Home / ஆவணங்கள் / ஆவணங்கள் / இறுதிவரை பயணித்த ஈழநாதம்

இறுதிவரை பயணித்த ஈழநாதம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ்.

ஆயுத மௌனிப்பின் பின்னணியில் களம் இழக்கப்பட்டுள்ள நிலையிலும் தனது இயக்கத்தை முற்று முழுதாக நிறுத்திவிடாது 28 ஆவது அகவையிலும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழ் இணைய பரப்பில் தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்து வந்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு எவ்வாறு தமிழின விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்ததோ அவ்வாறே ஈழநாதம் மக்கள் நாளிதழும் பல்வேறு நெருக்கடிகளையும் இடையூறுகளையும் சந்தித்தே மக்கள் பணியாற்றியிருந்தது.

களமுனையில் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்த படையணிகளுக்கு நிகராகவே ஈழநாதம் மக்கள் நாளிதழும் இனவழிப்பு யுத்தத்தின் கொடும் விளைவுகளை எதிர்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த காலப்பகுதியில் கூட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொண்டு பாரிய சிரமத்திற்கு மத்தியிலேயே இயங்கிவந்தது. கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளையிலும் நிலத்திற்கு கீழ் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட நிலக்கீழ் அறையில் வைத்து அச்சு இயந்திரங்களை இயக்கி பத்திரிகை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் இருந்தது.

யாழ் குடாநாடு எதிரியின் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டதனை அடுத்து எமது விடுதலைப்போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் பெருமளவிலான மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்து சென்ற வேளையில் மக்கள் பணியாற்றிய ஈழநாதமும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்து சென்றதன் மூலம் தொடர்ச்சியாக தனது இயக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.

வன்னியிலும் தனது இயக்கத்தினை இடைவிடாது மேற்கொண்டு வந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மூலமும் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டது. விமானத்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் என இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களையும் எதிர்கொண்டே தனது மக்கள் பணியினை செய்து வந்திருந்தது.

வன்னியின் முக்கிய பகுதிகள் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அதற்கேற்றவாறு தனது வளங்களையும் நகர்த்தி பாதுகாப்பான பகுதிகளில் நிலைப்படுத்தி தொடர்ந்து இயங்கிவந்தது. தாயக மண்ணை ஆக்கிரமித்து வந்த சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் மட்டுமல்லாது இயற்கை சீற்றங்களையும் எதிர்கொண்டே தனது மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

வன்னி பிராந்தியத்தில் மழை காலம் எப்படி இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. வீதிகளை இடையறுத்து பாய்ந்தோடும் மழை வெள்ளம், சூறைக்காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது வேர் சாய்ந்தும் முறிந்து விழுந்தும் பிரதான வீதிகளினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்த சூழலிலும் அந்த இயற்கை சீற்றத்திற்கு மத்தியில் சென்று செய்திகளை சேகரித்தும், சேதங்களை புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தியும் பதிவு செய்து மகத்தான பணியாற்றி வந்திருந்தனர் ஈழநாதம் பணியாளர்கள்.

விடுதலைப் புலிகளையும் மக்களையும் பிரித்து தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தும் நோக்கில் வன்னி மீது சிறிலங்கா அரசு விதித்திருந்த பொருளாதாரத் தடை மற்றும் போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் தடையின்றி வெளிவந்து கொண்டிருந்தது என்றால் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட குணம் கொண்ட பணியாளர்களது உறுதியான செயற்பாடே காரணமாகும்.

தடைகள் பல கடந்து தினசரி ஈழநாதம் மக்கள் நாளிதழாகவும், வாரா வாரம் வெள்ளி நாதமாகவும் தனது இயக்கத்தினை தொடர்ந்து வந்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாட்டினை பாராட்டி சிறப்பிக்கும் முகமாக 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்வில் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். ஈழநாதம் மக்கள் நாளிதழின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்திருந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தார்.

நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது முதல் உக்கிரம் அடைந்து முக்கிய முக்கிய நகரங்களை கைவிட்டு பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கிளிநொச்சியில் இருந்து பல இடங்களிற்கு மாறி மாறி நகர்ந்து சென்று இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை சென்று 2009 மே 10 ஆம் திகதி வரை பெரும் சவால்களுக்கு மத்தியில் வெளிவந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ்.

