Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / கேணல் தமிழ்ச்செல்வி

கேணல் தமிழ்ச்செல்வி

“அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு மனசுவந்திச்சு…. அதுவும் உங்கட சொந்த தங்கச்சிக்கு ஒரு பச்சை மண் குழந்தை இருந்திருக்கு நீங்க அதப்பற்றி ஒரு நாள் கூட சொல்லவே இல்லையம்மா… ஏனம்மா… உங்களுக்கு உங்கட தங்கச்சி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையாம்மா…, தமிழ்ச்செல்வி வீரச்சாவு அடைந்த பிறகு அவான்ர குழந்தையை நீங்களும் கைவிட்டுட்டுவந்திட்டீங்களேயம்மா… அந்தப்பிள்ள என்னம்மா செய்திருக்கும்… ஏனம்மா நீங்க இவ்வளவு நாளும் அந்தப்பிள்ளையைத் தேடேல்ல… ஆனா நான் மட்டும் உங்கள மாதிரி இருக்க மாட்டன். என்ர அண்ணாச்சிக்கு ஏதுமெண்டா என்ர உயிரைக் கொடுத்தாவது அவனக் காப்பாற்றியிருப்பன்… ஆனா…., நீங்க அப்படியில்லையே..அம்மா… உங்கட தங்கச்சியின்ர கைக்குழந்தையைக்கூட விட்டிட்டு வந்திட்டீங்களே… எனக்கு கவலையா இருக்கம்மா…. உங்களில கோபம் கோபமா வருகுதம்மா….”அவள் படபடத்தாள்.

அன்று தான் இணையத்தளத்தில் கேணல் தமிழ்ச்செல்விக்காக வெளிவந்த பாடல் வரிகளை அவள் கேட்டிருந்தாள். அதில்தான்அவருக்கொரு குழந்தை இருந்தது என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. அதிலிருந்து அம்மாவை அவள் அரிக்கத்தொடங்கி விட்டாள். ”எப்பயம்மா… நாங்க தமிழ்ச்செல்வி அக்கான்ர பிள்ளையைஎப்படித் தேடப்போறம்… அந்தப்பிள்ள இப்ப நல்லா வளர்ந்திருக்குமே அம்மா… நாங்க எங்க போய் எப்படித்தேடப் போறம்….?
அவள் அம்மாவை விடுவதாக இல்லை. அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

”செல்லம் அம்மாவும் தேடிக்கொண்டு தான் இருக்கிறன் கண்ணா… கண்டிப்பா ஒரு நாள் அந்தப் பிள்ளை எங்களுக்கு கிடைப்பா… நீ கவலைப்படாத செல்லம்”
அம்மா மகளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆனால் அந்த ஆறுதலில் எல்லாம் அமைதியாகிப் போகும் ரகம் அவளல்ல…

அவள் பிடிவாதக்காரி, வீட்டின் கடைக்குட்டி, கடைக்குட்டி என்பதை விட அவள் தான் அந்த வீட்டின் குட்டித்தேவதை, இளவரசி, மகாராணி, எல்லாமே, அவளுக்கொரு அண்ணா இருந்தான் அவனுக்கும் அவளுக்குமான வயது இடைவெளி கொஞ்சம்அதிகமாகவே இருந்தது.

இதனாலோ என்னவோ அவன் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தான். தங்கச்சிக்காக எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்துவிடுவான். அவளோடு போட்டி போடுவதற்கோ சண்டையிடுவதற்கோ வீட்டில் யாரும் இல்லை. எல்லோருமே அவளிடம்சரணாகதி அடைபவர்களாகத்தான் இருந்தார்கள். அம்மா, அப்பா, அண்ணா மூவருக்குமே அவள்தான் உலகமாகத் தெரிந்தாள்.

அதனாலோ என்னவோ பயம் என்பது அவள் அகராதியில் இல்லை. வீட்டில் யார் தவறு செய்தாலும் நேருக்கு நேர்நின்றுநியாயம் கேட்பாள்.
அப்படித்தான் இன்று அம்மா மாட்டிக்கொண்டார்.”என்னதான் நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும் உங்கள என்னாலமன்னிக்கவே முடியாதம்மா… நீங்க செய்தது தப்பு, தப்புத்தான்… அவளது நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முட்டிவெடித்த கண்ணீர்த் துளிகளை அவள் அறியாது மெல்லத் தட்டி விட்டார் அம்மா.

