Home / மாவீரர்கள் / லெப். கேணல் அக்பர்

லெப். கேணல் அக்பர்

வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?

அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.

akparபல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான்.

அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் – 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.

முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக ‘சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான்.

உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.

ஏ – 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ‘ஜயசிக்குறு’ படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான்.

போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.

பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை.

அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.

நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது ‘ஜயசிக்குறு’ என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான்.

25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.

இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான்.

10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான்.

அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.

19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர்.

இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.

ஓயாத அலைகள் – 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.

அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ – 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.

இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.

இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் ‘அல்பா – 1’. களத்திலே ‘அல்பா – 1’ வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் ‘அல்பா – 1’ இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு வேர்கள்.காம் எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.

ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.

விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு ‘தீச்சுவாலை’ என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. ‘ஜயசிக்குறு’ களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.

அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.

இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.

இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான்.

அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து.

இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ”தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து” அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.

கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ”அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே” என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.

நினைவுபகிர்வு:- ச.புரட்சிமாறன்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ்

மீள் வெளியீடு : வேர்கள் இணையம் .!

About ehouse

Check Also

மதிப்புக்குரிய தளபதி பால்ராச்

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து ...

Leave a Reply