Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப் கேணல் பார்த்தீபன்

லெப் கேணல் பார்த்தீபன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ மரபுப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் முக்கிய தளபதியும்,கவச வாகனப் பொறுப்பாளருமான லெப் கேணல் பார்த்தீபன் அவர்களின் வீரவரலாற்று நினைவுகள்…!
“நடராஜா மகேஸ்வரன்”
[திருநெல்வெலி யாழ்ப்பாணம்] வீரப்பிறப்பு-1972-10-09
வீரச்சாவு -2006-08-13
தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் பூர்வீக இருப்பிடமாகக் கொண்ட இவரது குடும்பம் பதின்மூன்று சகோதரர்களைக் கொண்டவன் தான் மகேஸ்வரனான பார்த்தீபன்.பத்தாவது புதல்வனான இவன் குகா என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்பட்டான்.யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி கற்றவன்.கல்விக்காலங்களில் ஏதாவது புதிதாக செய்யணும் என்ற நோக்கம் கொண்டவனாகவே செயற்பட்டான்.எப்பொழுதும் மின்சார வேலை தொடர்பான சாதனங்கள் இவரது புத்தகப்பையில் இருக்கும்.கல்வியில் தவறாது வீட்டுப்பாடங்களை உரிய நாளில் ஒழுங்காக செய்யும் பழக்கம் கொண்டவன்.
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டமே இவனை தாயக விடுதலைப் பணி சார் ஈர்த்தது.
பாடசாலை காலத்தில் திலீபன் அண்ணாவின் உரை கேட்கவே செல்லுவார்.
117685801_3229210777147632_7044627542704428753_o
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1987 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட பார்த்தீபன் 1988 ஆம் ஆண்டு சேமமடு பயிற்சிப் பாசறையில் சிறப்பாக பயிற்சிகளை முடித்தான்.பயிற்சி பாசறையில் எல்லோரையும் விட சிறியவனான இவனை வரிசையில் எப்போதும் முன் நிறுத்துவார் பயிற்சி ஆசிரியர்.இயக்கத்தில் ஆரம்பத்தில் “ரபூக்கா” என்னும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டான்.பயிற்சி நேரங்களில் இவரது திறமை இனங்காணப்பட்டு இவருக்கு வழங்கப்பட்ட ஆயுதம் (எஸ்- எல்-ஆர்) S.L.R. இந்த ஆயுதம் பார்த்தீபனை விடப் பெரிது. இதன் பரல் இவன் தலைக்கு மேல் நிற்கும்.
ஒருநாள் சொர்ணம் அண்ணையின் சந்திப்பில் இருந்த போது முன்னுக்கு நின்ற ரபூக்காவைப் (பார்த்தீபன்) பார்த்து உனக்கு என்ன பெயர் என்று கேட்டார்.உடனே இவர் ரபூக்கா என்றார்.

சொர்ணம் அண்ண சிரித்தபடி யார்டா உனக்கு இந்தப் பெயர் வைத்தது என்று கேட்டு சிரித்து கதைத்தார்.
அந்த நேரம் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஈர நினைவாய் இருந்த நேரம் உடனே சொர்ணம் அண்ண உனக்கு இனிமேல் பார்த்தீபன் தான் பெயர் என்று பெயர் சூட்டினார். திலீபனைப் போலவே நீயும் போராட்டத்தில் உறுதியோட இருக்கணும் என்று சொல்லி ஆசி அளித்தார்.சொர்ணமண்ண இவரை பார்த்தீபா என்றே அழைப்பார்.
போராட்டக் களங்களில் இவனது திறமை தலைமையால் இனங்காணப்பட்டு இவரை குறுகிய காலம் தன்னகத்தே வைத்து செயற்படுத்தியது.அதன்படி 1989 தொடக்கம் 1991 வரையான காலப்பகுதியில் தேசியத் தலைவரின் உள்ளகப் பாதுகாப்புப் பணியில் திறம்பட கடமையாற்றினார்.தலைவரின் உயர்ந்த உன்னதமான கொள்கைகளை மதித்து போராட்டப் பாதையில் நம்பிக்கைக்குரியவனாக நகர்ந்தான்.இவரது ஆளுமை, அயராத உழைப்பு,அர்ப்பணிப்பு போன்ற ஒரு விடுதலை வீரனுக்குரிய பண்புகள் தலைமையால் இனங்காணப்பட்டு இவரை இம்ரான் பாண்டியன் படையணிக்கு முக்கிய தளபதியாக நியமிக்கப்பட்டு படைக்கட்டுமாணத்தில் சில பொறுப்புக்களை கையளித்தது.