அவள் சிறுமியாக இருந்தாலும் நல்ல புத்திக்கூர்மைமிக்கவள். எல்லாவற்றையும் துருவித்துருவி அறியும் ஆர்வம் உடையவள். ஏதாவது ஒன்றைப்பற்றிய தேடல் அவளுக்குள் வந்து விட்டால், அதைத்தேடி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவள் விடமாட்டாள். பள்ளியிலும் அவள் நல்ல கெட்டிக்காரி. சிறு வயதில் இருந்தே நடனக்கலையில் அவளது ஆர்வம் அதிகமாகவேஇருந்தது. அதனால் நடனம் பயிலத்தொடங்கியிருந்தாள். மகளின் ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் அம்மா தன்தங்கையைக் கண்டு கொண்டிருந்தாள். மகளிடம் இருக்கும் பிடிவாதம், கோபம் வரும் போது பல்லை நெறுமிக்கொண்டு பேசுவது, எந்தளவுக்கு கோபமும் பிடிவாதமும் அவளுக்குள் இருக்கிறதோ அதற்கு மேலாய் அவள் காட்டும் அன்பு என அவளது குண இயல்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்செல்வியை நேரடியாகப்பார்ப்பது போன்றே அம்மாவுக்குத் தோன்றும்.” அது சரியம்மா… உங்கட தங்கச்சி, அதுதான் தமிழ்ச்செல்வி அக்கா ஏனம்மா இயக்கத்துக்குப்போனவா…..” ”போராடத்தான்….” அப்படியெண்டா….?”

அவளின்ர வயதுக்கு எப்படி விளக்கம் தருவது… எப்படிச் சொன்னால் அவளுக்குப் புரியும்… அம்மா ஒரு கணம் தயங்கினார்…
”இதுக்குக் கூட பதில் தெரியாதா… ஏய் அம்மா நோண்டி…அம்மா நோண்டி…” அவள் கைகளைத்தட்டித் துள்ளினாள்.

“நான் சொல்லட்டா அம்மா…. எங்கட நிலங்களப் பிடிக்கவாற எதிரிகள விரட்டியடித்து…, எங்கட தமிழ் மக்கள மகிழ்ச்சியா தங்கடதங்கட வீட்டில, தங்கட தங்கட ஊரில நின்மதியா வாழ வைக்கத்தான் போராடப் போனவா… சரியா அம்மா…” அம்மாவின்கன்னத்தைச் செல்லமாக வருடினாள்
அம்மாவுக்கு ஆச்சரியம்…..! இந்த வயதில் அதுவும் உரிமைக்காகத் தூக்கிய ஆயுதங்கள் மௌனித்துப்போன சூழலில் வளர்ந்துவரும் இந்தக் குழந்தை எவ்வளவு தெளிவாக இருக்கிறது.

அம்மா வியந்து போனாள். தன் வளர்ப்பில் தவறில்லை, எங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தேசத்தின் நினைவுகளோடும், சொந்தமண்ணின் வாசனையோடும், நியாயமான விடுதலைப்போர் பற்றிய தெளிவோடும் மகள் வளர்க்கப்பட்டிருக்கிறாள்,அதுவே அம்மாவுக்குப் பெரும் ஆத்ம திருப்தியாக இருந்தது.
தன் மகளை நன்றாக வளர்த்து, நல்ல உயர் கல்வி கற்க வைத்து, நல்ல பட்டம் பதவியில் இருத்தி, அவளுக்கென்று வளமானஎதிர்காலமொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம், கனவு எல்லாமே…அந்த இலட்சியம்நிறைவேறும் வரை கண்ணுக்குள் பொத்தி வைத்து அவளைப் பாதுகாக்கும் பெரும் கடமையில இருந்து அம்மாஓயப்போவதில்லை.

கேணல் தமிழ்ச்செல்வி, எத்தனையோ ஈகவரலாறுகளையும் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் தாங்கி நிற்கும் எமதுவிடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல். இறுதிக்கட்டப்போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி, களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது. கூடநின்ற தோழிகள், அணித்தலைவர்கள் என போராளிகள் தங்கள் உயிர்களைக்கொடுத்துப் போராடிக்கொடிருந்தனர். தமிழ்ச்செல்வியின் கையிலோ குழந்தை, அதனால் பின்னரங்கில் இருந்து கொண்டு போராளிகளைக் களமுனைக்குத்தயார்படுத்துவதும் அவா்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைச் சீர்செய்வதும் என களப்பணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் தனது போராட்டகால வாழ்க்கையில் பெரும்பகுதியை களமுனையிலேயே கழித்தவள். அதிலும் கனரக ஆயுதங்களோடும், அணிகளை வழிப்படுத்தும் கொம்பனித்தலைவியாகவும் இருந்து சண்டைகளைநேருக்கு நேர் எதிர்கொண்ட அவளால், இப்போது களமுனைக்கு அணித்தலைவர்கள் தேவைப்படும் சூழ்நிலையில் பின்னரங்கில்நிற்பது என்பது முடியாத காரியம்.

