Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கடமையுணர்வுகொண்ட கப்டன் கலைஞன்

கடமையுணர்வுகொண்ட கப்டன் கலைஞன்

யாழ்மாவட்டத்தில் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப் படிப்பபை உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச் செயற்படலானார்.

2005-ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிது காலம் திருமலை மாவட்டத்தில் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்கு வந்தார். வன்னிக்கு வந்த கலைஞன் அடிப்படை படையப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஆசிரியப் பயிற்சிகளை (மாஸ்ரர்ப்பயிற்சி) பெற்றுக் கொள்வதற்காக படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களிடம் சென்று மாஸ்ரர்ப் பயிற்சிகளைப் பெற்று தகுதிபெற்ற ஒரு பயிற்சி ஆசிரியராக தன்னை வளர்த்துக் கொண்டு மீண்டும் கடற்புலிப்போராளியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

2006-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகளுக்கென மட்டுப்படுத்தப்பட்டளவில் அடிப்படை படையப்பயிற்சிக்கல்லூரி ஒன்று முள்ளியவளை- கேப்பாப்பிலவுப்பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் பொறுப்பாளராக பாண்டியன் மாஸ்ரர் செயற்பட்டார். இந்தப் பயிற்சிக் கல்லூரியில் கலைஞன் ஒரு பயிற்சி ஆசிரியராகச் செயற்பட்டிருந்தார்.

2006-ம்ஆண்டின் நடுப் பகுதியில் பெருமளவான புதியபோராளிகள் விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடற்புலிகளின் படைக் கட்டுமானங்களை விரிவாக்கும் நோக்குடன் குறிப்பிட்டதொகைப் புதியபோராளிகள் கடற்புலிகளுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கென சகலவளங்களையும் உள்ளடக்கியதான பயிற்சிமுகாம் ஒன்று விசுவமடுப்பகுதியில் நிறுவப்பட்டது.

இவ்வாறு விசுவமடுப் பகுதியில் நிறுவப்பட்ட அடிப்படை படையப் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாளராக பாண்டியன் மாஸ்ரரும் அவரது ஆளுகையின் கீழ் பயிற்சிகளை வழங்குவதற்கென தேர்ச்சி பெற்ற பயிற்சி ஆசிரியர்களும் உரியபொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர்.

நிலையுடன் பெயர்: கப்டன் கலைஞன்.
முழுப்பெயர்: திருபாலசிங்கம் அரன்.
நிலையான முகவரி: உடுத்துறை- வடக்கு, வடமராட்சிக்கிழக்கு, யாழ்மாவட்டம்.
வீரப்பிறப்பு: 16-04-1986.
வீரச்சாவு: 20-12-2008.
வீரச்சாவுச்சம்பவம்: முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலின்போது.

தேசியத் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக புதிய போராளிகள் (ஆண்கள்) நான்கு கட்டங்களாக கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். முதலாவதாக உள்வாங்கப்பட்ட அணிக்கு கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லூரி எனப் பெயரிட்டு புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிக்கல்லூரி 2006-ம்ஆண்டு நவம்பர்மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்தப்பயிற்சி அணிக்கு பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சிஆசிரியராக கலைஞன் செயற்பட்டார். கப்டன் பண்டிதர் பயிற்சிக்கல்லுரி நிறைவுபெற்றதும் அதனைத்தொடர்ந்து கப்டன் றஞ்சன்லாலா பயிற்சிக்கல்லுரி அடுத்து லெப் கேணல் அப்பையா பயிற்சிக்கல்லுரி அதையடுத்து கப்டன் லிங்கம் பயிற்சிக்கல்லுரி என பிரதானமாக நடைபெற்ற நான்கு பயிற்சி அணிகளுக்கும் பயிற்சி வழங்குகின்ற பிரதான பயிற்சி ஆசிரியராக கலைஞன் செயற்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புதிய போராளிகளை புடம்போட்டு போர்த்திறன்மிக்க போராளிகளாக வளர்த்துவிட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

கலைஞன் அமைதியான சுபாவம்கொண்டவர். அதிகமாக யாருடனும் பேசமாட்டார். ஆனாலும் தனக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்துமுடிக்கும் திறன்கொண்டவர். இவரால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் பலபேர் குறிப்பாக 2007 2008 மற்றும் 2009-ம்ஆண்டின் முற்பகுதி வரையிலும் கடலிலும் தரையிலும் சிறிலங்காப்படைகளுடன் சமர்க்களங்கள் புரிந்து வீரவரலாறுகளை எழுதியமையும் இங்கு குறிப்பிடவேண்டியது முக்கியமாகும்.

2007-ம் ஆண்டு யூலை மாதம் 15-ம்நாளன்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணாஅவர்கள் படகுப் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தில் சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். முல்லை- புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியிருந்தார். சுமார் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சைகளைப் பெற்று வந்தநிலையில் அவரது உடல்நிலை முறையாகத் தேறாத நிலையிலும் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் வேறுசில காரணங்களுக்காகவும் சூசையண்ணா மருத்துவமனையிலிருந்து வெளியேறவேண்டிய தேவையேற்பட்டது. 2007-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் மருத்துவப் பராமரிப்புக்களும் தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது.

இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் கட்டமைப்புக்களில் சிலமாற்றங்கள் நடைமுறைக்குவந்தன. அந்தவகையில் அதுவரையில் அடிப்படைப் பயிற்சிக் கல்லுரிப் பொறுப்பாளராகவிருந்த பாண்டியன் மாஸ்ரருக்கு மேலதிகமாக இரண்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. அதாவது கடற்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கான மெய்ப்பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராகவும் பாண்டியன் மாஸ்ரர் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் பாண்டியன்மாஸ்ரர் அவர்களால் சூசையண்ணா மருத்துவப் பராமரிப்பு பெற்றுக்கொண்டிருந்த முகாமிற்கான பிரதான மெய்ப்பாதுகாவலராக கலைஞன் அவர்கள் அமர்த்தப்பட்டார். மிகவும் பொறுப்புவாய்ந்த இந்தக் கடமையை ஏற்றுக்கொண்ட கலைஞன் சூசையண்ணைக்கு அருகிலிருந்து அவருக்கான மெய்ப்பாதுகாப்புப்பணியை மிகவும் நேர்த்தியாகவும் விசுவாசமாகவும் ஆற்றியிருந்தார். முழுநேரக்காவற் கடமைகளை ஒழுங்கு செய்துவிடுவதிலிருந்து சூசையண்ணையின் அவ்வவ்ப்போதைய பணிப்புரைகளுக்கு அமைவாக சூசையண்ணையின் சந்திப்பிற்கான பொறுப்பாளர்களை உரியநேரங்களிற்கு அறிவித்து அழைத்து ஒழுங்குசெய்வது வரையுமான கடமைகளை மிகவும் விசுவாசமாகவும் நேர்த்தியாகவும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலம் இக்கடமைகளை முன்னெடுத்த கலைஞன் பின்னர் பாண்டியன் மாஸ்ரரால் வேறு சில செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். இக்காலப்பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணாவிற்கு அடுத்தநிலையான தளபதியாக நரேன் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களால் அமர்த்தப்பட்டார். 2007-ம்ஆண்டின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நரேன் அண்ணையின் மேற்பார்வையில் கப்பல் கல்லூரி தொடங்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கப்பல்களில் கடமையாற்றுவதற்கான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுவே கப்பல்க் கல்லூரியின் பிரதான செயற்பாடாகும்.

குறித்த இந்தக் கப்பற் கல்லூரிக்கு தகுதி வாய்ந்த போராளிகளை தேர்வுசெய்தபோது கலைஞனும் அந்த அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி- திருவையாற்றிலும் பின்னர் முல்லைத்தீவிலுமாக இந்தக்கப்பற்கல்லூரி பலமாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2008-ம்ஆண்டு டிசெம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் பெரிய படகு ஒன்று சண்டைப் படகுகளுக்கான இயந்திரங்கள் மற்றும் அமைப்பிற்குத் தேவையான இன்னும் சில பொருட்களையும் சுமந்துகொண்டு சிலபோராளிகளுடன் இந்தோனிசியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. குறித்த இந்தப் படகிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிப்படகுகளும் கடற்கரும்புலிப்படகுகளும் களத்தில் இறங்கியது. இந்நநடவடிக்கையின்போது கப்பற் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போராளிகள் சிலரும் சண்டைப் படகுகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். எதிர்பார்த்தபடி 20-12-2008 அன்று இலங்கை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் பெரும்கடற்சமர் முல்லைக்கடலில் மூண்டது. இந்தோனிசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த படகிற்கு பாதுகாப்பு வழங்கியபடியே கடற்புலிகளின் படகுகள் இலங்கைக் கடற்படைப்படககளுடன் தீரமுடன் போரிட்டுக்கொண்டிருந்தன. இந்தோனிசியாவிலிருந்து வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படகும் போராளிகளும் மிகவும் பாதுகாப்பாக முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால்க்கரையை வந்து சேர்ந்தனர். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான கடற்சமரின்போது சில கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டார்கள். 20-12-2008 அன்று இந்தப்பாதுகாப்பு கடல்நடவடிக்கையின் வெற்றிக்கு விதையாகிய மாவீரர்களின் வரிசையில் கலைஞனும் தேசவிடுதலைக்காக விழிமூடிய ஆயிரமாயிரம் மாவீரர்களுடன் கப்டன் கலைஞனாக தானும் சேர்ந்துகொண்டான்.

தமிழீழத்தாயக விடுதலைவேள்வியில் ஆகுதியாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் நினைவுகளோடு கப்டன் கலைஞனின் நினைவுகளையும்விடுதலைத்தாகத்தையும் இதயத்தில் சுமந்துகொண்டு கனத்தமனதுடன் எமது விடுதலைப்பயணத்தை தொடர்வோமாக….

“தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்.”

நினைவுப்பகிர்வு:
கொற்றவன்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply