Home / ஆவணங்கள் / தமிழீழ தேசியச் சின்னங்கள்

தமிழீழ தேசியச் சின்னங்கள்

தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.

தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு.

தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய விலங்கு, தேசியப் பூ என்பனவாகும். தேசியத்தை வளர்த்த பிதாமகர்கள் இவற்றைத் தெரிவு செய்கிறார்கள்.

vaakai

காலம் தனது வரலாற்றுப் பதிவை தேசியச் சின்னங்களுக்கு வழங்குகிறது தேசியச் சின்னங்கள் தேசியத்திற்கு நிகரானவை.தேசியம் என்பது உன்னதமான உணர்வு தேசியச் சின்னம் உணர்வின் உருவம்.

தேசியச் சின்னங்கள் எழுச்சி வடிவங்கள் அவை உருமாற்றம் செய்யப்படுவதில்லை தேசியத்திற்குரிய மக்கள் கூடும் இடங்களில் தேசியச் சின்னங்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

senpakam

தேசிய சின்னங்கள் மாறாது இருப்பதோடு மாற்றத்திற்க்கு உட்படாத வலுப் பொருளாகவும் இருக்கின்றன தமிழீழத்தின் தேசியக் கொடி புலிக் கொடி இறையாண்மை பெற்ற நாடுகளின் தேசியக் கொடிகள் ஆரம்பத்தில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் கொடியாகவே தொடங்கியுள்ளன. பின்பு நாட்டின் கொடியாகப் பரிணமித்துள்ளன இது உலக நியதி.

ஈழத்தமிழர் தம் புலிக்கொடி முழு தமிழர்களின் தேசியக்கொடி இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தேசிய நாட்கள் நிகழ்ச்சிகள் ஒன்று கூடல்கள் என்பனவற்றில் புலிக்கொடியை ஏற்றுவது பறக்க விடுவது நியாய பூர்வமானது அது உலக ஒழுங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் நிகழ்வு.

siruththai

அண்மைக் காலமாக ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் ஒன்று கூடல்களிலும் தேசியக் கொடிக்குரிய உயர் மதிப்பு அளிக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றது. இதை கண்டு வருந்துகிறோம் தேசியக் கொடிக்குரிய மதிப்பை வழங்கும் உரிமை ஒவ்வொரு ஈழத்தமிழனின் கடமை.

ஈழத் தமிழர்களின் தேசியப் பறவை “செண்பகம்” தேசியமரம் “வாகை”, தேசியப் பூ “கார்த்திகைப் பூ” தேசிய விலங்கு “சிறுத்தை” புலம்பெயர் இனிய உறவுகள் மறந்து விடக் கூடாது என்பதற்காக இதில் பட்டியல் இடுகின்றோம்.

kaanthal

மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் தொடர்புப் பொருளாகத் தேசியச் சின்னங்கள் இடம்பெறுகின்றன. தேசியச் சின்னங்களின் சிதைவு தொடர்பின் சிதைவாக அமைகின்றன.

தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையில் நிலவும் உறவை வலுப்படுத்தும் பாலமாகத் தேசியச் சின்னங்கள் நிலவுகின்றன தமிழீழ விடுதலைப் போரின் அடிப்படை இலட்சியங்களைத் தாங்கி நிற்கும் உணர்வும் உருவமுமாகப் தேசியக் கொடியும் தேசியச் சின்னங்களும் விளங்குகின்றன தேசியக் கொடிக்கும் பிற தேசியச் சின்னங்களும் உரிய மதிப்பு வழங்குவது எமது கடமையாகும்.

தமிழ்த்தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.

vaakai3

சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.

வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை “மமோசா பிளெக்சூஸா” (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம்.

Leguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம்.

இது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை.

இது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.

தேசியப் பூ காந்தாள்

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்ஙனம் பரவி முகிழ் விடுவதுமான காந்தாள் (கார்த்திகை) பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

kaanthal3

 

மலர்கள்; தரணியில் இலங்கிடும் தேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வழமை தொன்றுதொட்டு வேதாகமக் காலத்திலிருந்து நிலவி வருகின்றது. கிறித்தவ வேதாகம நூலின் பழைய ஏற்பாட்டிலிலே சாலமனின் பாடல் என்ற அத்தியாயத்தில் (Song of Solomon) பண்டைய எகிப்திய தேசத்தினை தாமரையும், நீலோற்பலமும் பிரதிநிதித்துவப்படுத்தின என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் மன்னர்கள் தத்தமக்கென தனித்தனியான மலர்களைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது சோழருக்கு அத்திப் பூவும், சேரருக்கு பனம் பூவும், பாண்டியர்க்கு வேப்;பம் பூவும் தேசிய மலர்களாக இருந்ததுள்ளன.

மேற்குறிப்பிட்ட பூக்களின் மாலைகளையே அவர்கள் களமுனைகளுக்கு செல்லும் போது அணிந்து சென்றதாக அ. தட்சிணாமூர்த்தி என்பார் யாத்த ~தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்நூலில் குறுநில மன்னர்களும் தத்தமக்கு சொந்தமாக மலர்கள் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகின்றது. வீரத்தில் சிறந்தவர்களாம் வேளிர் மன்னர்களில் ஆய் அண்டிரன் என்பார்.

சிறுபுன்னைப் பூவின் மாலையையும், ஏறைக்கோன் என்பார் காந்தள் மாலையும் அணிந்ததாக மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே காந்தள் என்பது கார்த்திகைப் பூவின் பாரம்பரியத் தமிழ்ப் பெயராகும். இவ்வரலாற்றுச் சான்றாதாரத்தினூடாக கார்த்திகை மலருக்கும் தமிழர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெட்டத்தெளிவாகின்றது.

தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில் வாழுகின்ற மக்களின் இறை நம்பிக்கைளிலும் பூக்கள் பங்கு வகிக்கின்றன குறிப்பாக இந்துக்களினதும், பௌத்தர்களினதும் அன்றாட வாழ்வில் இறை வணக்கத்திற்கு பூக்கள் பயன்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஐதீகத்தின் பிரகாரம் வெள்ளை றோசாக்கள் மொகமட் ஆனவர் சொர்க்கத்திற்கு செல்கின்ற வழியில் அவரது இனிமைப்பாட்டின் வெளிப்பாடாக மலர்வதாகக் குறிப்பிடுவர். முருக ஆராய்ச்சியாளரும் கவிஞருமான அறிவுமதியவர்கள் பண்டைத் தமிழர்களின் போர்க்கடவுளாம் முருகனது மலரும் கார்த்திகைப் பூவே என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பண்டைய கிரேக்கத்தில் புன்னை ஆனது அப்பலோ தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுவதோடு புலமையாளர்களை கௌரவிக்கப்படுவதற்கும் உரியதாக விளங்கியது. ஒலிவ் ஏதேன்ஸ் நகர தேவதைக்குரியதாகவும், மெய்வல்லுனர்களையும், களத்தினில் சாதனை படைத்தோரையும் கௌரவப்படுத்துவதற்கும் உரியதாக இருந்தது. ரோமானியர்கள் தங்களுடைய புகழ்பூத்த தளகர்த்தர்களுக்கு சிந்தூர மரத்தின் இலைகளாலும் பூக்களாலும் வனையப்பட்ட கிரீடங்களைச் சூட்டினர்.

இராணுவச் சின்னங்கள், நாடுகள், நகரங்கள், மாநிலங்கள் என்பனவும் தத்தமது இருப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த தமது சமூக கலாச்சார பண்பாடு பின்னிப் பிணைந்துள்ள பூக்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு குடியரசிற்கும் ஒவ்வொரு பூ குடியரசுப் பூவாய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியப் பூவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கார்த்திகைப் பூவைப் பற்றிய மூலாதார விடயங்களை அறிவோம்.

கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பார். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே (Lili aceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.

கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.
கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம் வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதுமுண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.

பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet)இ நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம்: 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள்;, செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க்; கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் ~அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் ~இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்;த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் ~தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச வைத்தியத்திலே இதiனை ~வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். இதனாலேயே இச்செடிக்கு மிக மேலான மாட்சிமை பொருந்தியது எனும் பொருளில் புடழசழைளய ளுரிநசடிய என்ற பெயரில் அழைப்பர்.

கார்த்திகைப் பூவின் ஏனைய மொழிப் பெயர்கள் வருமாறு: சிங்களம்: நியன்கல, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி: கரியாரி, மராட்டி: மெத்தொன்னி

தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)

தேசத்தின் பூவாம் கார்த்திகைப் பூவினை இனிவரும் காலங்களில் தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அணிந்து தேசியமாண்பினை வெளிப்படுத்துவோம். இல்லங்கள், பொதுக் கூடங்கள், வாணிப மையங்கள், கல்விச்சாலைகள் என எல்லாவிடங்களிலும் கார்த்திகைச் செடி வளர்த்துப் பேணி கார்த்திகைப் பூவால் தமிழர் தேசமதை நிறைத்திடுவோம்.

தொகுப்பு: வீரநாதன்

1) தமிழர் வரலாறு: தேவநேயப் பாவாணர் (கழக வெளியீடு)

2) தமிழர் நாகரிகமும் பண்பாடும்: அ.தட்சிணாமூர்த்தி (ஐந்திணைப் பதிப்பகம்)

3) சென்னைப் பல்கலைக்கழக கலைக் களஞ்சியம்

4) நர்மதாவின் தமிழ் அகராதி

5) Encarta Reference Library 2003

தேசிய விலங்கு சிறுத்தை

சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.

இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும்.

siruthai3

சிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு.

சிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் “சருகுபுலி” என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு.

சிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை.

உலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாhடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

– தி.தவபாலன் –

தேசியப் பறவை செண்பகம்

senpakam

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.

நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன.

இந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்துதாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது.

செண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன.

கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது.

மெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தினத்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறுமரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள் செம்பகத்தின் உணவுகள் ஆகும்.

பிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். செம்பகத்தின் வேட்கைக்காலம் பெப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis)

– தி.தவபாலன் –

About ehouse

Check Also

11192578_863507130352195_1937754682_n

திலீபம் – ஆவணப்பதிவுகள்

பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>