அவளது மனச்சாட்சி என்ற தராசில் ஒரு பக்கம் அவளது குழந்தை, மறுபக்கம் அவளது கடமை. இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தாள், இறுதியில் அவளது கடமை உணர்வே வென்றது. கணவனிடம் பேசி முடிவெடுத்தாள், அவளது குழந்தையை சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு களமுனைக்கு விரைந்தாள்.
மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுஷாக்கா குழந்தைகளுடன் இருக்கும் போராளித் தாய்மாரைக்களமுனைக்கு அனுப்புவதை ஒரு போதும் விரும்புவதில்லை. அந்தத் தாய்மாருக்கு ஏதாவது நடந்தால் பிள்ளைகளின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
ஆனாலும் அவள் பிடிவாதமாக இருந்து களமுனையிலே தன் பணியைத் தொடர்ந்தாள்.
91812164_154400389368735_5288315793304453120_n
இறுதிக்காலப் போரரங்கு வித்தியாசமாகஇருந்தது. எதிரி எந்தப்பக்கத்தால் நகர்கிறான், எந்தப் பக்கத்தால் உடைப்பை ஏற்படுத்துவான் என எதிர்பார்க்க முடியாததாகக்களம் அமைந்திருந்தது. ஏனெனில் மக்களின் வாழ்விடங்கள் மிகக் குறுகிவிட்டிருந்தன. எந்தப்பகுதியில் மக்கள் செறிவாகவாழ்கிறார்களோ அந்தப்பகுதிகளே எதிரியின் இலக்குகளாக இருந்தன. அப்படித்தான் ஒரு முறை தேவிபுரம் பகுதியில் விதுஷாக்காவோடு அவள் நின்றிருந்தாள். அவர்கள் நின்றது சிறியதொருவெட்டைப்பிரதேசம். முன்னால் அடர்ந்த காடு. வெட்டையைக்கடந்து சற்று முன்னதாய் இருந்த மரமொன்றில் ஏறிசண்டைக்கான கட்டளை மையத்தைத் தயார் செய்வதற்காக தொலைத்தொடர்பு அன்ரனாவைக் கட்ட அவள் முயற்சி செய்துசெய்துகொண்டிருந்தாள். சில நொடிகள் தான், அவர்கள் நின்றிருந்த இடம் எறிகணை மழையில் நனைந்தது.

தலைநிமிர்த்தி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத சூழல், தமிழ்ச்செல்வி மரத்திலிருந்து எப்படிக்குதித்தாள், எப்படித்தனக்கான பாதுகாப்பைத்தேடினாள் என்பது தெரியவில்லை. அவளுக்குப்பக்கத்தில் சிறிய பாதுகாப்பகழிக்குள் இருபோராளிகள் வீரச்சாவை அடைந்து விட்டனர்.

எறிகணைத்தாக்குதல் சற்று ஓய்ந்துவிட்டதால் துப்பாக்கி ரவைகள் தாறுமாறாக பறந்தன. அடுத்து அந்த இடத்தில் எதிரியின்நகர்வு ஆரம்பித்து விட்டது. எதிரி மிக நெருங்கி விட்டிருந்தான். அந்த இடத்தில் இரு போராளிகளின் வித்துடல் கிடந்தது. அதைஅப்படியே விட்டு விட்டு வர அவள் தயாராக இல்லை.
எதிரி மிக நெருங்கி விட்ட சூழலிலும் விதுஷாக்காவை பாதுகாத்து பத்திரமாக பின்னகர்த்தி விடுவதில் பிடிவாதமாக இருந்துஅவரை அனுப்பி விட்டு அந்த இடத்தில் நின்று சண்டையிட்டு அந்த இரு போராளிகளின் வித்துடலையும் தமிழ்ச்செல்வி துாக்கிவந்திருந்தாள். அதுதான் தமிழ்ச்செல்விக்கே உரிய பண்பாகும்.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின்ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடுவந்த எதிரி அசைக்க முடியாது திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது.

நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது. அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்குவெளியேஇருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும்இருந்தாள். அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று.

ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர்.
அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது.
91500394_154400422702065_3176977318757269504_n
இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது.
04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை.
நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள்.

கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்றுநினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது.

