Home / தமிழீழ கட்டமைப்புகள் / அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!

அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது.

எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே?

கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், ||அன்புச்சோலை|| என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன்.

கடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் வடுக்களை இன்றும் சுமப்பவர்கள் எங்கள் முதியவர்கள். தொடர்ச்சியான இடப்பெயர்வின் அவலங்களினாலும், போர் சிதைத்த அவர்களின் பொருளாதாரத்தினாலும், தமது குடும்பங்களை இழந்து, உறவுகளைக் கைவிட்டு, ஏதிலிகளாக, யாருமற்றவர்களாக எம் சமூகத்தில் கைவிடப்பட்ட முதியோர் தொகை ஏராளம்.

திக்குக்கொன்றாய் சிதறிவிட்ட தம் உறவுகளைத் தேடியலைந்து, களைப்படைந்து, கைவிடப்பட்டு, தமது ஊரிழந்து, வீடிழந்து, தொழிலிழந்து. யாருமற்று கொடிய முதுமையிலும், தீராத நோய்களினாலும் யாருமற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலாலும் நொந்து அலைந்த எம் முதியவர்கள் யாருமற்று வாழ்ந்த வாழ்வு அவலமானது.

” நாங்க யாழ்ப்பாணத்தில இருக்கேக்க ஆமியால என்ர ஒரு மகள் சுட்டுக் கொல்லப்பட்டுட்டாள் ”

” மற்ற மகள் நாட்டை காக்க போராடப் போயிட்டாள் ”

” இடம்பெயர்வில் என்ர கணவனும் செத்திட்டார். உறவுகள் எல்லாம் திக்குக்கு ஒண்டாய் திசைக்கொண்டாய் பிரிஞ்சு போச்சுதுகள். நான் தனிமரமா ஆகிட்டன் ”

அவர்தான் யுத்தம் மிகக் கொடுமையானதாக இருந்த 2001ஆம் ஆண்டுகளில், அன்புச்சோலை உள்வாங்கிய முதலாவது தாய்.

2001 ஏப்பிரல் 19 வன்னி மண்ணில் யுத்த மேகங்கள் கருமை சூழ்ந்து தன் உச்ச தாண்டவத்தை ஆடிய நேரம், போரினால் கைவிடப்பட்டு, யாருமற்று அனாதைகளாகப்போன எம் தேசத்து முதியவர்களுக்கான பராமரிப்பு இல்லம் ஒன்றை ஆரம்பிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் பணித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மாவீரர் குடும்பநலன் காப்பகத்தினால், முல்லைத்தீவின் முள்ளியவளைப் பகுதியில்|| அன்புச்சோலை மூதாளர் பேணலகம் || உதயமாகியது.

அன்றைய போர்ச் சூழலில், மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த இல்லத்தின் நிலைபற்றி அப்போது அங்கிருந்த தாயொருவர் சொன்னார்,

” அப்ப சரியான சண்டை சூழ்நிலை தம்பி, எல்லாரையும் போலதான் நாங்களும் சரியாக் கஸ்ரப்பட்டம். ஆனா, எங்களையும் எல்லோரும் கைவிட்டு விடேல்ல, எங்களையும் பார்க்க தம்பியவை இருக்கினம் எண்ட நிம்மதியிலிருந்தம்.”

ஆரம்பத்தில், தேச விடுதலைக்காய் தம் குழந்தைகளை இழந்து, போரின் கோரத்தினால் தம் உறவுகளையும் இழந்து தனித்துப்போன ஆறு பெற்றோர் இனங்காணப்பட்டு அவர்களுடன் அன்புச்சோலை உதயமானது.

2002ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு, தற்போது கிளிநொச்சி நகரிற்கு அண்மித்த சூழலில், கனகபுரத்தில் அமைதியான ஒரு வளாகத்தில் அன்புச்சோலை தன் உறவுகளை அணைத்துக் கொண்டிருக்கின்றது.

அன்றைய பகற்பொழுது, நான் அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தின் வரவேற்பறையில், மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளருடன் அன்புச்சோலை பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன்.

அன்புச்சோலை இல்லத்தின் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொன்னார்கள்.

வரவேற்பு மண்டபத்தைக் கடந்து நான் உள்ளே பிரவேசித்தேன். அமைதியான அந்தச் சூழலில் ஆண்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. மீண்டும் நம்பிக்கை கொள்ளும் அவர்களின் வாழ்வுபோல முற்றத்தில் அவர்களில் சிலர் நீரூற்றி வளர்க்கும் பூமரங்கள் துளிர்த்திருந்தன. ” வாங்கோ ராசா ” என என் கைபற்றி அழைத்துச் சென்ற முதிய தாயின் அரவணைப்புடன், என்னைச் சூழ இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் அன்பில் நான் லயித்துப்போனேன்.

என்னமாதிரி அம்மாக்கள்? எல்லாரும் சுகமே? நான் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். ” இஞ்சை எங்களுக்கு என்ன கஸ்ரம் தம்பி. இப்பதான் கோயிலுக்கு(சேர்ச்) போட்டு வந்தனாங்கள் ” என அவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள்.

பன்னிரண்டு அம்மாக்களும், பதினொரு ஐயாக்களுமாக அப்போது இருபத்திமூன்று பெற்றோர் அங்கே இருந்தனர். ஆண்களுக்கு, பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனித்தனி விடுதிகளைக் காட்டி என்னுடன் இருந்த அம்மாக்கள் கதைத்தவாறிருந்தார்கள்.

” இதுதான் தம்பி இப்ப நாங்கள் தங்கிற இடம் ”

” ஒவ்வொரு அறையையும் இரண்டு ரெண்டு பேர் தங்கிறநாங்கள், இஞ்சால சாப்பிடுற இடமிருக்கு, பொதுவான குளியலறைகள் இருக்கு, கோலுக்குள்ள ரீவி டெக்கும் இருக்கு ”

” பொழுதுபோக்க ரிவியும் பாக்கிறநாங்கள் ”

முன் வராந்தாவில் போடப்பட்ட கதிரைகளில் இருந்து நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம்.

பூச்சாடிகளுடன் சுத்தமாகவிருந்த அந்த வரவேற்பு அறையில் ஒருபுறம் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது. அவர்கள் தங்கும் ஒவ்வொரு அறையும் வரவேற்பு அறையின் இரு பக்கமும் இருந்தன.

” நாங்கள் இப்ப கொஞ்சம் முன்னம்தான் பால் குடிச்சனாங்கள். நீங்களும் கொஞ்சம் குடியுங்கோ தம்பி ” என அந்தத் தாய் நீட்டிய பாலை நான் வாங்கிக்கொண்டேன்.

“ இஞ்ச வரமுன்னம் எனக்கு வீட்டில யாருமில்லை தம்பி ”

” என்ர மகனும் வீரச்சாவடைந்திட்டான் ”

” மற்ற உறவுகளும் என்னை சுமையாகக் கருதிச்சினம். அப்பதான் தம்பியவை என்னை இஞ்ச கூட்டியந்தவை ”

ஒரு மாவீரனின் தாய் என்னிடம் சொன்னாள்.

” என்ரை பிள்ளையள் கூட என்னைக் கைவிட்டிட்டுது அப்பன் ”

” ஆனா தலைவர் (தமிழீழ தேசியத் தலைவர்) எங்கள கைவிடேல்ல ”

என்றார் இன்னுமொரு தாய். ” ஒருத்தருக்கும் வருத்தம் துன்பம் கடுமையில்லையே? ” என கேட்டேன்.

” எல்லாம் இருக்கு தம்பி, ஆனா இப்ப நாங்கள் அதற்குக் கவலைப்படுவதில்லை ” என சிரித்தவாறே சொன்னார்கள்.

அந்தப் பேணலகத்தினுள்ளேயே தமக்குத் தனியான மருத்துவ விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு மருத்துவப் பெண்போராளி – விடுதலைப்புலிகள் மருத்துவப் பிரிவுப் போராளி – தங்களை பிள்ளை மாதிரி பார்ப்பதாகச் சொன்னார்கள்.

மாதமொருமுறை, என தேவைப்படும் போதெல்லாம் மருத்துவப் பிரிவைச்சேர்ந்த தேவா டொக்ரர் அன்ரியும், வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள்.

டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் சொன்னார்கள்.

அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சியிருந்தது. மீண்டும் மீண்டும், தாங்கள் அரவணைக்கப்படுகின்றோம் என்ற திருப்தியிருந்தது.

மாலைவேளையில், முடியுமானவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள பூமரங்களுக்கு நீரூற்றி அவற்றை பராமரிப்பதாகச் சொன்னார்கள். மூதாட்டியொருத்தி அவர்கள் கோழி வளர்க்கும் கோழிக்கூட்டையும் அழைத்துச்சென்று எனக்குக் காட்டி மகிழ்ந்தார்.

” இதுகள் போடுற முட்டையளக் கூட நாங்கள் எல்லோருமாத்தான் பொரிச்சு சாப்பிடற நாங்கள் ” என்றார்.

தையல், பன்னம் என அவர்கள் பொழுதுபோக்காய் தாம் செய்தவற்றை என்னிடம் காட்டினார்கள்.

” ஒன்றிரண்டு பேருக்கு கொஞ்சம் வருத்தம் கடுமைதான் தம்பி, மிச்சாக்கள் எல்லாருமாச் சேர்ந்து அவையளையும் சந்தோசமாய் வைச்சிருக்கிறம் “.

என்றார் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியை என்னருகே கைத்தாங்கலாக அழைத்துவந்து இருத்திய ஒருவர்.

கரும்புலி மேஜர் கலைச்செல்வனின் தந்தை ஆறுமுகம் ஐயாவையும் அம்மாவையும் அங்கே சந்தித்தேன். அவர்கள் தம்பதியாகவே அங்கேயிருந்தனர். அந்த வளாகத்தினுள்ளேயே குடும்பமாக தாங்கள் இருப்பதற்கு ஒரு சிறிய வீடு அமைக்கப்படுவதாக அவர்கள் சொன்னார்கள்.

” நாங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்யாட்டிலும், பேப்பர் மட்டும் படிக்காம விடமாட்டம் ”

” ஏனெண்டா தம்பி, நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள் என்று அறியத்தான் ” எனத் தொடங்கிய தந்தையொருவர், ” பின்னேரங்களில் நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து சும்மா கொஞ்சத் தூரம் நடையாய் போய் வாறநாங்கள் ” எண்டார்.

” பிறகென்ன அம்மாக்கள், சண்டை சச்சரவொண்டும் இல்லையே? ” எனக் கேட்டபோது,

” என்னடா தம்பி, நாங்கள் போராளியளிண்ட தாய்மார். கொஞ்சம் ரோசம் வரும்தானே. ஆனா அடிபடமாட்டம். சும்மா பகிடிக்கு கதைபடுவம் ” என சொல்லிச் சிரித்தனர்.

தங்குமிடங்கள், சமையல்கூடம், தனியான மருத்துவமனை, பூந்தோட்டங்கள் தவிர தனியானதொரு வரவேற்புக் கூடமும் அங்கே இருந்தது. பெண்கள் ஆண்களென தேவையானபோது அவர்களுக்கு உதவவென பணியாளர்களும் அவர்களுடனிருந்தனர்.

வாரம் இருமுறை ” அன்னை இல்லத்தில் ” இருந்து உளவளத்துணை ஆலோசகர்களும் தம்மிடம் வந்து கதைத்துச் செல்வதாகக் கூறிய அவர்களிடம், அவர்களது எஞ்சிய உறவினர்களும், புலம்பெயர்ந்த இடங்களில் இருந்துவரும் உறவுகளும் இடைக்கிடை வருவதாகச் சொன்னார்கள்.

” அன்புச்சோலை ” யின் உள்ளகப் பயனாளர்களைவிட மேலதிகமாக ஐம்பது வரையான முதியவர்கள் அன்புச்சோலையின் குடும்பத்தில் இருந்தார்கள். இவர்கள் தமது சொந்த விடுகளிலும், உறவினர்களுடனும் தற்போது வாழ்ந்தாலும், தமக்கான முகவரியாக அன்புச்சோலையையே சொல்லிவருகின்றனர். அவர்களுக்கும் எதாவது மருத்துவஉதவியோ தனிப்பட்ட உதவியோ அல்லாதுவிடின் அவர்களுக்கான மேலதிகபராமரிப்போ தேவைப்படும்போது அன்புச்சோலையே அவர்களை பொறுப்பெடுக்கின்றது.

அன்புச்சோலையில் இவ்விரண்டு உள்ளக, வெளியேயான பயனாளர்களைவிட, மூன்றாவதாக, இன்னமும் அன்புச்சோலையில் இல்லாவிடினும் தமக்கான உதவியோ, மருத்துவ வசதியோ பராமரிப்போ தேவைப்படும் முதியவர்களை சிறிதுகாலம் அன்புச்சோலை தானே பொறுப்பெடுத்து பராமரித்து அவர்கள் மருத்துவ ரீதியில் குணப்படுததப்பட்ட பின், அவர்களை அவர்களது வீட்டில் சேர்க்கின்றது.

தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினராலும், மாவீரர் போராளிகளின் குடும்பநலன் காப்பகத்தாலும் இனங்காணப்படும் முதியவர்கள் அன்புச்சோலைக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

04.06.2004 அன்று அவர்களுடைய இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டதொரு தங்குமிடத்தின் திறப்புவிழா. அவர்கள் எல்லோருமே அன்றைய நிகழ்வில் ஆழ்ந்திருந்தனர். திடீரென அவர்கள் யாருமே எதிர்பார்க்காதொரு இனிய அதிர்ச்சி. அவர்களது வளாகத்தில் வேகமாகவந்து நின்றதொரு வாகனத்திலிருந்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் இறங்கினார்.

” உண்மையில தம்பி எங்களுக்கு கனவுபோல இருந்திச்சி ”

” அவரை நாங்கள் பாத்திட்டம். அவர் தன்ர கையால எங்களுக்கு பரிசும் தந்தவர்.”

” நாங்கள் அவரை கும்பிடப்போக எங்கட கையைப் பிடிச்சு நா தழுதழுக்கச் சொன்னவர் ”

” நீங்கள் இல்லையம்மா, நான் தான் உங்கள் எல்லாரையும் கும்பிடவேண்டும் “ என்று.

” எங்களுக்கு எல்லாருக்கும் அழுகையே வந்திட்டுது ”

” அவரை கண்டிட்டம், இனி நாங்கள் செத்தாலும் பறவாயில்லை ”

அன்றைய நாளை என்னிடம் சொல்லும்பொழுதே அவர்கள் எல்லோரது கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

யாருமற்றவர்கள் தாங்கள் இல்லையென அன்புச்சோலை மூதாளர் பேணலகம் அவர்களுடன் இன்றிருக்கின்றது. தமிழீழத்தின் எங்கிருக்கும் பெற்றோரும் தம் முதுமையின்போது இனியொருபோதும் தாம் கைவிடப்பட்டவர்கள் இல்லை.

அவர்களிடம் இருந்து நான் பிரிந்துவந்த அந்த மதியப் பொழுதுகளில், அங்கே மாவீரன் ஒருவனின் தாய் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன.

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள். தேசம் இப்ப எங்களைக் காக்கிறது…

– அன்புமாறன்.
விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி 2004 )

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

anpucholai_6-1024x683

anpucholai_4

anpucholai_5

anpucholai_3-1024x683

anpucholai_7-1024x683

Home-for-the-Elderly-Anpucholai

Elders’ Home inaugurated in Ki’linochchi

In a simple yet emotionally-charged ceremony of significance, Mathivathani Pirapaharan, wife of LTTE leader Velupillai Pirapaharan, inaugurated the new hostel block of the Anpuchchoalai Elders’ Home in Ki’linochchi A’riviyal Nakar this Sunday. In one of her rare public appearances, she cut the ribbon and declared open the new wing of the Elders’ Home. The event was well-attended by key Tamil Tiger functionaries.

The Home caters to the need of the elderly Tamils who have lost their bread-winning sons and daughters because of Sri Lankan military offensives. It presently houses 53 aged people, including 28 women.

16_12_07_kilino_02
16_12_07_kilino_04

16_12_07_kilino_01

16_12_07_kilino_05

The inauguration event was presided over by Thirukkumaran, head of the Welfare Centre for Heroes’ Families. Pon Thiyagam, director of the Secretariat of Tamil Eelam Heroes’ Resting Homes lit the Common Flame and LTTE Political Head B. Nadesan hoisted the national flag of Tamil Eelam.

After the building was formally declared open, Isaichelvi Thamilchelvan, wife of late Brig. S. P. Thamilchelvan, former LTTE political head, garlanded his photo and lit the lamp. Mrs. Mathivathani Pirapaharan, Rev. Francis Joseph, and others also garlanded Thamilchelvan’s photo and paid homage to the slain political leader.

Kuha Sankar, wife of late Col. Sankar, the founding head of Air Tigers, planted a sapling to mark the occasion. Cultural performances were subsequently staged.

K. V. Balakumaran, a senior LTTE leader, Puthuvai Irtahinathurai, head of the Art and Cultural Division of the LTTE, Mr. Karikalan, Director of the Tamil Eelam Economic and Development Organization (TEEDOR), LTTE officials and religious leaders participated in this public event.

About ehouse

Check Also

தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்

தமிழீழத் தேசியத்தலைவரின் ஐம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது எனது பொறுப்பாளர் தலைவரைச் ...

Leave a Reply