தமிழீழ விடுதலைப் புலிகளது ஆளுகைக்குள் இருந்த பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய பகுதிகள் சில நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக குறுகலடைந்த போதும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளிவந்து கொண்டே இருந்தமை அதன் போர்க்குணத்தின் வெளிப்பாடாகும்.

சிறிலங்காப் படைகளின் குண்டு வீச்சில் முற்றாக தகர்க்கப்படும் வரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் தனது இயக்கத்தினை தொய்வேதுமின்றி தொடர்ந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 19 ஆண்டு காலம் விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்து வந்திருந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்ட இறுதிக் காலப்பகுதிவரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்த நிலையில் 2009 மே 10 ஆம் திகதியுடன் தனது இயக்கத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இக்காலப்பகுதியில் தடைகளை கடந்து ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிறப்பாக வெளிவர அதன் பணியாளர்கள் ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பே மூல காரணமாகும். அந்த வகையில் இறுதிவரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் குடும்பத்துடன் நகர்ந்து இயங்கி வந்த ஏழு பணியாளர்கள் தமது உயிர்களை உரமாக்கியுள்ளார்கள்.

சசிமதன்(மதன்) – பத்திரிகை விநியோகஸ்தர்.

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பண அறவீட்டாளர் ஆகவும் முல்லைத்தீவு மாவட்ட விநியோகஸ்தர் ஆகவும் கடமையாற்றியிருந்தார். முள்ளியவளை வற்றாப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரணைப்பாலை ஆனந்தபுரத்தில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

நல்லையா மகேஸ்வரன் – புதுக்குடியிருப்பு பணிமனை முகாமையாளர்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஈழநாதம் பணிமனையின் முகாமையாளராக கடமையாற்றிய இவர் முன்னாள் புதுக்குடியிருப்பு பணிமனை விளம்பர முகாமையாளராகவும் இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் தனது பணியினை ஆரம்பித்திருந்த இவர் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சிறிலங்கா படையினரின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்திருந்தார்.

இதனால் பல ஆண்டுகள் பெரும் உபாதையுடனே ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருந்தார். பாதிப்பிற்குள்ளாகியிருந்த இவரது கால் அகற்றப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றிவந்திருந்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் எந்தவிதமான நிகழ்வுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பிரதேச செய்தியாளர்களுக்கு அறிவித்து அது தொர்பான செய்திகளை அவர்களிடம் இருந்து சேகரித்து கிளிநொச்சி பணிமனைக்கு அனுப்பி வைப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இவர் முன்பு புதுக்குடியிருப்பில் இருந்தபோது நூலகம் ஒன்றில் நூலகராக கடமையாற்றிய நிலையில்தான ஈழநாதம் பணிமனைக்கு வந்திருந்தார். நூலகராக கடமையாற்றிய அனுபவத்தில் ஈழநாதம் நாளாந்த பத்திரிகை வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொறுப்பை சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.

பொக்கணைப்பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்த போது அங்கிருந்த விளம்பரப் பணிமனையில் கடமையினை முடித்து விட்டு 2009.03.06 அன்று மாலை 5.30 மணியளவில் பச்சைப்புல்மோட்டை பகுதி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்திருந்தார். மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

மரியநாயகம் அன்ரன்பெனடிக்(அன்ரன்) – பத்திரிகை விநியோகஸ்தர்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் வசித்து வந்திருந்தார். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடப்பெயர்புகளிலும் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. தருமபுரத்தில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இடம்பெயரும் போது சிறிலங்கா படையினர் கிட்டிய தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். இத்துடன் பலத்த எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈழநாதம் நிறுவனத்தின் அச்சு இயந்திரங்களை பாதுகாப்பாக நகர்த்துவதில் முன்னின்று பாடுபட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

2006 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு சாலைக்கான பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்த இவர் மிக குறுகிய காலம் ஆகிலும் மரணமடையும் வரை சிறப்பாக பணிபுரிந்து வந்திருந்தார். வட்டுவாகலுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உந்தூருளியில் சென்று கொண்டிருக்கையிலேயே சிறிலங்கா படையினரின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். இவரின் மனைவி மற்றும் 9 வயது மகளும் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவா மேரிடென்சி – கணனி பக்க வடிவமைப்பாளர்.

ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் 2003 இல் இருந்து கணனி பக்க வடிவமைப்பாளராக கடமையாற்றி வந்திருந்த கிளிநொச்சி ஜெயந்தி நகர் சேவியர் கடைச் சந்தியைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து பொக்கணை பகுதியில் வசிக்கும் போது சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருந்தார். இதன்போது இவரது கணவரும் கொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு வயது குழந்தை உயிர் தப்பியிருந்தது.

ஜெயராசா சுசிபரன்(சுகந்தன்) – இயந்திரப் பகுதி முகாமையாளர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் 1991 ஆம் ஆண்டு முதல் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருந்தார். ஆரம்ப காலத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்த இவரது நன்னடத்தை காரணமாக அச்சு இயந்திரப் பகுதியில் பணிமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

யாழ் குடாநாட்டின் மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பினையடுத்து 1995 இல் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது ஈழநாதம் நிறுவனமும் தன்னை இடப்பெயர்விற்கு உட்படுத்திய போது குடும்பத்துடன் இவரும் வன்னி நோக்கி நகர்ந்திருந்தது மட்டுமல்லாது எங்கெல்லாம் ஈழநாதம் நிறுவனம் இடம்பெயர்ந்ததோ அங்கெல்லாம் தனது குடும்பத்தையும் நகர்த்திக் கொண்டேயிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி, கிளிநொச்சி, வட்டக்கச்சி, பழைய முறிகண்டி, கரிப்பட்டமுறிப்பு, புதுக்குடியிருப்பு பின்பு கிளிநொச்சி என இடப்பெயர்வுகளை சந்தித்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் கிளிநொச்சியை கைவிட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்குவதென்ற முடிவின் பின்னணியில் மீண்டும் தொடர் இடப்பெயர்விற்கு தன்னை ஆட்படுத்தியிருந்தது. இதன் விளைவாக 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து தொடங்கிய இடப்பெயர்வு பயணத்தில் தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், புதுமாத்தளன் வெளிப்பகுதி, பொக்கணை வெளிப்பகுதி, இரட்டைவாய்க்கால் வரைக்கும் இணைபிரியாது தன்னை இணைத்தக் கொண்டு அளப்பரிய சேவையினை ஆற்றியிருந்தார்.

சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக மேற்கொண்டு வந்த தமிழின அழிப்பு போர் தீவிரம் பெற்ற காலகட்டத்தில் ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் பலத்த எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தத என்றால் இயந்திரப் பகுதி முகாமையாளராக கடமையாற்றிய இவரது பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

அதாவது, சுதந்திரபுரம் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்த சம நேரத்தில் உடையார்கட்டு பகுதிக்கு அச்சு இயந்திரங்களை இடமாற்றும் பணியும் மறுபுறமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடையார்கட்டு பகுதிக்கு நகர்த்தப்பட்ட அச்சு இயந்திரங்களை ஒழுங்கமைக்கும் வேலையில் இவர் ஈடுபட்டிருந்த வேளையில்தான் சுதந்திரபுரம் மேல் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து சுதந்திரபுரத்தில் பகுதியளவில் இயங்கிக்கொண்டு நடைபெற்ற பத்திரிகை அச்சிடும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கருதி ஊழியர்களும் உடையார்கட்டு நோக்கி நகர்த்தப்பட்டிருந்தனர்.

பத்திரிகை அச்சிடும் பணியில் தடங்கல் ஏற்பட்டு பத்திரிகை விநியோகம் நின்றுவிடக்கூடாதென்ற ஓர்மத்துடன் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுதந்திரபுரம் பகுதியில் இயங்கிவந்த இடத்திற்கு சென்று பத்திரிகையினை அச்சிட்டதுடன் நின்றுவிடாது தானே விநியோகம் செய்திருந்தமை அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையின் எடுத்துக்காட்டாகும்.