”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது.
அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான்இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச்சரணடையும்படி அறிவிப்புச்செய்வது மிகத்தெளிவாக கேட்டது.

அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது.
அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவதுஅதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டுமே அவள் மனதில் இருந்தது.

இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித்தொடர்பாடலாக இருந்தது. அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர்.

அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள்.
அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்விஎன்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்டாள்.

1991,இன் பிற்பகுதி, உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த பள்ளித் தோழிகளான கேணல் தமிழ்ச்செல்வியும் மேஜர் எழிலரசியும் விடுதலை நோக்கிய பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர்.

மணலாற்றுக் கானகத்தே மகளிர்படையணியின் 20வது பயிற்சி முகாம், 27.02.1992 இல் தொடங்கிய போது அந்தப்பயிற்சி முகாமில்தான் தோழிகள் இருவரும் தமக்கான ஆரம்பப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர்.

பயிற்சிகளின் போது அனைவருக்குமே துப்பாக்கிகளுக்குப்பதிலாக கொட்டன்களேவழங்கப்பட்டிருந்தன.ஆனால் கனம்இல்லாத அந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு செல்வதற்கு தமிழ்ச்செல்வி தயாராக இல்லை. பாடசாலை நாட்களிலேயே விளையாட்டுத்துறையில் மிகத்திறமையான மாணவியாக அவள் இருந்தவள். பயிற்சி ஆசிரியர்களிடம் சென்று தனக்குப் பாரம்கூடிய குத்திகள் தரும்படி கேட்டாள்.

பயிற்சி ஆசிரியர்கள் அவளுக்கு எவ்வளவோ எடுத்து கூறினர். இந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு தான் ஓட வேண்டும். பயிற்சிகளின் போதும் அதைத்தான் வைத்திருக்க வேண்டும் என்றனர். ” அது பரவாயில்லை,என்னால முடியும்” ஒரு பிடியாக இருந்து பாரம் கூடிய குத்தியை வாங்கி விட்டாள்.

எல்லோருமே பயந்தார்கள். இவள் என்னென்று இந்தக்குற்றியை வைத்துக் கொண்டு பயிற்சி எடுக்கப்போகிறாள் என்று. ஆனால் அவளுக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை.

மிக இலகுவாக எல்லோரையும் போல என்பதை விட மிகச்சிறப்பாக அவள் பயிற்சிகளைச் செய்தாள். அடிப்படைப் பயிற்சிமுகாமிலேயே அவளது திறமை பயிற்சி ஆசிரியர்களால் இனங்காணப்பட்டுவிட்டது.

அவர்களது பயிற்சி முகாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, ”ஒபரேசன் கஜபார” என்ற இராணுவ நடவடிக்கையை எதிரிஆரம்பித்திருந்தான்.

17.03.1992 மணலாற்றின் நாயாறு,அளம்பில், ஆகிய பகுதிகளை வல்வளைப்புச் செய்யும் நோக்கில்கடல்,வான்,தரையென மும்முனைகளாலும் தாக்குதலைத்தொடுத்தபடி இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கியிருந்தது.

இந்தத்தாக்குதலை முறியடிப்பதற்கான சண்டைகள் மணலாறு – முல்லை மாவட்டதளபதி லெப்டினன் கேணல் அன்பு அவர்களது தலைமையில்நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன் போது இந்தத் தாக்குதலுக்கு உதவி அணியாகப்பங்காற்ற பயிற்சி முகாமில் இருந்து மிகத்திறமையாகச் செயற்படக்கூடிய 90 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இதில், தமிழ்ச்செல்வி முதலாவது ஆளாக இருந்தாள். முன் பின் தெரியாத அடர்ந்த காடு முன் அனுபவம் இல்லாத களமுனைப் பயிற்சிகள் கூட நிறைவு பெறாத நிலைமை இருந்தபோதிலும் ஒரு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

தற்காப்புக்கான பயிற்சியுடன், துப்பாக்கி குறிபார்த்துச்சுடுவது, குண்டெறிவது, ஆயுதங்களைக் கழற்றி பூட்டுவது, திசைகாட்டியின் உதவியுடன் திசைகளை அறிவது என அடிப்படை இராணுவப்பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

பயிற்சியின் போது தமிழ்ச்செல்வி காட்டிய வேகமும் நிதானமும், எல்லாவற்றையும் உடனுக்குடன் புரிந்து, புரியாதவர்களுக்குஅதைத் தெளிவு படுத்தும் விதமும் அவளை 9 பேர் கொண்ட அணிக்கு தலைவியாக்கியது.

கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடித்து இராணுவத்தினரைப் பழைய நிலைகளுக்கே விரட்டியடிக்கும் சமரில் எதிரிகள் தடுமாறி தாம் கொண்டு வந்த கனரக வாகனங்களிற் பூட்டிய கனரக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஓட்டம் பிடிக்கத்தொடங்கினர்.

இந்த நிலையில் கனரக வாகனத்தில் பூட்டியிருந்த 30 கலிபர் ஆயுதம் ஒன்றை தமிழ்ச்செல்வி மிக விரைவாகக் கழற்றிஎடுத்தாள்.
உண்மையிலேயே 30 கலிபர் எப்படி இருக்கும் அதை எப்படிக் கையாளுவது, அதை எப்படிக்கழற்றுவது என்று எதுவும்அவளுக்குத் தெரியாது. ஆனால் அவளது முயற்சியும் சக போராளிகளின் உதவியும் அதைக்கழற்றி எடுக்க வைத்தது. அந்த முதற் களமே அவள் யார் என்பதைத் தளபதிகளுக்கு இனங்காட்டியது.

சண்டைக்கு பின்னர் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட அணியில்அவளும் ஒருத்தியானாள்.

தமிழ்ச்செல்வியின் ஆசை, கனவு, இலட்சியம் எல்லாமே ஒன்றாகத்தான் இருந்தது. எப்போது பயிற்சி நிறைவடையும், எப்போதுகனரக ஆயுதத்துடன் தான் சண்டைக்குச் செல்வது என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது.

அந்த எண்ணமும், அவளது மன உறுதியும் அவளைக் கனரக ஆயுதத்தில் சிறப்பு தேர்ச்சி பெற வைத்தது. அவளது திறன் கண்டு லெப்.கேணல் அன்பு அவர்களால் 30 கலிபர் ஆயுதம் ஒன்று அவளுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதன் பின்னர் மணலாற்று அணியில் தமிழ்ச்செல்வி பெரும் சண்டைக்காரி ஆகிவிட்டாள்.இராணுவ ரோந்து அணிகள் மீதானபதுங்கித்தாக்குதல்களில் தனக்கென்றோர் இடத்தைப்பிடித்தாள்.

அளம்பிற் பகுதி தொடர் காவலரண்கள் மீதான தாக்குதல்,அளம்பிற் பகுதி மீட்புச்சமர், கொக்குளாய், கொக்குத்தொடுவாய்முன்னரங்கக் காவலரண்கள் மீதான தாக்குதல்,மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பு என மணலாற்றுப்பகுதியில்இடம்பெற்ற அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தமிழ்ச்செல்வியின் கை ஓங்கியிருந்தது.

விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மிகக்குறுகிய காலத்திலேயே பெருவளர்ச்சிப் பாதையை நோக்கி அவள் பயணிக்கத்தொடங்கினாள். அவளது இந்த வளர்ச்சிக்குக் காரணமே துணிவு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, என்கின்ற மூன்றுமே.
முடியாது என்ற சொல் அவள் அகராதியில் கிடையாது போனது. இதன் பின்னர் அவளது செயற்பாடு யாழ் மண்ணை நோக்கிநகர்ந்திருந்தது.அங்கு அவளது முதற்களம் ”யாழ்தேவி” இராணுவ நடவடிக்கை எதிர்ச்சமராக இருந்தது. தொடர்ந்து பூநகரிப்படைத்தளம் மீதான அழித்தொழிப்புச்சமரிலும் அவள் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டாள்.

1994ஆம் ஆண்டின் ஆரம்பக்காலப்பகுதி, விடுதலைப்போராட்ட வரலாற்றில் இதுவரை காலமும் பெண் போராளிகளுக்கானகனரக ஆயுதப் பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கி வந்திருந்தனர்.

இந்த நிலமையை மாற்றி பெண் போராளிகளுக்குப் பெண் போராளிகளே கனரக ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆசிரிய அணிஒன்றை உருவாக்குவதற்காக கனரக ஆயுதங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் தமிழ்ச்செல்வியும் ஒருத்தியானாள்.