“இவனுக்குள் எப்போதும் விரிந்து கிடக்கும் விடுதலை விருட்சம்”
எத்தனையோ சவாலான சண்டைக் களங்கள் கண்டவன் இந்த வீரவேங்கை.
தன் உடல் எங்கும் எத்தனையோ விழுப்புண்களையும் சுமந்து விடுதலைத் தீயாக உழைத்தவன்.எத்தனை சோதனை இவனது போராட்ட காலங்களில் சந்தித்தாலும் அதை எண்ணி கலங்காமல் உறுதியோடு களமாடியவன்.எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் சகஜமாகவும் பழகக்கூடியவன்.அன்பான பேச்சு மற்றவர்கள் மீது அக்கறை கொண்ட உள்ளம் படைத்த உன்னதமான போராளி.
1993 ஆம் ஆண்டு பூநகரித்தள மீட்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் மிகத் திறமையாகச் செயற்பட்டவர்.இவரது திறமையாலும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பாலும் எதிரியிடமிருந்து T-55 கவச டாங்கி கைப்பற்றப்பட்டு வெற்றிகரமாக நகர்த்தி தளம் கொண்டு சேர்க்கப்பட்டது.
எமது இராணுவ பலத்தை நிலைநாட்டத் தேவையான தளபாடத்தில் கவச டாங்கி மிக முக்கியமாகத் தேவைப்பட்டது.இத்தேவை பார்த்தீபனாலும் ஏனைய சக போராளிகளாலும் பூர்த்தியாகியது.தேசியத் தலைவரின் நேரடிப் பாராட்டுப் பெற்ற தளபதிகளில் பார்த்தீபனும் ஒருவன்.
இவனது விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் ஓயாத அலைகள் -01*02*03 தவளைப்பாய்ச்சல்,மண்கிண்டி மலை தாக்குதல்கள் போன்ற முக்கியமான வெற்றிச்சமர்களில் தன்னை ஈடுபடுத்திப் போராடினான்.
ஓயாத அலைகள்-03 நடவடிக்கையின் போது பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலின் போது அவ்விடத்தில் டாங்கி புதைந்து விடுகின்றது. அந்த சமயத்தில் எதிரிக்கும் எமக்கும் குறுகிய தூர இடைவெளி தான் இருந்தது.
எதிரியானவன் எமது டாங்கியை அழிக்க மூர்க்கம் கொண்டு போராடினான்.அந்தக் கணத்தில் ஏனைய போராளிகளின் உதவியோடு எதிர்த்துக் களமாடி கவச டாங்கியை மீட்டெடுத்து எதிரியைத் திணறடித்தான்.
அளம்பில் கடற்பரப்பில் டோராக்கள் ஆதிக்கம் தொல்லை தாங்க முடியாத சூழல் காணப்பட்டது.கவச டாங்கி கொண்டு இரண்டு டோராக்களைச் சேதமாக்கி கடற்படைக்கு தகுந்த பாடம் புகட்டினார்.
கவச டாங்கிப் பொறுப்பாளரான காலத்தில் இருந்து டாங்கியின் எல்லா பாகமும் இவர் கைபட்டே களம் செல்லும்.அவ்வளவு அத்துப்படி.அதனுடன் பவள் வாகனமும் கவச டாங்கியும் கனரக வாகனங்கள் என்பதால் திடீரென்று எங்கும் நகர்த்த முடியாது.அவற்றின் பெருமளவு சத்தமே அதன் இருப்பைக் காட்டிக் கொடுத்து விடும்.அதனால் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் தான் கனரக வாகனங்கள் நகர்த்தப்படும்.முக்கியமாக முல்லைச் சமரிலே கவச டாங்கியின் பங்கு முக்கிய இடம் வகித்தது.இச்சமர் முடிவில் போராளிகள் சந்திப்பின் போது தலைவரின் பாராட்டைப் பெற்றவர்.விடுதலைப் புலிகளின் இராணுவ படைபலத்தை அதிகரிப்பதாகவே இவரின் சிந்தனை இருக்கும்.