போர் உதவிப்படை வீரராகவும் தேச கடமையினை ஆற்றிவந்ததுடன் தன்னை முழுமையாக ஈழநாதம் மக்கள் நாளிதழின் இயக்கத்திற்கும் அர்ப்பணித்து உழைத்த சுகந்தன் அவர்கள் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்த போது 2009.04.25 அன்று காலை 9.30 மணியளவில் அலுவலக பணி நிமித்தமாக வலைஞர்மடம் தேவாலயப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தினரின் குறிசூட்டுப் பிரிவினரின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2003 ஆம் ஆண்டு பெப்பரவரி 19 ஆம் திகதி நடைபெற்ற ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவின் போதான பணியாளர் கௌரவிப்பில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது கையினால் இவரும் பரிசில் பெற்றுக்கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

மரியருளப்பன் அன்ரனிகுமார் (அன்ரனி குரூஸ்) – களஞ்சியப் பகுதி முகாமையாளர்.

1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் பரந்தன் 11 ஆம் ஒழுங்கையில் வசித்து வந்திருந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் வாகன சாரதியாக தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் நிறுவனத்தின் களஞ்சியப் பகுதி முகாமையாளராகவும் கடமையாற்றி வந்த இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களை நகர்த்துவதில் இரவு பகல் பாராது அயராது பாடுபட்டிருந்தார். இறுதியில் 2009 மே 14 அன்று சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) – கணனி பக்க வடிவமைப்பாளர்.

ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் கணனி வடிவமைப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டிருந்த இவர் இறுதிவரை ஈழநாதம் பத்திரிகையின் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்திருந்தார். வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்த போதிலும் இறுதி இடப்பெயர்வு காலத்தில் ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இயங்கிய இடங்களிலேயே தங்கியிருந்து பணியாற்றியிருந்தார்.

இயந்திரப் பகுதி முகாமையாளராக கடமையில் இருந்த சுகந்தன் 2009.04.25 அன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலில் உயிரிழந்த பின்பு இயந்திரப் பகுதியின் பணியினையும் ஏற்றுக்கொண்டு இரவு பகல் பாராது பணியாற்றியிருந்தார். அச்சு இயந்திரத்தை இயக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் அன்ரனிகுமாருடன் இருந்த வேளையில்தான் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர் அச்சுறுத்தலான வேளையிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் இயங்குதலுக்கு உறுதுணையாக இருந்த இப் பணியாளர்களது உயிர்த்தியாகத்துடன் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் தாயக மீட்புப் போரில் ஈடுபட்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்கள்.

ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பொறுப்பாளர்களான மேஜர் அழகன், லெப்டினன்ட் கேணல் பார்த்தீபன், லெப்டினன்ட் கேணல் அன்புமணி ஆகியோருடன் உதவி ஆசிரியராக கடமையாற்றிய கப்டன் ஜெயேந்திரன், ஈழநாதம் பத்திரிகையின் நீண்டகால பணியாளரும் போர் உதவிப்படை வீரருமான சுகந்தன், மூத்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான வ.அருள்சோதிநாதன் மற்றும் ஈழநாதம் மக்கள் நாளிதழின் வார வெளியீடான வெள்ளிநாதம் வெளியீட்டின் உதவி ஆசிரியரும் நாட்டுப்பற்றாளருமான ஜெயசீலன் ஆகியோர் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியுள்ளார்கள்.

இவ்வேளையில், ஈழநாதம் பத்திரிகை நிறுவன பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த சசிமதன், நல்லையா மகேஸ்வரன், மரியநாயகம் அன்ரன்பெனடிக், வவா மேரிடென்சி, மரியருளப்பன் அன்ரனிகுமார், சங்கரசிவம் சிவதர்சன் மற்றும் சத்தியநாதன் ஆகியோரை இவ்வேளையில் நினைவு கூறுவதுடன் ஈழநாதம் மக்கள் நாளிதழ் இறுதிவரை வெளிவருவதற்கு அயராது பாடுபட்ட பணியாளர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்களிற்கும் நன்றி கூறி நிற்கின்றோம்.

– இரா.மயூதரன் –

தாயக விடுதலைப் போராட்டம் மற்றும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகெலை நடவடிக்கைகள் என்பவற்றின் சாட்சியாக திகழ்ந்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் விகிபாகம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஒன்றாகும். அவ்வாறு முக்கியத்துவம் மிக்க ஊடகப்பணியாற்றியிருந்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பயணம் குறித்து 2013 ஆம் ஆண்டில் இரா.மயூதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரை அவரது ஆலோசனையுடன் செம்மைப்படுத்தப்பட்டு இணைக்கப்படுகிறது…



மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் பற்றிய செய்தி

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 1200 இற்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தி பல மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த ...

Leave a Reply