இவர்களுக்கான ஆசிரியப் பயிற்சி எழுதுமட்டுவாளில் அமைந்திருந்த ”கஜன்” பயிற்சிப் பாசறையில் இடம்பெற்றது. இதன் போதுதமிழ்ச்செல்வி 30கலிபர் 50 கலிபர் ஆயுதங்களில் ஆசிரியப் பயிற்சியை எடுப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாள். ஆரம்ப காலத்தில் பொதுவாக ஆண் போராளிகள் பயிற்சி வழங்கும் போது பெண் பிள்ளைகளால் சில கடின பயிற்சிகளைசெய்ய முடியாது என்ற நிலைப்பாடுஇருந்தது. அதுகும் 50 கலிபர் ஆயுதம் அதன் முக்காலி என்பவற்றைத்தூக்கிப் பயிற்சி எடுப்பது என்பதுகடினமானதொன்று. அதனால் இதனை இவர்கள் இலகுவாகச் செய்யமாட்டார்கள் என பயிற்சி ஆசிரியர்கள் கருதியிருந்தனர்ஆனால் இந்த நிலைப்பாட்டைப் பெண் போராளிகள் தவிடுபொடியாக்கினர்.

அதிலும் தமிழ்ச்செல்வியின் ஆற்றல் கண்டு பயிற்சி ஆசிரியர்கள் ஒருகணம் பிரமித்துப் போயினர். ஒரு முறை எவ்வளவு துாரத்துக்கு பெண் போராளிகளால் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு பயிற்சி எடுக்க முடியும் எனஆசிரியர்கள் பரீட்சித்துப் பார்த்தார்கள். நாகர்கோயில் சந்தியில் இருந்து ஆரம்பமான அந்தப் பயிற்சியில் தமிழ்ச்செல்வியின் தோளில் 75 கிலோ கிராம் நிறையுடைய 50 கலிபர் ஆயுதத்தைப்பொருத்தும் முக்காலி இருந்தது.ஓய்வில்லாமல் நிலைகள் எடுத்தெடுத்து 10கிலோ மீற்றர்கள் கடந்துநிறைவுற்றது அந்தப்பயிற்சி.

அதுவரை அந்தக் கடினப் பயிற்சியில் இருந்து அவள் ஒரு துளி கூட அசந்ததில்லை. பாரத்தைத் தூக்கித் தூக்கி தோள்கள்சோர்ந்தது.ஓடியோடிக் கால்கள் ஓய்ந்திருந்தது. ஆனாலும் மனம் தளராது ஓர்மத்துடன் பயிற்சி ஆசிரியர்களாலே நம்ப முடியாதஅளவுக்கு அவள் செய்து காட்டினாள்.

அப்போது பயிற்சி தந்த ஆசிரியர் தனது வாயாலேயே பாராட்டினார்.”உங்களை நான் தவறாக எடை போட்டு விட்டேன், உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.

தமிழ்ச்செல்வி ஒன்றை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நுாற்றுக்கு நுாறு வீதம் மிகத்திறமையாகச்செய்து முடிப்பாள். எந்தக் கடினச் சவாலாக இருந்தாலும் எந்தத்தயக்கமும் இன்றி நேருக்குநேர் நின்று முகம் கொடுப்பாள். இதுதான் அவளுக்கே உரிய சிறப்பியல்பாக இருந்தது.

இந்தப்பயிற்சியின் நிறைவில் தமிழ்ச்செல்வி சகல ஆயுதங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தாள். பயிற்சிக்காலத்திலேயே சூரியக்கதிர் 1,2, மண்டைதீவுச்சமரென அவளது களப்பணி விரியத்தொடங்கியது.

கனரகப் பயிற்சி ஆசிரியராக அவள் இருந்த போது பயிற்சி நேரத்தில் அவளிடம் இருக்கும் கண்டிப்பு பயிற்சி நிறைவடைந்தமறுநொடியே அவளை விட்டுப்பறந்து விடும்.போராளிகளோடு மிக இறங்கி அவர்களது பிரச்சினை, குறைநிறைகளைக்கண்டறிவதில் அவளுக்கு நிகர் அவளேதான். அவள் போராளிகளை அணுகும் முறையே வித்தியாசமானது.”செல்லம்” ”குஞ்சு” பெரியவர்கள் என்றால் ”அக்காச்சி” என்றும் அன்பு பொழிய அழைக்கும் அவளது பேச்சு வழக்கு அவளது சொந்த இடமானகற்சிலைமடுவின் மண்வாசணையைச்சொல்லும். அந்த அன்பான பேச்சை இறுதிவரை அவள் கைவிட்டதே இல்லை. பொதுவாகப் போராளிகளுக்கு அவள் பயிற்சி ஆசிரியராக வருவது விருப்பமான ஒன்றாக இருந்தது. அதனால் போராளிகள்விரும்பும் நல்லாசானாக அவள் இருந்தாள்.