வெற்றிலைக் கேணிப் பகுதியில் பாதுகாப்பு வலயம் அமைப்பதற்காக இருப்புத் தடம் தேடி பார்த்தீபனும் போராளி காலியும் செல்லும் போது இராணுவ படைமுகாம் எல்லைக்குள் நெருங்கி விட்டனர்.கதைத்து சிரித்துக் கொண்டு நகரும்போது கவனிக்காமல் படையினர் முகாம் எல்லை நெருங்கி விட்டனர்.எதிரி உசாராகி சுட்டபடி துரத்திவர இரண்டு பேரும் ஓடி வரும் போது பார்த்தீபனின் குதிக்காலில் வெடி பட்டு இரத்தம் வழிந்தோட ஓடி மறைந்தான். கூடவே போன காளியை காணாமல் தேடிப் பார்க்கையில் கொஞ்ச நேரம் கழித்து வந்தாராம்.

எங்கே நிண்டனி என்ட
அண்ண ஓட இயலாம போய்விட்டது.அந்த சின்ன பிள்ளையார் கோயிலுக்குள்ள பிள்ளையார் சிலைக்குப் பின்னால ஒழிச்சு நிண்டன் என்றாராம்.

சொல்லிற்றன் பிள்ளையார் என்னைக் காட்டிக் கொடுத்தாய் உன்ன என்ன செய்யிறன் பார் என்டாராம்.பிள்ளையாருக்குச் சிரிப்பு வந்திட்டுப் போல வந்த ஆமி உள்ளுக்கே பார்க்கல போட்டான்.நான் நன்றி சொல்லிட்டு வந்திட்டன் என்றாராம்.
கண்டிருந்தா ஆமி உன்னைச் சுட்டு இருப்பான் நீ பிறகு பிள்ளையாரை என்ன செய்கிறது என்று சிரித்தபடியே வந்தார்களாம்.
சமாதான காலப்பகுதியில் தேசியத் தலைவரின் அனுமதியோட கவச டாங்கியைக் காவக் கூடிய பெரிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தார்.

எப்படிஎல்லாம் அமைப்பின் இராணுவ கட்டமைப்பைப் பலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அயராது உழைத்தவர்.எந்த நேரமும் அழுக்கு படிந்த உடையோட தான் காணப்படுவார்.
சொல்லப் போனால் ஒரு கராஜ் காரன் போலவே இருப்பார்.

