1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.பின்னர் விநியோகநடவடிக்கைக்காக லெப். கேணல்.டேவிட் அண்ணாவுடன் சிலமாதங்கள் தீவகப்பகுதியில் கடமையாற்றினார். ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து அதில் மிகவும் தேர்ச்சி பெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். பின்னர் ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.தொடர்ந்து கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றபோது கடற்புலிகள் அணியில் தனது பணியைத் தொடர்ந்தவன் கிளாலி கடல் நீரேரியில் மக்கள் போக்குவரத்திற்கான பாதுகாப்புச் சமரின்போது கடற்புலிகளின் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இரு ஆர்.பி.ஐிக்களைப் படகில் ஒரே தளத்தில் பூட்டி ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தி புதிய ஒரு சாதனையை படைத்த பெருமை அண்ணாச்சியையே சாரும் .படகுச் சாரதியாகவும் சென்று கிளாலிக் கடல் நீரேரிச் சமரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு தனக்கான ஒரிடத்தைப் பதித்தான்.
தொடர்ந்து பூநகரிச் சமரில் பங்குபற்றி பாரிய விழுப்புண்ணடைந்தான்.தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் மீதான வெற்றிகரத் தாக்குதலிலும் முக்கிய பங்காற்றிய அண்ணாச்சி .அதன் பின் கடற்புலிகளின் பொறியியற் துறையிலும் சிலகாலம் கடமையாற்றியிருந்தான். இவனதுசெயற்பாடுகளை கவனித்த சிறப்புத் தளபதி அவர்கள் இவனை மாவீரரான மேஐர் காமினி /சுதாகர் அவர்களுக்கு உதவியாக கடற்புலிகளின் முதுகெலும்பான படகுகளை தரையில் காவிச் செல்லும் படகுக்காவிகள் (டொக் ) அணியுடன் நின்றான் .படகுகளைத் தேவைக்கேற்ப இடங்களுக்கு தரையால் நகர்த்துவதே இவ்வணியின் பணியாகும் .
தொடர்ந்து காமினி அவர்களை சிறப்புத் தளபதி அவர்கள் தன்னுடன் அழைத்துச் செல்ல காமினி அவர்களின் இடத்திற்கு அண்ணாச்சி நியமிக்கப்படுகிறான்.
அந்த நேரத்தில் தான் யாழ் இடப்பெயர்வும் நடைபெற்றது .அதன் பின் போராட்டத்தை பலப்படுத்துமுகமாக சாலைப் பகுதியில் தொடர்ச்சியாக விநியோகம் நடைபெற அவ் விநியோக நடவடிக்கைக்கு படகுகளை வேகமாக நகர்த்துவது.அப்படகுகளை விநியோகம் முடிந்து அதிகாலை வரும்பொழுது வேகமாக அப்படகுகளை படகுக்காவியில் ஏற்றி உழவு இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பன இடங்களுக்கு நகர்த்தி விமானத்தாக்குதலுக்கு அப்படகுகள் உள்ளாகாமல் பாதுகாத்த பெருமை அண்ணாச்சியின் அணியையே சாரும். அவ்வளவிற்கு படகுகாவிகளை பராமரித்ததாகும். செம்மலைத் தொகுதி ,வட்டுவாகல் தொகுதி, சாலைத் தொகுதி ,கடற்சண்டை மற்றும் விநிேயோகப் படையணிகளின் படகுகள் நகர்த்துவது மற்றும் படகுக் காவிகள் படகுக்காவிகளை இழுக்கப் பயண்படுத்தப்படும் உழவு இயந்திரங்களுக்கான பொறுப்பாளனாகவும் செயற்பட்ட அண்ணாச்சி சாலை யிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோக நடவடிக்கைக்கும் சென்றுவந்தான் .
இரவு விநியோக நடவடிக்கைக்குச் சென்று வந்தாலும் பகலில் படகுக்காவிகளின் வேலைகளை மிகவும் திறம்படச் செய்தான் . இக்காலப்பகுதியில் குறிப்பிட்டளவான இளையபோராளிகளைக் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். அப்போராளிகளை திறம்பட பயிற்றுவித்த அண்ணாச்சி அப்போராளிகளை தனது சொந்தச் சகோதர்களைப் போல பார்த்துக் கொண்டான்.ஒரு தடவை தலைவர் அவர்களை சந்தித்த பொழுது படகு நகர்த்துவதற்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களிடமே கேட்டு வாங்கிக்கொண்டார்.கடலில் சண்டைபிடிப்பது இலகு ஆனால் படகுக்காவிகளை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்வதென்பது இலகுவானதல்ல அப்படியிருந்தும் அண்ணாச்சி செயலால் செய்து காட்டினான்.
நீண்டகடலனுபவம் கொண்ட அண்ணாச்சி விநியோக நடவடிக்கைக்கு படகின் எந்த நிலையாகிலும் சென்று வந்தார்.எந்த வேலையாகிலும் மிகவும் திறம்படச் செய்வதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே எத்தனையோ போராளிகளை தனது துறையில் வளர்த்துவிட்ட ஒரு வீரன் சகபோராளிகளை அண்ணாச்சி என்று அழைத்து பண்பாக கதைப்பதிலும் அதுமட்டுமல்லாமல் நகைச்சுவையாக கதைப்பதிலும் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே.01.10.1999.அன்று கப்பலிலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் இன்னும் ஒன்பது போராளிகளுடன் வீரச்சாவடைகின்றார்.
இவர் வீரச்சாவடைந்தாலும் இவரால் பயிற்றப்பட்ட போராளிகள் இறுதிவரை அப்பணிகளில் நினைத்துப் பார்க்கமுடியாதவாறு மிகத் திறமையாகச் செயற்பட்டனர்.அண்ணாச்சி நினைவாக கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவினால் கட்டப்பட்டபடகு”அண்ணாச்சி”என்ற அவரின் பெயருடன் நீண்டகாலம் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவருக்கும் அவருடன் வீரச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் இந்நாளில் எமது வீரவணக்கத்தினை செலுத்துவோம்.