1995ம் ஆண்டு புலிப்பாச்சல் சண்டைக்கான பயிற்சிகளை வழங்கியதோடு களமுனைக்கும் கனரக ஆயுதங்களைஒருங்கிணைத்துச் சண்டை செய்திருந்தாள்.அதன் பின்னர் யாழ் நகரை விட்டு வெளியேறும் வரை 50 கலிபர் ஆயுதத்தோடுகளத்தில் நின்றிருந்தாள்.

1996ம் ஆண்டு மகளிர் படையணி 2ஆம் லெப் மாலதி படையணியாக பரிணாமம் பெற்ற போது மாலதிபடையணியின்சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுஷாக்காவுடன் அவளது செயற்பாடு தொடர்ந்தது.

ஓயாத அலைகள் 1 எனப் பெயரிடப்பட்டு சிறிலங்காப்படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டிருந்த முல்லைச் சமரில்உதவியணிக்குப் பொறுப்பாளராக களம் சென்றிருந்தாள். தொடர்ந்து ”சத்ஜெய” இராணுவ நடவடிக்கை,கிளிநொச்சி நகர்,பரந்தன்சண்டையென ஓய்வின்றி அவள் உழைத்தாள்.

தமிழ்ச்செல்விக்கென்று ஒரு ராசி இருந்தது. எந்தச்சண்டைக்குச் சென்றாலும் விழுப்புண்தாங்காமல் குறைந்தது ஒரு கீறலாவதுபடாமல் களமுனையை விட்டு அவள் திரும்பமாட்டாள்.

”ஜெயசிக்குறு” என்ற பெயரில் எதிரி பெரும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது அந்தக்களமுனைக்குச் செல்லும்போராளிகளுக்கான கனரக ஆயுதப்பயிற்சிகளை வழங்கி அவர்களைக் களமுனைக்குத் தயார்படுத்தும் பணியோடு நேரடியாகவேகளத்திலும் நின்றாள்.

புளியங்குளம் புரட்சிக்குளம் என்றுகூறுமளவுக்கு போராளிகளின் போரியல் நடவடிக்கை மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தபுளியங்குளச்சமரில் கொம்பனியை வழிப்படுத்தும் 2ஆவது அணித்தலைவியாகச் செயற்பட்டிருந்தாள். இதுவே புதூரில் ஒரு கொம்பனியைக் கொண்டு நடத்தும் அளவுக்கு அவளை உயர்த்தியது. புதூரில் இருந்து இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சிகளை ஒரு அங்குலம் கூட நகரவிடாது போராளிகள் ஓர்மத்துடன் நின்று சமராடிய போது மிகச் சிறப்பாகச் சண்டைகளை வழிப்படுத்தினாள். நீண்டு விரிந்த ஜெயசிக்குறுவைப் போலவே இவளது களப்பட்டியலும் நீண்டு கொண்டேசென்றது. தாண்டிக்குளம், மன்னகுளம் என எல்லாச்சமர்களிலும் அவளது பங்கும் இருந்தது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் எதிர்சமரிலும் கொம்பனியை வைத்து திறம்படச் சண்டையிட்டாள்.

அவளது போரியற் திறனை தளபதிகள் மட்டுமன்றி,தேசியத் தலைவரே பாராட்டும் அளவுக்கு அவளது செயற்பாடுவிரிந்திருந்தது. மன்னார் பள்ளமடுச்சண்டை அவளது போரிடும் திறனுக்கு இன்னும் வலுச்சேர்த்தது. இங்கும் கொம்பனித்தலைவியாகவே எதிரியைத் திணறடித்துக் கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான சண்டையாக இருந்தாலும் பதற்றமின்றிக் கட்டளைகளை வழங்கிசண்டையிடும் போராளிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தாள்.

அவளது குரல் தொலைத்தொடர்புக்கருவியில் ஒலித்தாலே போராளிகளுக்குள் புதுவேகம் பிறக்கும். அதுவே அவர்களைத்திறம்படச் சண்டை செய்ய வைக்கும் அவளது திறன் விரைவிலேயே அவளை மாலதி படையணியின் தளபதியாக மாற்றியது.

தளபதியாக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது களமுனையில் இருந்து அவளைப் பின்னுக்கு எடுக்க வேண்டியிருந்தது. அதனால் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி விதுஷாக்கா அழைத்தும்அவளுக்கு களமுனையை விட்டு வருவதற்கு விருப்பம் இருக்கவில்லை. ”நான் சண்டையிலேயே நிக்கிறன் பின்னுக்கு வரவில்லை” என விதுஷாக்காவிடம் தெரிவித்தாள். அந்த இடத்தில் விதுஷாக்காமிக இறுக்கமான கட்டளை ஒன்றை பிறப்பித்தார். சண்டையில் நிற்பதாக இருந்தால் குப்பி,தகட்டைக்கழற்றிவிட்டு நிக்கும் படியும்இல்லை என்றால் பள்ளமடுவில் இருந்து தனது இடத்துக்கு நடந்து வரும்படியும் பணித்திருந்தார்.