போராளிகளுக்கு கனரக வாகனத்தின் பலத்தையும் அதன் பலவீனங்களையும் பயன்பாட்டையும் எதிரியின் இது போன்ற கனரக வாகனங்களின் அழிப்பு நுட்பம் பற்றியும் இந்த வாகனத்தின் பலவீனமான பக்கங்கள் பற்றியும் போராளிகளுக்குக் கற்பித்தவர்.எத்தனையோ கவச டாங்கிச் சாரதிகளை வளர்த்து விட்டவர்.
2002 ஆம் ஆண்டு தேசியத் தலைவரின் பதிப்பின் பேரில் திருமணம் நடைபெற்றது.இவரது மனைவி மகளிர் படையணியின் சிறப்பு பயிற்சி ஆசிரியர்.திருமணத்திற்குப் பின் குடும்பம் என்பதை பின்னுக்குத் தள்ளி வைத்தே போராட்ட வாழ்க்கையை முன்னிறுத்தி வாழ்ந்தார்.இவர் அடிக்கடி மனைவிக்குச் சொல்லுறது இதுதான் எனக்கு முதல் போராட்டம் தான் பிறகு தான் நீங்கள் எல்லோரும்.அந்த அளவுக்கு விடுதலைப் போராட்டத்தை நேசித்து வாழ்ந்தவர்.
விடுதலைப் போராட்டத்திற்கு எப்படி முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தார் என்பதற்கு இவரது உறவினர் ஒருவரின் நினைவுச் சம்பவம் ஒன்றை பதிவு செய்கிறேன்.

ஒரு நாள் இவரது இல்லத்திற்கு இவரது மூத்த பிள்ளை பிறந்து 6 மாதங்கள் பார்க்கச் சென்றேன்.வீடோ ஒரு ஓலைக் கொட்டில். அண்ணார்ந்து பார்த்தால் வானம் தெரியும்.மழை பெய்து வீடோ வெள்ளம்.நான் உள்நுழைந்த போது பிள்ளை மேசையின் கீழ் வளர்த்தப்பட்டிருந்தது.பார்த்தீபனின் முகத்தைப் பார்த்த போது சொல்ல முடியாத ஆயிரம் வேதனைகளைக் காட்டியது.நான் போய் சிறிது நேரத்தில் தானே வீடு துடைத்து வழமை நிலைக்கு மாற்றி விட்டார்.
நான் அவரிடம் கேட்ட கேள்வி இதுதான்…
ஏன் பார்த்தீபன் இவ்வளவு காலமும் இயக்கத்திற்காக உழைக்கிறீர் ஒரு வீடு கட்டித் தர சொல்லு கேட்கலாமே…? என்று கேட்டேன்.
அவர் சொன்னார் ஒரு நாட்டுக்காகப் போராடுகின்ற இயக்கத்தின் போராளிகள் நாங்கள் இவற்றையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. என்றார்.

நாடு கிடைச்சா நாங்கள் எல்லோரும் திருகோணமலையில் தான் இருப்பம்.
அப்ப அங்க ஒரு நல்ல வீட்டைக் கட்டுவம் என்றபடி சிரித்தார்.
அந்த அளவுக்கு உறுதியாக நம்பினார் எமக்கான ஒரு தேசம் விடியுமென.
இம்ரான் பாண்டியன் படையணியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்த தளபதிகளில் இவரும் ஒருவர்.குறிப்பாக இப்படையணியின் இலட்சிணையை வடிவமைத்த பெருமையும் இவரையே சேரும்.

வீரச்சாவடைவதற்கு முதல் மூன்று நாட்கள் நித்திரை இல்லாமல் கடும் வேலையில் ஈடுபட்டு அதற்குள் தலைவரையும் சந்தித்து அவரின் பரிசாக கைத்துப்பாக்கியையும் வாங்கி புதிதாகவே பெட்டியுடன் பேசில் வைத்து விட்டுக் களமாடச் சென்றிருந்தார்.இவர் வீரச்சாவடைந்த பின் போராளிகள் இவரின் ஓய்வு உறக்கம் இல்லாத அயராத உழைப்பே இவரை நிரந்தரமான ஓய்வில் அமர்த்தியது என்றார்கள்.

13-08-2006 அன்று முகமாலைப் பகுதியில் நடைபெற்ற சமரில் தமது முன்னரங்க நிலையில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.இவரின் இறப்பு எவராலும் ஈடுசெய்து கொள்ள முடியாத மாபெரும் இழப்பு.
இந்த மகத்தான மாவீரனை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்துவோம்.
வரலாற்றுப் பதிவிற்காக
“ராஜ் ஈழம்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply