Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்)

உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்)

பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான்.
எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான்.
கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம்.
132016773_2046060852200903_6076943939923746203_n
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு.
இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது.
களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள்.
அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது.
பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது.
இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே.
மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார்.
எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது.
அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம்.
அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன.
தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான்.
எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும்.
அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார்.
கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது .
இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும்.
முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் ….
“எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா.
என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான்
முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய்‌ வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை.
நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.”
“ஓ நல்ல ஐடியா …..
நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன்.
தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது .
ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம்.
இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம்.
அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது.
எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது .
ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது.
நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும்.
ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும்.
அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம்.
செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று….
அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை.
விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில்.
அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை”
யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது
ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன்.
வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “
அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் .
ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது.
“நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி .
சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம்.
நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது .
மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான்.
வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது.
ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது.
அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை .
மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது.
ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான்.
பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம்.
அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது.
இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை .
ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது,
எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம்.
அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள்.
நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது .
ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது .
மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது.
மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான்
“எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே.
ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள்.
இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன.
அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர்.
மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை .
மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது.
பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல்.
சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும்.
வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும்.
அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் .
அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது.
அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார்.
நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்….
பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார்
இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம்.
அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார்.
கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள்.
எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை.
அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன்.
முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான்.
ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும்
“வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர்.
எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன்.
“ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான்.
“ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “
“.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம்.
இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு.
ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது.
“கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன்.
வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ
இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0➖வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்)
நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும்.
மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான்.
“மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் .
பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன்.
என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான்.
அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன்.
காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது.
வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்‌புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்‌ஆண்டு தன்னை போராளியாக‌மாற்றிக்கொள்கின்றன்‌. தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது ‌புதல்வனே ஞானேஸ்வன் ‌என்ற இயற்பெயர்கொண்ட மணி‌ இவனது மூத்த‌ அண்ணா 1988இல் போராளியாகி‌1992 ம் ஆண்டு ‌இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்‌என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு ‌அக்காவும்‌ தம்பி‌ அண்ணா என்று ‌பாசத்தில் கரைந்த‌ள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்க‌புறப்பட்டான்‌ ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி
மனித நேய கன்னிவெடி‌ அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது
அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான்.
உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள்.
அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும்‌ 12.08.2006 அன்று கப்டன்‌ மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் .
எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே….
மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும்.
கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம்.
சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும்.
ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான்.
இது ஒரு கதையில்லை
இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்?
மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம்.
பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது.
காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள்.
மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது.
குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த ‌மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள்
-நன்றி-
மிதயா கானவி.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply