகைவன் வந்து கொண்டிருந்தான்.

பார்க்கின்ற தூரத்திலிருந்து கேட்கின்ற அளவுக்கு நெருங்கினான். எட்டித் தொடக்கூடியவாறு……. இதோ பகைவன்! பக்கத்தில்!! கணக்கான இடைவெளி சரியான தருணம். வெற்றிக்குரிய மணித்துளி இதுதான்! தீப்பொறி கக்கும் ‘ஜீ திறீ’ யோடெழுந்து, ஆட்டத்தைக் கோலாகலமாக ஆரம்பித்துவைத்தான் லக்ஸ்மணன். ஆவேசத் தாக்குதல்! உயிர் சிலிர்க்க வைக்கும் சண்டைக் கணங்கள். வெட்டை வெளித் தரையில் இந்த உச்சிப் பகற்பொழுதில் எங்கிருந்தையா வந்தனர் புலிகள்……….? நடப்பதென்னவென உணரும் முன்னரே சுருண்டு விழுந்தனர் பகைவர். சிங்களக் கொமாண்டோ அணி தன்னில் 14 பேரை பிணங்களாய் இழந்தது. தப்பியோடியவர்கள் தப்பிப் போனமை ஏதோ கடவுள் கிருபையால்தான். என்ன அதிசயம் பாருங்கள், புலிகளுக்குச் சொந்தமான ஒரு துளி இரத்தமும் சிந்திடாமல் பெற்றெடுத்த வெற்றி அது!

‘அகத்தினழகு முகத்தில் தெரியும்’ என்பதற்கு, சாலப் பொருத்தமானவன் அவன். வெளித் தோற்றத்தால் என்றல்ல, உள்ளத்து அழகினால் எங்களது உள்ளங்களை ஊடுருவி வாழ்ந்த ஒரு அற்புதமான நண்பன். அவனது அகத்திலும் முகத்திலும் மிளிர்ந்த பேரழகு. எல்லோரையும் வசீகரித்ததென்றால் மிகையே அல்ல. இனம்புரியாத அந்த ஈர்ப்புச் சக்தியின் வீச்செல்லைக்குள் அகப்படாதவர்களே இல்லை. எவரையும் கவரும் அபூர்வம் அவனில் மறைந்து கிடந்ததை நாங்கள் கண்டோம். எங்கும், எப்போதும், எவ்விதமாகவும் எடுத்துக்காட்டிச் சொல்லக்கூடியவனாக வாழ்ந்த – மாண்பான மனிதன் லக்ஸ்மணன்.

ஒரு மேற்சட்டை, ஒரு காற்சட்டை, ஒவ்வொரு உள்ளாடையோடு ஒரு சாரம் கிழியக் கிழியத் தைத்து, எந்தச் சோலியுமில்லாமல் லக்ஸ்மணன் ஓராண்டைச் சமாளிப்பான். கந்தையாகக் கந்தையாகக் கசக்கிக் கட்டி – சிக்கனமாய் வாழ அவன் கற்றுத்தரவில்லை; அப்படியாக வாழ்ந்தவனை பார்த்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.

ஈடுபட்ட பணிகளிலெல்லாம் ஈடுபாட்டோடு இயங்கி – ஆற்றல், புலமை, திறமை அனைத்தையும் அர்பணித்து வரலாற்றில் முத்திரையைப் பதித்தவர்கள் எண்ணக் கூடியவர்கள்தான். லக்ஸ்மணனும் அவர்களில் ஒருவனாகி, தலைவரின் விருப்பத்துக்குரிய ஒரு போராளியாகி, அவரது சிந்தையைக் கவர்ந்து உயர்ந்தான். அந்த உயர்ச்சி “லக்ஸ்மணனைப் போல………” என அவர் முன்னுதாரணம் காட்டுகின்ற உன்னதத்தை அவனுக்குப் பெற்றுத் தந்தது.

அவன் நின்ற இடம் சிறப்பைப் பெற்றத்து. அவனிடம் நின்றதால் குழுவொன்று மதிப்பைப் பெற்றது. சமையலில் உருசை; விளையாட்டில் திறமை; வேலையில் வேகம்; சண்டையில் வீரம். “பொம்மரண்ணான்ர குறூப்”ற்கு தனிப் பெயர் இருந்தது. ஏனைய குழுக்களிலிருந்து வேறுபாடு அப்பட்டமாய்த் தெரிந்தது.

காடென்ன? மலையென்ன? நடுப்பகல் வெயிலென்ன? நள்ளிரவுப் பொழுதென்ன…? பொம்மரண்ணா வேலைக்கென்றால் பின்னுக்கு நின்றவர்கள் கிடையாது; பின்னுக்கு நிற்பாட்ட ஆளே கிடையாது.

பெரும் தாக்குதலுக்குப் புறப்படும் போது, அவனது ஒழுங்கமைப்பைப் பார்க்கலாம். தாக்குதற்திட்டம் பெரிதாகும் போது, தயார்ப்படுத்தல் மிகப் பெரிதாய் இருக்கும் தயார்ப்படுத்தல் பெரிதாகும்போது, அவனுக்கே அது ஒரு சுமையாய் குவியும். எல்லாச் சுமைகளையும் தானே ஏற்பதால், அவனது தளபதிகளுக்கு வேலைப் பளு குறையும்.

பானை சட்டி எடுத்து, பருப்பு அரிசி பொதி செய்யும், படைவீரருக்கு ரவை எண்ணி, மருந்துப் பெட்டியில் பொருள் பார்த்து……… ஒவ்வொரு ‘கிளைமோரு’க்கும் இடம் காட்டி, ஒவ்வொரு வீரனுக்கும் நிலை காட்டி, ஒவ்வொரு அங்குலமாய் வியூகம் போட்டு……………… சென்று, வென்று மீண்டும் வரும்வரை, ஒவ்வொரு அடியிலும் அவனது உழைப்பிருக்கும்.

லக்ஸ்மணன் – நீங்காத நினைவுகளாய் ஆழ்மனதில் பதிந்துபோன அடலேறு அவன். ஒன்றை நினைக்க இன்னொன்று வருகின்றது அதை நினைக்க வேறொன்று வருகின்றது. வருவதை நினைக்க அடுத்தடுத்து வருகின்றது ஓயாத எண்ணங்களாக, நினைவுகளின் தொடரசைவு……….. நினைவுகள் அழிவதில்லை; அழிவதேயில்லை.

பயிற்சியில் நாங்கள் சோம்பலாகி பம்மாத்து விட்டபோது பக்கத்தில் நின்று தெம்பாக்கி சேர்ந்து வளைந்தவன்; தளத்தைச் செப்பனிட நாங்கள் கிடுகு காவி கூரை வேய, கம்பு தூக்கி மூடை அடித்துக் கூடவே முறிந்தவன். பிழைகள் இழைத்து நாங்கள் தவறுகள் செய்தபோது, பக்குவமாய் அணுகி எம்மை அன்பால் திருத்தியவன்; தவறுகள் செய்துவிட்டு நியாயம் சொல்வோர் மத்தியில், தனது தவறுகளாச் சுட்டியபோது அமைதியாய் ஏற்றுக்கொண்டவன். தவறுகளுக்காக தண்டனைகள் தந்தபின்பும், மேன்மையாய் விளக்கி அறிவுரை சொன்னவன். கீழ் இருக்கும் போராளி பெரியதாய்ச் செய்தபோது, மேலே இருக்கும் தளபதியிடம் இனங்காட்டி விட்டவன். கண் திறப்பான் என்று நாங்கள் காத்திருந்தபோது, கண் திறக்கவில்லை அவன் காவியமாய் ஆனான்.

நினைவுகள் அழிவதில்லை; அவை அழிவதேயில்லை!

வாவிகளில் மீன்பிடித்து வந்து கறியாக்கித் தந்தான். உண்டு சுவைத்தோம். சண்டைக்குப் போய் ஆறுகடக்கத் திக்குமுக்காடியபோது ‘வெல்லங் கம்பில்’ கயிறு திரித்து ஆறு கடத்திக் கூட்டிப் போனான். வென்று மீண்டோம். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வீரனாகினான். சேர்ந்து மகிழ்ந்தோம். நீருக்குள் மீனாகி நீந்தினான். பார்த்து வியந்தோம். ஆறிழுத்துப் போன தோழர்கள் போனவர்தானென விக்கித்தவேளை, நீரிழுத்துப் போகாமல் மீட்டெடுத்துப் போட்டான் – அதிர்ந்து இன்புற்றோம். மேற்கத்தைய இசையில் கிற்றார் துணையுடன் சொற்றுணை வேதியனை….. மனியாய்ப் பாடினான். கூடிக் குதூகலித்தோம். பாலு அண்ணனோடு நடைப் போட்டியில் நாரி வருத்தத்தால் பின்தங்கிப் போனான். நாமும் வருந்தினோம். தளத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் தசைகளை முறுக்கி எண்ணையில் ஜொலித்தான். பார்த்து இரசித்தோம். காத்திருந்து நாங்கள் பரிதவித்துப் பார்த்திருக்க பூத்து விழி சிரியாமலே……… பூ உதிர்ந்து போனான் – உயிருக்குள் அழுகின்றோம்.

நினைவுகள் அழிவதில்லை; அவை அழிவதேயில்லை………………

சண்டை செய்யத் தெரிந்தவன். சண்டையைச் செய்விக்கவும் தெரிந்தவன். போராளிகளை நிர்வகிக்கத் தெரிந்தவன். போரை நிகழ்த்தவும் தெரிந்தான்……….. களங்களிற்குத் திட்டமிட்டத் தெரிந்தவன், சமர்களை வெல்லவும் தெரிந்தவன்……. லக்ஸ்மணன் ஒரு போரியல் வல்லுனந்தான்; போரின் ஒவ்வொரு கூறிலும் அவன் தலை சிறந்து விளங்கியவன்; படைத்துறையில் ஒரு நிபுணனாகவே திகழ்ந்தவன். அவன் பங்கேற்ற களங்களிலெல்லாம் ஒரு All Rounder ஆக சகலகலா வல்லவனாக மட்டுமல்ல, Man of the Battle ஆக – அந்தக் களத்தின் நாயகனாகவும் விளங்கியவன்.

‘ஜீ திறீ ஏ திறீ’ – (G3 A3) சுரிகுழல் துப்பாக்கிதான் சிறுரக சுடுகலன்களுக்குள் அவனது விருப்பத்தேர்வு. தலைவர் அவர்களுக்கும் அது பிடித்தமானது; ‘ஹெக்லர் அன் கொச்’ நிறுவனம் உருவாக்கிய பெருமையைப் பெற்றது.

சீறிப்பாயும் சன்னங்களினூடு ‘ஜீ திறீ’ யோடு அவன் முன்னேறும் விரைவு சண்டைக்காரர்களையே அசத்தும். சுட்டுக்கொண்டிருக்கும் பகைவனைச் சுட்டு வீழ்த்தும் வேகம்….. அந்த வேகத்தோடேயே அடுத்தவனைக் குறிவைக்கும் லாவகம்……. அதே சமநேரத்திலேயே வீரர்களை நகர்த்திச் செல்லும் திறமை……… பார்ப்பவர்களை அதிசயிக்கவைக்கும். தொய்ந்து கொண்டிருக்கும் சண்டைக்குள் அவன் புகுந்தால், புலிகள் பிய்த்துக் கொண்டு பாய்வார்கள். ‘வோக்கி’ யில் அவனது குரலைக் கேட்டாலே, அவர்களுக்குள் புதுத்தெம்பு புகுந்து விளையாடும். மூக்கென்றால் மூக்கு , கண்ணென்றால் கண், நெஞ்சென்றால் நெஞ்சு – சொல்லிச் சுடுவான் லக்ஸ்மணன் – மில்லி மீற்றரும் விலகாது; நம்பி வைத்திருந்த ‘ஜீ திறீ’யும் அவனுக்குத் துரோகம் இழைத்தது கிடையாது………. அவனொரு அசகாயசூரன்.

தளபதி கருணாவின் நேரடிக் கவனிப்பின் கீழிருந்த பிரத்தியேக தாக்குதலணியின் கொமாண்டராக லக்ஸ்மணன் நியமிக்கப்பட்டிருந்தான். மட்டு – அம்மாறை மாவட்டப் படையணியில் இவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அங்கு போரிட்டாலும் சரி, எங்கு போரிட்டாலும் சரி லக்ஸ்மணன் இல்லாமல் அந்தப் படையணி சண்டையிட்டதேயில்லை. அவனை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம்; எப்பேர்ப்பட்ட தாக்குதலுக்கும் திட்டமிடலாம். “பொம்மரண்ணன்ர குறூப் இறங்கியது எந்தப் பக்கம்………?” என்பதை அறிய, தாக்குதல் திட்ட வரைபடத்தைச் சுற்றி போராளிகள் ஆவலாய் நிற்பது வழமை. எதிரியின் பலமான அரண் என்று கருதும் மிகவும் இறுக்கமான ஒரு பகுதி லக்ஸ்மணனின் அணிக்கு ஒதுக்கப்படும். திட்டம் செயல் வடிவம் பெறும்போது, முதலில் வீழும் பகுதியும் அதுவாகத்தானிருக்கும். எங்களுக்கு ‘பொம்மரால்’ வான் வழியால் மட்டும்தான் பிரச்சினை. பகைவனுக்கோ, ‘பொம்மரால்’ கால் வைத்த இடமெல்லாம் பிரச்சினை. அவனது பேரைக் கேட்டாலே ஒரு கலக்கம்; ‘வோக்கியில்’ குரல் கேட்டாலே நடுக்கம்; எதிரிக்கு அவனென்றால் நடுக்கத்தோடு காய்ச்சல். இது ‘உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல’

உன்னிச்சையில் இடர்பாட்டுக்குள் சிக்கிய ஒரு பலமுனைத் தாக்குதல் மேஜர் லத்தீப்போடு இன்னும் சிலரை, எதிரியின் எல்.எம்.ஜி ஒன்று வீழ்த்திற்று. அந்த முனையில் வியூகம் குலைந்தது; சண்டை குழம்பியது; வீரர் தடுமாறிய நேரம். அந்த எல். எம்.ஜியின் நிறுத்தமற்ற கதறல் முழுத் தாக்குதளையுமே பிசகிவிடச் செய்யக்கூடிய இக்கட்டான தருணம். பொருத்தமானவனாகத் தேவைப்பட்டான் இன்னொரு முனையில் நின்ற லக்ஸ்மணன். எல்.எம். ஜி. அரணுக்கு நேரெதிராக ஒரு அணியை இறக்கி கவனத்தை திசை திருப்பிவிட்டு, எதிரியின் பார்வையில் படாமல் தூரத்தால் வளைந்து நகர்ந்து, அந்த அரனைப் பின்பக்கத்தால் நெருங்கி பிரரியில் தாக்கினான். அந்த எல். எம்.ஜி புலிகளின் கைக்கு வந்ததுடன் சண்டையின் போக்கு புலிகளின் சார்பாகத் திசைமாறிய பின்னர் – வெற்றியும் புலிகளின் கைக்கே வந்தது.

முதலாவது ஈழப்போரில் பிரசித்தி பெற்றது வடமராட்சித் தாக்குதல் – அப்போது மட்டக்களப்பிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு படையணியில் அவன் சாதாரண போர்வீரனாக பங்கேற்றான்; இரண்டாவது ஈழப்போரில் சரித்திரம் படைத்தது பூநகரித் தாக்குதல் – இப்போது மட்டக்களப்பிலிருந்து பங்கேற்ற ஒரு படையணியில் ஒரு பகுதிப் பொறுப்பாக லக்ஸ்மணன் படை நகர்த்தினான்.

நாகதேவன்துறை இறங்கு தளத்தை கடற்புலி வீரர்கள் வளைத்துக்கொள்ள – ஞானி மேடம் முகாமையும், அதற்கு அரணாய் அமைக்கப்பட்டிருந்த காவலரண் தொகுதிகளையும் உலோலடக்கிய கடற்படைத் தளத்தை மட்டக்களப்புப் படையணி முற்றுகையிட்டது.

தளத்தின் கிழக்குப் பாதுகாப்பு வியூகத்தில், கறுக்காய்த் தீவுப் பகுதி முன்னணிக் காவலரண் வரிசையைத் தகர்த்தெறிந்து பாதை திறந்து, ஞானிமடம் முகாமை அந்தப் பக்கத்தால் தாக்கவேண்டியது லக்ஸ்மணனின் தாக்குதற் பிரிவிற்குரிய பணி.

கிழக்குப் பகுதியால் இவர்கள் முகாமை நெருங்கும் அதே சமநேரத்தில் – தளத்தினது தெற்குப் பகுதியில் பூநகரியிலிருந்து வரும் பிரதான வீதியோரக் காவலரண்களை உடைத்துக்கொண்டு உள்நுழையவேண்டிய இன்னொரு தாக்குதற் பிரிவு, சிக்கல்பட்டுவிட்டது.

தென்பகுதியில் எதிரி பலத்த எதிர்பார்ப்பைக் காட்டியதால், அந்த அணி உட்புகுவது கைகூடவில்லை. சண்டை நீள அணி சேதப்பட்டுக் கொண்டேயிருக்க அணி பலவீனமாகிக்கொண்டே போனது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி லக்ஸ்மணணின் தாக்குதற் பிரிவுக்குத் துணையாக வந்து சேராததினால், முகாமைத் தாக்குவது சாத்தியப்படவுமில்லை.

சமர் நீண்டுகொண்டிருந்தது; வீரர்கள் வீழ்ந்துகொண்டிருன்தனர்; இரவு விடிந்துகொண்டிருன்தனர்; நிலைமை பிசகிக்கொண்டே போனது. உடனடியாக மாற்றுவழி ஒன்று தேடவேண்டிய கணங்கள், தென்பகுதியில் இறங்கிய தாக்குதலணிக்குப் புதுப்பலம் சேர்த்து ஒரு அகோரத் தாக்குதலை நிகழ்த்தி, அரண்களை உடைத் தெறிய வேண்டும். தளபதி பானு தீர்மானித்தபோது, மனக்கண் முன்னாள் லக்ஸ்மணன் நின்றான். இத்தகைய இறுக்கமான சூழ்நிலைகளை இளக்கிவிடுவதற்குரியவன் அவன்தான்.

கிழக்குப் பகுதியிலிருந்த அணி பின்னுக்கு எடுக்கப்பட்டு தென்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. குழுக்கள் துரிதமாக மீள ஒழுங்கமைகப்பட்டன. உடனடித் தாக்குதற் பிரிவொன்று உருவாக்கப்பட்டது. லக்ஸ்மணன் தான் கொமாண்டர். மூர்க்கத்தனமான ஒரு தாக்குதல், கணிக்கப்பட்ட நேரத்துக்குள் காரியம் முடிய தெற்குப் பாதுகாப்பு அமைப்பையும் உடைத்தெறிந்துகொண்டு, புலிகளின் தாக்குதற் பிரிவுகள் ஞானிமடம் முகாமைச் சுற்றி முற்றுகையிட்டன. பூரணமாகவே புலிகளுக்குச் சார்பான தலைநிலை பிறந்தது. எனினும் – பொழுது விடிந்து விட்டதால் முகாம் தாக்குதல் அடுத்த இரவுக்கு ஒத்திப்போடப்பட்டது.

மூன்றாம் நாள் மாலை – ஞானிமடம் கடற்படை முகாமை அழித்து, பூநகரி கூட்டுத்தளத் சமரை வென்று, புலிகளின் படையணிகள் வெற்றி வாகையொடு மீண்டுவர.

லக்ஸ்மணனை மட்டக்களப்பு – அம்பாறைப் பிராந்தியத்தின் துணைத் தளபதியாகத் தலைவர் அவர்கள் நியமித்தார்.

தென்பிராந்தியப் படையணி புனருத்தாரணம் செய்யப்பட்டு புதுமெருகூட்டப்பட்டு – புதிய நிர்வாகக் கட்டமைப்புகளுடன் மட்டக்களப்புக்கு புறப்பட்டபோது எவ்வளவு குதூகலத்தை அவனில் கண்டோம்.

தளபதி ராம் இதற்குத் துணைச் சேனாதிபதியாக அவன்……….

எத்தனை கனவுகள்……….. எத்தனை கற்பனைகள்……….. தென்தமிழீழமெங்கும் புலிக்கொடி கட்டும் ஆசைகள்……….

கட்டுமுறிவுக்குளம் தாக்குதலில் பாதிப் பொறுப்பெடுத்துச் சென்றவன், பூமாஞ்சோலைத் தாக்குதலில் முழுவதையும் பொறுப்பெடுத்தான். மட்டு நகரிலிருந்து ஏழே கிலோ மீற்றர் தூரம்தான். சற்றுச் சிக்கலான இலக்கு. சிக்கெடுத்துச் சிக்கெடுத்துப் பழகிப்போனவன் – முடிவெடுத்தான்.

படியாய்ச் சென்றனர்; பகையை வென்றனர். மீளத் திரும்பிட அவர்கள் தயாரான வேளை…….. அதிர்ந்து ஒரு வெடியோசையோடு அந்தத் துயரம் நிகழ்ந்தது!

போரெடுத்துப் போரெடுத்துப் பகைவனை அழித்துக்கொண்டேயிருந்த எங்களின் பொம்மரை, மறைந்து கிடந்த ஒரு பகையாளன் ‘கிரனேட்’டால் வீழ்த்திவிட்டான்.

எட்டாண்டு காலமாக ஓயாத புயலாகச் சுழன்றடித்த அந்த வீரனை, கைக்குண்டின் சிதறல்கள் சுயநினைவற்று வீழ்த்தின. “பொம்மரண்ணா……! பொம்மரண்ணா….!!” என்று மௌனமாய்க் கதறிய தோழர்களின் மடியில் சாவோடு போராடிய அந்த வீரன்.

மரணத்தை வென்றான்; மனங்களில் நிறைந்தான் எம்முள் நிலையான நினைவானான்!

அவனது பேர் சொல்ல – அவனது கைகளில் வளர்ந்த நூற்றுக்கணக்கான போராளிகள், தானை வீரர்களாகவும், தளபதிகளாகவும் இன்று அணிவகுத்துள்ளார்கள்.

மகிழடித் தீவிலிருந்து நெடுந்தீவு வரை தமிழன் வென்றெடுக்கும் நாளினுக்காக அவர்கள் போரெடுப்பார்கள்! போரெடுப்பார்கள்!! லக்ஸ்மணனின் புதைகுழி மீதினில் புலிக்கொடி நாட்டுவார்கள்.

எரிமலை (வைகாசி 1995) இதழிலிருந்து

About ehouse

Check Also

கேணல் கிட்டு

தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு ...

Leave a Reply