தமிழ்ச்செல்விக்கு களமுனையை விட்டு வருவது என்பது முடியாத காரியமாக இருந்தாலும் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பதுஎவ்வளவு முதன்மையானது என்பது அவளுக்குப் புரியும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தண்டனையை மகிழ்வோடு ஏற்றுமன்னாரில் இருந்து நடந்து வந்தே விதுஷாக்காவைச் சந்தித்தாள்.

மாலதி படையணியின் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்ச்செல்விக்கு நிர்வாகப் பணி என்பது புது அனுபவமாகவேஇருந்தது.போராட்டத்தில் இணைந்த காலப்பகுதியில் இருந்து ஓய்வின்றிச் சண்டை,பயிற்சி, சண்டை,பயிற்சி, என மாறிமாறிஉழைத்தவளுக்கு நிர்வாகப்பணி என்பது பெரும் சவால் தான். ஆனால் சவால்களையே சாதனையாக்கிக் காட்டிய அவளுக்குநிர்வாகப்பணிகளிலும் சிறப்பாகச் செயற்பட முடிந்தது.

தளபதியாக இருந்த போதிலும் அவளது செயற்பாடு களமுனைகளைச் சுற்றிச்சுற்றியே இருந்தது. போராளிகளின் முக்கியத்துவம் புரிந்து நல்ல நிர்வாகியாக அவள் இருந்தாள். இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு திருமண பந்தத்தில்தன்னை இணைத்துக்கொண்டாள்.

நிர்வாகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த பூவண்ணன் என்கின்ற போராளியே அவளது வாழ்க்கைத்துணையாக அமைந்தார். போரியலில் எப்படித்திறம்படச் செயற்பட்டாளோ அதேபோல் இல்லற வாழ்விலும் அவள் தன் கடமைகளைச்சரிவரச்செய்தாள். அவள் இல்லறத்தின் நல்லறப்பயனாய் தாய்மை அடைந்திருந்த நிலையிலும் தனது பணியிலிருந்து சிறிதளவு கூடபின்னிற்கவில்லை. குழந்தை பிறந்த பின்னரும் அவளது செயற்பாடு களம் சார்ந்ததாகவே இருந்தது. கடமைக்குச் செல்லும்பெண் போராளிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தளிர்கள் என்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றுஅமைக்கப்பட்டிருந்தது.

அங்கு தான் தமிழ்ச்செல்வி தனது குழந்தையைப் பகல் பொழுதில் விட்டுவிட்டுக் களமுனைகளுக்குச் சென்று வருவாள். எவ்வளவு தான் கடமைகள் இருந்தாலும் அவள் தனது குழந்தைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்கத்தவறியதில்லை. ஆனால் இறுதிப் போரரங்கு சூடுபிடித்திருந்த நேரத்தில் தானொரு குடும்பப்பெண், தான் ஒரு குழந்தைக்கு அம்மா என்பதையும் கடந்து, தான் ஒரு போராளி என்கின்ற உணர்வே அவளிடத்தில் மேலோங்கி இருந்தது.

அதுவே அவளது இறுதி மூச்சு வரை தன் உயிரிலும் மேலாய் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கத் தூண்டியது.

விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடு வந்த எதிரி திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது.

நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது.

அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்கு வெளியே இருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது.

தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும் இருந்தாள்.

அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று.

ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர்.

அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது.

04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை.

நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள்.

கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்று நினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது.

”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது.

அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான் இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச் சரணடையும்படி அறிவிப்புச் செய்வது மிகத்தெளிவாக கேட்டது.

அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது.

அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவது அதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது.

இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது.

அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரைமேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர்.

அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள். அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள்.

விடுதலை எனும் பெரு இலட்சிய நெருப்பை நெஞ்சினில் சுமந்து ஓயாது அல்லும் பகலும் அதற்காகவே தன்னை அர்ப்பணித்தகேணல் தமிழ்ச்செல்வி காலம் உள்ளவரை தமிழர் தம் நெஞ்சங்களில் மாவீரத் தாயாய் வாழ்வாள்.

அ.அபிராமி

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான புதியவன்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட ...

Leave a Reply